வெறுமனே என்ன தேவையோ அதை செய்வது
நீங்கள் உருவாக்கும் ஒவ்வொரு கருவியும் உங்கள் வாழ்வை மேம்படுத்தவும், இன்னும் ஆழமாக்குவதற்காகவும் தான். அந்த நோக்கத்தை அது நிறைவேற்றாவிட்டால் நீங்கள் எதை உருவாக்கினாலும் அதில் எந்த பயனும் இல்லை. ஒரு கட்டிடத்தைக் கட்ட நமக்கு மின்சாரம், மோட்டார் பம்பு மற்றும் பலவும் தேவைப்படுகின்றன. நம் வாழ்வை மேம்படுத்தினால் மட்டுமே அவை அனைத்தும் உபயோகமாக இருக்கின்றன. இல்லையெனில் அவை இல்லாமலேயே இந்த உலகம் சிறப்பான ஒரு இடமாக இருக்கும். வெறுமனே ஒரு மரத்தின் கீழ் வாழ்வது சிறந்ததாக இருக்கும். நீங்கள் ஒரு கட்டிடத்தை அதிகப்படியாக கட்டும்போது அது உங்கள் வாழ்க்கையை எடுத்துவிடும். ஆனால் அதிகப்படியான மரம் என்ற ஒன்று இல்லை. அது வெறுமனே அங்கு இருக்கிறது. அதோடு நீங்களும் அந்த மரத்தின் கீழ் இருக்க முடியும்.
"இது என்ன ஒரு வாழ்க்கை?" என்று நீங்கள் நினைக்கக் கூடும். ஆனால் இதைவிட சிறந்த எந்த ஒரு வாழ்க்கையை மக்கள் வாழ்கிறார்கள்? ஏதோ ஒன்றோடு அல்லது யாரோ ஒருவரோடு ஒப்பிடும்போது மட்டும்தான் ஒருவர் சிறப்பாக வாழ்வது போல உங்களுக்கு தோன்றுகிறது. நீங்கள் சிறந்தவராக இருக்கிறீர்கள் என்று மற்றவர்கள் நினைக்கக்கூடும். ஆனால் உண்மையில், வாழ்க்கையில் சிறந்த எந்த ஒன்றை எவர் செய்கிறார்கள்? உண்பது, உறங்குவது மற்றும் இனப்பெருக்கம் செய்வது - அவ்வளவுதான். இந்த உலகத்தில் சௌகர்யத்திற்காக நாம் சில விஷயங்களை செய்ய வேண்டும். ஆனால் எந்த அளவுக்கு அதை செய்யவேண்டும் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். ஏனெனில், இந்த வசதிகளையும் சௌகர்யங்களையும் வைத்துக்கொண்டு நாம் பல புதிய வியாதிகளை உருவாக்கியுள்ளோம் - உடல் மனம் இரண்டிலும். நீங்கள் ஒரு விஷயத்தை அதிகப்படியாக செய்யும்போது, அது தற்கொலைக்கு சமமாக மாறும்.
முழுமையான விடுதலை
உங்களை அறிந்துகொள்வது என்பதுதான் அந்த சமநிலை. அதன் பிறகு, எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் முழுமையான மனிதராக நீங்கள் வாழமுடியும். பின்னர் நீங்கள் வெளியே புரியும் செயல்கள் எல்லாம் வெறுமனே அந்த சூழ்நிலைக்கு என்ன தேவை என்பதை பொறுத்ததாக இருக்கும், உங்களுக்காக செய்வதாக இருக்காது. அந்த ஒரு விடுதலையை தான் இது உங்களுக்கு தருகிறது. ஏதோ ஒன்று உங்களுக்கு தேவை என்ற காரணத்தினால் நீங்கள் செயல்படும்போது அது உங்களை பிணைக்கிறது. மெதுவாக நீங்களே அறியாமல் அதனோடு மிக ஆழமாக சிக்கிக்கொண்டு, அதிலிருந்து வெளியேறும் வழியே இல்லாமல் செய்துகொள்வீர்கள். சூழ்நிலைக்கு தேவைப்படும் காரணத்தினால் நீங்கள் ஏதோ ஒன்றை செய்தால், இனிமேல் இது தேவையில்லை எனும் நாள் வரும்போது, நீங்கள் அனைத்தையும் நிறுத்திக்கொள்ள முடியும். மேலும் அதில் எந்த பிணைப்பும் இருக்காது.
சுய ஞானம் அல்லது ஞானோதயம் என்று நாம் அழைப்பது இதுதான். நீங்கள் எவ்வாறு இருக்கிறார்களோ அது முழுமையானதாக இருக்கிறது என்ற ஒரு விடுதலையை அது கொடுக்கிறது. நீங்கள் முழுமையடைவதற்காக எதையும் செய்ய வேண்டிய தேவையில்லை, எதைப் பற்றியும் சிந்திக்க வேண்டியது இல்லை அல்லது உணர வேண்டியதும் இல்லை. நீங்கள் உங்களளவில் முழுமையாக இருக்கிறீர்கள்.