ஈஷா

ஒரு கழுதையாக இருக்காதீர்கள் - முற்றிலும் சுதந்திரமான வாழ்க்கையை நீங்கள் வாழ வழி என்ன?

1998-ல் நிகழ்ந்த ஈஷா யோகா ஆசிரியர்களின் சந்திப்பில், ஈஷாவை சுவாசமாக, வாழ்க்கையாக கொள்வதன் உண்மையான பொருள் என்ன என்பதை சத்குரு எடுத்துக் கூறியதிலிருந்து சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. மாற்றத்திற்கும், வல்லமை பெறுவதற்குமான பிரம்மாண்டமான சாத்தியத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கான சிறந்த வழியை இதில் சுட்டிக்காட்டுகிறார் சத்குரு.

சத்குரு: பல ஆன்மீக இயக்கங்களும் காலப்போக்கில் அவைகளின் நோக்கம் குறித்த உணர்வை இழந்துள்ளன. அவர்களுக்கு எல்லாமும் மிக சௌகரியமாகிவிட, பல ஆசிரமங்களும் ராஜ்ஜியங்களைப் போல் மாறிவிடுகிறது. ஈஷாவுக்கு அது நிகழாது என்று நான் நம்புகிறேன். ஈஷா என்றால் தெய்வீகம். ஈஷா என்றால் “அரசன்” என்பதும் பொருள். நாம் ஒருபோதும் அரசனாக ஆகிவிடக்கூடாது. ஒரு அரசன் அகங்காரத்தின் உச்சத்தைக் குறிக்கிறான் - எல்லாமே நிலையானதாக தோன்றுகையில், விழிப்புணர்வு மறைந்துவிடுகிறது. தெய்வீகம் என்பது உச்சபட்ச விழிப்புணர்வு - நிலையானது என்று எதுவும் இல்லை, எல்லாமே நெகிழ்வான இயல்புடையதாக இருக்கிறது.

ஆசிரமத்தில் வாழ்வது என்றால் உண்மையில் அதன் பொருள் என்ன?

ஆசிரமத்தில் வாழ்வதன் நோக்கம் என்னவென்றால், வீடில்லாமல் வாழ்வது - எந்த இடத்தையும் உரிமை கொண்டாடாமல், அதே நேரத்தில் உங்களை முழுமையாக அர்ப்பணித்து வாழ்வது. இந்த ஆசிரமம், இதன் கட்டிடங்கள் மற்றும் நாம் செய்துகொண்டிருப்பது என்னவாக இருந்தாலும், அவையனைத்தும் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த முக்கியத்துவமும் இல்லாதவை. இதனை நான் சொல்லும் கணமே, மக்கள் அதிர்ச்சியடையலாம். “பிறகு ஏன் இதையெல்லாம் செய்கிறீர்கள்?” இது உங்களுக்கு தேவைப்படுகிறது. தனிப்பட்ட முறையில் அது எனக்கு பொருட்டில்லை என்றாலும், அதையே செய்தபடி என் வாழ்க்கை முழுவதையும் வீணடிக்க நான் விருப்பமாக இருக்கிறேன். இந்தப் பாதையில் ஒருவர் இதைப் புரிந்து கொள்வதுதான் அவசியமாகிறது. நமக்கு இது ஏதோ பெரிய விஷயமாக இருக்கிறது என்பதால் நாம் இந்த செயல்கள் அனைத்தையும் செய்து கொண்டிருக்கவில்லை - இது தேவையாக இருக்கிறது என்பதால் மட்டுமே இதை நாம் செய்கிறோம்.

நாம் அர்ப்பணிப்பைப் பற்றி பேசும்பொழுது, மக்கள் அதை விசுவாசம் என்று எண்ணிக் கொள்கிறார்கள். அர்ப்பணிப்பு என்பது விசுவாசம் அல்ல. விசுவாசம் என்பது கண்மூடித்தனமான உணர்ச்சி. உங்கள் விசுவாசம் மாறக்கூடும், ஆனால் உங்கள் அர்ப்பணிப்பு ஒருபோதும் மாறுவதில்லை. விசுவாசம் தன்னிலை மாற்றம் ஏற்படுத்தும் திறனற்றது - அது வெறும் பிணைப்பாக மட்டுமே இருக்கிறது. அர்ப்பணிப்பு, தன்னிலை மாற்றம் ஏற்படுத்தும் திறன் கொண்டது; இது உங்களைப் பிணைப்பிலிருந்து விடுவிக்கிறது. நாம் ஒருபோதும் யாரிடமிருந்தும் விசுவாசத்தை கோருவதில்லை. நமக்கு விசுவாசம் வேண்டியதில்லை - நாம் ஒரு படையை திரட்ட முயற்சிக்கவில்லை. விசுவாசமாக இருக்கையில், புத்திசாலித்தனம் செயல்படுவதில்லை. அர்ப்பணிப்புடன் இருக்கையில், புத்திசாலித்தனம் செயல்படுகிறது. அதுதான் மிக முக்கியமான விஷயம்.

உச்சபட்ச விடுதலை

ஒரு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்தும் எளிமையான பந்தங்கள் எதுவும் உங்களுக்கு தேவையில்லாத பொழுது, நீங்கள் விடுபட்டவராக இருக்கிறீர்கள். விழிப்புணர்வாக இருப்பவர்கள், தங்களுக்குள் முற்றிலும் விடுபட்டவராக இருக்கும் யாரையாவது பார்த்தால் அற்புதமாகவும், அழகாகவும் உணர்கிறார்கள். ஆனால் விழிப்புணர்வின்மையிலும், பாதுகாப்பின்மையிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக்கு, முற்றிலும் விடுபட்டவராக இருக்கும் யாரையாவது பார்ப்பது அச்சமூட்டுவதாக இருக்கிறது. இது ஏனென்றால், அந்த விடுபட்ட உணர்வில், நீங்கள் விரும்புவதை உங்களால் செய்யமுடியும் என்று அவர்கள் புரிந்துகொள்கின்றனர். உங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒருவர் உண்டு என்றால், அது நீங்கள் மட்டும்தான். சமூகத்துக்கு அது ஆபத்தானதாகத் தோன்றுகிறது.

சுதந்திரம் அல்லது விடுபடுதல் என்றால் அவர்கள் நினைப்பதைச் செய்வது என்றுதான் எப்பொழுதும் மக்கள் எண்ணுகின்றனர். ஆனால் அங்குதான் பிணைப்பு இருக்கிறது. இந்தக் கணத்தில் செய்யத் தேவைப்படுவது என்னவாக இருந்தாலும், உங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அதைச் செய்ய முடிந்தால் - அதுதான் சுதந்திரம். சூழ்நிலைக்கு எந்த விதமாக தேவைப்படுகிறதோ, அப்படி உங்களால் இருக்க முடிந்தால் - அது சுதந்திரம். அது எவருக்கும் ஆபத்தானது அல்ல. உண்மையில், ஒவ்வொருவருக்கும் இந்த விதமான சுதந்திரம் இருக்கும்பொழுதுதான், உலகம் பாதுகாப்பானதாக இருக்கும்.

மாற்றத்துக்கான ஆற்றல்

யோகாவின் பல அம்சங்களையும் நாம் அப்படியே பின்பற்றாமல் தவிர்த்திருக்கிறோம், ஏனென்றால் இந்த சக்தி வளையத்தில் (ஈஷா யோக மையத்தின் பிரதிஷ்டை செய்யப்பட்ட சூழலை குறிப்பிடுகிறார்) நமக்கு நம்பிக்கை உள்ளது. நாம் இயமங்கள் மற்றும் நியமங்களை (செய்வன மற்றும் செய்யக்கூடாதன) பெரிதுபடுத்துவதில்லை, ஏனென்றால் சக்தியானது இந்த விதமாக இருக்கும்பொழுது, விஷயங்கள் இயல்பாகவே நிகழும். ஆனால் இந்த ஆசிரமத்தில் நீங்கள் ஒரு கழுதையை வைத்திருந்தால், தன் மீது சக்தியானது எந்த தாக்கமும் ஏற்படுத்த முடியாதபடி அது உணர்வற்று இருக்கிறது. அவர் ஆசிரமத்தில் வாழ்ந்துகொண்டிருந்தாலும், அவர் தன்னை மாற்றம் செய்துகொள்வதில்லை. உங்களை நீங்களே ஒரு கழுதையாக்கிக்கொண்டு, உங்களைச் சுற்றிலும் இருக்கும் எல்லா சக்தியினாலும் தொடப்படாமல் இருக்கமுடியும். இதுதான் ஒரே அபாயம்.

உங்களை நீங்களே கழுதையாக்கிக்கொண்டால், பிறகு சக்தி உங்களைத் தொடுவதில்லை. இல்லையென்றால், எவரும் தொடப்படாமல் போவதற்கு வழியே இல்லை. என் முன் ஒரு கணம் உண்மையாக அமரும் எவரும், தொடப்படாமல் போகமுடியாது; அவர்களது வாழ்வில் ஏதோ ஒன்று தொடப்படுகிறது. நீங்கள் முற்றிலும் ஜடமாக இங்கே அமர்ந்தால், பிறகு உங்களுடன் நாம் செய்யக்கூடியது எதுவும் இல்லை. நாம் பாறைகளை மாற்றம் செய்கிறோம், ஆனால் கழுதைகளை மாற்றம் செய்யும் திறன் நம்மிடம் இல்லை. மேலும், ஆசிரமத்திற்குள் கழுதை தொழில்நுட்பங்களைக் கொண்டுவருவதற்கும் நாம் விரும்பவில்லை, ஏனென்றால் எந்த விதமான மக்களுடன் நாம் செயல்பட விரும்புகிறோம் என்பதை நாம் தீர்மானித்துள்ளோம்.

ஈஷாவை உங்களுக்குள் சுமப்பது

எந்த விதமான சூழல்களில் நாம் பங்கேற்க விரும்புகிறோம், எந்த விதமான மாற்றத்தைக் கொண்டுவர விரும்புகிறோம், எந்த அளவுக்கு செயல்பட விரும்புகிறோம் என்பதை நாம் தீர்மானிக்கவேண்டும். ஏனென்றால், ஒரு குறிப்பிட்ட வழியில் செயலை நாம் ஒருங்கமைக்கும் பொழுதுதான், அதற்கான பலன்கள் கிடைக்கும். இந்த உலகில் இருக்கும் எல்லாவற்றையும் செய்வதற்கு நீங்கள் முயற்சித்தால், பிறகு எதுவும் நிகழாது. ஆகவே, எங்கு செயல்படவேண்டும் என்பதை நாம் தீர்மானித்துள்ளோம். இதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, மிக எளிதில் அவர்களாகவே அதிலிருந்து வெளியில் வருவதற்கு ஒரு நபருக்கு, கழுதைக்கும்கூட, தினமும் நூற்றுக்கணக்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் கழுதையை அவர்களிடமிருந்து அடித்துத் துரத்த நாம் விரும்பவில்லை - அதை என்ன செய்வது என்பது அவர்களது விருப்பம்.

ஆசிரமத்துக்கு வெளியே பல கழுதைகள் உள்ளன. நீங்கள் வெளியில் சென்றால், சரியானபடி நீங்கள் காலூன்றி இருந்தால்தவிர, அவைகள் திரண்டுவந்து, உங்களை உதைத்துக் கிழித்தெறிந்துவிடும். ஆனால் “ஈஷா” என்று நாம் அழைக்கும் அந்தத் தன்மையை நீங்கள் உங்களுக்குள் சுமந்தால், அப்போது சரியான விஷயங்கள் நிகழத் தொடங்கும்.