பகிர்வுகள்

ஆசிரியர் தின சிறப்புக் கட்டுரை: சத்குருவின் குறும்புத்தனமும், அவரது நினைவிலிருந்து என்றும் நீங்காத ஆசிரியரும்

பாரதத்தின் இளைஞர்களுக்கு ஊக்கமும், ஆற்றலும் அளிக்கும் ஒரு இயக்கமாக “இளைஞரும் உண்மையும்” திகழ்கிறது. இந்த நிகழ்வின் பொருட்டு, மாணவ சமுதாயத்துடன் கலந்துரையாடுவதற்காக, பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சத்குரு பயணம் செய்தார். ஆசிரியர் தினத்தன்று, மைசூருவில் உள்ள டெமான்ஸ்ட்ரேஷன் மல்டிபர்பஸ் பள்ளிக்கு வருகை தந்தபோது, அவரது முன்னாள் ஆங்கில ஆசிரியை சரஸ்வதியுடன் கலந்துரையாடுகையில், தன் சிறுவயதில் அழுத்தமாக பதிந்துவிட்ட ஒரு சம்பவத்தையும் அவர் நினைவு கூர்ந்தார்.

சத்குரு: நான் அப்படி ஒன்றும் ஆதர்ஸ மாணவனாக இருந்ததில்லை என்பதை நான் ஒப்புக்கொண்டாக வேண்டும். மிகவும் அவசியமான பொழுது மட்டும்தான் நான் பள்ளிக்கு வந்தேன். ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு பள்ளிக்கு மாறிக்கொண்டே இருந்தேன். இந்தப் பள்ளியில் நான் இரண்டு வருடங்களைக் கழித்தேன் என்பதே, இந்தப் பள்ளி எனக்கு நன்றாக அமைந்தது என்பதை காட்டுகிறது!

ஆசிரியை சரஸ்வதியை நான் எவ்விதம் நினைவில் வைத்திருக்கிறேன் என்பதை நிச்சயமாக நான் பகிர்ந்துகொள்ள வேண்டும்…

அப்போது நாங்கள் 10-ம் வகுப்பு சி பிரிவில் இருந்தோம். உண்மையில், அந்த நேரம் தலைமை ஆசிரியராக இருந்தவர் பல தருணங்களில், இந்தப் பிரிவு முழுவதையும் கொத்தாகத் தூக்கி, ஒரு ஏரியிலோ அல்லது வேறெதிலோ எறிந்துவிட நினைத்தார். அப்படி ஒன்று நிகழவில்லையே தவிர, அவரது எண்ணம் அதுவாகத்தான் இருந்தது. அப்போது, எங்களுக்கு ஒரு புதிய ஆங்கில ஆசிரியை வரப்போகிறார் என்பது எங்களுக்கு தெரியவந்தது. வகுப்புகள் துவங்கி ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஆசிரியை வந்தார். அவர் வந்த முதல் நாளன்று, நான் என் வகுப்பு மாணவர்கள் ஒரு சிலருடன் வெளியில் இருந்தேன். இந்தப் புது ஆசிரியை யார் என்று நாங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தோம், ஏனென்றால் எந்த ஆசிரியரும் எங்கள் வகுப்புக்கு வருவதற்கு விரும்பியதில்லை.

மொடமொடப்பான கஞ்சி போடப்பட்ட, ஒரு வெண்ணிறமான, புள்ளியிட்ட சேலையில், மயில்போல் அவர் நடந்து வந்தது என் நினைவில் இருக்கிறது. நாங்கள் கவனமுடன் அவரை ஆராய்ந்துகொண்டே, “இவர் எங்கிருந்து வருகிறார்? இதற்கு முன்பு இவர் எங்கே ஆசிரியராக இருந்துள்ளார்?” என்று விவாதித்தோம்.

“இல்லை, இவர் இப்போதுதான் படித்து முடித்திருக்கிறார்.”

“ஓ! இவரால் நம்மைக் கையாள முடியுமா? இப்போதுதானே கல்லூரியிலிருந்து வெளியில் வந்திருக்கிறார்?!”

அவர் கையாண்ட முதல் வகுப்பு எங்களுடையதுதான் என்பதுடன், ஒரு புது ஆசிரியை என்ற நிலையில், அவர் பதட்டமாக இருந்தார் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அவர் வகுப்பறை முழுவதும் சுற்றி வந்தார். நான் கடைசி பெஞ்ச்சில் இருந்தேன். அவரது இயல்பான போக்கில் குறுக்கிட்டு நாங்கள் எதையாவது செய்ய விரும்பினோம். அவர் வகுப்பில் இருந்த மாணவர்களுடன் பேசிக்கொண்டே, தான் அனைவர் மீதும் அக்கறை கொண்டுள்ள ஒரு ஆசிரியை என்பதை உணர்த்த விரும்பி, கடைசி பெஞ்ச் வரை நடந்து வந்தார். அவர் என் மேசை மீது சாய்ந்து நின்றுகொண்டு, மறுபக்கம் பார்த்துப் பேசியதால், இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதில் எனக்கு ஆர்வமாகிவிட்டது. நான் எனது பேனாவைத் திறந்து, அவரது கஞ்சி போட்ட வெள்ளை சேலை மீது இங்க் படருமாறு வைத்தேன், பருத்தி ஆடையாதலால் அது இங்க் முழுவதையும் உறிஞ்சிக்கொண்டது. ஆனால் அவர் இதை கவனிக்கவில்லை. சில மாணவர்கள் வாய்பொத்திச் சிரித்தனர். பிறகு அவர் வகுப்பு முடிந்து சென்றுவிட்டார்.

ஆசிரியர்களின் ஓய்வறையில், அவரது சேலையில் இருந்த பெரிய இங்க் கறையைப் பற்றி யாராவது கூறியிருக்க வேண்டும். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, நான் வகுப்பறையில் இருந்தபோது, ஆசிரியர் அறைக்கு வருமாறு என்னிடம் கூறப்பட்டது. “இன்னொரு சஸ்பென்ஷன் போலும்” என்று நான் நினைத்துக்கொண்டேன். ஏனெனில் அந்த இரண்டு வருடங்களில், நான் குறைந்தபட்சம் ஆறு முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தேன்.

நான் அங்கு சென்றதும், ஆசிரியை என்னிடம் இருந்த பேனாவைக் கேட்டார். நான் அதனை அவரிடம் கொடுத்தேன். துளியளவும் இங்க் இல்லாமல் காலியாக இருந்த என் பேனாவை ஒரு சாட்சியாகப் பறிமுதல் செய்யப்போகிறார் என்று நான் நினைத்தேன். ஆனால், அவர் ஒரு இங்க் பாட்டிலை வெளியில் எடுத்து, என் பேனாவை வாங்கி, இங்க் நிரப்பி, என்னிடமே திருப்பிக் கொடுத்தார். “நன்றி மேடம்” என்று கூறிவிட்டு நான் வகுப்பறைக்குத் திரும்பினேன். அந்த ஒரு விஷயம், அந்த ஒரு ஆசிரியையை நான் ஒருபோதும் மறக்க முடியாதபடி செய்துவிட்டது.