வாழ்வியல் கேள்விகள்

அந்தரங்கம் எப்போது பொருட்டாகிறது: தனிமையில் விடப்படுவதை நாம் ஏன் விரும்புகிறோம்?

1994ம் ஆண்டு நிகழ்ந்த 90 - நாள் ஹோல்னஸ் வகுப்பிலிருந்து சத்குருவின் ஒரு உரை

ஈஷா யோக மையத்தின் ஆரம்ப நாட்களைத் திரும்பிப் பார்க்கும் விதமாக, 1994ம் ஆண்டு ஈஷா யோக மையத்தில் 90 நாட்கள் தீவிரமான நிலையில் நிகழ்ந்த ஹோல்னஸ் வகுப்பின்போது சத்குரு பேசியதிலிருந்து ஒரு பகுதி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அந்தரங்கத்திற்கான தேவை உண்மையில் எங்கிருந்து வருகிறது என்பதையும், ஆன்மீகப் பாதையில் அது எப்படி ஒரு தடைக்கல்லாக இருக்கிறது என்பதையும் விளக்குகிறார் சத்குரு.

அந்தரங்கத்திற்கான தேவை நமக்கு ஏன் எழுகிறது?

கேள்வி: சத்குரு, சில நேரங்களில் என்னால் சமாளிக்க முடியாத ஒரு சூழ்நிலையில் அகப்படும்போது, என்னை மடக்கிவிட்டார்கள் என்பதை உணர்ந்ததும், ஒரு விதமான ஏகாந்தமான தனிமை எனக்குத் தேவைப்படுகிறது. தனிமையில் இருக்க விரும்புவது, ஆன்மீக செயல்முறையின் ஒரு பகுதிதானே என்ற ஆச்சரியமும் எனக்குள் எழுகிறது.

சத்குரு: நீங்கள் திறந்த தன்மையில் இல்லாத காரணத்தால், உங்களை மடக்கிவிட்டார்கள் என உணர்கிறீர்கள். எவரும் கடந்து வருவதற்கு அனுமதிக்காத ஒரு எல்லையை நீங்கள் வைத்திருக்கிறீர்கள். யாராவது அந்த இடத்தை தொட்டால், நீங்கள் சிக்கிவிட்டதாக உணர்கிறீர்கள். அந்த எல்லையை உடைப்பதுதான் ஆன்மீக செயல்முறையின் ஒட்டுமொத்த முயற்சியாக இருக்கிறது.

தனிமையில் இருப்பது என்பது வேறுவிதமானது. உங்களைத் தவிர வேறு எதுவும், வேறு எவரும் இல்லாதபடி, அனைத்தும் உங்களின் ஒரு பகுதியாகும் போதுதான் உண்மையாகவே உங்களால் தனிமையாக இருக்கமுடியும். அந்த உச்சபட்ச உணர்தலே தனிமை. பிரிந்து செல்வது தனிமை அல்ல. அப்படியானால் இந்த ஏகாந்தம், அந்தரங்கம் என்பது என்ன? நாம் அசௌகரியமாக உணரும் போதெல்லாம், தனித்து விடப்படுவதற்கு நாம் விரும்புகிறோம். நீங்கள் வகுத்துள்ள எல்லைக்குள் நுழைய ஒருவரும் முயற்சிப்பதில்லை, எப்படி எல்லையை தாண்டுவது என்பதுகூட அவர்களுக்கு தெரியாது. நீங்கள் ஒரு எல்லையை அமைக்கும் கணமே, மற்றவர்கள் உங்களைத் தனியாக விட்டுவிடுவார்கள். நான்தான் உங்களின் எல்லா எல்லைகளுக்குள்ளும் பிரவேசிக்கிறேன். நீங்கள் ஒரு தடையை அமைத்தாலும், நான் வேறொரு வழியாக வருவேன். நான் உங்களை அப்படியே இருக்கட்டும் என விட்டிருந்தால், இன்றைக்கு நீங்கள் இங்கே இருக்கமாட்டீர்கள்.

உங்கள் வழியில் நீங்களே குறுக்கிடும்பொழுது

உங்களிடம் ஏதோ ஒன்றைக் கூறினால், அது உங்களுக்கான சிறந்த விஷயமாக இருந்தாலும்கூட, சற்றே எரிச்சலடையக்கூடிய நிலையில்தான் உங்களில் பலரும் இன்னமும் இருக்கிறீர்கள். இது ஏனென்றால், உங்களுக்கே உரிய தனித்தன்மை, உங்களுக்கே உரிய விருப்பம் மற்றும் உங்களுக்கே உரிய அந்தரங்கம் என்று நீங்கள் வைத்திருக்கிறீர்கள். உங்களிடம் வேண்டிக் கேட்டுக்கொள்வதைப் போலத்தான் நாம் உங்களிடம் பேச வேண்டியிருக்கிறது. ஆனால் உண்மையில், உங்களுக்கு எது சிறந்தது என்று பார்த்து, நாம் உங்களிடம் கூறுகிறோம். அது உங்களுக்கு சிறந்ததாக இருந்தாலும்கூட, வேறொருவர் உங்களுக்குக் கூறும் காரணத்தால், நீங்கள் எதிர்ப்பு காட்டுகிறீர்கள். உங்களது சரணாகதி முழுமையாக இருந்தால், இது தேவையில்லாதது. உங்கள் அந்தரங்கத்துக்குள் யாராவது எல்லை கடந்து பிரவேசித்தால், நீங்கள் அவமதிக்கப்படுவீர்கள். அந்தரங்கம் என்பதற்கான அவசியம் இல்லையென்றால், அவமதிப்படைவதற்கான சாத்தியமும் இல்லை.

ஒளிவு மறைவு இல்லாமல் உங்களையே ஒப்படைப்பதற்கு, அபாரமான நம்பிக்கை தேவைப்படுகிறது. தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுக்கு அளிக்கப்பட்டால், நீங்கள் வேறெந்த விஷயத்தையாவது செய்வீர்கள் என்ற காரணத்தினால் அதை நாம் உங்களிடம் கூறினோம். இதை பலமுறை உங்களிடம் கூறியிருந்தாலும், ஒரு சில நாட்கள் கழித்து, நீங்கள் மறுபடியும் வந்து, “இது எனக்கானது இல்லை,” என்று கூறுவீர்கள். இந்த “நான்” என்பதையே மறந்துவிடுங்கள். தற்போது “நீங்கள்” என்று எதுவும் இல்லை. உங்கள் உயிர்த்தன்மை உறுதியாக நிலைநிறுத்தப்படாத வரையில், “நீங்கள்” என்பது இல்லை. மனம் மற்றும் உணர்ச்சிகளின் குளறுபடி மட்டும்தான் இருக்கிறது. நீங்கள் வெளியிலிருந்து சேகரித்துள்ள இந்த குளறுபடியை, “நீங்கள்” என்று கருதாதீர்கள்.

நான் உங்களிடம் பேசும்பொழுது, ஒரு உயிராக உங்களிடம் பேசவில்லை என்பது எனக்கு தெரியும். நீங்கள் என்னுடன், ஒரு உயிராக இருக்கும் கணங்கள் உண்டு. அந்தக் கணங்களில், முற்றிலுமாக எந்த பிரச்சனையும் இருப்பதில்லை; எதுவும் சொல்லப்படவும் தேவையில்லை; எல்லாமே, எது எந்த விதமாக நிகழ வேண்டுமோ அது அந்த விதத்தில் நிகழ்கிறது. ஆனால் உங்கள் குளறுபடிகளுடன் நீங்கள் வரும்பொழுது, நாம் உங்களிடம் பேச வேண்டியுள்ளது. உங்கள் மனம் மற்றும் உணர்ச்சிகளை கவனத்துடன் கையாள வேண்டியிருக்கிறது. இல்லையெனில், நீங்கள் ஒரு தவறான விஷயம் செய்தால், இந்த குளறுபடி ஓடிவிடக்கூடும். உங்களுக்குள் இருக்கும் உயிர்த்தன்மை இங்கே இருப்பதற்கு ஏங்கித் தவிக்கக்கூடும், ஆனால் மனம் மற்றும் உணர்ச்சிகளின் குழப்பம் உங்களைத் தொலைதூரத்துக்கு எடுத்துச் செல்லலாம்.

ஒருமைக்கு இரு பாதைகள்

என் உயிரும், உங்களது உயிரும் வெவ்வேறாக இருக்கமுடியாது. நீங்கள் அந்த அளவில் இருந்தால், நாம் விரும்பும் எதையும் செய்யமுடியும்; ஒளிவுமறைவு என்ற கேள்விக்கே இங்கே இடமில்லை. ஒருமைநிலை என்றால், நீங்கள் மட்டும்தான் இருக்கிறீர்கள் அல்லது நீங்கள் என்பதே இல்லை. இவையே இரண்டு வழிகள். பொறுப்புணர்வின் பாதை என்னவென்றால், அங்கே நீங்கள் மட்டுமே இருக்கிறீர்கள். சரணாகதியின் பாதை என்றால், அங்கே நீங்கள் என்பதே இல்லை. நீங்கள் மட்டுமே இருக்கிறீர்கள் என்றால், ஒட்டுமொத்த பிரபஞ்சமுமே நீங்கள்தான்; இங்கே அந்தரங்கம் என்பது இல்லை. நீங்கள் என்பதே இல்லை என்றாகும்போது, அந்தரங்கம் என்ற கேள்விக்கே இடமில்லை.

இந்த பௌதிக உடலுக்கு சிறிதளவு தனிமையான சூழல் தேவையாக இருக்கிறது - அது வேறு. ஆனால், நீங்கள் யாருடனாவது காதலில் வீழ்ந்தால், அந்த உறவு நிலையில் தனிமைக்கான தேவையே இல்லை, ஏனென்றால் உங்களுக்குள் எங்கோ ஒரு இடத்தில், ஒருமைநிலை ஏற்பட்டுவிட்ட உணர்வு இருக்கிறது. ஒருமைநிலை என்று வரும்பொழுது, உங்களுக்கு தனிமையோ, அந்தரங்கமோ தேவையா? ஒரு யோகி, வீதியில் நிர்வாணமாக நடந்து செல்கிறார். அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, உடல்ரீதியான அந்தரங்கவெளி அவருக்கு தேவைப்படவில்லை. நான் உடலை மூடியிருப்பது எனக்கு மறைப்பு தேவை என்பதற்காக அல்ல, உங்களால் அதை ஜீரணிக்க முடியவில்லை என்பதால். ஏனென்றால் நீங்கள் என்னைப் பார்க்கும் பொழுதுகூட, இந்த அந்தரங்கத்திற்கான தேவை உங்களுக்கு இருக்கிறது. உங்கள் வாழ்வில் காதல் நுழையும் கணமே, அந்தரங்கத்திற்கான தேவை மறைந்துவிடுகிறது. நேசம் இல்லாத காரணத்தினால்தான், அந்தரங்கம் உங்கள் வாழ்வில் பெரியதொரு பிரச்சனையாக இருக்கிறது.

அந்தரங்கத்திற்கான தேவை மறையும்பொழுது

அந்தரங்கத்திற்கான தேவை என்பது பிரிதலுக்கான ஒரு தேவையாக இருக்கிறது. அது நீங்கள் அமைத்திருக்கும் ஓர் எல்லைக்கோடு. உங்கள் பொறுப்புணர்வுக்கு எல்லை இல்லாதபொழுது, அந்த எல்லைக்கோட்டை நீங்கள் முடிவின்மைக்கு நகர்த்துகிறீர்கள்; அதாவது அங்கே எல்லை என்பதே இல்லை. இந்த எல்லைகளை அகற்றும்படி நீங்கள் யாரிடமாவது கூறினால், அவர்களால் அவற்றை அகற்ற முடியுமா? அது எங்கே இருக்கிறது என்பதுகூட அவர்களுக்கு தெரியாது. உங்கள் பொறுப்புணர்வைக் கொண்டுதான் நீங்கள் உங்கள் எல்லையை அமைக்கிறீர்கள். நீங்கள் ஒரு குமாஸ்தாவாக இருந்தால், ஒரு மேலாளராக விரும்புகிறீர்கள். ஏனென்றால், உங்கள் எல்லையை விரிவுபடுத்த நீங்கள் முயற்சிக்கிறீர்கள். ஒவ்வொருவருக்கும் அவரவரது எல்லையை விரிவுபடுத்திக்கொள்ளும் ஒரு உந்துதல் உள்ளது.

நீங்கள் ஏன் அதிக செல்வம், நண்பர்கள் மற்றும் சொத்து சேர்க்க விரும்புகிறீர்கள்? தற்போது நீங்கள் இருப்பதைவிட இன்னும் விரிவடைய வேண்டும் என்ற ஏக்கத்துடன் இருக்கிறீர்கள். உங்களுக்கு இருப்பது ஒரு ஏக்கர் நிலமோ அல்லது ஆயிரம் ஏக்கர் நிலமோ, அது எவ்வளவாக இருந்தாலும், சிறிதளவு சொத்து உங்களைப் பெரிதாக்கி விடுவதில்லை. உங்களது பொறுப்புணர்வு அதிகரிக்கும் பொழுதுதான், சற்றே விரிவடைந்ததாக நீங்கள் உணர்கிறீர்கள் - அதாவது எல்லை விரிவடைந்துள்ளது. எல்லையில்லாத பொறுப்புணர்வுக்குள் நீங்கள் நகரும்பொழுது, உங்கள் மீதான எல்லை இருப்பதில்லை என்பதுடன் அதன்பிறகு அந்தரங்கத்திற்கான தேவையும் இல்லாமல் போகிறது.