நீங்கள் யார் என்பதன் பிரவாகம்
சத்குரு: இங்கே நடத்தப்படும் பூஜை, வெளியே பொதுவாக செய்யப்படும் பூஜையைக் காட்டிலும் வித்தியாசமான ஒரு தன்மையை கொண்டுள்ளது. தியானத்தில் இருக்கும் ஒருவர் பூஜை செய்தால் அது ஒரு வித்தியாசமான தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். பூஜை என்பது வெறுமே இறைஞ்சுவதற்கான ஒரு செயல்முறையாக இருந்தால் அதில் பெரிதாக முக்கியத்துவம் ஒன்றும் இல்லை. மிக கவனமாக செய்யப்பட்டால் அந்த செயல்முறையே சக்திவாய்ந்த வழிமுறையாக மாறும். மிக கவனமாக செய்ய வேண்டிய தேவை இருந்தாலும் இது ஒரு உடற்பயிற்சியை போன்றதல்ல. குருபூஜை என்பது நீங்கள் யார் என்பதன் ஒரு பிரவாகமாக இருக்க வேண்டும்.
நீங்கள் நம்பும் ஒரு சிலைக்கு செய்யும் பூஜைக்கும், உயிர்ப்போடும், உணர்வு அளவில் உங்களுக்கு உண்மையாகவும் இருக்கும் ஒன்றை நோக்கி செய்யும் பூஜைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அப்படி பார்த்தோமானால், பூஜை செய்யப்படும் அந்த பொருள் உயிர்ப்போடு இருந்தால்தான் எந்த பூஜையும் உயிர்ப்பானதாக மாறும். அவர்களளவில் உயிர்ப்போடு இருக்கும் ஒன்றிற்கு - வெளியிலும் அவர்களுக்குள்ளும் உயிர்ப்போடு இருக்கும் ஒன்றிற்கு - ஒருவர் பூஜை செய்தால், அந்த பூஜை வேறு வகையான ஒரு முக்கியத்துவத்தை அடைகிறது.
விரைவான வழி
நிறைய விஷயங்களை நீங்கள் தானாகவே கற்றுக்கொள்ள இயலாது. இந்த உயிர் என்ன என்பதைப் பற்றி கற்றுக்கொள்ள ஒருவருக்கு ஒரு ஆயுட் காலம் போதுமானதாக இருக்காது. குறிப்பிட்ட சில மனிதர்களிடம் பல ஜென்மங்களாக சேகரிக்கப்பட்ட ஞானம் இருக்கிறது. அதைப் பெற்றுக்கொள்ள, நமக்குள் சரியான சூழலை நாம் உருவாக்க வேண்டும். அவ்வாறு உருவாக்குவதற்கு குருபூஜை ஒரு சிறந்த வழி. நான் எனக்குள் கொண்டிருக்கும் புரிதலை நீங்களாகவே பெறுவதற்கு உங்களுக்கு பல ஜென்மங்கள் எடுக்கக்கூடும். சிலர் நூறு ஜென்மங்களை கடந்து அடைந்த ஒரு குறிப்பிட்ட ஞானத்தை நாம் பெற்றுக்கொள்ள முடியும். அவர்கள் வழங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள். ஆனால் அதைப் பெறுவதற்கு நாம் சரியான சூழலை உருவாக்க வேண்டும். பெற்றுக்கொள்வதற்கான அந்த தன்மையை உங்களுக்குள் உருவாக்குவதற்கு உதவும் மிக முக்கியமான சக்தி வாய்ந்த கருவியாக குருபூஜை இருக்கிறது.
குருபூஜை செய்ய சரியான வழி
நீங்கள் குருபூஜை செய்யும்போது, முழுமையாக நீங்கள் அங்கு இருக்க வேண்டும் - வேறு எதுவும் இருக்கக் கூடாது. முழு செயல்முறையும் சரியான வகையில் செய்ய நீங்கள் கற்றுக்கொள்வது ஏனென்றால், இடையில் யோசிக்க வேண்டிய தேவையே ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான். நீங்கள் சிந்திக்கத் துவங்கும் தருணமே, அங்கு தியானம் இருக்காது. அதைப்போலவே, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி சிந்திக்கத் துவங்கும் தருணமே அங்கு பூஜை இருக்காது. அதன் காரணத்தினால்தான், பூஜையை துவங்குவதற்கு முன், அனைத்தும் சரியான வகையில் தயாராக இருக்க வேண்டும். அனைத்தும் அதனதன் இடத்தில் சரியான வகையில் இருக்க வேண்டும், பூஜையானது ஒரு பிரவாகமாக வெளிப்பட வேண்டும். குருபூஜை என்பது நீங்கள் செய்யும் ஏதோ ஒரு செயல் அல்ல, அது வெறுமனே உங்களிலிருந்து பிரவாகமாக வெளிப்பட வேண்டும்.