மீண்டும் மலைகளுடன்
சத்குரு: இமாலயம் - இந்த மகத்துவமான மலைகள் என் சிறு வயது முதலே என் வியப்புக்கும், ஈர்ப்புக்கும் உரியவையாக இருக்கின்றன. நான் காணக்கிடைத்த பல புகைப்படங்கள் மற்றும் புத்தகங்கள் இந்த பெரும் மலைப்பாதைகளில் மலையேற்றம் செல்ல வேண்டும் என்ற என் ஆவலை வெகுவாக தூண்டிவிட்டன. இந்த மலைகள் பலரின் மத நம்பிக்கைகள் மற்றும் ஆன்மீக ஆர்வங்களுக்கு உத்வேகம் அளித்தாலும், நான் அந்த எண்ணத்தில் இந்த மலைகளை எப்போதும் பார்த்ததில்லை.
செப்டம்பர் 1993-ல், நான் எங்கு செல்லவேண்டும் என்று தெரியாமலே ஹரித்வாரை வந்தடைந்தேன், பின்னர் பத்ரிநாத்தை நோக்கி பயணித்தேன். மலையின் மடியில் ஒரு பாம்பைப் போல வளைந்து நெளிந்து சென்ற நீண்ட பாதையில் பதினாறு மணி நேரம் ஊர்ந்து சென்ற அந்த பஸ் பயணம் எப்போதும் ஞாபகத்தில் இருக்கும் ஒன்று - கருவறைக்குள் திரும்பும் வழியை நான் கண்டறிந்தது போல் இருந்தது. இப்போதும் கூட, கிட்டத்தட்ட அந்த சாலையின் ஒவ்வொரு வளைவும் எனக்கு அத்துப்படியாக இருக்கிறது. நான் பத்ரிநாத்தை அடைந்தபோது இருள் கவிழ்ந்து, குளிர் பரவியிருந்தது. குளிருக்காக அணியும் ஆடை எதுவும் அப்போது என் வசம் இல்லை - வெறுமனே ஜீன்ஸ், டி ஷர்ட் மற்றும் ஷூக்களை அணிந்திருந்தேன். அங்கு பனிப்பொழிவு ஆரம்பித்தபோது எப்படியோ தங்குவதற்கு ஒரு இடத்தை கண்டடைந்தேன்.
அடுத்த நாள் காலை தேநீர் அருந்துவதற்காக நான் வெளியே வந்தேன் - அந்த குளிரில் இருந்து தப்புவதற்கு அது மட்டுமே ஒரே அடைக்கலம் போல இருந்தது. கடும்குளிராக இருந்தாலும், சமாளித்துக்கொண்டு டீக்கடைக்கு செல்லும் வழியில் தொடர்ந்து நடந்தேன். குளிரினால் என் கைகள் உணர்வற்றுப் போக, என் கையிலிருந்து நான் தங்கியிருந்த அறையின் சாவி நழுவி கீழே விழுந்தது. அதை எடுப்பதற்காக கீழே குனிந்தேன். நிமிர்ந்தபோது நான் கண்ட காட்சியை கைதேர்ந்த ஒரு கவிஞனால் கூட விவரிக்க இயலாது. கும்மிருட்டாக இருந்த ஒரு பள்ளத்தாக்கில் நான் இருந்தேன். ஆனால் என் முன்னே இருந்த பனி போர்த்திய மலைச்சிகரம் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது - தூய்மையான வெண்பனி, அதில் பட்டு தகதகக்கும் பொன்னிறமான சூரிய ஒளி. அந்த காட்சி முழுமையாக என்னை ஆட்கொண்டது. நான் அதுவரை கேட்டது, படித்தது, பார்த்தது, கற்பனை செய்தது அனைத்தும் என் கண் முன்னால் விரிந்த அந்த காட்சிக்கு முன் ஒன்றுமில்லாமல் போனது. என் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் தான் அதற்கு ஒரே பதிலாக இருந்தது - மீண்டும் இணைகையில் பொங்கும் கண்ணீர் துளிகள் அவை என்று நான் பின்னர் அறிந்துகொண்டேன்.