சுற்றுச்சூழல் & விழிப்புணர்வு

விழிப்புணர்வான உலகம்: மனிதகுலத்திற்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான ஒரே தீர்வு

தற்போது நிகழும் கோவிட்-19 பெருந்தொற்று, நாம் அறிந்துள்ள மனித வாழ்வுக்கு நாசம் விளைவிக்கும் ஒரு அழிவுகரமான போக்கின் ஆரம்பமாக இருக்கக்கூடும். நாம் பொறுப்புடனும் நல்லிணக்கத்தோடும் வாழ்வதன் மூலம் நம்மை நாமே காத்துக் கொள்வதற்கும், வருங்காலத்தில் ஏற்படும் இடர்பாடுகளை தடுப்பதற்கான வழிகள் பற்றியும் சத்குரு விளக்குகிறார்.

சத்குரு: மரபணுக்கள் மற்றும் மரபியல் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த அடிப்படையான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கும் பல விஞ்ஞானிகளோடு நாம் உரையாடி வருகிறோம். வெளிச்சூழல்களால் அவை எவ்வாறு மாற்றப்படுகின்றன என்பது பற்றியும், உள்நிலையில் ஒருவர் தனக்குள் உருவாக்கும் சூழலால் அவை எவ்வாறு மாற்றம் பெறுகின்றன என்றும் அவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.

அவர்களில் பலரும் மரபணுக்கள், மரபியல் செயல்பாடு, உள் மற்றும் வெளி சூழல்கள் ஆகியவற்றுக்கு இருக்கும் தொடர்பைப் பற்றி குறிப்பிடுகின்றனர். இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கேள்வி யாதெனில், இவை எவ்வளவு நேரடியாக தொடர்புடையவை என்பதுதான். அதைப்பற்றி நான் சிந்திக்க தேவையில்லை; அது என் களமும் அல்ல. உயிரைப் பற்றி எனக்கு இவ்வளவுதான் தெரியும் - இந்த பூமி உணர்திறன் கொண்டது, நாம் புரியும் ஒவ்வொரு செயலும் மற்ற அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

புத்துயிர் பெற்று மீண்டு வரும் திறன் பூமிக்கு அளவில்லாமல் இருப்பதாக நாம் எண்ணினோம். ஆனால் அவ்வாறு இல்லை; உயிரை பேணும் அளவுக்கு அது மகத்தானதாக இருக்கிறது. இப்போதும் கூட நீங்கள் பூமியை காப்பாற்றிவிடுவீர்கள் என்பது போன்ற கம்பீரமான எண்ணங்களை கொண்டிருக்காதீர்கள். இந்த பூமி அபாயத்தில் இல்லை - மனித உயிர்தான் ஆபத்தில் உள்ளது. இதோடு சேர்ந்து, துரதிருஷ்டவசமாக பல அப்பாவி உயிர்களும் ஆபத்தில் உள்ளன.

அன்னை பூமியை அழிக்க நம்மை எது தூண்டுகிறது

நாம் என்ன செய்ய முடியும் என்று பார்ப்பதற்கு முன், இந்த ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இந்த பூமியில் ஒரே ஒரு பிரச்சனைதான் உள்ளது - அது மனிதர்கள்தான். அந்த பிரச்சனையை நீங்கள் அணுகாமல், அதற்கு தீர்வு தேடாமல் இருந்தால், பரிணமிக்கக்கூடிய பேராபத்துகளை தள்ளிப்போடுவதாக மட்டுமே அது இருக்கும்.

மனிதர்களைப் பற்றிய எந்த பிரச்சனையை நாம் அணுக வேண்டும்? தற்போது மனிதர்கள் தங்கள் இன்பம் மற்றும் நல்வாழ்வுக்கான தேடலில் உள்ளார்கள். ஆனால், உலகையே பாதி வழித்து எடுத்துவிட நீங்கள் மக்களை அனுமதித்தாலும், எல்லா இடங்களிலும் ஆழ்துளைகள் போட அனுமதித்தாலும், தங்களுக்கென 50 அறைகள் கொண்ட வீடுகளை கட்டிக்கொள்ள அனுமதித்தாலும், அப்போதும் அவர்கள் ஆனந்தமாக இருக்கப்போவதில்லை. இன்பத்தைத் தேடும் இந்த தேடல்தான் மனித செயல்கள் அனைத்துக்கும் அடிப்படை - அவர்களின் குறிக்கோள்கள், ஆசைகள், ஆக்கிரமிப்புகள் - இவை அனைத்தும் அவர்களின் மகிழ்ச்சி, மனநிறைவு மற்றும் தங்களுக்குள் முழுமையாக உணர்தல் ஆகியவற்றை தேடுவதில்தான் வேரூன்றி இருக்கின்றன.

உண்மையான ஆனந்தம் மற்றும் மனநிறைவுக்கான ஒரே வழி

ஒவ்வொருவரையும் இந்த ஒன்றை நாம் உணர வைக்க வேண்டும். அதாவது, நாம் மாம்பழம் சாப்பிட வேண்டும் என்று விரும்பினால் அதற்காக அவற்றை தேடி பூமியை தோண்டிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. பூமியை தோண்டுவது மாமரங்களுக்கு சேதத்தைதான் விளைவிக்கும், அதோடு மாம்பழங்கள் விளைவதற்கான வாய்ப்பும் இல்லாமல் போய்விடும்.

மனித ஆரோக்கியம், நல்வாழ்வு, ஆனந்தம் மற்றும் மனநிறைவைப் பொறுத்தவரையில் உள்முகமாக திரும்புவதுதான் நமக்கு இருக்கும் ஒரே வழி.

அவ்வாறுதான் ஆனந்தம் மற்றும் மனநிறைவுக்கான நம் தேடலும் - மனித அனுபவங்கள் உள்ளுக்குள்தான் நிகழ்கின்றன, இன்பம் மற்றும் துன்பம், வலி மற்றும் சுகம், வேதனை மற்றும் பரவசம், அனைத்தும் உங்கள் உள்ளுக்குள் இருந்துதான் உருவாகின்றன. உங்கள் உள் நிகழ்வுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டும் - பூமியை தோண்டக்கூடாது. மனித ஆரோக்கியம், நல்வாழ்வு, ஆனந்தம் மற்றும் மனநிறைவைப் பொறுத்தவரையில் உள்முகமாக திரும்புவதுதான் நமக்கு இருக்கும் ஒரே வழி.

இதை ஒவ்வொரு மனிதருக்கும் புரியும்படி நாம் செய்யாவிட்டால், ஆனந்தத்தை நோக்கிய நம் தேடல் அனைத்தையும் அழித்துவிடும். வேறெந்த பறவையோ, பூச்சியோ விலங்கோ இதை செய்வதில்லை - அவை அனைத்தும் விவேகத்தோடு, அவர்கள் வாழ்வுக்கு எவ்வளவு தேவையோ அந்தளவு செயல்படுகின்றன. ஆனால் மனிதர்கள் ஒன்றை செய்ய ஆரம்பிக்கின்றனர், பிறகு அது துவங்கியதே தங்கள் நல்வாழ்வுக்காக என்பதை மறந்துவிட்டு, அதை நிறுத்தாமல் தொடர்ந்து ஈடுபட்டு, அனைவருக்கும் துன்பத்தை விளைவிக்கின்றனர். ஏனெனில் அவர்கள், "நேற்று இதை செய்தேன், எனவே இன்று அதை தொடர்ந்து செய்ய வேண்டும்" என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போதைய பெருந்தொற்று ஏன் வெறுமே ஒரு ஆரம்பமாக இருக்கக்கூடும்

விழிப்புணர்வான உலகை உருவாக்குவதே நமக்கு தற்போது இருக்கும் தலையாய பொறுப்பு. இந்த உலகில் ஏதோ ஓரளவு ஆளுமையுள்ள உங்கள் அனைவரையும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன் - அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அடுத்த ஆறு முதல் எட்டு ஆண்டுகளில் நாம் சந்திக்கவிருக்கும் பிரச்சனையின் இயல்பு குறித்து மனித சமுதாயம் முழுமையும் புரிந்து கொண்டுள்ளது என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, தற்போதுள்ள சுற்றுச்சூழல் நிலைமைகளை கொண்டு பார்த்தால், புதிய பெருந்தொற்றுக்கள் ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடும். ஒன்று மற்றொன்றைக் காட்டிலும் உக்கிரமாகவும் இருக்கக்கூடும். விழிப்புணர்வோடு நம்மை நாமே திருத்திக் கொள்ளாவிட்டால், இயற்கை நம்மை திருத்தும் - ஆனால் அது மிக கொடுமையானதாக இருக்கும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இதை சந்தித்துவிட்டன. இந்தியா இப்போது இதை எதிர்கொண்டு வருகிறது. உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் இதை ஏதோ வகையில் கடந்து வந்திருக்கின்றன - மருத்துவமனையில் காலிப் படுக்கைகள் இல்லை என்பதால், மக்கள் வீடுகளில், தெருக்களில், மருத்துவமனை வளாகங்களில் உயிர் விடுகிறார்கள். தங்களுக்கு அன்பானவர்களின் அன்பை பெற முடியாமல், மரியாதையான அடக்கம் கூட கிடைக்காமல், அனைவரையும் ஒட்டுமொத்தமாக சேர்த்து புதைக்கவோ எரிக்கவோ வேண்டியிருக்கிறது.

விழிப்புணர்வோடு நம்மை நாமே திருத்திக் கொள்ளாவிட்டால், இயற்கை நம்மை திருத்தும்

இத்தகைய ஒரு பயங்கரமான துயரம் கண்முன் நடக்கும் சூழலில், இந்த பெருந்தொற்றில் இருந்து நாம் வெளிவருவதோடு மட்டுமல்லாமல், இந்த உலகில் எல்லா உயிர்களும் அவரவருக்கு உகந்த முறையில் வாழும் சூழலை தற்போதாவது உருவாக்க வேண்டும் என்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. மனிதர்கள் விழிப்புணர்வோடு செயல்படாமல் இது நிகழ சாத்தியமில்லை. மனிதர்கள் தங்கள் விழிப்புணர்வு நிலையை அடையாவிட்டால், எத்தகைய தொழில்நுட்பங்கள் இருந்தாலும் அவை அனைத்தும் நம்மை எங்கேயும் கொண்டு செல்லாது. புற்றுநோய் இருக்கும் இடத்தில் வெறும் முதலுதவி பேண்டேஜ் ஒட்டிக்கொண்டு நம் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்க வேண்டாம். இந்த பூமிக்கு புற்றுநோயை விட கொடிய நோயுள்ளது. ஆனால் அவள் தன்னையே புதுப்பித்துக் கொள்ளும் திறன் உடையவள் - அவளுக்கு போதிய தணிவை நீங்கள் கொடுத்தால்.

மக்கள்தொகை பெருக்கம்: யாரும் தீர்க்க விளையாத முக்கியமான காரணி

பூமிக்கு நீங்கள் எவ்வாறு தணிவை கொடுப்பீர்கள்? பூமியில் நிகழும் மிகப்பெரிய கீறல் விவசாயம். அடுத்தது சுரங்க வேலைகள். இவை இரண்டையும் வெகுவாக குறைக்க, நாம் உண்ணும் விதத்தை மாற்றி, ஆரோக்கியத்தை அடைய வேண்டும். விழிப்புணர்வான செயற்பாட்டால் அல்லது செயல்படாமல் இருந்து நாம் கட்டாயமாக மக்கள்தொகையை குறைக்க வேண்டும் - இதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் - பெருந்தொற்றினால் மனிதர்களை தனித்தெடுத்து கொல்லக்கூடாது, குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்டோரை கொல்வதின் மூலமும் அல்ல. தற்போது அதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

விழிப்புணர்வான உலகை உருவாக்குவது என்றால், தனிப்பட்ட மனிதர்களை மாற்றம் கொள்ளச் செய்து, அதனால் இந்த பூமியின் சூழலில் மாற்றம் கொண்டு வருவது

மனித இனத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லும் பொறுப்பை கண நேரம்தான் தாங்கள் சுமக்கிறார்கள் என்பதை மனிதர்கள் உணர்ந்து கொள்வது மிக அவசியம். சமூக வலைத்தளங்களில் நீங்கள் பார்க்கும் குரோதம், பொறாமை, வெறுப்பு, கோபம் மற்றும் பயத்தின் அளவு துயரம் கொள்ளச் செய்கிறது. மனித விழிப்புணர்வை மேம்படுத்த நாம் முயற்சி செய்யவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. விழிப்புணர்வான உலகை உருவாக்குவது என்றால், தனிப்பட்ட மனிதர்களை மாற்றம் கொள்ளச் செய்து, அதனால் இந்த பூமியின் சூழலில் மாற்றம் கொண்டு வருவது.

நாம் வாழும் விதம் வெடிக்கக் காத்திருக்கும் ஒரு டைம்பாம்

நம் பொருளாதாரம், அரசியல் யதார்த்தங்கள், மத அணுகுமுறைகள் மற்றும் சித்தாந்த தத்துவ அடையாளங்கள் ஆகியவற்றை கட்டமைத்திருக்கும் விதம் அடிப்படையில் வன்முறையானதாக இருக்கிறது. இந்த ஒவ்வொரு அம்சமும் ஒரு சக்தி வாய்ந்த வெடிகுண்டாக மாறக்கூடும். இவை மனிதருக்கு எதிராகவோ அல்லது மற்ற உயிருக்கு எதிராகவோ அல்லது பூமித் தாய்க்கு எதிராகவோ வன்முறையோடு இருக்கின்றன. உயிரின் தன்மையோடும், உயிரை ஆதரிக்கும் அனைத்தோடும் ஒத்துப்போகும் வகையில் சமூகங்களை கட்டமைக்க நாம் விழிப்புணர்வோடு முயற்சிக்காவிட்டால், நம் செயல்களுக்கான கொடும்பலனை அடுத்த சில தலைமுறைகள் அனுபவிக்கும் என்ற ஒரு நிலையை நாம் உருவாக்கிவிடுவோம். இன்றைய நம் குழந்தைகளுக்கு, நாளைப் பிறக்க போகும் குழந்தைகளுக்கு இத்தகைய ஒரு கர்மாவைதான் நீங்கள் விட்டுச்செல்ல விரும்புகிறீர்களா? இது பற்றி தீவிரமாக பரிசீலனை செய்ய இதுவே சரியான தருணம்.

நம் ஆரோக்கியம் மற்றும் பூமியின் ஆரோக்கியத்துக்கான ஒரு எளிய தீர்வு

கடுமையான விவசாய செயல்முறைகளால் இந்த பூமியின் மண் வளம் குன்றி சீரழிந்து வருகிறது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி அடுத்த 40-50 ஆண்டுகளில் நமக்கு தேவையான உணவை நம்மால் பயிரிட்டு வளர்க்க முடியாமல் போகக்கூடும். இதற்கான தீர்வு, மண்ணை வளப்படுத்துவது தான் என்பதை உணர்ந்துகொள்வது மிக அவசியம். மேலும், மரக்கழிவுகள் மற்றும் விலங்குகளின் கழிவுகள் இல்லாமல் உங்களால் மண்ணை வளப்படுத்த முடியாது.

நாம் உண்ணும் முறையை மாற்றினால் மட்டுமே இந்த பூமி பிழைக்கும். இதை விளக்கிக் கூறுவதென்றால், நாம் கிட்டத்தட்ட 510 லட்சம் சதுர கி.மீ. நிலப்பரப்பில் பயிரிடுகிறோம். அதில் 400 லட்சம் சதுர கி.மீ. நிலம் கால்நடைகள் மேய்ச்சலுக்கும் அவற்றுக்கான தீவனங்களை வளர்ப்பதற்கும் மட்டுமே உபயோகப்படுத்துகிறோம்.

நாம் இறைச்சி உண்பதை 50 சதவிகிதம் குறைத்தால், இந்த பூமியின் பரப்பளவில் 200 லட்சம் சதுர கி.மீ. அளவு நிலம் விடுவிக்கப்படும். உங்கள் மருத்துவர் இதைக் கூறக் கேட்டிருப்பீர்கள் - நீங்கள் இறைச்சி உண்பதை குறைத்தால் நீங்கள் மேலும் ஆரோக்கியத்தோடு இருப்பீர்கள், அதோடு உங்கள் மருத்துவ செலவுகளும் குறையும்.

மனித செயல்பாடு இந்த நிலப்பரப்பில் கட்டுக்குள் இருந்தால் மற்ற அனைத்து உயிரினங்களும் பல்கிப்பெருகும். இந்த 200 லட்சம் சதுர கி.மீ. நிலத்தில் நாம் மர விவசாயம் செய்யலாம். மர விவசாயத்தின் மூலம், மரங்களோடு சேர்த்து அரிசி, கோதுமை, பார்லி, சோயா, காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றையும் உங்களால் விளைவிக்க முடியும். உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் மிக சத்தான இயற்கை உணவை உண்ணலாம். நிறைவாக கூறுவதென்றால், நம்முடைய குறுகிய கால நோக்கங்களைக் கடந்து, நீண்ட கால அடிப்படையில் மனிதகுல நல்வாழ்விற்காக அர்ப்பணிப்போடு நாம் இருக்க வேண்டும் - இன்றைய காலத்தை மட்டுமல்ல, எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு இதை செயல்படுத்த வேண்டும்.