சத்குரு: உலகெங்கிலும் உள்ள பல்வேறு விஞ்ஞானிகள் மற்றும் பல முக்கியமான மருத்துவர்களோடு நான் உரையாடிக் கொண்டிருக்கிறேன். அதிலிருந்து நான் அறிந்தது - இது பொதுவான அறிவும் கூட - இந்த வைரஸ் பெருந்தொற்று அநேகமாக இந்த வருடமோ அல்லது அடுத்த வருடமோ முடிவுக்கு வந்துவிடாது. இந்தப் பெருந்தொற்றை ஒரு குறிப்பிட்ட அளவு கட்டுக்குள் கொண்டுவர வெகு சுலபமாக நான்கு முதல் ஆறு ஆண்டுகள் வரை ஆகலாம் - அதுவும் இந்த உலகம் தேவையான அளவு முதலீடுகளை செய்தால் மட்டுமே. அதோடு, நல்ல பலனளிக்கும் சிகிச்சை நெறிமுறையைக் கண்டறியும் அதிர்ஷ்டமும் நமக்கு இருந்தால்தான் அது நிகழும். அது நிகழும் வரை, இந்தப் பெருந்தொற்று அலைகளாக மீண்டும் வந்துகொண்டே இருக்கக்கூடும்.
நீங்களே கவனித்து இருப்பீர்கள், முதல் அலையை விட இரண்டாவது அலையில், இந்த வைரஸ் நமக்கு பாதிப்பு விளைவிக்கும் வகையில் இன்னும் அதி வீரியமானதாக தன்னை உருமாற்றிக்கொண்டு விட்டது. இந்த 2021 வைரஸ் மனிதர்களுக்கு தீங்கிழைப்பதில் இரண்டு அல்லது மூன்று மடங்கு தீவிரமாக இருக்கிறது. கடந்த வருடம் இளம்வயதினர் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்ற நம்பிக்கை நமக்கு இருந்தது. ஆனால் இனியும் அவ்வாறு இல்லை; துரதிருஷ்டவசமாக இருபது முப்பது வயதில் உள்ளோர் பலரும் உயிரிழந்துள்ளனர். எனவே இந்த வைரஸ் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. நாமும் அதற்கேற்ப தயாராக வேண்டும்.