தெய்வீகப் பாதையில்
ஸ்வாமி புஷ்யா
அனைத்திலும் சிறந்தவர்

இந்த தொடரில், தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை பிண்ணனி பற்றியும், தெய்வீகத்தின் பாதையில் நடையிடுவது தங்களுக்கு எப்படி இருக்கிறது என்பது பற்றிய அவதானிப்புகள் மற்றும்  அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்கள் ஈஷா பிரம்மச்சாரிகள் மற்றும் சந்நியாசிகள்.

போராளி மனப்பான்மை

எனக்கு 6 வயதிருக்கும் போதே பள்ளியில் இருந்து தப்பித்து, அருகில் இருந்த ஆள் நடமாட்டமற்ற கல்லறையில் ஒரு மரத்தடியில் அமர்ந்து இயற்கையையும், சிதைந்த நிலையில் இருக்கும் இடிபாடுகளையும் பார்த்துக் கொண்டிருப்பேன். சில-பல தடவைகள் பிடிபட்டபின் அந்தப் பள்ளியில் இனி நான் சரிபட்டு வரமாட்டேன் என்று என் தந்தை, எங்கள் குடும்ப நண்பர் ஆசிரியராய் பணிபுரிந்த அருகில் இருந்த மற்றொரு பள்ளியில் என்னைச் சேர்த்தார். அவர்களது கவனமான நேரடி கண்காணிப்பில் நான் பள்ளியில் பயின்று வந்தேன். எனினும், 'இதெல்லாம் தேவைதானா? நான் ஏன் இதை செய்யவேண்டும்' என்ற எண்ணம் என்னைக் குடைந்துகொண்டே இருந்தது. அவர்கள் செயல்படுத்திய கண்டிப்பிற்கும், சில சமயங்களில் அவர்கள் கையாண்ட அடக்குமுறைக்கும் கட்டுப்படுவதோ அடிபணிவதோ எனக்குக் கடினமாக இருந்தது. அதிலிருந்து தப்பிக்க, அவற்றை எதிர்த்தும், சிலசமயம் வேண்டுமென்றே வம்புகள் செய்தும் வந்தேன். 6ம் வகுப்பு வருவதற்குள் எனக்குக் கடுமையான ஒற்றைத்தலைவலி வர ஆரம்பித்தது. என் படிப்பு முடியும்வரை அது தொடர்ந்து இருந்தது.

எதற்கும் கீழ்படியாத என் நடவடிக்கைகளால், 9ம் வகுப்பில் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டேன். சொந்தமாகவேனும் நான் தொடர்ந்து படிக்கத்தான் வேண்டும் என்று என் தந்தை கட்டாயப்படுத்தினார். எனக்கு சௌகரியமான விதத்தில், விரும்பிய வேகத்தில் நானே பயிலலாம் என்ற சுதந்திரம் வந்ததாலோ என்னவோ, அதன்பின் படிப்பு சுமைபோல் இருக்கவில்லை. தனிப்பட்ட முறையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற்றேன். 11ம் வகுப்பில் மீண்டும் பள்ளியில் சேர்ந்தேன், ஆனால் இம்முறை படிப்பு அத்தனை போராட்டமாக இருக்கவில்லை, ஏனெனில் வரலாற்றுப் பாடத்தை தேர்வு செய்திருந்தேன். போராட்டமாக இல்லை எனினும், ஏனோ படிப்பில் எனக்கு ஆர்வம் இருக்கவில்லை.

வெளியில் பார்க்க நான் மகிழ்ச்சியாகத்தான் தெரிந்தேன், ஆனால் வருடங்கள் செல்லசெல்ல எனக்குள் ஒரு வெறுமை விரியத் தொடங்கியது. ஆனந்தமே இல்லை என்று சொல்லமுடியாது. ஏனெனில் எனக்கே புரியாத வகையில் சில சமயங்களில் மிகத் தீவிரமான கொண்டாட்டமாக வாழ்வை நான் உணர்ந்திருக்கிறேன். என் வாழ்வின் அப்படிப்பட்ட ஒரு கட்டம்தான் NSS. அதில் எங்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியின் தீவிரமும் அதன் நோக்கமும் என்னுள் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. NSS பயிற்சி முகாமில் சிலசமயம் மிகத் தீவிரமான செயலுக்குப்பின் இரவு அமைதியாக அமர்ந்து உணவருந்தும்போது என் கண்களில் இருந்து கண்ணீர் ஏனென்று புரியாமல் பெருக்கெடுக்கும்.

பட்டப்படிப்பு முடித்தபின் தொடர்ந்து உயர்கல்வி பெறவோ அல்லது வேலையில் சேரவோ விருப்பமின்றி இருந்தேன்.

அனைவருக்குள்ளும் இயேசு

என் உறவினர் ஒருவர் என்னை ஈஷா யோக வகுப்பில் சேரச் சொன்னார். ஒருவித அலுப்புடன், அத்தனை விருப்பமின்றிதான் நான் ஈஷா யோகா வகுப்பில் சேர்ந்தேன் எனினும், அந்த வகுப்பு என்னுள் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவே என் வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது. வகுப்பு முடிந்ததும் அந்த ஆசிரியரிடம், “அடுத்து நீங்கள் எங்கு சென்றாலும் பரவாயில்லை, நானும் உங்களுடனேயே வருகிறேன்" என்று கேட்டேன். அதற்கு அவர், “உன் பயிற்சிகளை தொடர்ந்து செய்து வா, பிறகு பார்ப்போம்" என்று கனிவோடு கூறினார். நானும் பயிற்சியை தொடர்ந்து செய்ய ஆரம்பித்தேன். பயிற்சி செய்வது எனக்கு பரவசமூட்டும் அனுபவமாய் ஆனது. ஒருநாள் பயிற்சி செய்யாமல் தவறவிட்டாலும், அன்றைய தினம் என் அனுபவத்தில் மிக மந்தமாக இருப்பதை உணர்ந்தேன்.

பிறகு பாவ-ஸ்பந்தனாவில் பங்கேற்க ஆசிரமம் வந்தேன். அவ்வகுப்பில் சிலசமயம் என்னை ஒரு கட்டுக்குள் வைப்பதே மிகவும் சிரமமாக ஆனது... நான் அப்படியொரு பரவசத்தில் லயித்தேன். சத்குருவிடம் மட்டுமல்ல, அங்கிருந்த ஒவ்வொருவருக்குள்ளும் நான் இயேசுவைப் பார்த்தேன். அனைவருக்குள்ளும் இயேசுவை நான் உணர்ந்த அனுபவத்தை வகுப்பின் நிறைவு நாளன்று சத்குரு முன்னிலையில் அனைவருடனும் பகிர்ந்துகொண்டேன்.

மகிழ்ச்சிப் பாதையில் பயணம்

தொடர்ந்து சாதனா செய்து வந்தேன். ஆசிரமத்தில் வந்து வாழவேண்டும் என்ற என் ஆசை நாளுக்கு நாள் அதிகமானது. நான் கிறிஸ்தவ வழிமுறையைச் சேர்ந்தவன் என்பதால், நான் இங்கு வந்து வாழ என் பெற்றோர்கள் சம்மதிப்பது கடினம் என்பதை அறிந்திருந்தேன். என் தந்தை பரந்த நோக்குடையவர்தான் எனினும் நான் ஆசிரமத்தில் குடியேறுவது அவருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் என் தாய்க்கு அது ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை. ஓரளவு போராட்டம், ஓரளவு சமயோஜிதம் என எப்படியோ செப்டம்பர் 2003ல் முழுநேரத் தொண்டனாக ஆசிரமத்திற்கு குடியேறினேன். அப்போது என் மகிழ்ச்சிக்கு அளவில்லை. என் வாழ்வில் முதன்முதலாக மகிழ்ச்சிக்கான வழித்தடம் என் முன்னே விரிந்தது.

ஒருமுறை தியானலிங்கத்தின் நுழைவாயிலில் ஒரு சிறு விற்பனை நிலையம் அமைத்திருந்தோம். அதில் வெஜிடபிள் பஃப், காரட் கேக் (இதெல்லாம் இன்றும் பெப்பர்வைன்-ல் கிடைக்கிறது) பல் துலக்கும் பிரஷ், பேஸ்ட், டிஷூ பேப்பர் என மக்களுக்குத் தேவையான சாமான்களை விற்பனை செய்துவந்தோம். இங்கு நின்றபடி, தியானலிங்கத்தைப் பார்வையிட வருவோரை நாளெல்லாம் வரவேற்கும் ஸ்வாமி அபிபாதாவைப் பார்த்து அதிசயிப்பேன். இன்றும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. எனது முதல்   மஹாசிவராத்திரியில், பார்வையாளர்களை வரவேற்க நின்றிருந்தார் ஸ்வாமி அபிபாதா. இரவெல்லாம் நின்று, மறுநாள் நான் விற்பனை நிலையத்தை மூடும்வரை  அங்கேயே நின்றிருந்தார் ஸ்வாமி. கடையை மூடிவிட்டு, சிறிது நேரம் தூங்கிவிட்டு நான் மறுபடியும் அங்கு வந்தபோது, ஸ்வாமி அப்போதும் அங்கேயேதான் இருந்தார், அசந்துபோனேன் நான்.

பிரம்மச்சரியம் - மெய்மறக்கச் செய்யும் பரவசம்

அடுத்த மஹாசிவராத்திரி அன்று பிரம்மச்சரியத்திற்கு தீட்சை பெற்றேன். தீட்சைக்குப் பின் என் பெற்றோர் என்னைக் காண வந்தனர். பிரம்மச்சரிய தீட்சைக்குப்பின் எனக்குள் அடிப்படையான நிலையில் ஏதோவொரு மாற்றம் நிகழ்ந்தது. நிஜம் என்னவெனில், யோகா ஆரம்பித்த பிறகு என்னால் சமாளிக்க முடியாத, எனக்கு மிகக் கடினமாக இருந்தவொன்று - கால்மடித்து தரையில் அமர்வது. என் வாழ்வில் அதுவரை நான் தரையில் அமர்ந்ததில்லை. நான் ஆசிரமத்திற்கு வந்த புதிதில், 20-நிமிடத்திற்கு கால்மடக்கி அமர்ந்தாலும் காலில் மிக அதிகமாக வலி ஏற்படும். சம்யமா நேரத்தில் அந்த 7-நாட்கள் மிகவும் சிரமப்பட்டு எப்படியோ சமாளித்துக் கொண்டேன். ஆனால் அதன்பின் அப்படியொரு விஷப்பரீட்சையை நான் மேற்கொள்ளவே கூடாது என்றிருந்தேன். தீட்சைக்கு முன் எங்களைத் தயார் செய்துகொள்ள பல நாட்கள் கால் மடக்கி அமரவேண்டும் என்பதை அறிந்தபோது, 'இதெல்லாம் எனக்குத் தேவைதானா?' என்று தயங்கினேன். ஆனால் வேறு வழியேதும் தெரியாததால், அப்பயிற்சியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.

நான் கால்மடக்கி அமர்ந்தேன், அமர்ந்தேன், அமர்ந்துகொண்டே இருந்தேன். ஓரிரு நாட்கள் சென்றபின், எனக்கு நேரம் மறந்துபோனது, பலவிதங்களில் இருக்கும் இடம், சூழல் எல்லாமே மறந்துபோனது. ஏதோ ஒருநாள் இரவு எழுந்தேன். என் முழங்கால்கள் இறுக்கமாக இருந்தன. எப்படியோ என்னை நானே இழுத்துக்கொண்டு கழிவறை வரை சென்றேன். கழிவறையில் கீழே விழுந்துவிட்டேன் - அலுப்பினாலோ, மயக்கத்தினாலோ அல்ல, எனக்கு ஏற்பட்டிருந்த அனுபவத்தின் தீவிரத்தை தாங்கமுடியாமல் கீழே விழுந்தேன். இது சில நிமிடங்கள் நீடித்தது. அதன்பின் அந்த அனுபவத்தை ஒதுக்கிவிட்டு மீண்டும் சாதனாவில் ஈடுபட்டேன். அடுத்தநாள், எங்கள் தீட்சைக்கான நாள்.

காலையில் ஓடைக்கு அருகில் ஓரிடத்திற்கு சென்றோம். சத்குருவின் பாதங்கள் எங்களை நோக்கி வருவதைப் பார்த்தேன். அதன்பின் நாங்கள் ஒவ்வொருவராக, ஒரு குறிப்பிட்ட செயல்முறைக்காக, அவரருகில் சென்றுவந்தோம். என் முறை வந்தபோது, அவர் முன்னிலையில் நான் சென்று அமர்ந்தேன். என்னுள் பக்தி பெருக்கெடுத்தது. அந்த உணர்ச்சிப்பெருக்கில் அவரது பாதத்தைத் தொட்டேன். என் வாழ்வில் இதுதான் முதல்முறை. இதற்குமுன் நான் எதற்குமே தலை வணங்கியதில்லை. என் சிறு வயதில் ஞானஸ்நானம் செய்வதற்காக என் தந்தை என்னை தேவாலயத்திற்கு அழைத்துச் சென்றபோது, அந்த வயதிலும் கூட, பாதிரியாரை தலைவணங்க மறுத்துவிட்டேன். அதனால் எனக்கு ஞானஸ்நானம் செய்ய என் தந்தை வேறொரு தேவாலயத்திற்கு என்னை அழைத்துச் செல்ல நேர்ந்தது. அப்படியிருந்த நான் இன்று தலைவணங்கியது எனக்கே வியப்பாக இருந்தது. இன்னும் வியப்பான பல மாற்றங்கள் என்னுள் நிகழவிருந்தன.

என்னுள் இருந்து "சிவன்" வெடித்துக் கிளம்பியது

தீட்சையின் போது நாங்கள் அனைவரும் சத்குருவுடன் ஒரு சிறு அறையில் இருந்தோம். என் கால்களில் அதீத வலி இருந்தது. என் உடல் முழுவதும் வலியெடுத்தது. தீட்சைக்காக மீண்டும் நாங்கள் ஒவ்வொருவராக அவரிடம் சென்றோம். தீட்சை முடிந்ததும் திரும்ப வந்து என்னுடைய இடத்தில் அமர்ந்தேன். ஏனென்று தெரியாமல், “ஷிவா!” என்று கத்தினேன். அடுத்த நொடி என் உடல், மனம், உணர்வு, சக்தி என அனைத்தும், என் உடலின் ஒவ்வொரு அணுவும் "ஷிவா" எனும் ஒலியோடு ஒத்திசைவில் அதிர்ந்தது. அதுவரை ஒருமுறைகூட அவ்வார்த்தையை உச்சரிக்க என்னை நான் அனுமதித்ததில்லை. ஆசிரமத்தில் அத்தனை நாட்கள் வாழ்ந்தும், கடந்த சில நாட்களாக பிரம்மச்சரிய தீட்சை பெறுவதற்காக மிகத் தீவிரமான சாதனாவில் ஈடுபட்டிருந்தும் அவ்வார்த்தையை நான் ஒருமுறைகூட உச்சரிக்கவில்லை.

என்னைப் பொறுத்தவரை சத்குருதான் இயேசு. எப்போதும் அப்படித்தான் அவரை உணர்ந்திருந்தேன். அந்த உணர்வில்தான் அவரோடு தொடர்புகொண்டேன். ஆனால் இன்று, இப்போது, என் உடலின் ஒவ்வொரு எலும்பும் பரவசத்தில் தோய்ந்திருந்தது. என் ஒவ்வொரு உயிரணுவும் "ஷிவா! ஷிவா!” என்று முழு வீச்சில் கதறிக்கொண்டு இருந்தது. அந்த அனுபவம் அப்படியொரு பரவசத்தில் என்னை ஆழ்த்தியது. அந்த இனிமை என்னை மெய்மறக்கச் செய்தது. அந்த நேரத்தில் எதையும் தர்க்கரீதியாக கூறு போட்டுப் பார்க்க நான் முயற்சிக்கவில்லை. என் கால்வலி, உடல்நோவு எதுவும் இருந்ததா, இல்லையா என்பதுகூட எனக்கு நினைவில் இல்லை, அப்போது எதுவுமே ஒரு பொருட்டாக இருக்கவில்லை. அடுத்த 6 மாதத்திற்கு நான் வேறேதோ உலகில் இருந்தேன். எப்போதும் "ஷிவ" உச்சாடனம் செய்துகொண்டே இருந்தேன். என்னுள் பேரானந்தம் நிறைந்திருந்தது - இதை தெய்வீகப் பரவசம் எனலாம். என்னால் எவ்வித செயலிலும் ஈடுபட முடியாத அளவிற்கு அந்த அனுபவம் என்னை ஆட்கொண்டது. மெதுமெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பினேன். அப்போதுதான் என் சமையல் பயணம் துவங்கியது.

சாலட் மற்றும் சூப்

ஆரம்பத்தில் கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு சமையலறையில்தான் நான் செயல் புரிந்தேன். நோய்வயப்பட்டவர்களுக்கு பிரத்யேகமாக தயாரிக்கப்படும் பத்திய உணவிற்குத் தேவையான சாலட் மற்றும் உணவுகளை ஸ்வாமி விபோதாவின் பரிந்துரைப்படி நான் தயாரிக்க ஆரம்பித்தேன். சமையலறையில் பணிபுரிவது களைப்பூட்டினாலும் நிறைவும் அளித்தது. இதே செயலில் சில மாதங்கள் கழிந்தபோது, இதுவே தனி உலகம்போல் தோன்றிற்று. காலை சாதனா முடித்தவுடன் சமையலறைக்குள் நுழைந்தேன் என்றால், பல நாட்கள் இரவு வெகுநேரம் ஆகும்வரை வெளியில் காலெடுத்துகூட வைக்கமாட்டேன். அங்கேயே பொழுது சரியாக இருக்கும். எனினும் இதில் அதிசயம் என்னவெனில் நான் செய்த சாலட் மற்றும் சூப் வகைகள் நன்றாக இருக்கிறது என பலரும், சத்குரு உட்பட, பாராட்டினார்கள்.

இங்கு வருவதற்கு முன்பு நான் சமையலறைக்குள் காலடிகூட எடுத்து வைத்ததில்லை. சமையலுக்கு அருகாமை என்றால், மிகக் கூர்மையான எனது சுவைக்கும் திறன் மட்டும்தான். வேறெந்த வகையிலும் நான் சமையலுக்கு அருகில் சென்றதில்லை. வீட்டில் என் அம்மா சமைக்கும் உணவு சரியில்லை என்று தோன்றும்போது, என் அதிருப்தியை தெரிவிப்பது மட்டுமல்ல, உணவில் எது சரியில்லை என்பதையும் துல்லியமாகக் கூறிவிடுவேன். இந்த தாளிதப் பொருள் சேர்க்கவில்லை, மாவு சரியாக செய்யவில்லை என்று குறையை அறுதியிட்டுச் சொல்லுவேன். சமையல் பற்றி ஒன்றுமே தெரியாமல் நான் எப்படி இந்தளவிற்கு கூர்மையாக குறைகளை சுட்டிக் காட்டுகிறேன் என்பது என் அம்மாவிற்கு வியப்பாக இருக்கும். எனக்கும் கூட அது எப்படி என்பது தெரியாது. இது சமையலில் மட்டுமல்ல, என் சிறுவயதில் இருந்தே 'பிரச்சனையின் ஆணி வேர் எது?' என்பதைக் கண்டறிந்து அதை சரிசெய்யும் பழக்கம் என்னுள் வளர்ந்தது. இந்தப் பழக்கம் ஆசிரமத்திலும் நான் செய்யும் பணிகளுக்கு பேருதவியாக விளங்குகிறது.

கச்சிதமான முறை என்று எதுவும் கிடையாது!

சமையலறையில் செயல்புரிந்த முதல் 6 மாதங்களுக்கு நான் திறந்த மனப்பான்மையுடன் மகிழ்ச்சியுடன் சமையலில் ஈடுபட்டேன். பின் மெதுமெதுவாக நான் பார்ப்பவற்றில் இருக்கும் குறைகள் எனக்குத் தெரிய ஆரம்பித்தன. தவறுகளைக் காணக் காண நான் இறுக்கமாகிப் போனேன். ஸ்வாமி விபோதா எதையெதை இன்னும் திறம்பட செய்யலாம் என்பதை சுட்டிக்காட்டத் துவங்கினேன். உதாரணத்திற்கு உணவு வீணாவதை என்னால் ஏற்க முடியவில்லை.

பின்னர் சமையலறைப் பொறுப்பை என் கையில் கொடுத்தபோதுதான், ஈஷா சமையலறையை நிர்வகிப்பது எவ்வளவு கடினம் என்பதைப் புரிந்துகொண்டேன். ஒவ்வொரு நாளும் எத்தனை பேருக்கு சமையல் செய்வது என்ற முடிவை எடுப்பதே பெரும் சாதனை என்று எனக்கு விளங்கியது. அந்த சமயத்தில் எந்த வழிமுறைகளும் தெளிவாக ஸ்தாபிக்கப் பட்டிருக்கவில்லை. ஆசிரமம் வளர்ந்து கொண்டிருந்தது. அதனால் ஒரு நாட்பொழுதில் எத்தனை பேர் உணவருந்த வருவார்கள் என்பதை கச்சிதமாகக் கணக்கிடுவது பெரும் சவாலாக இருப்பது மட்டுமல்ல, முடியாத காரியமாகவும் இருந்தது. ஸ்வாமி விபோதாவிற்கு, யாரும் பசியோடு போகக்கூடாது என்பதுதான் பிரதானமாக இருந்தது. அதனால் பல நாட்கள் தேவைக்கு மிக அதிகமாகவே உணவு சமைக்கப்பட்டது. அந்நேரங்களில் வீணாகும் உணவின் அளவைப் பார்க்கப் பார்க்க நான் வெகுண்டெழுவேன். மெதுமெதுவாகத்தான் சமையலறையை நிர்வகிக்க சரியான வழி என்று எதுவும் இல்லை என்பதை நான் உணர்ந்தேன்.

எந்தவொரு சமயத்திலும், ஒரே நேரத்தில் 3-4 உணவுப் பட்டியல்களுக்கு (மெனுக்களுக்கு) உணவு தயார்செய்ய வேண்டும்; வெவ்வேறு சுவைகளுக்குப் பழக்கப்பட்டிருந்த பல ஆயிரம் மக்களுக்கு திருப்தி அளிக்கவேண்டும்; அத்தனை பேருக்கும் 2-3 மணிநேரத்தில் உணவை தயாரித்து முடிக்கவேண்டும்; அதுவும் என்னைப்போல் அனுபவமற்ற சமையல் உதவியாளர்களைக் கொண்டு! அதுமட்டுமா? இந்த உணவு பற்றி யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் - உணவை உண்டாலே சமையலை விமர்சிக்கும் உரிமைதான் அனைவருக்கும் உள்ளதே! இதுதான் இந்த செயலின் நிதர்சன நிலை.

சில சமயத்தில் செய்து முடிக்கவேண்டிய உணவு வகைகளைக் கண்டு நான் மலைத்துப் போவேன். வேலைப்பளு அவ்வளவு அதிகமாக இருக்கும். அப்போதெல்லாம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சிந்திக்கும் திறத்துடன்தான் இந்த உணவுப் பட்டியலை தயாரித்தார்களா எனும் சந்தேகம் கூட எழும். அந்நேரங்களில் வழக்கத்திற்கு மாறாகவோ அல்லது குறிப்பிட்ட விதமாகவோ அவர்கள் கேட்கும் உணவு வகைகளை செய்துகொடுக்க என்னுள் எதிர்ப்பு வரும். உதாரணத்திற்கு ஒரு நிகழ்ச்சியின் நிறைவில் "மூன்லைட் டின்னர்" ஏற்பாடு செய்யவேண்டும் என்றும், அப்போது தோசைக்கல்லில் இருந்து சுட சுட தோசை எடுத்து பங்கேற்பாளர்களுக்கு உடனுக்குடன் பரிமாற வேண்டும் என்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கேட்டுக் கொண்டார். "இது என்ன இது? சாத்தியமில்லாத கோரிக்கை" என்று நான் நினைத்தேன். ஆனால் ஸ்வாமி விபோதாவிற்கு "முடியாது" என்று எதுவுமே இல்லை. ஸ்பந்தா ஹாலில் அடுப்பை வைத்து சமைக்கத் தேவையானவற்றை செய்து அந்நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு சுடசுட தோசை பரிமாறினோம்.

சமையல் செய்வது ஒரு நிலையில் மிகவும் சந்தோஷமாகவும், கிளர்ச்சியூட்டுவதாகவும் இருந்தாலும், மறுபக்கம் அது அதீத களைப்பூட்டுவதாகவும் இருந்தது. சிலசமயம் சற்றே சோர்வாகவும், வேலைப்பளு தாளாத மன-அழுத்தத்தோடும் காணப்படுவேன். அதுபோன்ற நாட்களில் ஸ்வாமி விபூ என்னைக் காண வந்து, எனக்கு உதவுவார். இவரைப் போல் மற்ற பிற பிரம்மச்சாரிகளும் கூட நான் சோர்வாய் இருக்கும் நேரங்களில் எனக்கு பக்கபலமாய் இருந்திருக்கின்றனர். இப்போதும் கூட ஏதாவது மன உளைச்சல் ஏற்பட்டாலோ எனக்கு வழிகாட்டுதல் தேவைப்பட்டாலோ சங்காவிற்கு சென்று அங்கு யாரேனும் ஒரு பிரம்மச்சாரியிடம் பேசுவேன். நான் பேசுவதைக் கேட்கவும், தேவைப்படின் எனக்கு வழிசொல்லி கைகொடுக்கவும் அங்கு பலர் இருக்கின்றனர்.

தேவைப்படாதவற்றைக் கொண்டு கைவினைப் பொருட்கள்

சமையலறையில் 3 ஆண்டுகள் இருந்தபின், ஆசிரம பராமரிப்புத் துறைக்கு மாற்றப்பட்டேன். சூரிய வெளிச்சத்தைப் பார்ப்பது, அதிலும் நாள் முழுவதும் அதில் லயிப்பது பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. இங்கு சில சமயம் உணவு உண்ணக்கூட நேரமிருக்காது, சில சமயமோ செய்வதற்கு ஒன்றுமே இருக்காது!

குப்பைகளை அகற்றுவதும் இந்தத் துறையின் பொறுப்புதான். 'வேண்டாம்' என்று ஒதுக்கப்பட்டவற்றையும் எதற்கேனும் பயன்படுத்த முடியுமா? என்று இப்போது நான் பார்க்க ஆரம்பித்தேன். அப்போது ஒருமுறை, பயன்படாது என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த மூங்கில்களைக் கொண்டு, மின்சார அறையைச் சுற்றி ஒரு வேலி அமைத்தோம். 'ஆசிரமத்தின் அழகுநயக் குழு'விற்குப் பொறுப்பாக இருந்த பாரதி அக்காவின் கவனத்தை அது ஈர்த்தது. அதன்பின் அழகுநயம் மிளிர ஆசிரமத்தைச் சுற்றி செய்யப்படும் வேலைப்பாடுகளில் அவர் என்னை தொடர்ந்து ஈடுபடுத்த ஆரம்பித்தார். சமையல் போல் இதிலும் எனக்கு எவ்வித முன்னனுபவமும் இருக்கவில்லை. அதனால் என் ஆக்கப்பூர்வத் திறனை செயல்படுத்தி புதிது புதிதாய் ஏதாவது செய்ய முற்பட்டது எனக்கு மகிழ்ச்சி அளித்தது.

ஒருமுறை ஆசிரம சூழலோடு ஒன்றியிருக்கும் விதமான குப்பைத் தொட்டிகளை உருவாக்க பாரதி அக்கா கூறினார். சர்வதேச தரம் கொண்ட உயர்மட்ட குப்பைத் தொட்டிகளின் விலை அதிகமாக இருந்தது. மலிவான குப்பைத் தொட்டிகளோ ஆசிரம சூழலுக்கு ஏற்றவாறு இல்லை. அதனால் என்ன செய்வது என்று பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் வீணாகிப்போன டயர்களைக் கொண்டு பெரிய தொட்டி அமைத்து அதில் மாடுகளுக்கு ஓரிடத்தில் உணவு வைப்பதைப் பார்த்தேன். என் கவனத்தை அது கவர்ந்தது. அந்தத் தொட்டிகளை உருவாக்கும் தொழிலகத்திற்குச் சென்று அதுபோல் சிறு டிரம் வடிவில் குப்பைத்தொட்டிகள் செய்து தரமுடியுமா என்று கேட்டேன். சற்றே தயங்கினார்கள், பின் செய்து தருவதாக ஒப்புக்கொண்டார்கள்.

அதனால் இப்போது மலிவான, மறுபயன்பாட்டிற்கு ஏற்ற, பகட்டான வர்ணங்களில் கண்களைத் துளைக்காத, தண்ணீர் வைத்து சுத்தமாகக் கழுவக்கூடிய குப்பைத் தொட்டிகள் நமக்குக் கிடைத்துள்ளன. பிறகு சாலையின் நடுவே இருவழி வாகனங்களுக்கு இடையிலான தடுப்புகளையும் இதன் அடிப்படையில் அதே தொழிலகத்தில் செய்து கொடுத்தார்கள். இதை சத்குரு அவர்கள் பாராட்டினார். கண்ணைத் துளைக்கும் மஞ்சள், ஆரஞ்சு நிறங்களில் இல்லாமல், அதே வேலையை ஆரவாரமின்றி இவை மிக அமைதியாக செய்தன.

தியானலிங்கம் - அவரின் இருதயம்

பராமரிப்புத் துறைக்குப்பின், இப்போது சில வருடங்களுக்கு முன்பு தியானலிங்கத்திற்குப் பணிசெய்யும் பாக்கியம் கிட்டியது. கோவில் பராமரிப்பிற்கு நான் மாறியபின், எங்கள் குழுவைச் சேர்ந்த அனைவருடனும் சத்குரு கோவில் வளாகத்தை மேற்பார்வையிட்டார். கோவில் பராமரிப்புத் துறையின் ஒருங்கிணைப்பாளர் யார் என்று கேட்டார். நான் அவர் முன் சென்று நின்றேன். “இது நம் இருதயம். ஸ்வாமி இதை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்" என்று கைகூப்பி கேட்டுக்கொண்டார். உணர்ச்சிவயப்பட்டு நின்றேன். அதன்பின் பார்வையாளர்களின் சௌகரியத்தை கருத்தில் கொண்டு, சத்குரு விரும்பியதை எல்லாம் ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்து செய்தோம். ஆசிரம செலவை கட்டுக்குள் வைக்க சத்குரு எவ்வளவு கவனம் செலுத்தினாரோ அதே அளவு ஆசிரமத்தின் அழகுநயமும் அவருக்கு முக்கியம் என்பது எனக்குத் தெரியும். அதனால் சரியான தீர்வுக்காக நான் பல நாட்கள் சிந்தித்துக் கொண்டிருப்பேன். சூர்யகுண்டம் பகுதியில் ஒரு டேபிள் போட்டு அமர்ந்து, அங்கு வரும் பார்வையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் என்ன என்பதை கவனித்து வந்தேன்.

மெதுமெதுவாக மாற்றங்கள் செய்யத் துவங்கினோம். உச்சிவெயிலில் கல்தரையில் அவர்கள் கால் சுடாமல் நடக்க வழிசெய்தோம். கோவிலுக்குள் வரும்போது டெபாசிட் கவுண்ட்டரில் வைத்துவிட்டு வரும் விலைமதிப்பான பொருட்கள் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட வழிசெய்தோம். தேவையான அளவிற்கு வழிகாட்டிகள், தகவல் மையங்கள், குடிதண்ணீர் வசதிகள் என பலவும் ஏற்பாடு செய்தோம். இது எல்லாவற்றையும் விட, சத்குருவிற்கு பிடிக்காத கயிற்றுத் தடுப்புகளை அகற்றி, அங்கு மூங்கில் தடுப்புகளை அமைத்ததில் நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்.

ஒரு முழு வட்டம்

சமீபத்தில் சம்ஸ்கிருதி பள்ளிக்கு என்னை மாற்றினார்கள். “சும்மா அக்குழந்தைகளுடன் இருங்கள்" என்று சத்குரு என்னிடம் கூறினார். என் வாழ்க்கை ஒரு முழு வட்டம் அடித்து மீண்டும் இங்கு வந்து நிற்பதாக உணர்ந்தேன். குழந்தைப் பருவத்தில் கையாள்வதற்கு மிகக் கடினமான குழந்தையாக இருந்த நான், இன்று எல்லா விதமான குழந்தைகளுக்கும் ஒரு ஊக்கமாக அமையவேண்டும்! மீண்டும் ஒரு மாணவனாக இருப்பதை பெரும் ஆனந்தமாக உணர்கிறேன் - ஒரேவொரு வித்தியாசம் - இப்போது நான் விருப்பத்தோடு இருக்கிறேன்.

இந்தப் பாதை, இந்தப் பயணம், நான் விழிப்புணர்வுடன் தேடுவதை மட்டுமல்ல, விழிப்புணர்வு இல்லாமல் நான் நாடுவதையும் ஒருங்கே வழங்குகிறது. வாழ்வதற்கு இதைவிட சிறந்த வழி வேறொன்றும் இருக்கமுடியாது.