ஆரோக்கியம்

உங்கள் உணவு உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறதா அல்லது நோய் பாதிப்புக்கு வழி செய்கிறதா?

"இனிமேல் நள்ளிரவு மஃபீன்கள் இல்லை..." ஊரடங்குக்கு பின் தன் உடற்கட்டு சீர்குலைந்திருப்பதை சுட்டிக்காட்டி வில் ஸ்மித் பதிவு செய்த வைரல் சமூக வலைதளப்பதிவு உங்களுக்கும் ஒத்துப்போவதாக இருந்தால், உங்களுக்கு உத்வேகம் அளிக்கும் சில விஷயங்கள் எங்களிடம் உள்ளன. எழுத்தாளர் மற்றும் பிரபல வளையொலி தொகுப்பாளர் நிக்கி வால்டன் நடுநிலைமையாக இருந்து சமீபத்தில் நடத்திய உரையாடலின் ஒரு பகுதியாக, பிரபல அமெரிக்க மருத்துவர் மற்றும் எழுத்தாளர் டாக்டர்.மார்க் ஹைமன் சத்குருவுடன் உரையாடினார். அப்போது, உங்களது உணவு தேர்வுகள் எப்படி எளிதாக நோய் பாதிக்கும் தன்மை, சிகிச்சை மற்றும் அகால மரணம் ஆகியவற்றில் பெரிய அளவில் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்து கலந்துரையாடினார்கள். சிறந்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்கு எதை எப்போது உண்ண வேண்டும் என்பதை இந்த பகுதியில் அறிய இருக்கிறோம்.
நிக்கி வால்டன், எழுத்தாளர் மற்றும் தொகுப்பாளர்

நிக்கி வால்டன்: பெருந்தொற்று காலத்தில் மக்கள் உடல் எடை அதிகரித்துள்ளார்கள். மேலும் நிறைய போதை பொருட்களையும் உபயோகிக்கிறார்கள். அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்து நல்ல ஆரோக்கியத்திற்கான மறு துவக்கத்தை மேற்கொள்ள மக்கள் என்ன செய்ய வேண்டும்?

டாக்டர். மார்க் ஹைமன்: ஆம், உண்மையில் இது பிரச்சனைதான். கோவிட் இத்தகைய ஒரு மனஅழுத்தத்தை உருவாக்கிய காரணத்தினால் பலரும் தங்களை ஆறுதல்படுத்திக் கொள்வதாக எண்ணி மோசமான உணவு என தெரிந்தாலும் அவற்றை உண்ண துவங்கிவிட்டனர். நான் சமீபத்தில் ஒருவரை சந்தித்தேன். தானாக சமைக்க வேண்டும் என்று முடிவெடுத்து பிரட் தயாரிக்கத் தொடங்கிய அவர் சுமார் 20 - 30 பவுண்ட் எடை கூடிவிட்டார். பொதுவாக, தானாக சமைத்து சாப்பிடுவது நல்ல விஷயம்தான், ஆனால் அவருக்கு நிகழ்ந்தது போல நடந்தால் அது நல்ல திட்டம் கிடையாது.

நோயுறும் வாய்ப்பை எது அதிகப்படுத்துகிறது

கோவிட்-19 ஊரடங்கால் உடல் பருமன் அதிகரிப்பதையும், அதனால் உருவாகும் சிக்கல்களையும் நாம் பார்த்துவிட்டோம் என்று நினைக்கிறேன். நீங்கள் அதிக எடை உடையவராக இருந்தால், அல்லது உணவினால் ஏற்படக்கூடிய நாள்பட்ட நோய் கொண்டிருந்தால், நீங்கள் தீவிர நோய் வயப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான அபாயம் ஆறு மடங்கு அதிகரிக்கிறது. மேலும் நீங்கள் மரணமடைவதற்கான அபாயம் 12 மடங்கு அதிகரிக்கிறது. நீங்கள் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கராக இருந்தால் அல்லது ஒரு லத்தின் அமெரிக்கராக இருந்தால், நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான அபாயம் 5 மடங்கு அதிகமாக உள்ளது. ஏனெனில் இந்த கலாச்சாரங்களுக்கு பொதுவாகவே தேவையான உணவு கிடைப்பதில்லை. மேலும், அவர்களை குறி வைத்து உணவு தொழிற்சாலைகள் தயாரிக்கும் உணவுகளையே அவர்கள் உட்கொள்கிறார்கள். அதனால் அவர்கள் நோயுற்று, உடல்பருமன் அதிகரித்து நாள்பட்ட நோயாளியாகின்றனர்.

உங்கள் நோயெதிர்ப்பு சக்தி நீங்கள் உட்கொள்ளும் உணவால்தான் ஒழுங்கு முறைப்படுத்தப்படுகிறது
- டாக்டர். மார்க் ஹைமன்

ஒரு வகையில் அடுத்து தொடர்ச்சியாக நிகழ்பவற்றைப் பற்றி நமக்கு தெரியும். உங்களின் உடல் நிறை குறியீட்டு எண் இருபத்து மூன்றுக்கு மேல் இருந்தால் - அது அதிக உடல்பருமனாக இல்லாதபோதிலும், நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான அபாயம், கோவிடினால் மரணம் ஏற்படுவதற்கான அபாயம் ஆகியவை அதிகரிக்கிறது. எனவே மக்கள் செய்யக்கூடிய முதன்மையான ஒன்று - அரசாங்கம் இதைப்பற்றி பேசுவதில்லை - உங்களின் உடல் அமைப்பை நீங்களேதான் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் உங்கள் நோயெதிர்ப்பு சக்தி நீங்கள் உட்கொள்ளும் உணவால்தான் ஒழுங்கு முறைப்படுத்தப்படுகிறது.

நோயை தவிர்க்க என்ன உட்கொள்ள வேண்டும்

அதிகளவு தாவர அடிப்படையைக் கொண்ட வண்ணமயமான பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்த உணவுகளை நீங்கள் அதிகமாக உட்கொண்டால், பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் சர்க்கரையை தவிர்த்துவிட்டால், அதோடு தேவையான அளவு தாவரப்புரதம் அல்லது மாமிசப்புரதம் எடுத்துக்கொண்டால், மேலும் உங்களின் நுண்ணுயிரிகளுக்காவும் (microbiome) உணவு எடுத்துக்கொண்டால், அதாவது சிறுவாழூண் (pre- and probiotics) என அழைக்கப்படும் நன்செய் நுண்ணுயிரிகளையும் உட்கொண்டால் - நன்செய் நுண்ணுயிரிகள் உங்கள் ஆரோக்கியத்தில் பெரும்பங்காற்றுகின்றன - உண்மையாகவே உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி கோவிடை எதிர்த்து நிற்கும் அளவுக்கு உங்களை நீங்களே உருவாக்கிக்கொள்ள முடியும்.

அதோடு, வைட்டமின் D, வைட்டமின் C, துத்தநாகம் (Zinc) மற்றும் சிலவற்றை எடுத்துக்கொண்டால், நீங்கள் நோயுறுவதிலிருந்து உங்களை நீங்கள் உண்மையிலேயே தடுக்க இயலும். நான் பலமுறை வைரஸ் தொற்று ஏற்படக்கூடிய சூழ்நிலையில் இருந்திருக்கிறேன் என்பதும் எனக்கு தெரியும். ஆனால் நான் நோயுற்றதில்லை. உண்மையாகவே நான் என் ஆரோக்கியத்தை இரட்டிப்பாக்குவதில் தான் கவனம் செலுத்தி வருகிறேன். சுவையான உணவு, இனிப்பு, சர்க்கரை அல்லது மது ஆகியவற்றை உட்கொள்வதில் அல்ல. அது தவறான எண்ணம். ஏனெனில் அது உண்மையில் நீங்கள் நோயுறுவதற்கும், நோயால் மரிப்பதற்கும்தான் உங்களை தயார்செய்கிறது.

நிக்கி வால்டன்: அருமையாக சொன்னீர்கள். கடந்த காலங்களில் நான் மது அருந்தும் போதெல்லாம் எனக்கு சளிப்பிடிப்பதை நான் கவனித்திருக்கிறேன். எனவே நான் விமானத்தில் இருப்பது போன்ற சூழல்களில் மது அருந்துவதில்லை. ஏனெனில் என் நோயெதிர்ப்பு சக்தியை நானே வலுவிழக்க செய்துவிடுவது போல அது ஆகிவிடும்.

டாக்டர். மார்க் ஹைமன்: முற்றிலும் உண்மை.

நாம் என்ன உண்கிறோம் என்பது மட்டுமே ஏன் முக்கியமில்லை

சத்குரு: மார்க் கூறியது போல எல்லா வகையான தவறான பொருட்களையும் உண்பதன் மூலம் உங்கள் உடலை அது பிழைத்திருக்க முடியாத ஒரு இடத்துக்கு தள்ளுகிறீர்கள். இதை இன்னும் எளிமையாக சொல்வதென்றால், நீங்கள் உண்ணும் உணவு உங்கள் உடலின் அமைப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான அடிப்படையை முடிவு செய்கிறது. நீங்கள் என்ன உண்கிறீர்கள் என்பதை வைத்துதான் உங்கள் உடலின் உயிரணு அமைப்பு தீர்மானிக்கப்படுகிறது. அதேவிதமாக, நீங்கள் எவ்வாறு உணவு உண்கிறீர்கள் என்பதும் மிக முக்கியமான ஒன்று.

நீங்கள் எதை உட்கொள்கிறீர்கள் என்பதையும், எப்படி உட்கொள்கிறீர்கள் என்பதையும் ஒரு குறிப்பிட்ட அளவு விழிப்புணர்வோடு கையாள வேண்டும்...” - சத்குரு

இது ஒரு தத்துவமோ அல்லது யாரோ புனைந்த கதையோ அல்ல. நீங்கள் எவ்வாறு உட்கொள்கிறீர்கள், என்ன நோக்கத்துடன் உட்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, நீரும் உணவும் உடலுக்கு அதிக ஏற்புடையதாக இருக்கிறது என்பதை உங்களுக்கு நிரூபிக்கும் பல அறிவியல் ஆய்வுகள் இன்று உள்ளன. நீங்கள் எவ்வாறு உட்கொள்கிறீர்கள் என்பதே ஒரு அறிவியல்தான். நீங்கள் எதை உட்கொள்கிறீர்கள் என்பதையும், எவ்வாறு உட்கொள்கிறீர்கள் என்பதையும் ஒரு குறிப்பிட்ட அளவு விழிப்புணர்வோடு கையாள வேண்டும் - அதற்காக முரட்டுப் பிடிவாதம் காட்டத் தேவையில்லை.

உணவு உங்களை மந்தமாக உணரச் செய்தால் என்ன செய்வது

நாம் எல்லா நேரமும் மிகச் சரியான உணவை உட்கொள்ள முடியாது. நம்மைப்போல் பயணத்தில் இருப்பவர்களுக்கும், பல்வேறு வகையான செயல்பாட்டில் இருப்பவர்களுக்கும் இது நன்றாகவே பொருந்தும். உங்கள் உடலை சற்று மந்தமாக்கும் ஏதோ ஒரு உணவை நீங்கள் தவிர்க்க இயலாமல் உட்கொள்ள நேர்ந்தால், அதாவது உங்கள் அமைப்பில் என்ன நிகழ்கிறது என்பது பற்றிய விழிப்புணர்வு உங்களுக்கு இருந்தால் - நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், அடுத்த வேளை உணவைப் பாதியாக குறைக்கலாம் அல்லது முற்றிலுமாக உணவைத் தவிர்க்கலாம். உடல் மீண்டும் அதன் முழுத்திறனுக்கு இயங்க நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்.