சத்குரு: தியானலிங்கம் உருவாவதில் பலர் ஈடுபட்டுள்ளனர். இது பலருடைய கனவாக இருந்திருக்கிறது. தியானலிங்கம் உருவாக வேண்டும் என்ற இந்த விருப்பம் என் வாழ்க்கையை மிக சிக்கலானதாக மாற்றியுள்ளது. நான் எதையும் உருவாக்க வேண்டியிராமல் இருந்திருந்தால் என்னுடைய வாழ்க்கையை நான் இன்னும் மிக அழகாக வாழ்ந்திருக்க முடியும். ஆனால் இதை நான் ஒரு சுமையாக கருதவில்லை; இந்த முழு செயல்முறையிலும் ஒரு அற்புதமான அழகு உள்ளது. ஆனால், உங்களைப் போன்ற ஒருவரிடம் இந்தப் பொறுப்பை கொடுத்திருக்க நான் விரும்பியிருப்பேன் - என்னுடைய குரு என்னிடம் இதைக் கொடுத்தது போல.
தியானலிங்கம் நிகழ வேண்டியிராவிட்டால் இந்த வாழ்க்கையே அவசியமாக இருந்திருக்காது. இந்தப் பாத்திரத்தை ஏற்றுக் கொண்டதும் ஒருபோதும் நிகழ்ந்திருக்காது. இதை நான் எந்த வருத்தத்தோடும் சொல்லவில்லை. நான் என்ன செய்துள்ளேன் என்பதன் ஒவ்வொரு அணுவையும் நான் முழுமையாக ரசிக்கிறேன். தனிப்பட்ட முறையில், இதைவிட பெரிய சவாலை என்னால் நினைத்து பார்க்கவே முடியவில்லை. ஏதாவது ஒரு வகையில் இதை வார்த்தைகளில் விவரித்துவிட நான் விரும்புகிறேன். என் உடம்பின் ஒவ்வொரு உயிரணுவும் சோர்வுற்று இருக்கிறது - அவ்வளவுதான் என்னால் கூறமுடியும். இப்போது தியானலிங்கத்தைப் பார்க்கும்போது, நான் சந்தித்த எல்லாவற்றுக்கும் இது தகுதியானதுதான் என்று தோன்றுகிறது.