கலந்துரையாடல்

சத்குருவும், மேத்யு மெக்கனாகேயும், பெரிதும் குறைத்து மதிப்பிடப்படும் ஒரு சாத்தியம் குறித்து உரையாடுகின்றனர்

சமீபத்தில் வெளியாகியுள்ள சத்குருவின் 'கர்மா' (Karma:A Yogi's Guide to Crafting Your Destiny) ஆங்கில புத்தகத்தின் இணையவழி அறிமுக நிகழ்வின் ஒரு பகுதியாக, ஆஸ்கர் விருது வென்றவரும், ஹாலிவுட் சூப்பர் ஸ்டாருமான மேத்யூ மெக்கனாகே, சத்குருவுடன் உரையாடினார். சத்குருவிடம் மேத்யூ, தலைவிதி - பிராப்தம், வாழ்வின் வெளிப்படையான முரண்பாடு, மதம் என்பதன் உண்மையான சாரம், சுயநலம், அறிந்திரா ஒன்றை தேடுவது, நகைச்சுவை உணர்வுடன் இருத்தல் போன்ற தலைப்புகளை மையப்படுத்தி கேள்விகளை அடுக்கினார். சுவையான இந்த உரையாடலின் போது, உங்கள் புத்திசாலித்தனத்தை உறங்கவிடாமல் செய்வதற்கான ஒரு ரகசியத்தை‌ சத்குரு வெளிப்படுத்த, அதன் தொகுப்பு இங்கே மலர்கிறது.

மேத்யூ மெக்கனாகே: யோகா என்றால் ஒன்றிணைதல் என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். ரிலிஜன் (மதம்) என்ற ஆங்கில ஒற்றைச் சொல்லானது, ரி மற்றும் லிகர் என்ற பிறமொழிச் சொற்களிலிருந்து வருகிறது. லிகர் என்றால் “ஒன்றாக இணைப்பதற்கு,” ஆன்ட்ரி என்றால் “மீண்டும்” என்பது பொருள். அதாவது, “மீண்டும் இணைப்பதற்கானது” என்பது மதத்திற்கான பரிந்துரைக்கப்பட்ட வரையறை. யோகா மற்றும் மதம் இரண்டும் ஒரே பொருள்படும் விளக்கங்கள் அல்லது ஒரே திசையில் செயல்படுபவை என்று கூறலாமா?

சத்குரு: அவைகளின் சாராம்சத்தில், ஒரே அர்த்தமாக இருக்கக்கூடும், ஆனால் அவற்றின் தற்போதைய நடைமுறை வடிவத்தில் அப்படி இல்லை. அமெரிக்காவில் எப்படி யோகாவை பயிற்சி செய்கிறார்கள் என்று பார்த்தால், அது ஒன்றிணைதலோடு சம்பந்தப்பட்டதாக இல்லை. மதம் எந்த விதமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றால்...

மேத்யூ மெக்கனாகே: உண்மைதான்... இன்று உலகில், ஒரு மதம் எப்படி கடைப்பிடிக்கப்படுகிறது என்ற நடைமுறைக்கும், உண்மையாகவே மதம் என்றால் என்ன என்பதற்கும் ஒத்திசைவு இல்லை.

சத்குரு: இரண்டுக்குமே விளக்கங்கள் ஒரே விதமாக இருக்கலாம். ஆனால் துரதிருஷ்டவசமாக, அவைகள் அனுசரிக்கப்படும் விதம், மிகவும் வேறுபட்டு இருக்கிறது.

“ஏன் யோகா?” ஏனென்றால், இது நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட ஒரு முறையல்ல. இது உங்களது அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது – குறைந்தபட்சம் நீங்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதையாவது நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். நம்பிக்கை சார்ந்த வழிமுறை என்றால், நீங்கள் ஒரு குறிப்பிட்ட வழியில் சென்றுகொண்டிருப்பதாக வெறுமே நம்பிக்கொண்டு மட்டும் இருக்கிறீர்கள், அது உங்களுக்கு உளவியல்ரீதியான சௌகரியம் மற்றும் ஆறுதலை கொடுக்கும். முக்கியமாக, உங்கள் முன் இருக்கும் தேர்வு இதுதான்: உங்கள் வாழ்வில் ஆறுதலைத் தேடுகிறீர்களா? - அதாவது, உங்கள் மனதை அமைதிப்படுத்தி, சிறிய விஷயங்களுடன் மகிழ்ந்திருக்கப்‌ போகிறீர்களா அல்லது இந்த வாழ்க்கைக்கு நீங்கள் ஒரு தீர்வைத் தேடுகிறீர்களா?

"எனக்கு தெரியவில்லை"  என்பதை நீங்கள் உணரும் கணமே, அறிந்து கொள்வதற்கான பேராவல், விருப்பம் அல்லது தேடுதல் ஒரு இயல்பான விளைவாகிறது.

ஏனென்றால் நீங்கள் மனிதனுக்குரிய புத்திசாலித்தனத்துடன் வந்துவிட்டீர்கள் என்றால், உங்களைச் சுற்றிலுமிருக்கும் அற்ப விஷயங்களுக்குள் நீங்கள் உடனே அமிழ்ந்துவிடாமல் இருந்தால், “இதெல்லாம் என்ன? நான் எங்கிருந்து வந்தேன்? நான் எங்கே செல்வேன்? இந்த வாழ்க்கைக்கு என்ன பொருள்? நான் இங்கே இருப்பதன் நோக்கம் என்ன? ஒரு சிறு மின்னல் கீற்றா என் வாழ்வு? நான் தோன்றிய வேகத்தில், மறைந்துவிடுவேனா அல்லது இதற்கு வேறு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?” என்ற ரீதியில் ஒவ்வொரு மனிதரும் சிந்திப்பது இயல்பானது.

“இதுதான் நீ; அதுதான் நீ என்றோ, நீ சொர்கத்துக்கோ அல்லது நரகத்துக்கோ செல்வாய்,” என்றெல்லாம் உங்களின் மிகச் சிறிய வயதிலிருந்தே யாரோ உங்களை மெல்லப் பழக்கியிருந்தால் தவிர, எந்த மனிதராலும் தவிர்க்கமுடியாத கேள்விகளாகவே இவை இருக்கின்றன. மேலும் இத்தகைய கேள்விகள் எழுவது நல்லது; இந்தக் குழப்பம் நல்லது. “எனக்குத் தெரியவில்லை” என்பதன் முக்கியத்துவம் மக்களுக்குப் புரியவில்லை. அதுதான் உங்கள் வாழ்வின் மிக முக்கியத்துவம் வாய்ந்த விஷயம். ஏனெனில், “எனக்குத் தெரியவில்லை” என்று நீங்கள் உணரும் கணமே, அறிந்து கொள்வதற்கான பேராவல், விருப்பம் அல்லது தேடுதல் ஒரு இயல்பான விளைவாகிறது. தீவிரமான தேடல் இருந்தால், அறிதல் வெகு தொலைவில் இல்லை.

நீங்கள் உயிர் குறித்த எதை அறிந்துகொள்ள விரும்பினாலும், ஒரு நுண்ணோக்கி அல்லது ஒரு தொலைநோக்கி மூலமாக நீங்கள் தேடவேண்டியதில்லை, ஏனெனில் நீங்கள்தான் உயிர். உலகத்தில் உங்களுக்கென்று ஒரு அடையாளம் இருக்கலாம், ஆனால் அடிப்படையாக, நீங்கள் ஒரு உயிராக இருக்கிறீர்கள் என்பதுடன், இந்த ஒரு உயிரைத்தான் உங்களால் உணரமுடியும். தற்போது, இங்கிருக்கும் இந்த அழகிய மரங்கள் எந்த விதமாக எனக்குள் நிகழ்கிறதோ, என் மனவெளியில் அவைகள் எந்த விதமாகப் பிரதிபலிக்கிறதோ அந்த விதமாகத்தான் நான் உணர்கிறேன். இந்த மரங்களை எனக்கு வெளியே நான் உணர்வதற்கு வேறெந்த வழியும் இல்லை.

உங்கள் அனுபவத்தில் இருக்கும் ஒரே பிரபஞ்சமும், ஒரே உலகமும், இதுவரையில் உங்களுக்குள் என்ன நடந்திருக்கிறதோ அது மட்டும்தான்.

இந்த உண்மை அனைத்துக்கும் பொருந்தும். எல்லா அனுபவங்களும் – வலி மற்றும் இன்பம், ஆனந்தம் மற்றும் துன்பம், வேதனை மற்றும் பரவசம் – அனைத்தும் உங்களுக்குள் மட்டுமே நிகழமுடியும். “எனக்குத் தெரியாது” என்பதை நீங்கள் உணர்ந்து, பிறகு பார்க்கத் தொடங்கினால், இயல்பாகவே இதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். அதன் பிறகு, உங்கள் வாழ்வின் இயல்பைப் புரிந்துகொள்வதும், உங்களது விதியை நீங்கள் தீர்மானிப்பதும் இயற்கையான விளைவுகளாகின்றன. இங்கே பிரச்சனை என்னவென்றால், நம்பிக்கை முறைகள், கருத்துகள், தத்துவங்கள் மற்றும் இலட்சியங்களின் பெயரில், “எனக்குத் தெரியாது” என்று பார்ப்பதையே நாம் அழித்து விடுகிறோம்.

நீங்கள் பாலைவனத்தில் அதைத்தான் செய்தீர்கள் என்று எண்ணுகிறேன். நீங்கள் எந்தப் பாலைவனத்துக்குச் சென்றீர்கள் என்பது எனக்கு தெரியவில்லை.

மேத்யூ மெக்கானகே: நான் சஹாராவுக்கும், பிறகு மேற்கு டெக்ஸாஸூக்கும் சென்றேன்.

சத்குரு: பாலைவனத்தில், நீங்கள் தன்னந்தனியாக இருப்பதால், நீங்கள் குறிப்பிட்டது போல, முதலில் நீங்கள் குழப்பத்திலும், போராட்டத்திலும் இருந்தீர்கள், ஆனால், நீங்கள் கவனம் செலுத்த துவங்கிய பிறகு, ஏனென்றால் அங்கே உங்களுக்கு கவனிப்பதற்கு வேறொன்றும் இல்லை‌ என்பதால், இயல்பாகவே உங்கள் கவனம் உங்கள் மீது, நீங்கள் எப்படி நடக்கிறீர்கள், உங்கள் உடலின் ஒவ்வொரு அசைவு, உங்கள் சுவாசம், இதயத்துடிப்பு மற்றும் உடலின் இயக்கங்களில் கவனம் செலுத்துகிறீர்கள். அப்போது, “நான்” என்று நீங்கள் எதை அழைக்கிறீர்களோ, அது ஒட்டுமொத்தமாக ஒரு பிரபஞ்சமாக இருப்பதை நீங்கள் கவனிக்கத் தொடங்குவீர்கள். உங்கள் அனுபவத்தில் இருக்கும் ஒரே பிரபஞ்சமும், ஒரே உலகமும், இதுவரையில் உங்களுக்குள் என்ன நடந்திருக்கிறதோ அது மட்டும்தான். இதை நீங்கள் உணர்ந்துவிட்டால், பிறகு நீங்கள் விரும்பும் விதமான ஒரு உலகத்தை, உங்களுக்குள் நிர்ணயம் செய்கிறீர்கள். வெளி உலகத்தில், நம்மால் இயன்ற அளவுக்குச் சிறப்பாக நாம் செயலாற்றுகிறோம்.

மேத்யூ மெக்கனாகே: இதுதான், இதுதான். பெரும்பாலான நேரங்களில் நாம் இதைத் தேடாமல் இருப்பதற்கான காரணம் அல்லது “எனக்குத் தெரியாது” என்று பார்ப்பதற்கு மதிப்பளிக்காதது ஏன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

சத்குரு: பெரும்பாலும், “எனக்குத் தெரியாது” என்பது கீழானதாகக் கருதப்படுகிறது.

மேத்யூ மெக்கனாகே: “எனக்குத் தெரியாது” என்று பார்ப்பது, அடுத்து என்ன வரும் என்பது புலனாகாத ஒரு இடம் போன்றதா அல்லது "அஹா... எனக்குத் தெரியவில்லையே!" என்பதைப் போன்றதா?

சத்குரு: முதலில் இதைத் தெளிவுபடுத்துகிறேன் – “எனக்குத் தெரியும்” என்பதுதான் அடுத்து என்ன நடக்கும் என்பது புலனாகாத இடம். நீங்கள் வண்டி ஓட்டிக்கொண்டிருப்பதாக வைத்துக்கொள்வோம். உங்களுக்குப் பின்னால் ஒரு லாரி வந்துகொண்டிருக்கிறது, அதை நீங்கள் ரியர்வ்யூ கண்ணாடியில் பார்க்கிறீர்கள். ஆனால் லாரிக்குப் பின்னால் என்ன வந்துகொண்டிருக்கிறது என்பதை நீங்கள் பார்க்கிறீர்களா? ஒரு லாரி வருவது உங்களுக்குத் தெரிகிறது, ஆனால் அது மற்ற எல்லாவற்றையும் மறைப்பதால், அதுவே கண்ணின் பார்வையை மறைக்கும் இடமாகிறது.

உங்களை நீங்களே பெரிதாக கருத துவங்கினால், உங்களை நீங்களே முட்டாளாக்கிக் கொள்வதை தவிர்க்க இயலாது.

“எனக்குத் தெரியும்” என்று நீங்கள் நினைக்கிறீர்கள், ஆனால் அதுவே உங்கள் மூளைக்குத் தடையாக இருக்கிறது. அது வேறெதையும் பார்ப்பதற்கு உங்களை அனுமதிப்பதில்லை. “எனக்குத் தெரியாது” என்று பார்ப்பது உங்களைச் சுற்றியுள்ள பொருள்களைக் குறித்து அல்ல. எப்போதும் சுழன்றுகொண்டு, அண்டவெளியில் அபாரமான வேகத்தில் பயணம் செய்யும் ஒரு உருண்டையான கிரகத்தின் மீது நீங்களும் நானும் இங்கே அமர்ந்தபடி வெகு தொலைவுக்கு பேசிக்கொண்டிருக்கிறோம். இந்தப் பிரபஞ்சம் எங்கே தொடங்குகிறது, எங்கே முடிகிறது என்பது ஒருவருக்கும் தெரியாது.

அண்டவெளியில் எங்கு இருக்கிறது என்றே தெரியாத ஒரு இடத்தில், சூரிய குடும்பம் என்றழைக்கப்படும் ஒரு துகள் இயங்குகிறது, அந்த துகளில் பூமிக்கிரகம் என்றழைக்கப்படும் மிகச் சிறியதொரு துகள் இருக்கிறது, அந்த சிறு துகளில், டெக்ஸாஸ் என்று அழைக்கப்படும் இடம் ஒரு மிக நுண்ணிய தூசியாக இருக்கிறது, அந்த தூசியில், ஆஸ்டின் நகரம் அதி நுண்ணிய தூசி, அந்த அதி நுண்ணிய தூசியில் நீங்கள் ஒரு பெரிய மனிதர் – இதுதான் பிரச்சனை. ஏனென்றால் “எனக்குத் தெரியும்” என்று நீங்கள் நினைக்கும் கணமே, உங்கள் புரிதலில் நீங்கள் பெரிய மனிதனாகி விடுகிறீர்கள். உங்களை நீங்களே பெரிதாக கருத துவங்கினால், உங்களை நீங்களே முட்டாளாக்கி கொள்வதை தவிர்க்க இயலாது. இதை நீங்கள் இந்தப் பிறவியில் உணர்கிறீர்களோ இல்லையோ, பார்ப்பதற்கு கண் இருக்கும் யாரோ ஒருவர் இது ஒரு அடிமுட்டாள் என்றே பார்ப்பார்.

மேத்யூ மெக்கனாகே: ஆமாம், நீங்கள் கூறுவது எனக்குப் பிடித்திருக்கிறது. “எனக்குத் தெரியும்” என்பதுதான் கண்ணை மறைக்கிறது. ஆனால் உலகம் எதிர்ப்பதமாக, “இல்லை, உனக்குத் தெரியும்” என்று கூறுகிறது. அந்த சுய-உத்தரவாதம், தன்னம்பிக்கை – அது ஒரு தவறான நம்பிக்கையாக இருந்தாலும் – அதற்கு நாம் செல்வம், வேலை, பரிசுகள் மற்றும் தங்கப் பதக்கங்கள் என்று இந்த நிலையில்லாத வாழ்வில் கௌரவம் அளிக்கிறோம். ஆனால் உண்மையில் நான் உங்கள் கருத்தை விரும்புகிறேன். உங்களுக்குத் தெரியாததை தேடுவதற்காக, “எனக்குத் தெரியாது” என ஏற்பது மனவலிமையை வெளிப்படுத்தும் ஒரு செயலா?

சத்குரு: ஆமாம். இப்போ பாருங்க, நீங்க மேத்யூ-னு எனக்கு தெரியும். உங்க இரண்டாவது பெயரை உச்சரிக்கறதுக்கு நான் கொஞ்சம் யோசிச்சு தான்...

மேத்யூ: மெக்கனாகே

சத்குரு: மெக்கனாகே

மேத்யூ: நீங்க சொல்றது, "what would Madonna say"-ங்கற மாதிரியே இருக்கு.[இருவரும் சிரிக்கிறார்கள்]

சத்குரு: ஆமாம். தற்போது நீங்கள் மேத்யூ மெக்கனாகே என்று எனக்குத் தெரியும். ஆனால் உண்மையிலேயே நான் உங்களை அறிந்திருக்கிறேனா? இல்லை. நான் ஒரு நபரைப் பார்க்கும்போது, அவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய காரணத்தினால், தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்களை நான் அறிந்திருக்கக்கூடும். ஆனால் எந்த உயிரையாவது முழுமையாக நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? உங்களுக்குத் தெரியாது. ஆகவே, “எனக்குத் தெரியாது” என்றால், நீங்கள் அறியாமையில் இருப்பதாக அர்த்தமில்லை. எனக்குத் தெரியாது என்றால், “ஒருவேளை நான் இப்போது மேலோட்டமாகப் பார்த்துக்கொண்டிருக்கலாம்; நான் மேலும்மேலும் ஆழமாகப் பார்க்கும் விருப்பத்துடன் இருக்கிறேன்” என்பதுதான் அதன் பொருள். ஆனால், “ஓ, மேத்யூ யார் என்று எனக்குத் தெரியும்” என்று நான் கூறும் கணமே, என் மனதில் அவர் ஒரு தகவல் கோப்பாக இருக்கிறார்; அதோடு முடிந்தது.

எனக்கு தெரியும் என்று நினைத்துக் கொண்டு,  உங்கள் புத்திசாலித்தனம் உறங்கி  விட ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.

இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும், நீங்கள் எவ்வளவு விஷயங்களை அறிந்திருந்தாலும், இந்த பூமியிலுள்ள எல்லா நூலகங்களையும் கரைத்துக் குடித்திருந்தாலும், அப்போதும், இந்தப் பிரபஞ்ச வெளியில் நீங்கள் அறிந்திருப்பது என்பது தூசியளவுதான். ஆனால் நமது அறியாமைக்கு எல்லையில்லை. ஆகவே, ஒட்டுமொத்த யோகமுறையிலும், எப்போதும் நாம் அறியாமையுடன் அடையாளம் கொள்கிறோம். ஏனெனில் என் அறியாமையுடன் நான் அடையாளம் கொண்டால், நான் விழித்திருந்தாலும் அல்லது உறக்கத்தில் இருந்தாலும், எனது புத்திசாலித்தனம் எப்போதும் செயல்பாட்டில் இருக்கிறது; அது ஒருபோதும் உறங்குவதில்லை.

“எனக்குத் தெரியும்” என்று நான் கூறும் கணமே, எனது புத்திசாலித்தனம் உறங்கச் சென்றுவிடுகிறது; அது சோம்பலாகிவிடுகிறது. முக்கியமாக இதுதான் உங்கள் வாழ்வின் தரத்தைத் தீர்மானிக்கிறது. எனக்கு தெரியும் என்று நினைத்துக் கொண்டு, உங்கள் புத்திசாலித்தனம் உறங்கி விட ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். உங்களுக்குத் தெரியாது என்பது முடிவில்லாத ஒரு சாத்தியம். ஒரு தூசியளவு உங்களுக்குத் தெரிந்திருக்கிறது என்ற காரணத்தினால், எல்லையில்லாத சாத்தியத்தை நீக்கிவிட உங்களுக்கு விருப்பமா?

மேத்யூ மெக்கனாகே: “எனக்குத் தெரியாது” என்பது அறியாமை அல்ல; அது முடிவில்லாத ஒரு சாத்தியம்.

சத்குரு: அறியாமை எல்லையில்லாத ஒரு விஷயம் – அறிதல், மிக குறுகிய வரையறைக்குட்பட்ட ஒரு விஷயம்.