ஆரம்பக்கட்ட கோவிட் நிவாரண செயல்பாடுகள்
2020 வருடத்தின் தொடக்கத்தில், கோவிட்-19 பெருந்தொற்று வெளிப்பட்டபோது, சத்குரு உடனடியாக, ஈஷாவின் கோவிட் நிவாரணப் பணிகளை, ஈஷா அவுட்ரீச் மூலமாக முடுக்கிவிட்டார். தன்னார்வப் பணிகளில் தங்களை இணைத்துக்கொண்டு, தங்களது நேரம் மற்றும் சக்தியை அளித்து, சமூகத்துக்கு சேவை செய்வதற்கு ஒரு கோடியே பத்து இலட்சம் தன்னார்வலர்களுக்கு ஈஷா அவுட்ரீச் ஒரு தளம் அமைத்துக் கொடுக்கிறது. சத்குருவின் வழிகாட்டுதலின் கீழ், நோய் தவிர்த்தல், விழிப்புணர்வை அதிகரித்தல், பாதிக்கக்கூடிய சமூகங்களுக்கு ஊட்டச்சத்து அளிப்பது உள்ளிட்ட ஒரு முழுமையான திட்டத்தை நிலைக்குழுவினர் செயல்படுத்திக் கொண்டுள்ளனர். குறிப்பாக, பொருளாதாரத்தில் நலிவடைந்த சமூகத்தினர் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் பட்டினியின் பிடியில் சிக்கும் அபாயத்தில் இருந்தனர். ஈஷா அவுட்ரீச், 5,49,726 உணவுகளும், 14,88,415 மூலிகை நோய் எதிர்ப்பு சக்தி பானங்களும் பரிமாறியதுடன், முன் களப்பணியாளர்களுக்கு 66,892 பாதுகாப்பு கிட்களையும் வழங்கியது. இந்த முயற்சியினால், ஈஷா யோக மையத்துக்கு அருகில் வாழும் 2,00,000 மக்கள் பயனடைந்தனர். மேலும் ஈஷா தன்னார்வலர்கள், மாநில சுகாதாரத்துறை மற்றும் உள்ளூர் காவல்துறையுடன் இணைந்து, தொற்று ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கான வீடியோ தகவல் பதிவுகள் மற்றும் கையேடுகளை விநியோகித்தனர்.
இரண்டாவது அலை: ஈஷா அவுட்ரீச்சின் விரிவாக்கமும், வீச்சும்
கோவிட்-19 இரண்டாவது அலையின் கடுமையான தாக்கத்தில், இந்தியாவின் தொற்று எண்ணிக்கை மலைக்க வைக்கும் வேகத்தில் அதிகரித்தது. அதற்கு இணையான வேகத்தில், ஈஷா அவுட்ரீச் தனது பெருந்தொற்று நிவாரண செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தி, ஈஷா யோக மையத்தைச் சுற்றிலுமுள்ள 17 பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட 43 கிராமங்களில் தனது கவனத்தைச் செலுத்தியது. முன்களப் பணியாளர்களுக்கு உறுதுணையாக இருப்பது, உயிர்களைக் காப்பாற்றுவது, தளராத ஊக்கமளிப்பது மற்றும் மரணத்தின் கண்ணியம் காப்பது போன்ற, இன்று வரை தொடரும் இந்த முன்னெடுப்புகள் சமூகத்தில் பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன.
நோயாளிகளுக்கு இலவச போக்குவரத்து
ஆம்புலன்ஸ் வசதி பெறமுடியாத நோயாளிகளை, மருத்துவமனைகளுக்கும், கோவிட் பராமரிப்பு மையங்களுக்கும் அழைத்துச் செல்வதற்காக பாதுகாப்பான இலவச போக்குவரத்தினை ஈஷா தன்னார்வலர்கள் வழங்குகின்றனர். நோயாளிகளின் உடல்நிலை மோசமடைவதற்கு முன்பு, அவர்கள் மருத்துவமனை செல்வதற்கான இந்த முக்கியமான சேவை பல உயிர்களைக் காப்பாற்றுகிறது. நோயாளிகளை வாகனங்களில் அழைத்து செல்வதற்குரிய எல்லா பாதுகாப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்படுவதில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
“ஆரம்பத்தில், வெளியில் வந்து செயலில் ஈடுபட எனக்குள் ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் பிறகு, இந்த சவாலான சூழலில், தங்களது உயிரைப் பணயம் வைத்து தங்கள் ஆதரவை வழங்க முழுவிருப்பத்துடன் இருக்கும் முன்கள வீரர்களைப் பற்றி எண்ணினேன். இந்த மக்களுக்கு உதவுவதற்கான ஒரு வாய்ப்பை சத்குரு எனக்கு வழங்கியுள்ளார் - இந்த எண்ணம் என்னை மட்டற்ற ஆனந்தம் மற்றும் அர்ப்பணிப்புடன் இதில் ஈடுபட வைத்தது.” - சக்திவேல், திருவண்ணாமலை.
முன்களப் பணியாளர்களுக்கு உற்சாகமூட்டும் ஊட்டச்சத்து கிட் வழங்குதல்
முன்களப் பணியாளர்களுக்கு உணவு கிடைப்பது எளிதாக இருந்தாலும், அழுத்தம் மிகுந்த சூழல்களில் நீண்ட நேரம் பணியாற்ற நேர்வது மற்றும் சீரற்ற வேலை நேரம் காரணமாக நிர்ப்பந்தமான நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். குறிப்பாக அவர்கள் களப்பணிகளில் இருக்க நேரும்போது, சில தருணங்களில் ஒரு முழுமையான உணவை அமர்ந்து சாப்பிடக்கூட நேரம் கிடைப்பதில்லை. இத்தகைய முன்களப் பணியாளர்களுக்கு உதவுவதற்காக, “புத்துயிரூட்டும் ஊட்டச்சத்து கிட்”டினை உருவாக்கி, வழங்கும் ஒரு குறிப்பிடத்தக்க தீர்வை தன்னார்வலர்கள் முன்வைத்துள்ளனர். இந்த கிட்களில் இயந்திரங்களின் உதவியின்றி தயாரிக்கப்பட்ட நவதானிய பிஸ்கட்டுகள் மற்றும் உயர்தர மோர் பாக்கெட் அடங்கியுள்ளது. இவைகள் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதுடன், எளிதாக சேமித்து, வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லக்கூடியதாகவும் உள்ளன.
ஈஷா அவுட்ரீச் இதுவரை தமிழ்நாட்டில், 13 அரசு மருத்துவமனைகளுக்கு, 7000 மருத்துவப் பணியாளர்கள் பலன் பெறும் வகையில் 75,000 புத்துயிரூட்டும் கிட்களை விநியோகம் செய்துள்ளது.
"மதுரையின் மிகப் பழமையான மருத்துவமனைகளுள் ஒன்றான ராஜாஜி அரசு மருத்துவமனை, தினமும் 150க்கும் அதிகமான செவிலியருடன் இயங்கி வருகிறது. நாங்கள் ஊட்டச்சத்து புத்துணர்வு கிட்களை தலைமை செவிலியர் வசம் ஒப்படைத்தோம். பொதுவாக அவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவு மட்டும்தான் வழங்கப்படுகிறது என்று நம்மிடம் தகவல் பகிர்ந்துகொண்ட செவிலியர், தொடர்ந்து, இந்தத் தரமான பிஸ்கட்டுகளும், மோரும் வழங்கப்படுவதற்கு அவர்கள் நன்றி பாராட்டுவதாகவும், அத்துடன் சமைத்த உணவு போலன்றி, இதனை சேமித்து வைத்து, தேவைப்படும்போது எடுத்துக்கொள்ள முடியும் என்றார்.” - மணிமாறன், மதுரை
இந்த முயற்சி தமிழ்நாட்டுக்கு வெளியிலும் எடுக்கப்பட்டு வருகிறது. பெங்களூரு நகர காவல்துறையின் போக்குவரத்து நிர்வாக மையத்தினரிடம், அவர்களது துறையினருக்கு விநியோகம் செய்வதற்காக, நான்காயிரத்து ஐந்நூறு ஊட்டச்சத்து புத்துணர்வு கிட்கள் அளிக்கப்பட்டன. மற்ற காவல் பிரிவினருக்கு 25,000 ஊட்டச்சத்து புத்துணர்வு கிட்கள் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.
கடந்த ஒரு வருட காலமாக களத்தில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் பெருந்தொற்று நிவாரண செயல்பாடுகளுடன், ஈஷா அவுட்ரீச், புதுச்சேரி முன்களப் பணியாளர்களுக்கு தனது ஆதரவுக் கரத்தை நீட்டியது. புதுச்சேரியின் லெஃப்டினென்ட் கவர்னர், Dr. தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை சந்தித்த ஈஷா தன்னார்வலர்கள், முன்களப் பணியாளர்களுக்கு வழங்குவதற்கான 12,750 புத்துணர்வு கிட்களை நன்கொடை அளித்தனர்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் யோகப்பயிற்சிகள்
ஒருவரது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுவதற்கும், பிராண வாயுவை அதிகரிப்பதற்கும் சில எளிமையான ஆனால் சக்திவாய்ந்த யோகப் பயிற்சிகளை சத்குரு உருவாக்கியுள்ளார். அவைகள் பெருமளவிலான மக்களுக்குச் சென்றடையும் வகையில், தன்னார்வலர்கள் வெபினார்களையும், நேரடி வகுப்புகளையும் நடத்தி வருகின்றனர். இதுவரை, மருத்துவத் துறையினர், விவசாயிகள், ஆசிரியர்கள், ஐடி பணியாளர்கள் மற்றும் பெருநிறுவனத் தலைவர்கள் உட்பட, வாழ்வின் அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையும் வண்ணம் 17,000 மக்களுக்கு சிம்ம கிரியா வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முழு அடைப்பு அமல்படுத்துவதற்கு முன்பு, பயிற்றுவிக்கப்பட்ட 500 தன்னார்வலர்கள் (யோக வீரர்கள்) தமிழகமெங்கும் 5000 மக்களுக்கு, சூர்யசக்தி யோகப் பயிற்சியை நேரடி வகுப்புகள் மூலம் கற்றுக்கொடுத்தனர்.
மே, 7 ஆம் தேதியிலிருந்து, மே 31 ஆம் தேதி வரை, 22,808 பேர் பங்கேற்ற 61 சூர்யசக்தி வெபினார் வகுப்புகள் நடத்தப்பட்டன.
உளவியல் ரீதியான ஆதரவு மற்றும் தொலைபேசி வழி மருத்துவ ஆலோசனை வழங்கும் கோவிட் உதவிக் கரங்கள்
வீட்டுத் தனிமையில் இருக்கும் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக, தொலைபேசி மற்றும் இணையதளம் மூலமாக மருத்துவ ஆலோசனை வழங்குவதற்காக, 21 மருத்துவர்கள் மற்றும் 18 தன்னார்வலர்கள் ஆதரவுடன் ஒரு 24x7 உதவி மையம் செயல்படுகிறது. துவங்கப்பட்டதில் இருந்து இரண்டு வாரத்துக்குள், 200க்கும் அதிகமான நோயாளிகள், ஆன்லைனில் ஆலோசனை பெற்று பலனடைந்துள்ளனர்.
கூடுதலாக, மன ரீதியான துயரம் மற்றும் வருத்தத்தில் இருக்கும் தனிமனிதர்கள் மற்றும் குடும்பங்களுக்கு தன்னார்வலர்கள் உளவியல் ரீதியான ஆதரவு வழங்குகின்றனர். ஒரு டெலிக்ராம் குழுவில் இணைந்துள்ள 200க்கும் அதிகமான தன்னார்வலர்கள், அந்தந்தப் பகுதிகளுக்கு தேவையான மருத்துவ உதவியுடன் தொடர்புடைய வேண்டுகோள்கள் மற்றும் தகவல்களை (ப்ளாஸ்மா தேவைகள்/ ப்ளாஸ்மா தானம் அளிப்பவர், ஆக்ஸிஜன் உருளைகள் மற்றும் செறிவூட்டிகள் தேவைகள்/ விநியோகிப்பாளர் தகவல், மருத்துவமனையில் படுக்கைகள் கிடைப்பது குறித்த விபரம் போன்றவை) பகிர்ந்துகொள்கின்றனர்.
தமிழக அரசுடன் இணைந்து பணியாற்றல்
அரசு மருத்துவமனைகளில் முன்களப் பணியாளர்களுக்கு உறுதுணையளிப்பதற்காக, தமிழக அரசுக்கு 500க்கும் அதிகமான ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 2 வாகனங்களுடன், பல நூறு PPE கிட்கள் மற்றும் முக கவசங்களையும் ஈஷா கோவிட் இயக்கம் வழங்கியது. மேலும் 500 PPE கிட்கள், 5000 N95 முக கவசங்கள், 500 Continuous Positive Airway Pressure (CPAP) இயந்திரங்களையும் கோவை அரசு மருத்துவமனைக்கு ஈஷா நேரடியாக வழங்கியுள்ளது.
மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களில் இயங்கி வரும் அனைத்து ஈஷா வித்யா பள்ளி வளாகங்களையும் கூட கோவிட் பராமரிப்பு மையங்களாக பயன்படுத்திக் கொள்வதற்காக சத்குரு தமிழக அரசிடம் வழங்கியுள்ளார்
மரணத்தின் கண்ணியம் காத்தல்
மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழியும் நிலையில், வருந்தத்தக்க வகையில் மயானங்களும் அதே நிலையில் இருக்கின்றன. மிகக் குறுகிய கால அளவுக்குள் பெருந்தொற்றானது அதிக எண்ணிக்கையிலான உயிர்களைப் பலிகொண்டதுடன், கோவிட்-19 காரணமாக பலியானோரின் இறந்த உடல்கள் அவ்வப்போது மயானங்களுக்கு வெளியே, சில நேரங்களில் பல மணி நேரங்களுக்கு எரியூட்டக் காத்துக்கிடக்க வேண்டியிருக்கிறது. கடுமையான இடப் பற்றாக்குறை மற்றும் வசதியின்மையின் காரணமாக, தங்களது அன்புக்குரியவர்களாக இருந்தவர்களுக்கு சம்பந்தபட்ட குடும்பத்தினர் ஒரு கண்ணியமான விடை தருவதற்கு தடை ஏற்படுவதுடன், நிர்வாகத்தினருக்கும் இது ஒரு நெருக்கடியான சவாலாகவும் இருக்கிறது. இந்த இக்கட்டான சூழலைக் கருத்தில் கொண்டு, இறந்தவர்களை மரியாதையுடனும், கௌரவத்துடனும் நடத்துவது என்பது, இறந்தவர்களுக்கும், அவர்களை இழந்தவர்களுக்கும் மிக அவசியமானது என்பதை சத்குரு வலியுறுத்தினார்.
போக்குவரத்து உதவி
பெருந்தொற்றில் பலியானவர்களின் உடலை மயானங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு அமரர் ஊர்திகளைக் கண்டுபிடிப்பதுதான் அந்தக் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனை. அரசு மருத்துவமனைகளின் நிரம்பி வழியும் பிணவறைகளிலிருந்து, இறந்தவர்களை மயானங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு நாற்பது அமரர் ஊர்திகள் வழங்கப்பட்டுள்ளன. மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் துயரத்தில் மருளும் உறவுகளுடன் ஈஷா தன்னார்வலர்கள் போக்குவரத்து ஏற்பாடுகளை கவனித்துக்கொள்ள இணைந்து செயல்படுகின்றனர். சில தருணங்களில், நெருங்கிய குடும்பத்தினரும்கூட மருத்துவ சிகிச்சையில் இருக்க நேர்ந்து, பலியானோரின் உடலை மயானத்திற்குக் கொண்டு செல்ல யாரும் உடன் இல்லாத நிலையில், தன்னார்வலர்கள் முன்னின்று, இறந்தவரின் மற்ற உறவினரைத் தொடர்புகொண்டு, இறுதிச் சடங்குகளும் மற்றும் எல்லா நடைமுறைகளும் செவ்வனே நிகழ்த்தப்படுவதை உறுதி செய்கின்றனர்.
மயான சேவைகளை விரிவுபடுத்துதல்
ஈஷா அறக்கட்டளையால் நடத்தப்படும் பதினெட்டு காயாந்த ஸ்தானங்களிலும், (மயானங்கள்) கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பலியான அதிக எண்ணிக்கையிலான உடல்களைக் கையாண்டு, எல்லா பாதுகாப்பு வழிமுறைகளையும் மேற்கொண்டு, தாமதமின்றி இறுதிச் சடங்குகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, ஈஷா தன்னார்வலர்களின் அர்ப்பணிப்பு மிகுந்த குழு ஒன்று முன்வந்துள்ளது. மயானங்கள் கூடுதலான தகனமேடைகளுடன் விரிவுபடுத்தப்பட்டு, நீண்ட நேரம் இயங்குகின்றன. இறந்தவர்கள் அதிகபட்ச உணர்வுடனும், மரியாதையுடனும் நடத்தப்படுவதை உறுதிசெய்வதற்காக, தன்னார்வலர்கள் ஓய்வின்றி செயல்படுகின்றனர்.
மயானங்களைப் பராமரிக்கும் ஒரு தன்னார்வலரின் பகிர்தல்: “எரியூட்டல் மற்றும் சடங்குகள் முடிந்தபிறகு, இறந்தவரின் பல உறவினர்களும், அவர்கள் உணர்ந்த மன அமைதியையும், நன்றியறிதலையும் எங்களுடன் பகிர்ந்துகொள்கின்றனர். ஒரு புனிதமான சூழலை நாங்கள் பராமரிப்பது, அவர்கள் உள்ளத்தைத் தொடுவதாக இருப்பதாக எங்களிடம் கூறுகின்றனர். இந்தப் பணி, அவர்களது எல்லா எதிர்பார்ப்புகளையும் விஞ்சியதாக இருக்கிறது. அவர்கள் தங்களது உணர்வுகளை எங்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது, இத்தகைய சவாலான நேரங்களில், இந்தச் செயலைச் செய்வதில் நாங்கள் மிகவும் நிறைவாக உணர்கிறோம்.”
எங்களது முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குங்கள்
எங்களது செயல்களுக்கு, பரந்துபட்ட உபகரணங்கள் மற்றும் நிதி ஆதாரங்களின் தேவை இருக்கிறது.
ஒவ்வொரு கோவிட் பராமரிப்பு மையத்துக்கும், படுக்கைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, ரூ. 70 இலட்சத்திலிருந்து ரூ. 2 கோடி வரை தேவைப்படுகிறது. ஒவ்வொரு ஆம்புலன்ஸ்-ம் சுமார் 2-3 இலட்சம் ரூபாய் ஆகிறது.
கோவையில் எங்களது முனைப்பான பணிக்கான செலவினம் சுமார் ரூ. 5 கோடி இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவைகள் ஒருபுறம் இருக்க, இரண்டாவது கோவிட் அலையின் நீட்சியையும், தீவிரத்தையும் பொறுத்து, இது தொடர்பான மற்ற பணிகள் ஒவ்வொன்றுக்குமான செலவினம் பல இலட்சங்களை எட்டுகிறது.
இந்தியா உடனடித் தேவையில் இருக்கிறது. நீங்கள் பங்களித்து, ஒரு வித்தியாசத்தை உருவாக்க முடியும்.