சமுதாயம் & தியானம்

வன்முறை முடிவதாகவே இல்லையே?

இயக்குனர் எக்ஸ் மற்றும் சத்குரு இணைந்து, உச்சபட்சமாக யார் "சமாதானம் ஏற்படுத்துபவர்" என்பதைப் பற்றி உரையாடுகிறார்கள்.

சத்குரு மற்றும் கனடா நாட்டின் திரைப்பட இயக்குனர் எக்ஸ் சமூகத்தில் உள்ள வன்முறையை குறைக்க வழி செய்யும் தியானத்தின் சக்தி குறித்து உரையாடினர். இயக்குனர் எக்ஸ் "Operation Prefrontal Cortex" (முன்நெற்றிப் புறணி இயக்கம்) என்ற ஒரு இயக்கத்தைத் துவங்கியுள்ளார். தியானத்தின் சக்தியைப் பயன்படுத்தி கனடாவில் உள்ள தன் சொந்த ஊரான டொரோண்டோவில் நிகழும் துப்பாக்கிச்சூடு, மக்கள் மற்றும் போலீஸ் வன்முறை ஆகிய சம்பவங்களை குறைக்க உதவும் வகையில் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளார். ஜஸ்டின் பீபர், அஷர், நிக்கி மினாஜ், ஜே-ஜீ, ஒன் டிரெக்ஷன் மற்றும் ரிஹானா போன்ற இசைக்கலைஞர்களோடு பங்காற்றியதன் மூலம் வடஅமெரிக்க இசைக் கலாச்சாரத்தை வடிவமைப்பதில் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். வன்முறையின் ஆணிவேர் என்ன, அதை எவ்வாறு அணுகுவது என்பது பற்றி சத்குரு விவரித்ததை இங்கு வாசிக்கலாம்.

இயக்குனர் எக்ஸ்: நான் டொரோண்டோவில் "Operation Prefrontal Cortex" என்ற நிறுவனத்தை நிறுவியுள்ளேன். இது வன்முறையின் பிண்ணனியில் உள்ள மூளை செயல்பாடு குறித்தும், முரட்டுத்தனமான குணாதிசயம் கொண்டவர்கள் மற்றும் சிறுவயதில் ஏற்பட்ட துஷ்பிரயோகம், புறக்கணிப்பு மற்றும் அழுத்தம் காரணமாக அவர்கள் மூளையின் குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எவ்வாறு தியானம் நேரடியாக சரிசெய்கிறது என்பது குறித்தும் இந்த நிறுவனம் செயல்படுகிறது. எங்கள் பள்ளிகள், சமூகம், தெருக்கள், காவல்துறை, சிறை மற்றும் ஆட்சியாளர்கள் என அனைவரிடத்திலும் தியானத்தை கொண்டுவர நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். சமூகத்தில் சிறந்ததொரு முன்னேற்றத்தை "தியான வழிகாட்டிகள்" என்ற திட்டத்தை உயர்நிலைப்பள்ளி ஒன்று துவங்கியபோது நாங்கள் கண்டோம். அதில் பங்கேற்ற குழந்தைகள் தங்கள் வாழ்வில் மட்டுமின்றி, அவர்களது நண்பர்களின் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். டொரோண்டோவில் துப்பாக்கிச்சூட்டால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் மற்றொரு சமூகமும் தியானத்தை மேற்கொண்ட பிறகு, அவர்களின் வாழ்வும் மாற்றம் பெற்றுள்ளது. இது குறித்து உங்களின் ஆழமான கருத்தைக் கேட்க நான் விருப்பம் கொண்டுள்ளேன்.

தியானத்தில் இருப்பதன் வெவ்வேறு பரிமாணங்கள்

சத்குரு: தியானத்தைக் குறிக்கும் ஆங்கில வார்த்தையான "meditation" எதையும் குறிப்பிட்டு உணர்த்துவதில்லை என்பதால் பல குழப்பங்களை ஏற்படுத்துகிறது. பல்வேறு அறிவியல் ஆய்வுகளும் தியானத்தில் இருப்பதைப் பற்றி ஏராளமான நன்முடிவுகளைக் காட்டியிருந்தாலும், மக்களுக்கு தியானம் என்பதைப் பற்றி மாறுபட்ட எண்ணங்கள் உள்ளன. சமஸ்கிருத மொழியில் தியானத்தை விவரிக்க பல்வேறு வார்த்தைகள் உள்ளன - ஜபம், தவம், தியானம், தாரணம், சமாதி, ஷூன்யா மற்றும் சம்யமா. இவை தியானத்தில் இருப்பதன் வெவ்வேறு பரிமாணங்கள்.

இதை வெறுமே தியானம் என்று கூறுவதை விட தியானத்தில் இருப்பதால் ஏற்படும் தன்மை என்று நான் கூறுவேன். தியானம் என்பது ஒரு தன்மை - அது நீங்கள் செய்யும் ஒரு செயல் அல்ல.

சரிசெய்ய வேண்டிய மூல காரணம்

தற்போது வன்முறையை எடுத்துக்கொண்டால், அது துப்பாக்கி, கத்தி, கைகலப்பு அல்லது வேறு எந்தவிதமான வன்முறையாக இருந்தாலும் சரி, நாம் எப்போதும் அதன் விளைவுகளைப் பற்றியே கவனம் கொள்கிறோம். யாரோ ஒருவர் வேறொருவரை துப்பாக்கியால் சுடுவதோ, வெட்டுவதோ அல்லது குத்துவதோ வெறும் விளைவு மட்டும்தான். உண்மையான பிரச்சனை என்பது, ஒருவர் ஆத்திரமடைகிறார், விரக்தியடைகிறார், வெறுப்படைகிறார் அல்லது பாரபட்சமாக இருக்கிறார். அதை சரிசெய்ய நாம் விருப்பம் கொண்டிருக்கிறோமா? இல்லை. ஏனெனில் நம் சமூகத்தின் அடிப்படை கட்டமைப்பே இத்தகைய பாரபட்சத்தில் தான் உருவாகியுள்ளது.

ஒரு நாட்டில் இனரீதியான சமநிலையைக் கொண்டுவருவது வன்முறைக்கான உலகளாவிய தீர்வு என்று சிலர் எண்ணக்கூடும். ஆனால் அது தீர்வாகாது - நாம் உலகளாவிய மனிதநேயத்தை கொண்டு வரவேண்டும். இல்லையெனில் வெவ்வேறு இனங்கள், மதங்கள், தேசங்கள், குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் என எல்லா காலத்திலும் சண்டை இட்டுக்கொண்டே தான் இருப்பார்கள்.

நாம் நம் சமூகத்தை கட்டமைத்துள்ள விதம், நீங்களும் நானும் எதிரெதிரானவர்கள் என்பதாக இருக்கிறது.

வேறொருவரை துப்பாக்கியால் சுடும் ஒரு மனிதன்தான் வன்முறையாளன் என்று நினைக்காதீர்கள். நாம் ஈடுபடும் எல்லா செயல்களிலும் - வணிகம், அரசியல், தூதுறவு என எதுவாக இருந்தாலும் அதில் வன்முறை உள்ளது. நாம் நம் சமூகத்தை கட்டமைத்துள்ள விதம், நீங்களும் நானும் எதிரெதிரானவர்கள் என்பதாக இருக்கிறது. நீங்களும் நானும் எதிரெதிராக இருக்கும் பட்சத்தில் அங்கே வன்முறைதானே இருக்கும். துப்பாக்கி கலாச்சாரத்தையோ அல்லது எந்தவிதமான வன்முறையையும் நான் நியாயப்படுத்தவில்லை. நான் கூறுவதெல்லாம் இவை அனைத்தும் விளைவுகள் என்பதே. விளைவுகளை நாம் சட்டம் ஒழுங்கு கொண்டு கையாள வேண்டும். ஆனால் முக்கியமானது யாதெனில், ஒருவரின் தன்னிலை மாற்றமே.

நமக்குள்ளும், முடிந்தவரை நம்மை சுற்றி உள்ளவர்களிடமும் மாற்றத்தைக் கொண்டுவரும் வகையில் நம் வாழ்வை அர்ப்பணிக்க நாம் விருப்பம் கொண்டுள்ளோமா? இது நிகழ்வதற்கு உங்களுக்கு தன்னிலை மாற்றத்துக்கான கருவிகள் தேவை. ஹார்வர்டு மருத்துவப் பள்ளியில் செயல்படும் எங்கள் மையத்தோடு உங்களை தொடர்புகொள்ள செய்கிறேன், அங்கே இதைப்பற்றி உறுதியான ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன - வெறுமனே ஒரு குறிப்பிட்ட விதத்தில் அமர்வதன் மூலமே இந்த மனித அமைப்பின் அடிப்படையான உயிர் அளவுருக்கள் எவ்வாறு மாற்றம் கொள்கின்றன என்பது பற்றிய ஆய்வுகளை அவர்கள் மேற்கொள்கிறார்கள். நீங்கள் ஒரு குறிப்பிட்ட மனப்பான்மையோடும் நோக்கத்தோடும் அமர்ந்தால் உங்களைப் பற்றிய அனைத்தும் மாற்றமடையும்.

ஏன் "நல்லவராக" இருப்பது மட்டும் போதாது

நாம் யார் என்பதன் அடிப்படையான இரசாயனத்தையே மாற்ற வேண்டிய தேவையுள்ளது. ஏனெனில் எல்லா மனித அனுபவங்கள் - அமைதி, கோபம், இன்பம், துன்பம், வேதனை, ஆனந்தம் - அனைத்துக்கும் அடிப்படையான வேதியியல் ஒன்று உள்ளது. நாம் இப்போது, நல்வாழ்வுக்கான தொழில்நுட்பங்களைப் பற்றி, தன்னிலை மாற்றத்துக்கான கருவிகளைப் பற்றி, பேரானந்தத்தை உருவாக்கும் வேதியியல் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.

நீங்கள் ஆனந்தமாக இருந்தால், நீங்கள் வன்முறையாளனாக மாறுவதற்கு ஏதும் வாய்ப்பு உள்ளதா? நீங்கள் மகிழ்ச்சியின்றி வேதனையில் இருக்கும்போது தான் வன்முறையாளனாக மாறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அப்போது சிறிது தூண்டிவிட்டாலே போதும். ஆனால் இந்த உலகத்தில் நாம் செய்த மிகப்பெரிய தவறு என்னவெனில், "நல்ல" மனிதர்களை உருவாக்க நாம் முயற்சித்ததுதான். இந்த நல்ல மனிதர்கள்தான் தொடர்ந்து வேறு சில நல்ல மனிதர்களோடு சண்டையிட்டுக் கொண்டே இருக்கிறார்கள் - நல்ல இந்தியர்கள் நல்ல பாகிஸ்தானியர்களை எதிர்த்து சண்டையிடுகிறார்கள்; நல்ல கிறிஸ்தவர்கள் நல்ல இஸ்லாமியர்களை எதிர்த்து சண்டையிடுகிறார்கள்; நல்ல அமெரிக்கர்கள் யாரிடம் வேண்டுமானாலும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதிகப்படியான நல்லவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் எது நல்லது என்பதைப் பற்றி நீங்கள் கொண்டுள்ள எண்ணமும், அவர்கள் கொண்டுள்ள எண்ணமும் மாறுபட்டு இருக்கிறது. அதை தள்ளி வைத்துவிட்டு, இன்னும் மகிழ்ச்சியான, விவேகமான மனிதர்களை இந்த பூமியில் உருவாக்குவதில் கவனம் செலுத்தினால், இதுபோன்ற மோதல்கள் குறைவதை நீங்கள் பார்க்க முடியும்.

சிறைபட்டவர்களுக்கான உள் விடுதலை

ஆனால் உங்கள் நகரத்துக்கான உடனடி தீர்வு என்ன? உங்கள் குழந்தைகள் மற்றும் இந்த மக்களுக்கு இந்த ஒரு தீர்வு தேவை - சிறைபட்டவர்களுக்கான உள் விடுதலை. இதைத்தான் கடந்த 20 - 21 வருடங்களாக நாம் செய்து வருகிறோம். சிறைபட்டவர்கள் உள் விடுதலை அடைவதற்காக, 'மத்திய சிறைகளில் மறுமலர்ச்சி'  ஈஷா யோகா வகுப்புகளை நாம் சிறைச்சாலைகளில் முன்னெடுத்து செயல்படுத்தி உள்ளோம்.

தென்னிந்தியாவில் உள்ள சிறைகளில் நமது பயிற்சி வகுப்புகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீண்டகால சிறை தண்டனை பெற்ற கைதிகள் அனைவரும் எளிய தியானப் பயிற்சியை கற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் பெற்றுள்ள அளப்பரிய மாற்றத்தை நீங்கள் கட்டாயம் காணவேண்டும். நீங்கள் நம்பமாட்டீர்கள் - அவர்கள் தங்களின் தன்னிலை மாற்றத்தைப் பற்றி ஆயிரக்கணக்கான கவிதைகள் எழுதியுள்ளார்கள்.