மாணவப் பருவத்தில் வீரமுத்துவேல் அண்ணா
கனவு மெய்ப்பட்டது
பொறியியல் மாணவனாக கல்லூரியில் காலடி எடுத்து வைத்தபோதே, இஸ்ரோவின் விண்வெளி ஆராய்ச்சி பிரிவில் பணியாற்ற வேண்டும் என்ற கனவையும் எனக்குள் வளர்த்தேன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் எனது M-Tech பட்ட மேற்படிப்பை முடித்த பிறகு சில வருடங்கள் ஒரு தனியார் நிறுவனத்திலும், பிறகு பெங்களூருவில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் (HAL) நிறுவனத்திலும் பணியாற்றினேன். இந்த காலகட்டத்தில் எனது கனவு இலக்காக இருந்த இஸ்ரோ மீது எனது கவனம் சிறிதும் குறைய நான் அனுமதிக்கவில்லை.
2004 ஆம் ஆண்டில் எனது கனவைப் பூர்த்தி செய்தேன். அன்று முதல், பலதரப்பட்ட பிரிவுகள் ஒருங்கிணைந்து இயங்கும் சூழல் கொண்ட இஸ்ரோவில் சவாலான பல திட்டங்களில் பணியாற்ற எனக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இது எனக்கு ஒரு மிகச்சிறந்த கற்றுக்கொள்ளும் அனுபவமாக அமைந்துள்ளது. பல்வேறு செயற்கைக்கோள்கள், தொலை உணர்தல் (remote sensing), செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆராயும் மங்கள்யான் திட்டம், சமீபத்திய சந்திராயன்-2, அடுத்து சந்திராயன்-3 ஆகிய திட்டங்களில் பல பொறுப்புகளை முன்னெடுக்கும் வாய்ப்புகள் எனக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில், 2011ல் IIT Madras-ல் இணைந்து எனது முனைவர் பட்ட ஆய்வை பூர்த்தி செய்தேன்.
சந்திரனே இலக்கு
மங்கள்யான் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியதும், எங்கள் கவனம் செவ்வாயில் இருந்து திங்கள் பக்கம் திரும்பியது. சந்திராயன்-2 திட்டத்தின் இணை திட்ட இயக்குனராக என்னை நியமித்தார்கள். திட்டம் நிறைவுறும் வேளையில் நாங்கள் ஒரு பின்னடைவை சந்திக்க நேர்ந்தது. எங்களால் வெற்றிகரமாக நிலவின் பரப்பில் சாஃப்ட் லேண்டிங் எனும் முறையில் வேகத்தை குறைத்து மெதுவாக தரை இறங்க இயலவில்லை. இப்போது இந்திய அரசு எனக்கு அடுத்த இலக்கை நிர்ணயித்துள்ளது - சந்திராயன்-3. நவம்பர் 2019ல், இஸ்ரோவின் சேர்மேனும் எனது மையத்தின் இயக்குனரும் இணைந்து சந்திரன் பற்றிய அடுத்த திட்டமான சந்திராயன்-3 ன் திட்ட இயக்குனராக என்னை நியமித்துள்ளார்கள்.
இந்த சவாலான பெருமைமிகு பயணத்தைத் துவங்குவதற்கு முன்பாக நான் சத்குருவின் ஆசிகளைப் பெற வேண்டினேன். என்னுடைய நல்ல நேரம், இந்த திட்டம் வெற்றியடைவதற்காக சத்குருவின் ஆசிகளையும் வாழ்த்துகளையும் ஈஷா யோக மையத்திற்கு எனது மனைவியுடன் நேரில் சென்று சத்குருவை சந்தித்து பெற்றுக்கொள்ள முடிந்தது. இப்போது நாங்கள் அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக சந்திரனின் மேற்பரப்பில் சாஃப்ட் லேண்டிங் எனப்படும் மெதுவாக தரையிறங்கும் தொழில்நுட்பத்தில் வெற்றி பெற்ற நான்காவது நாடு என்ற பெருமையை நம் பாரதத்திற்கு பெறும் இலக்கோடு முயற்சித்து வருகிறோம்.
சந்திராயன்
உள் அனுபவமும் விண்வெளி ஆராய்ச்சியும்
விண்வெளி ஆராய்ச்சிகள் பெருமளவு முன்னேறி இருந்தாலும், உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் விண்வெளியில் என்ன இருக்கிறது என்பதை நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு கண்டறிய தீவிரமாக முயற்சித்து வந்தாலும், இதுவரை விண்வெளியைப் பற்றி நாம் அறிந்திருப்பது என்பது மிகவும் சொற்பமே. இதுவே நமது மெய்ஞானிகளோடு ஒப்பிட்டோம் என்றால், நமது உள்நிலை மற்றும் விண்வெளி குறித்த அவர்களின் புரிதல் ஆழமானதாகவும் வியக்கத்தக்கதாகவும் இருக்கிறது. உதாரணத்திற்கு, விண்வெளியைப் பற்றி சத்குரு எப்போது பேசினாலும், எனக்கு அது உத்வேகம் அளிப்பதாகவே இருக்கிறது. ஏனென்றால், அது அனுபவப்பூர்வமாக இருப்பதோடு நமது தற்போதைய புரிதல்களைக் கடந்ததாகவும் இருக்கிறது.
நாம் சந்திரன், செவ்வாய் ஏன் சுக்கிரனுக்கு கூட செயற்கை கோள்களை அனுப்பிக் கொண்டிருந்தாலும், மற்ற கிரகங்களைப் பற்றிய நமது ஆராய்ச்சிகளும், சேகரித்துள்ள தகவல்களும் மிக சொற்பமாகவே இருக்கிறது. மிகச்சிறந்த விஞ்ஞான ஆராய்ச்சி கட்டுரைகளை நான் வாசித்துள்ளேன், எனது ஆராய்ச்சிக் கட்டுரைகளும் பதிப்பிக்கப்பட்டு இருக்கிறது, சந்திராயன்-3 ன் திட்ட இயக்குனராக, செயற்கைக்கோளை ஏவுவது, தரை இறக்குவது, செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் விற்பன்னர் ஆவது என்பதைப் பற்றி வாசிப்பதற்கு இதுவரை நீண்ட நேரம் செலவழித்து இருக்கிறேன், தொழில்நுட்பத்தின் மிகத் துல்லியமான இயக்கங்களையும் நான் பார்த்திருக்கிறேன். இருந்தாலும், என்னைப் பொறுத்தவரையில், இதுவரை நாம் என்ன அறிந்திருக்கிறோம் என்பது மிகச் சொற்பமானதாகவே இருக்கிறது.
இதுபோன்ற தலைப்புகளில் சத்குரு பேசுவதைக் கேட்கும்போது, அவரது புரிதல்கள் என்னவாக இருந்தாலும், அது அவரிடம் அனுபவப்பூர்வமான தன்மையில் இருக்கிறது என்பதை நான் உணர்கிறேன். யோகா அல்லது உள்நிலை நோக்கிய பயணமே விண்வெளி உட்பட அனைத்தைப் பற்றியும் ஆழமான அனுபவபூர்வமான அறிவை பெறுவதற்கான மிகச் சிறந்த வழி என நான் நம்புகிறேன். அறிவியல் பூர்வமாக அணுகும் மக்கள் மிக அதிக அளவு பணத்தையும், நேரத்தையும் செலவழித்து விண்வெளியைப் பற்றி புரிந்துகொள்ள முயற்சிக்கிறார்கள். அப்படி இருந்தாலும், அவ்வாறு திரட்டப்படும் அறிவு மற்றும் புரிதல்கள் மிக குறுகியதாக இருக்கும்.
மஹாசிவராத்திரி 2009
உள்நிலை நோக்கி என் பயணம்
2009ஆம் ஆண்டு, எனது நண்பர்களில் ஒருவர் மூலமாக ஈஷா யோகா வகுப்பைப் பற்றி அறிந்தேன், அப்போது அவரும் என்னுடன் M-Tech படித்துக் கொண்டிருந்தார். அவர் தினசரி பயிற்சிகளை செய்யத் துவங்கியதிலிருந்து அவரிடம் ஏற்பட்டிருந்த மாற்றங்களை என்னால் நன்றாகவே பார்க்க முடிந்தது. அவரும் முன்பைவிட தற்போது மிகச்சிறப்பாக உணர்வதாக கூறினார், இது என்னை யோசிக்க வைத்தது. ஒருநாள் அவர் என்னை மஹாசிவராத்திரி விழாவிற்கு அழைத்துச் சென்றார். அந்த இரவு முழுவதும் நான் விழித்திருந்தேன், நள்ளிரவு தியானத்திலும் பங்கேற்றேன். எனக்குள் ஈஷா யோகா வகுப்பு கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தீவிரமான விருப்பம் எழுந்தது. அடுத்த முறை வகுப்பு நடைபெற்ற போது நான் பங்கேற்பாளன் ஆனேன். வகுப்பு நிறைவடைந்த ஏழாம் நாள், பலப்பல மாற்றங்களை எனக்குள் உணர முடிந்தது.
அதுவரையிலும், எனது உள்நிலைப் பற்றியோ, இப்படிப்பட்ட அம்சங்கள் இருக்கிறது என்பதையோ நான் அறியாமல் இருந்தேன். அடுத்த 40 நாட்களுக்கு எனது பயிற்சியை தினமும் இருவேளைகள் தொடர்ந்து செய்தேன், மிக அற்புதமாக உணர்ந்தேன். இன்னும் ஆழமாக இந்த திசையில் பயணிக்க வேண்டும் என்று விரும்பி எல்லா மேல்நிலை யோக வகுப்புகளிலும் பங்கேற்க முடிவெடுத்தேன். அடுத்த மாதமே ஹடயோகா வகுப்பில் கலந்து கொண்டேன். பிறகு அதற்கடுத்த மாதம் பாவ ஸ்பந்தனா நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.
பல செயற்கைக்கோள் திட்டங்களில் திட்ட இயக்குனராக நான் இருந்ததால் எனக்கு அடிக்கடி விடுமுறையும் கிடைக்காது. எனவே எனக்கு எப்போதெல்லாம் வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை கிடைக்குமோ, அந்த வார இறுதி நாட்களை பயன்படுத்திக்கொண்டு முன்னதாகவே திட்டமிட்டு ஈஷா யோக மையத்திற்கு பயணிப்பேன். இந்த மூன்று நாட்களில் ஈஷா யோகா வகுப்புகள், பூஜைகளில் பங்கேற்பதுடன் ஈஷா யோக மையத்தில் தன்னார்வலராகவும் இருந்திருக்கிறேன். சக்தி சலன கிரியா, ஷூன்ய தியானம் மற்றும் சம்யமாவிலும் பங்கேற்றிருக்கிறேன். அடுத்ததாக, சத்குருவுடன் கூட்டு ஏற்படுத்திக்கொண்ட ஈஷாங்காவாக, மக்கள் நல்வாழ்வை முன்னிறுத்தி ஈஷா முன்னெடுக்கும் பல்வேறு திட்டங்களுக்கும் எனது பங்களிப்பையும் வழங்கி வருகிறேன்.
இப்போது எனது இஸ்ரோவின் பணிச்சூழல் காரணமாக தன்னார்வலராக ஈஷாவின் செயல்களில் பங்கேற்க முடியவில்லை என்றாலும், தினசரி எனது பயிற்சிகள் அனைத்தையும் - இதற்கு சுமார் இரண்டு மணி நேரம் ஆனாலும் பூர்த்தி செய்கிறேன். ஏனென்றால் இது என்னை கவலைகளில் இருந்து வெகு தூரம் விலக்கி, சமநிலையோடு இருக்க வைக்கிறது.
ஈஷா சமஸ்கிருதி: ஒரு குழந்தைக்கான மிகச்சிறந்த அஸ்திவாரம்
நான் ஈஷா யோக மையத்திற்கு நேரில் செல்லத் துவங்கி, வகுப்பு முடித்து, எனது பயிற்சிகள் தினசரி வழக்கமாக மாறிய பிறகு, எனது மனைவியும் ஈஷா யோகா வகுப்பில் பங்கேற்க ஆர்வமானார். ஈஷா யோக மையத்தில் 2010ஆம் ஆண்டு நிகழ்ந்த ஈஷா யோகா ரெட்ரீட் வகுப்பில் அவர் பங்கேற்றார். அதுவே அவரது வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது. அவரும் தீவிரமான ஈஷா தன்னார்வலர் ஆனார். ஈஷா யோக மையத்தில் பலமுறை தன்னார்வத் தொண்டில் ஈடுபட்டுள்ளார். இப்போது, நாங்கள் இருவரும் இணைந்து அதிகாலை 5 மணிக்கு குருபூஜை-யுடன் எங்கள் தினசரி பயிற்சிகளை துவங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.
ஈஷா யோக மையத்திற்கு நாங்கள் சென்றிருந்தபோது, 2009 முதலே ஈஷா சமஸ்கிருதி கல்விமுறை எங்கள் கவனத்தை ஈர்த்திருந்தது. மாணவர்கள் மீது சமஸ்கிருதி கல்வி முறை ஏற்படுத்தியிருந்த ஆழமான தாக்கம் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இதனால் நாங்கள் ஒரு முடிவை தேர்வு செய்தோம் - எங்கள் மகள் ஈஷா சமஸ்கிருதி கல்விமுறையில் பயில வேண்டும் என விரும்பினோம். உண்மையைச் சொல்வதென்றால், நாங்கள் இந்த முடிவை எடுத்த பிறகு, நடைமுறைப்படுத்துவதில் எனது மனைவிதான் மிகத் தீவிரமாக இருந்தார்.
தேசிய தொழில்நுட்ப கல்லூரி (NIT), இந்திய தொழில்நுட்ப கல்லூரி (IIT) போன்ற மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு நான் சென்றிருக்கிறேன், முனைவர் பட்டம் ஈட்டியிருக்கிறேன், விண்வெளித்துறை பற்றி கற்றுக்கொள்ள அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் சென்றிருக்கிறேன், இப்போது நமது நாட்டின் முன்னணி நிறுவனமாக திகழும் இஸ்ரோவில் பணியாற்றுகிறேன், எல்லாம் இருந்தும், ஈஷா சமஸ்கிருதியின் இந்த பாரம்பரியமான அணுகுமுறை எப்போதும் என்னை கவர்ந்து ஈர்ப்பதாகவே இருக்கிறது.
அதன்பிறகு ஒருநாள், இந்த தலைப்பு பற்றி சத்குரு பேசுவதைக் கேட்க நேர்ந்தது. அது என்னில் இன்னமும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஈஷா சமஸ்கிருதி குழந்தைகள் பல்கலைக்கழகங்களுக்காக அல்ல - அவர்கள் இந்த பிரபஞ்சத்திற்காக என்று பேசியிருந்தார். இந்த சிந்தனை ஓட்டம் என்னை வெகுவாக தொட்டது. மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், சரியான சூழ்நிலையும் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு தேவையான ஆதரவும் இருந்தால், ஒரு குழந்தை இயற்கையாகவே எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அதில் தன்னுடைய மிகச்சிறந்த திறனை வெளிக்காட்டவே முனையும் என்று கூறியிருந்தார்.
நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதும், பிறகு மேற்படிப்புகள் படித்த போதும் அது பற்றி நான் அறிந்திருக்கவில்லை. எனவே எதிர்கால சவால்களுக்கு எனது மகளை தயார் செய்வதற்கு இதுதான் மிகச் சிறந்த வழி என நான் நினைத்தேன். எனது மகள் ஒரு டாக்டராகவோ, இன்ஜினீயராகவோ வரமாட்டார் என்பதையும் நான் நன்றாகவே அறிந்திருந்தேன்.
என் குழந்தை வளர ஏதுவான ஒரு சூழல்
எங்கள் மகள் எங்களை விட்டு பிரிந்து ஈஷா சமஸ்கிருதியில் இருக்கும்போது, உள்ளுக்குள் மகளைப் பிரிந்திருக்கிறோமே என்ற ஏக்கம் எழும். ஆனால் எனது மகள் ஒரு பிரதிஷ்டை செய்யப்பட்ட சூழ்நிலையில் இருக்கிறார் என்பதே எங்களுக்கு ஒருவிதமான ஆறுதலை தரும். இந்த வாய்ப்பு கிடைத்ததே ஒரு ஆசீர்வாதம் என்றே நான் நினைக்கிறேன். கூடுதலாக, என் மகள் தன்னால் இயன்றளவு மிகச் சிறப்பாக தன் ஒவ்வொரு செயலிலும் ஈடுபடுகிறாள் என்பதும் மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 21 நாட்கள் விடுமுறையை எங்களுடன் அவள் கழிக்கையில், வீட்டில் மகிழ்ச்சி சிறகடித்து பறக்கும். 21 நாட்கள் முடிந்து அவள் கிளம்பும் நேரம் வருகையில் எனக்குள் உணர்ச்சி ததும்பி நிற்கும். ஆனால் இது எனது மகளின் நல்வாழ்வுக்காக என்பதை எண்ணி ஏற்றுக்கொள்வேன். ஈஷா சமஸ்கிருதியில் இப்போது எங்கள் மகள் ஆறாம் ஆண்டில் இருக்கிறாள்.
எங்கள் மகள் ஒவ்வொரு முறை விடுமுறையில் வீடு திரும்பும் போதும், அவளிடம் பல மாற்றங்களை கண்ணுறுகிறோம். எந்த செயலை செய்வதற்கும் அவளிடம் எந்த தயக்கமும் இல்லை என்பதுடன், எல்லா செயல்களிலும் முழு ஈடுபாட்டுடனும் முழு கவனத்துடனும் ஈடுபடுகிறாள். அங்கே அவர்கள் எப்படி இருக்கிறார்கள், புதிதாக என்ன கற்றுக்கொண்டுள்ளார்கள் என எங்களுடன் பகிர்ந்துகொள்ள பல கதைகள் வைத்திருப்பாள். பாரம்பரிய நடனம் கற்றுக்கொள்வதைப் பற்றி பேசுவாள், எங்களுக்காக அவள் பரத நாட்டியம் ஆடுவதை பார்ப்பதே ஒரு ஆனந்தம்தான். இப்படி எல்லா நற்பண்புகளையும், திறனையும் அவள் உள்வாங்கி இருக்கிறாள் என்பது இதயத்திற்கு இதமாகவும், மிக உற்சாகமாகவும் உணர்கிறோம். பெரும்பாலான குழந்தைகளுக்கு கிடைக்கும் சராசரியான கல்வியை விட, அவளது முழுமையான வளர்ச்சியையே நாங்கள் பெரிதும் விரும்புகிறோம்.