கர்மா - புரிந்துகொள்ள முடியாத விதியா அல்லது உச்சபட்ச சுதந்திரமா?
தீபக் சோப்ரா: என் வாழ்நாள் முழுவதும், கர்மாவைப் பற்றி கற்றுக்கொள்ள முனையும் மாணவனாகவே நான் இருக்கிறேன். கர்மாவின் மர்மம் ஆழம் காண முடியாதது என்று நான் உபநிடதங்களில் படித்திருக்கிறேன். ஆனாலும், மற்ற இடங்களில், அது முடிவான சுதந்திரம் என்று குறிப்பிடப்படுவதையும் வாசிக்கிறேன். உங்கள் புத்தகத்தை நான் வெகுவாக ரசித்தேன். எனவே, உடல் மற்றும் சக்தி என எல்லா நுட்பமான நிலையிலும் கர்மா என்றால் என்ன என்பதை நீங்கள் விளக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், உங்கள் கருத்துப்படி, எதனால் கர்மா சுதந்திரத்தை உறுதி செய்துகொள்ளும் முறையாக கருதப்படுகிறது?
சத்குரு: நீங்கள் யார் என்பது கர்மாவின் விளைவு. நாம் கர்மா என்று அழைப்பதை இன்றைய தகவல் தொழில்நுட்ப காலத்திற்கு ஏற்ப நாம் இப்படி புரிந்து கொள்ளலாம் - அது உங்களின் மென்பொருள். இந்த மென்பொருள் தான் நீங்கள் யார் என்பதை தீர்மானிக்கிறது. நீங்கள் தீபக்காக இருப்பது நீங்கள் கொண்டுள்ள எல்லா அனுபவங்கள், தகவல்கள் மற்றும் பதிவுகளின் காரணத்தினால் தான். அவை அனைத்தையும் அழித்துவிட்டால், பிறகு தீபக் இல்லை.
இந்த எட்டு விதமான ஞாபகங்களின் ஒட்டுமொத்த கலவையே இப்போது "தீபக்"-ஆக இருக்கிறது - இதுதான் "நீங்கள்"
தன்னை தீபக் என்று யார் அழைத்துக் கொள்கிறரோ, அவர் ஒரு நபராக இருக்கிறார் என்றால், அது அவரிடம் இருக்கும் ஞாபகங்களால்தான். பொதுவாக இதை நாம் எட்டு விதமான ஞாபக பதிவுகளாக பார்க்கிறோம் - அடிப்படை மூலக்கூறுகளின் ஞாபக பதிவுகள், அணு சார்ந்த ஞாபக பதிவுகள், பரிணாம ஞாபக பதிவுகள், மரபணு ஞாபக பதிவுகள், தனிப்பட்ட கர்ம ஞாபக பதிவுகள், புலன் சார்ந்த ஞாபக பதிவுகள், வெளிப்படுத்தக்கூடிய ஞாபக பதிவுகள் மற்றும் வெளிப்படுத்த இயலா ஞாபக பதிவுகள். இந்த எட்டு விதமான ஞாபகங்களின் ஒட்டுமொத்த கலவைதான் தற்போது "தீபக்"-ஆக இருக்கிறது - இதுதான் "நீங்கள்". எதை நீங்கள் "நான்" என்று நினைத்துக் கொள்கிறீர்களோ, அது வெறும் கர்மரீதியான உடல்தான்.
'நான்' என்று என்னை வரையறுப்பது எது?
தீபக் சோப்ரா: இது மிக அதிசயதக்கதாக உள்ளது. ஏனெனில் "என்னை" நான் பார்த்தால், என்னையே என்னால் கன்டுகொள்ள முடியவில்லை! எனக்கு பல அடையாளங்கள் உள்ளன - ஒரு கருவாக, ஒரு கரு முட்டையாக, ஒரு குழந்தையாக, வயது முதிர்ந்தவனாக....
சத்குரு: அதை ஒரு கருவாக பார்ப்பதற்கு பதிலாக, அது உங்கள் பெற்றோரின் ஞாபகக் கலவை. அதிலிருந்து ஞாபகங்கள், ஞாபகங்கள், ஞாபகங்கள் தான் உங்களை உருவாக்குகின்றன.
தீபக் சோப்ரா: ஆம், ஆனால் அவை அனைத்தும் தற்காலிகமானவை தானே. "நான்" என்று நிரந்தரமாக ஏதுமில்லைதானே, அவ்வாறு ஏதும் இருக்கிறதா?
சத்குரு: மாற்றம் நிகழ்வதற்கான இடம் இருக்கிறது. நான் மாற்றம் என்று குறிப்பிடுவது மாறுதலைப் பற்றி அல்ல. மாற்றம் அடைவது என்றால், பழையன எதுவும் சிறிதளவுகூட இருக்கக்கூடாது. அவ்வாறு நிகழச் செய்வது சாத்தியமே. அதன் காரணத்தினால்தான் உங்களை நீங்களே மாற்றியமைத்துக் கொள்ள ஏதுவாக, முழுமையாக கட்டமைக்கப்பட்ட ஆன்மீக விஞ்ஞானங்கள் இருக்கிறது. உங்கள் அணுகுமுறையில் மட்டும் மாறுதலை கொண்டு வருவதன் மூலம், ஒரு சங்கத்தில் இருந்து விலகி மற்றொரு சங்கத்தில் உறுப்பினராவதன் மூலம், நீங்கள் வாழும் இடத்தை மாற்றுவதன் மூலம், உங்கள் வாழ்க்கையை ஏதோ ஒரு வழியில் நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். ஆனால் அது உண்மையான மாற்றம் இல்லை.
உங்களை நீங்களே மாற்றியமைத்துக்கொள்ள ஏதுவாக, முழுமையாக கட்டமைக்கப்பட்ட ஆன்மீக விஞ்ஞானங்கள் இருக்கிறது.
உண்மையான மாற்றம் என்பது முழுமையான நினைவு அடுக்குகளில் இருந்து முற்றிலுமாக விலகி இருப்பது. அதாவது உங்கள் இருப்பை முற்றிலும் வேறொன்றாக, முற்றிலும் புதிதானதாக மாற்றுவது. இந்த காரணத்தினால்தான் இந்தியாவில் ஞானம் அடைந்தவரை திவிஜா என்று அழைக்கிறோம் - அதாவது இரண்டு முறை பிறந்தவர் என்று பொருள். உங்கள் பெற்றோரின் நினைவுகளில் இருந்து நீங்கள் பிறந்தது முதல், அங்கு துவங்கி இன்னும் அதிக ஞாபகங்களை நீங்கள் சேர்க்கிறீர்கள். இரண்டாவது முறை, அந்த கர்ம நினைவுகளில் இருந்து உங்களை விடுவித்து நீங்கி, முற்றிலும் புதிய ஒரு வாய்ப்பை உருவாக்குகிறீர்கள்.
கர்மா என்ற கருத்து விஞ்ஞானத்தோடு ஒத்துப்போகிறதா?
தீபக் சோப்ரா: தற்போது நீங்கள் நவீன விஞ்ஞானம் மிக பாதுகாப்பாக காத்து வைத்திருப்பவற்றுக்கு சவால் விடுகிறீர்கள், எப்படி என்பதையும் நானே கூறுகிறேன். இதை ஒரு உதாரணம் மூலம் விளக்குகிறேன். எனக்கு ஐந்து வயது இருக்கும்போது நான் பனிச்சறுக்கு கற்றுக்கொண்டேன். பல வருடங்கள் கழித்து, ஒருநாள் ராக்ஃபெல்லர் மையத்தை கடந்து செல்கையில், பலரும் பனிச்சறுக்கு விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டேன். அங்கிருந்த சறுக்கு பட்டைகளை மாட்டிக்கொண்டு நானும் பனிச்சறுக்கு செய்ய ஆரம்பித்தேன். அப்போது எனக்கு ஒன்று தோன்றியது, நான் பனிச்சறுக்கு கற்றுக்கொண்ட போது இருந்த மூளையும், தற்போது பனிச்சறுக்கு செய்து கொண்டிருக்கும் மூளையும் ஒன்றல்ல - ஒவ்வொரு மூலக்கூறும், மூளையில் உள்ள ஒவ்வொரு அணுவும் இப்போது மாறியிருக்கிறது.
மூளையே கர்மாவின் ஒரு தயாரிப்புதான், அதுவும் சவாலான ஒன்று. மேலும் விழிப்புணர்வு எனப்படுவதுதான் மூளையை உணர்ந்து கொண்டிருக்கிறது. இது பொருள் சார்ந்த கட்டமைப்பை நம்பும் நவீன விஞ்ஞானத்துக்கு மிகப்பெரிய சவால்.
நாம் பொதுவான பரிணாம ஞாபகப் பதிவுகளை கொண்டவர்களாக இருக்கலாம், ஆனால் நமது மரபணு ஞாபகப் பதிவுகள் ஒவ்வொருவரையும் தனித்துவமாக வேறுபடுத்துகிறது.
சத்குரு: தீபக், உங்கள் கருத்தில் ஒரு சிறிய திருத்தத்தை செய்ய விரும்புகிறேன். அதாவது, உடலில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் ஞாபகங்கள் பொதிந்துள்ளதை நவீன விஞ்ஞானம் மறுக்கிறது என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் மரபணுக்கள், குரோமோசோம்கள் மற்றும் டி.என்.ஏ ஆகிய அனைத்தும் ஞாபகப் பதிவுகளின் தயாரிப்புகள்தான். என்னுடைய மரபணுவின் உள்ளடக்கம் என் ஞாபகப் பதிவு, உங்களுடைய மரபணுவின் உள்ளடக்கம் உங்களுடைய ஞாபகப் பதிவு. நாம் பொதுவான பரிணாம ஞாபகப் பதிவுகளை கொண்டவர்களாக இருக்கலாம், ஆனால் நமது மரபணு ஞாபகப் பதிவுகள் ஒவ்வொருவரையும் தனித்துவமாக வேறுபடுத்துகிறது. இந்த கருத்தோடு நவீன விஞ்ஞானம் எப்படி முரண்பட முடியும் என்று எனக்கு தெரியவில்லை, ஏனெனில் இது ஞாபகப் பதிவுகளால் ஆன உடல்.
மனதின் மறைபொருளான நான்காவது பரிமாணம்
யோக விஞ்ஞானத்தில் நாம் இதை எவ்வாறு பார்க்கிறோம் என்றால் - கூர்மையான கத்தி போன்றதாக இந்த புத்தி இருக்கிறது. இது இல்லாமல் உங்களால் இந்த உலகில் பிழைக்க முடியாது - எவ்வளவு கூர்மையாக இருக்கிறதோ, அவ்வளவு நல்லது. அந்த புத்தியை உங்கள் அகங்காரம் கட்டுக்குள் வைத்திருக்கிறது. நீங்கள் எந்த வகையான அகங்காரத்தை வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்கள் புத்தி செயல்படும். ஆனால் தரவுகள் இல்லாமல் புத்தியால் வேலை செய்ய முடியாது. எனவே மனஸ் என்ற ஒன்று உள்ளது - எல்லா வகையான ஞாபகங்களையும் கொண்டிருக்கும் ஒரு நிலவரைக்கிடங்கு போன்றது இது.
மனதின் நான்காவது பரிமாணம்தான் சித்தம் எனப்படுகிறது. ஞாபகப் பதிவுகளால் தொடமுடியாத ஒரு புத்திசாலித்தனம் இது. நான் "விழிப்புணர்வு" என்ற வார்த்தையை உபயோகப்படுத்த விரும்பவில்லை. ஏனெனில் ஒவ்வொருவரும் இந்த வார்த்தையை வேறுவேறு விதங்களில் பயன்படுத்துகிறார்கள். எனவே நாம் இதை சித்தம் என்று அழைக்கிறோம் - ஞாபகங்களைக் கடந்த ஒரு புத்திசாலித்தனம்.
நீங்கள் சித்தத்தைத் தொட்டால் மட்டுமே, உங்கள் மாற்றம் பரிபூரணமானதாக இருக்கும்.
மனதின் இந்த மூன்று பகுதிகள் - புத்தி, அகங்காரம் மற்றும் மனஸ் - ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கிறது. ஆனால் சித்தத்தைப் பொறுத்தவரையில், உங்களுடையது - என்னுடையது என்று எதுவும் இல்லை. சித்தம் என்பது இந்த பிரபஞ்சத்தின் வாழும் அறிவு. நீங்கள் சிறிதளவு பிடித்துள்ளீர்கள், நான் சிறிதளவு பிடித்துள்ளேன். ஆனால் இது உங்களுடையது என்றோ அல்லது என்னுடையது என்றோ அழைத்துக்கொள்ள முடியாது. நீங்கள் சித்தத்தைத் தொட்டால் மட்டுமே உங்கள் மாற்றம் பரிபூரணமானதாக இருக்கும்.
வெறும் கண்ணோட்டத்தைப் பற்றியதா?
ஞாபகம் என்பது ஒரு எல்லை. உங்களை ஏற்கனவே நான் அறிந்திருக்கிறேன் என்றால், உங்களை பார்த்தவுடனேயே "ஓ! இது என் நண்பர்" என்று நான் எண்ணுவேன். நீங்கள் என் ஞாபகப் பதிவுகளில் இல்லை என்றால்: "ஓ! யார் இவர்?" என தோன்றும். என் நினைவுகள் எல்லையை உருவாக்குகிறது. உயிர் பிழைத்திருக்கவும், அறிதலுக்கும் பெரும் வாய்ப்பாக இருப்பது ஞாபகப் பதிவு. அதே சமயம் அது உங்களால் கடக்க முடியாத ஒரு தடை - ஞாபகங்களால் பீடிக்கப்படாத புத்திசாலித்தனத்தின் பரிமாணத்தை நீங்கள் தொடும் வரை. அதை நீங்கள் தொட்டவுடன் நீங்கள், நான் என எதுவும் இருக்காது, உயிர் பற்றிய பிரபஞ்ச அனுபவம் மட்டுமே இருக்கும்.
யோகத்தில் நீங்கள் ஒருபோதும் உங்கள் கர்மாவை சரிசெய்ய முயல்வதில்லை - அதனிடம் இருந்து இடைவெளி ஏற்படுத்திக் கொள்ளவே முயல்கிறீர்கள். இது எவ்வாறெனில்: நீங்கள் விமான நிலையத்துக்கு சென்று கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம். வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உங்களுக்கு காலதாமதம் ஆகிறது, போக்குவரத்து நெரிசலைக் கண்டு நீங்கள் சீற்றமடைகிறீர்கள். உங்கள் முன் ஒளிரும் எல்லா சிவப்பு விளக்குகளும் உங்களை பித்துப்பிடிக்கச் செய்கிறது. பின்னர் எப்படியோ ஒரு வழியாக நீங்கள் விமான நிலையத்தை அடைகிறீர்கள், விமானத்திலும் ஏறிவிட்டீர்கள். விமானம் மேலெழும்பி பறக்கையில், அதே போக்குவரத்து நெரிசலை நீங்கள் மேலே இருந்து காண்கிறீர்கள். ஒளிரும் நீண்ட சிவப்பு விளக்குகளின் அணிவரிசை அற்புதமான கண்ணை கவரும் காட்சியாக இப்போது உங்களுக்கு தெரிகிறது, ஏனென்றால் சிறிது இடைவெளி இருக்கிறது. நாம் வாழ்க்கையை அவ்வாறுதான் பார்க்கிறோம்.
யோகத்தில் நீங்கள் ஒருபோதும் உங்கள் கர்மாவை சரிசெய்ய முயல்வதில்லை - அதனிடம் இருந்து இடைவெளி ஏற்படுத்திக் கொள்ளவே முயல்கிறீர்கள்.
உங்கள் உடல் கொண்டுள்ள கர்ம ஞாபகங்களை நீங்கள் விளங்கிக்கொள்ள முடியாது. அந்த ஞாபகங்கள் சிக்கலும், குழப்பமுமானவை. அதை இந்த வாழ்வில் சரிசெய்வது என்பது பயனற்ற முயற்சியாக முடியும். நீங்கள் தோண்டதோண்ட அது முடிவில்லாத ஒரு குழியாக போய்க்கொண்டே இருக்கும். எனவே நாம் கர்ம ஞாபகங்களை எவ்வாறு தள்ளி வைப்பது என்று மட்டும்தான் பார்க்கிறோம். குணநலன் பற்றியோ அகங்காரம் பற்றியோ எந்த பிரச்சனையும் இல்லை. நீங்கள் அதில் நிர்ப்பந்தத்தால் சிக்கிப்போவதுதான் ஒரே பிரச்சனை. இல்லையெனில் இந்த உலகம் அழகாகவும் வண்ணமயமாகவும் தெரிவதற்கான காரணம், நாம் ஒவ்வொருவரும் வேறுபட்டவர்களாக இருக்கிறோம் என்பதுதான்.