கனவுகள் மற்றும் கர்மா - பகுதி 2
இந்த இரண்டாம் பாகத்தில், கனவுகளின் இயல்பையும், கனவுக்கும் கர்மா கரைதலுக்கும் உள்ள தொடர்பையும் சத்குரு விளக்குகிறார்.

கர்மா என்பது பல விஷயங்களாக இருக்கிறது. ஒருவரின் தற்போதைய புரிதலுக்கு ஏற்ப, அதே கர்மாவைப் பற்றி வெவ்வேறு நிலைகளில் பேசுகிறோம். கர்மா என்றால் செயல். யாருடைய செயல்? "எனது செயல்." முதலில் உணர வேண்டியது, நான் முன்பு செய்த செயல்களை முறுக்கப்படும் சுருள்வில்லைப் போல செய்ததால் தான், இப்போது நிகழ்பவை தளர்வடையும் சுருள்வில்லைப் போல நிகழ்கின்றன. இந்த தளர்வடையும் செயல்முறை தானாகவே நடப்பதுபோல் தெரிகிறது. "இதற்கு எனது ஈடுபாடே தேவைப்படுவதில்லை, தானாகவே நடக்கிறது. என் கோபம் தானாகவே வெடிக்கிறது, என் எண்ணங்கள் தானாகவே தோன்றுகின்றன, என் உணர்வுகள் தானாகவே எழுகின்றன." அதை நிகழச் செய்ய எந்த நோக்கமோ அல்லது ஈடுபாடோ தேவைப்படுவதில்லை, அது தானாகவே நடக்கிறது. அது கிட்டத்தட்ட வேறு ஏதோ ஒரு ஜீவன் அதைச் செய்வது போல தோன்றுகிறது. நீங்கள் சிறிது காலம் மௌனத்தில் இருந்தால், மனம் எப்படி செயல்படுகிறது என்பதை கவனித்தால், கிட்டத்தட்ட வேறு ஏதோவொன்று உங்களை ஆட்டிப்படைப்பது போலத் தோன்றும். அதுவாகவே ஏதோ செய்வதைப் போலத் தோன்றும். ஆனால் அது நீங்கள் முன்பு செய்ததைத்தான் கரைத்துக்கொண்டு இருக்கிறது.
அப்படியானால் வாழ்க்கை முழுவதும் கர்மவினையை உருவாக்குவதா, கனவு முழுவதும் கர்மவினையைக் கரைப்பதா? இல்லை. வாழ்க்கை என்பது செய்தல் மற்றும் கரைத்தல் இரண்டின் கலவை. நீங்கள் எவ்வளவு விழிப்புணர்வற்று இருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக கரைத்தல் நடக்கிறது. நீங்கள் பகுதியளவு விழிப்புணர்வாக மாறினால், அதிக செயல்களை செய்ய நேரிடும். நீங்கள் முழு விழிப்புணர்வை அடைந்தால், கரைத்தல் மிக வேகமாக நடக்கும், செய்தல் முற்றிலும் தடுக்கப்படும். பகுதியளவு விழிப்புணர்வாக இருப்பது எப்போதும் கரைத்தலை விட அதிக கர்மவினையை உருவாக்கும். உதாரணமாக, ஒரு எளிய விவசாயி தனது கர்மத்தை வெறுமனே கரைக்கிறார். அவர் அதிகமாக எதையும் சேர்த்துக் கொள்வதில்லை. காலையில் எழுந்து, நிலத்தை உழுது, விலங்குகளைப் பராமரித்து, செய்ய வேண்டிய எளிய விஷயங்களை செய்து முடிப்பார், அவ்வளவுதான். உலகத்தை வெல்வது எப்படி என்று அவர் சிந்தித்து செயல்படுவதில்லை. எனவே அவரது வாழ்க்கை பெரும்பாலும் கரைத்தலே. அவர் கர்மவினையை உருவாக்குவதே இல்லை என்று இல்லை, ஆனால் அவரது வாழ்க்கையின் தன்மை அதிக செயல்களுக்கு இடம் தராததால், கரைத்தலை விட செய்தல் மிகக் குறைவு. ஆனால் கல்வி கற்றவுடன், உங்கள் செய்தலும் கரைத்தலும் நன்றாகவே கலந்துவிடுகிறது, ஒரே நேரத்தில் இரண்டையும் செய்யும் திறன் பெறுகிறீர்கள்.
கல்வியின் பங்கு
ஒரு நிலையில், உங்கள் எண்ணங்களும் உணர்வுகளும் விழிப்புணர்வற்ற வழிகளில் வெளிப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. மற்றொரு நிலையில், உங்களுக்கு நிறைவேற்ற வேண்டிய நோக்கங்கள் இருக்கின்றன. இது மக்களுக்கு எப்போதும் நடந்துகொண்டே இருக்கிறது. நான் இதற்கெல்லாம் கல்வியை மட்டும் குற்றம் சொல்ல விரும்பவில்லை, ஆனால் பொதுவாக, உங்கள் கல்வி முறையே இதற்குக் காரணம் - அது உங்களுக்குள் வலுவான நோக்கங்களை உருவாக்குகிறது. இன்றைய கல்வி அறிந்துகொள்ளும் செயல்முறையாக இருப்பதில்லை, உணர்தலின் செயல்முறையாக இருப்பதில்லை, உங்கள் உடலையோ அல்லது மனதையோ அதன் முழுத்திறனுக்கு வளர்க்கும் செயல்முறையாக இருப்பதில்லை. அது உங்களுக்குள் மிகவும் வலுவான ஆசைகளையும் லட்சியங்களையும் உருவாக்குகிறது.
Subscribe
படித்தவர்கள் எல்லையற்ற ஆசைகளால் துன்பப்படுகிறார்கள். அவர்களால் வயிறு நிறைய சாப்பிட்டு மகிழ்ச்சியாக அமர்ந்திருக்கவும் தூங்கவும் முடிவதில்லை. அது அவர்களுக்கு முடியாது. அவர்கள் சாப்பிடும்போது, தொழிலைப் பற்றி பேசுகிறார்கள். அவர்கள் ஏதோவொன்றை உருவாக்குவதற்காகவோ, ஏதோவொன்றை கட்டமைப்பதற்காகவோ, தங்கள் வாழ்க்கையையோ அல்லது அனைவரின் வாழ்க்கையையோ அற்புதமாக மாற்றுவதற்காகவோ உலகத்தில் ஏதோவொன்றை கையில் எடுத்திருக்கிறார்கள் என்று இல்லை. அப்படி இல்லை. அவர்கள் வெறுமனே தாங்கள் செய்யும் அர்த்தமற்ற விஷயங்களை அதிகமாகச் செய்ய விரும்புகிறார்கள், ஏனெனில் எந்தவொரு குறிப்பிட்ட நோக்கமும் இல்லாமல் மிகவும் வலுவான நோக்கங்கள் அவர்களுக்குள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. நோக்கம் என்பது கர்மவினையை உருவாக்குவதற்கான மிகவும் சக்திவாய்ந்த கருவி. கர்மவினையை உருவாக்குவது செயல் அல்ல, அதன் நோக்கம்தான்.
கர்ம செயல்முறையில், செயலின் காரணமாக கர்மவினை கரைகிறது. கர்மவினை சேர்வது, வலுவான நோக்கங்களால் நிகழ்கிறது. உங்களைப் பற்றி எவ்வளவு அதிகமாக நினைக்கிறீர்களோ, அவ்வளவு வலுவாக உங்கள் நோக்கங்கள் மாறுகின்றன. நான் நோக்கங்கள் என்று சொல்லும்போது, நான் மகத்தான நோக்கங்களைப் பற்றி பேசவில்லை - நான் வலுவான நோக்கங்களைப் பற்றி பேசுகிறேன். நீங்கள் கோபத்தில் இருக்கும்போது, நீங்கள் கர்மவினையை கரைக்கவும் முடியும், மாறாக கர்மவினையை உருவாக்கவும் முடியும். நீங்கள் கோபத்தில் வெடித்தபின் குளிர்ந்துவிடலாம். அல்லது நீங்கள் கோபத்தில் வெடித்து ஒரு நோக்கத்தை இப்படி உருவாக்கலாம்: "அவளை நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா?" இப்படி இருந்தால் நீங்கள் பெரிய அளவில் கர்மவினையை உருவாக்குகிறீர்கள். கோபம் என்பது ஒரு வெடிப்பு மட்டுமே. கோபம் என்பது உங்களுக்குள் நிகழ்ந்த ஒன்றை கரைக்கும் செயல்முறை மட்டுமே. கோபம் வெறுப்பை உருவாக்கலாம். வெறுப்பு என்பது ஒரு நோக்கம். கோபம் ஒரு நோக்கத்தை எடுத்துக்கொள்ளும்போது அது வெறுப்பாகிறது. பொறாமை கர்மவினையை கரைப்பதாக இருக்கலாம், அதே பொறாமை ஒரு நோக்கத்தை எடுத்துக்கொண்டால் அது ஒரு உள்நோக்கம் என்று சொல்லலாம். இப்போது ஒருவித குளிர்ச்சியுடன் இருந்தால், நீங்கள் கோபமாக இருந்தாலும், நீங்கள் வெறுப்பாக மாறினாலும், நீங்கள் உங்கள் கோபத்தையோ அல்லது வெறுப்பையோ காட்டுவதில்லை. நீங்கள் ஒரு குளிர்ந்த முகத்துடன் சூடான விஷயங்களைச் செய்வீர்கள், இல்லையா? உதாரணமாக காமம் என்பது கரைக்கும் செயல்முறையாக இருக்கிறது. இச்சை என்பது கர்மவினையை உருவாக்குகிறது, ஏனெனில் அதற்கு ஒரு நோக்கம் இருக்கிறது.
நாகரிகமானவர்களாக கருதப்படுபவர்கள்..
உங்களுக்குள் நிகழும் அனைத்து எண்ணங்களையும் உணர்வுகளையும் நீங்கள் வெளிப்படுத்தினால், நீங்கள் கிட்டத்தட்ட முரட்டுத்தனமானவராகவே வெளிப்படுவீர்கள். அதை சீராக்க, நீங்கள் ஒரு நோக்கத்தை உருவாக்குகிறீர்கள் - அது கர்மவினையை உருவாக்குவது. நாகரிகமாக கருதப்படும் இந்த தன்மை தற்கொலையைப் போன்றது, ஏனென்றால் நீங்கள் தொடர்ந்து கர்மவினையை கரைப்பதை விட வேகமாக உருவாக்குகிறீர்கள், ஏனென்றால் மனம் இரட்டை முகம் கொண்டதாக மாறுகிறது. ஒரு நிலையில், அது கரைப்பதாக இருக்கிறது, மற்றொரு நிலையில், அதற்கென்று நோக்கங்கள் இருக்கிறது. நாகரிகமான மக்களாக கருதப்படுபவர்களைப் பார்த்தால் - நான் "நாகரிகமான" என்று சொல்லும்போது, நான் சமூகரீதியாக நாகரிகமான மக்களைக் குறிக்கிறேன், உண்மையிலேயே நாகரிகமான மக்களை அல்ல - அவர்கள் எப்போதும் எளிய மக்களை விட அதிகமாகத் துன்பப்படுகிறார்கள். எளிய மக்களின் கோபம், வெறுப்பு மற்றும் பாரபட்சம் அப்படியே வெளிப்பட்டுவிடும். அவர்கள் முரட்டுத்தனமானவர்களாகத் தெரியலாம், ஆனால் வஞ்சனையின் அடிப்படையில் பார்த்தால், அவர்கள் நாகரிகமானவர்களாக கருதப்படும் மக்களை விட பல புள்ளிகள் குறைவானவர்களாகவே உள்ளனர். அதிக நாகரிகமான மக்கள், ஆரம்பத்தில் மற்றவர்களை ஏமாற்றக் கற்றுக்கொள்கிறார்கள். சிறிது காலத்திற்குப் பிறகு, அவர்கள் நிபுணர்களாகி தங்களைத் தாங்களே கூட ஏமாற்றிக்கொள்ள முடியும். அவர்களது நோக்கங்கள் அவர்களை சார்ந்ததாகக் கூட இருப்பதில்லை.
கல்வி அந்தத் திறனை மேம்படுத்துகிறது, ஏனெனில் மனித மனம் எவ்வாறு செயல்படுகிறது, எவ்வாறு பரிணமிக்கிறது, அதை எது மலரச்செய்ய முடியும், அதை எது அசிங்கமாக்க முடியும் என்பது பற்றிய சரியான புரிதல் இல்லாமல், இவற்றை எந்தவொரு ஆழத்துடனும் பார்க்காமல், அது உங்களை பல விஷயங்களுக்கு வெளிப்படுத்துகிறது. எல்லாவிதமான மக்களுக்கும் தகவல்கள் எல்லா வகைகளிலும் பரிமாறப்படுகின்றன. எனவே பொதுவாக, துரதிர்ஷ்டவசமாக மக்கள் கல்வியை பயன்படுத்தி தங்களுக்கும் கர்மவினையை உருவாக்கிக்கொள்கிறார்கள். அவர்களைச் சுற்றியுள்ள உலகைப் பொறுத்தவரையில், தகவல்களைப் பொறுத்தவரையில், அவர்களுக்கு அதிகம் தெரிந்திருக்கலாம், ஆனால் உயிர் செயல்முறையைப் பொறுத்தவரையில், பொதுவாக படித்தவர்கள் படிக்காதவர்களை விட அதிக அறியாமையில் இருக்கிறார்கள்.
நீங்கள் இந்தியாவில் ஒரு எளிய படிப்பறிவற்ற விவசாயியின் வீட்டிற்குச் சென்றால், அவரது உயிர் உணர்வு, அவரது உடலைப் பற்றிய உணர்வு, அவரது உடலை சுகமாக வைத்துக்கொள்வது பற்றிய உணர்வு, யாரோ ஒருவருக்கு எது சரிவரும், எது சரிவராது என்பது பற்றிய உணர்வு ஆகியவை உலகின் பெரும்பாலான படித்த சமூகங்களை விட மிகவும் தெளிவாகவும் புத்திசாலித்தனமாகவும் இருக்கிறது. ஏனென்றால் அவரது மனதில் அவ்வளவு குழப்பமான எண்ணங்கள் இல்லை. படித்த மக்களின் பெரும் பிரிவினருக்கு ஏற்பட்டிருப்பதைப் போல அவர் மூளை பேதலித்துப்போகவில்லை. கல்வியே குற்றவாளி என்று இல்லை, ஒருவரின் நல்வாழ்விற்கு அதை எவ்வாறு பயன்படுத்துவது என்ற வழிகாட்டுதல் இல்லாததால் இது நிகழ்கிறது. எனவே துரதிருஷ்டவசமாக, வல்லமையளிப்பதாக இருந்திருக்க வேண்டிய கல்வி, தெளிவைத் தருவதாக இருந்திருக்க வேண்டிய கல்வி, வாழ்க்கை செயல்முறையைப் பற்றிய அதிக குழப்பத்தைத்தான் கொண்டுவந்துள்ளது.
எனவே விழிப்புநிலை மற்றும் கனவு - இவ்விரண்டிற்கும் இடையே நீங்கள் வேறுபாடு பார்க்காமல் இருப்பதே சிறந்தது. ஒன்று, நீங்கள் இந்த இரண்டு நிலைகளையும் கனவாகப் பார்க்க வேண்டும், அல்லது இரண்டு நிலைகளையும் விழிப்புணர்வின் வெவ்வேறு நிலைகளாகப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது ஒரு வகையான கனவு, அது ஆழமான கனவு. அல்லது இது ஒரு வகையான யதார்த்தம், அது மற்றொரு வகையான யதார்த்தம். நீங்கள் இவ்வாறு பார்த்தால், உங்களால் இரண்டையும் கர்மவினையை உருவாக்குவதற்கு பதிலாக கரைக்கும் செயல்முறையாக மாற்ற முடியும்.
குறிப்பு:
சத்குரு அவர்களின் ஆழமான புரிதலில் கர்மா செயல்படும் விதம் மற்றும் அதன் சூட்சுமங்களை விரிவாக விளக்கும் 'கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' என்ற புதிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதனை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.