
நீங்கள் பெற்ற குழந்தைகளைத் தாண்டி, எல்லா உயிரையும் மதித்துப் பேணி வளர்க்கும் உலகளாவிய தாய்மையைக் குறித்து சத்குரு தெளிவுபடுத்துகிறார். தனித்த தன்மையின் எல்லைகளைப் பற்றி கேள்வி எழுப்பும் சத்குரு, உலகளாவிய பிரச்சனைகளுக்கு, யோகாவின் சாரத்தை மாற்றம் ஏற்படுத்தும் ஒரு அணுகுமுறையாக முன்வைக்கிறார்.
கேள்வி: ஒரு தாயாக, “உலகத்துக்கே தாயாக இருப்பது” என்ற கருத்துடன் நான் ஒன்றுபடுகிறேன். உலகளாவிய தாய்மை உணர்வை வளர்ப்பது, சர்வதேச அளவில் தற்போது நாம் எதிர்கொண்டிருக்கும் பல பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உண்மையாகவே ஒரு திறவுகோலாக இருக்கமுடியுமா?
சத்குரு: ஒருவர் மிக மோசமான மனிதராக இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவர் வெளியில் சென்றால், அவர் மீது வெளிச்சம் பாய்ச்சுவதற்கு சூரியன் மறுத்துவிடுமா? இந்த நபர் நல்லவர் அல்ல என்று நினைத்துக்கொண்டு மரங்கள் பிராணவாயுவை பிடித்து வைத்துக்கொள்ளுமா? நிச்சயமாக இல்லை. ஒட்டுமொத்த படைப்பும் மதிப்பீடுகள் செய்யாதபோது, அப்படிச் செய்வதற்கு நீங்கள் யார்? யார் நல்லவர், கெட்டவர், அல்லது யார் நம்மைச் சார்ந்தவர் மற்றும் யார் நம்மைச் சாராதவர் என்று முடிவெடுப்பதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது?
தாய்மையின் முக்கியத்துவம் குழந்தையை ஈன்றெடுப்பதில் இல்லை, அது மற்றொரு உயிரை உங்களின் ஒரு பாகமாக உணர்வதில் இருக்கிறது. அதற்காக, நாம் தாய்மைக்குத் தலைவணங்குகிறோம். உங்கள் குழந்தைகள் வளர்கையில், அவர்களை நல்லவர்களாக அல்லது தீயவர்களாக முத்திரைகுத்தி அவர்களைப் பற்றிக்கூட நீங்கள் தீர்ப்புகள் உருவாக்கத் தொடங்கலாம். ஆனால் குறைந்தபட்சம் குழந்தை உங்கள் கருவில் இருந்தபோதும், பிறந்தபிறகு ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்குமாவது, மற்றொரு உயிரை உங்களின் பாகமாக உணர்ந்திருந்தீர்கள். இதுவே யோகா.
யோகா என்றால் ஒருமை. ஒரு தாயாக, ஒரு குறிப்பிட்ட நிலையிலான ஒருமையை நீங்கள் உணர்கிறீர்கள். இதற்குத்தான் நாம் தலைவணங்குகிறோம். உங்கள் குழந்தைகள் உங்களை உயர்வாகப் பார்ப்பதன் காரணம், அவர்களுக்கு நீங்கள் பிறப்பளித்தீர்கள் என்பது அல்ல. அவர்களை உங்களின் ஒரு பாகமாக நீங்கள் அரவணைத்துள்ளதுதான் அதற்கான காரணம்.
குழந்தையை உங்களின் ஒரு பாகமாக எந்த அளவுக்கு உங்களால் இணைத்துக்கொள்ள முடிகிறது என்பதுதான் உங்களை ஒரு தாயாக வல்லமைப்படுத்துகிறதே தவிர, உயிரியல் வெளிப்பாடு அல்ல. எவராலும் விழிப்புணர்வுடனோ அல்லது விழிப்புணர்வில்லாமலோ குழந்தையை ஈன்றெடுக்க முடியும். தாய்மையின் உண்மையான முக்கியத்துவம் உங்களைச் சுற்றியுள்ள உயிர்களை, உங்களின் ஒரு பகுதியாக இணைத்துக்கொள்ளும் உங்கள் திறனில் உள்ளது. அதுதான் உங்கள் வாழ்க்கை அனுபவத்தின் ஆழத்தைத் தீர்மானிக்கிறது.
வர்த்தக உலகத்தின் ஒவ்வொரு விளம்பரமும் தனித்த தன்மையுடன் இருப்பதை முன்னிறுத்துகிறது, ஏனென்றால் அவைகள் தங்களது உற்பத்திப்பொருட்களை விற்பதற்கு பெருமுயற்சி எடுக்கின்றன. ஆனால் நீங்கள் இணைத்துக்கொள்பவராக இருந்தால், வாழ்க்கை நிகழ்கிறது. நீங்கள் தனித்தத் தன்மையில் இருக்கும்போது, உங்கள் மனரீதியான நாடகம்தான் நிகழ்கிறது. ஆகவே, நீங்கள் மனரீதியான நாடகத்தை அனுபவிப்பதற்கு மட்டும் இங்கு வந்துள்ளீர்களா, அல்லது வாழ்வை இயன்ற அளவுக்கு ஆழமாக உணர்வதற்கு வந்துள்ளீர்களா? இது எல்லாமே அதைப்பற்றியதுதான். உங்களுடைய தினசரி அர்த்தமற்றவைகளில் நீங்கள் மாட்டிக்கொள்ளும்போது, அதை நீங்கள் உணராமல் போகலாம்.
உங்கள் தலைக்கு நேராக யாராவது துப்பாக்கி பிடித்திருந்தால், அல்லது நீங்கள் ஒரு சில மாதங்கள்தான் வாழ்வீர்கள் என்று உங்கள் மருத்துவர் உங்களிடம் கூறியிருந்தால், அப்போதுதான் உயிர் மிகவும் மதிப்புவாய்ந்தது என்பதை நீங்கள் அறிந்திடுவீர்கள். உயிரின் மதிப்பை அறிந்துகொள்வதற்கு ஏன் அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலைக்காக காத்திருக்கிறீர்கள் என்பதுதான் கேள்வி. உயிர் என்பது நீங்கள் அதை எப்படி உணர்கிறீர்கள் என்பதைக் குறித்தது. உயிரின் உங்கள் உணர்தல் மேலோட்டமானதா அல்லது ஆழமானதா? நாம் தாய்மார்களை உயர்வாகப் பார்க்கிறோம், ஏனென்றால் ஏதோ ஒரு வழியில், அவர்கள் ஆழமான உணர்வில் இருந்திருக்கின்றனர் - குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு, தாயானவள் மற்றொரு உயிரை அவளின் ஒரு பாகமாகவே உணர்ந்தாள்.
இது இனப்பெருக்கத்தின் காரணத்தால் நிகழவில்லை, ஆனால் மற்றொரு உயிரை உங்களின் ஒரு பகுதியாக இணைத்துக்கொள்வதற்கு நீங்கள் விருப்பத்துடன் இருந்த காரணத்தால் நிகழ்ந்தது. இதனை ஏன் உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணமும் செய்வதற்கு விரும்பாமல் இருக்கிறீர்கள்? ஏன் எல்லாமே உயிரியலாக இருக்கவேண்டியுள்ளது? உயிரியல் என்பது உங்களது இருப்பின் மிக அடிப்படையான அம்சமாக உள்ளது. வாழ்வின் அடித்தளத்திலேயே தங்கியிருக்க நீங்கள் விரும்பினால், அது உங்கள் தேர்வு. ஆனால் உங்களுக்குள் ஏதோ ஒன்று, தற்போது நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அதனைக்காட்டிலும் அதிகமாக இருப்பதற்கு எப்போதும் விரும்புகிறது.
நீங்கள் யார் அல்லது என்னவாக இருக்கிறீர்கள் என்ற பாகுபாடில்லாமல், இப்போது இருப்பதைவிட அதிகமாக வேண்டும் என்ற பேராவல் ஒன்று எல்லோருக்கும் உள்ளது. அதற்கு நீங்கள் இடமளிக்கவில்லை என்றால், சமூகத்தின் தர நிர்ணயங்களின்படி எல்லாமே நன்றாக நிகழ்ந்துகொண்டிருந்தாலும், ஏன் என்றே தெரியாமல், உங்கள் முகம் வாட்டத்தில் தொங்கிப்போகும். பல தனிமனிதர்கள் அந்த நிலையில்தான் இருக்கின்றனர். உங்கள் சிரிப்பை நீங்களே கடைசியாக செவிமடுத்தது எப்போது? நீங்கள் சிரிப்பதற்கு, யாராவது உங்களுக்கு நகைச்சுவை ஒன்றைக் கூறவோ அல்லது கிச்சுக்கிச்சு மூட்டவோ வேண்டுமா?
நீங்கள் ஒரு குழந்தையாக இருந்தபோது, நீங்கள் உயிரோட்டத்துடன் வெடித்துக்கொண்டு இருந்தீர்கள். உங்கள் வயது அதிகரிக்கையில், உங்களுடைய உடல்ரீதியான, மனதளவிலான சுறுசுறுப்பு உள்ளிட்ட பல விஷயங்களும் குறையக்கூடும். ஆனால் உங்களுடைய உயிரோட்டம் குறையவேண்டிய தேவையில்லை. உயிரோட்டம் விலகிவிடும்போது, உங்களை இறந்தவர் என்று நாம் அழைக்கிறோம். ஒரு ஐந்து வயது குழந்தையைப்போல், நீங்கள் சுறுசுறுப்பாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அதற்கு இணையான உயிரோட்டத்துடன் இருக்கமுடியும்.
உங்களது உயிரோட்டம் குறைவது ஏனென்றால், உங்களது தனித்தன்மையை உறுதிப்படுத்திக்கொண்டு உங்களைச் சுற்றிலும் சுவர்களைக் கட்டிக்கொள்கிறீர்கள். யோகா என்பதன் அர்த்தம் இதுதான்: நீங்கள் ஒரு பிரபஞ்சமயமான உயிராக இருக்கும் வகையில், உங்கள் தனித்தன்மையான இயல்பின் எல்லைகளை விழிப்புணர்வுடன் முற்றிலும் அழித்துவிடுவது. இதுதான் மனிதராக இருப்பதன் அழகு. நீங்கள் இங்கே உட்கார்ந்துகொண்டே, நீங்கள் விரும்பினால் இந்த அண்டம் முழுவதையும் உங்களுக்குள்ளே அடக்கிக்கொள்ள முடியும். உங்களை யாராலும் தடுக்கமுடியாது. ஒட்டுமொத்த உலகத்தையும் உங்களுடையதாக ஆக்கிக்கொள்ள முடியும். ஆனால் இந்த பூமியின் மீது பலரும், அறிமுகமற்ற புதியவர்களாக, அது அவர்களுடையது அல்ல என்பதுபோலவே வாழ்கின்றனர்.
இந்த அண்டம் எங்கே தொடங்குகிறது மற்றும் எங்கே முடிகிறது என்பதை விஞ்ஞானிகளோ அல்லது மத உணர்வுள்ள மக்களோ புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு மிகப் பரந்திருக்கிறது. இந்தப் பரந்த அண்டத்தில், நமது கோள்களின் அமைப்பு ஒரு மிகச்சிறிய புள்ளியாக இருக்கிறது. அதற்குள்ளே இந்த பூமி என்பது மிகமிகச் சிறிய மைக்ரோ புள்ளி. அந்த மைக்ரோ புள்ளிக்குள், நீங்கள் வசிக்கும் நகரம் ஒரு சூப்பர் மைக்ரோ புள்ளி. ஆனால், அதற்கு உள்ளே, நீங்கள் ஒரு பெரிய நபராக நீங்கள் எண்ணிக்கொள்கிறீர்கள். இது ஒரு ஆபத்தான விஷயம் – அப்படியென்றால் உங்கள் வாழ்வின் தொடர்புத்தன்மை குறித்து நீங்கள் விழிப்புணர்வில்லாமல் இருக்கிறீர்கள்.
நான் உங்களிடம் மற்றொரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் பிறப்பதற்கு முன்பு எங்கே இருந்தீர்கள்? நீங்கள் மிக நீண்ட காலமாக இறந்துபோயிருந்தீர்கள். இப்போது மீண்டும், நீங்கள் இறந்த பிறகு, மிக நீண்டதொரு காலத்துக்கு நீங்கள் இறந்துவிடுவீர்கள். நீங்கள் இங்கே உயிருடன் இருப்பது, ஒரு மிகச்சிறிய கால அளவுக்குத்தான். அந்த சிறிய கால அளவில், எத்தனை பிரச்சனைகள் எழுகின்றன? இந்தப் பிரச்சனைகள் எதுவும் இங்கே இல்லை; அவை அனைத்தும் உங்கள் தலையில் உருவாக்கப்படுகின்றன. மனிதர்களின் துன்பங்களே மனித எல்லைகளாக இருப்பதால், அவை மனிதர்களின் மனதிலேயே உற்பத்தியாகின்றன.
ஆற்றல் இழப்பு, அதாவது உங்களால் என்னவாக முடியுமோ அதை நிறைவேற்றாமல் இருப்பது, அதுதான் மிக மோசமான இழப்பு. துரதிருஷ்டவசமாக, இதுதான் ஏறக்குறைய 99.9 சதவிகித மனிதகுலத்தின் உண்மை நிலை. ஏனென்றால் அவர்கள் உயிர் வாழ்ந்திருத்தல் குறித்து ஒரு மிகக் குறுகிய புரிதலையே கொண்டுள்ளனர். இது தொடர்பாக, உலகத்துக்கே ஒரு தாயாக இருப்பது மிக முக்கியமாக உள்ளது. உலகத்துக்கே ஒரு தாயாக இருக்கும் இணைத்துக்கொள்ளுதலின் உணர்வுடன் உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணமும் நீங்கள் வாழ்ந்தால், உங்களது வாழ்க்கை மாற்றமடையும்.