சத்குரு எக்ஸ்குளூசிவ்

உடலைக் கரைத்து மறைந்துவிடும் இரகசியம்: கலாச்சாரக் கட்டுக்கதையா அல்லது உணரக்கூடிய உண்மையா?

யோகக் கலாச்சாரத்துடன் குவாண்டம் இயற்பியல் சந்திக்கும் சுவாரஸ்யமான பகுதிக்குள் செல்வோம். மறைபொருளான இருமைக் கருத்தியலுடன் பாலி விலக்கு கொள்கையை (Pauli Exclusion Principle) பக்கத்தில் நிறுத்தி, ஒரு குவாண்டம் இயற்பியலாளருக்கும், சத்குருவுக்கும் இடையில் நிகழும் வசீகரிக்கும் உரையாடலுக்குள் மூழ்கிக் களியுங்கள். படைப்பின் மையத்துக்குள், ஆர்வத்தைக் கிளறும் ஒரு பயணம் உங்களுக்குக் காத்திருக்கிறது.

குவாண்டம் இயற்பியலும், யோகக் கலாச்சாரமும்: ஒரு அண்டவியல் இணைப்பு

கேள்வி: பாலி விலக்குக் கொள்கை (Pauli Exclusion Principle), குவாண்டம் இயங்கியலின் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையாக இருக்கிறது. அதாவது இணைகள் (pairs) எப்போதும், ஒன்று மேல்முகமான சுழற்சியும், ஒன்று கீழ்முகமான சுழற்சியும் கொண்டதாக இருக்கவேண்டும். இதுபற்றி யோகக் கண்ணோட்டத்தில் இருந்து, உங்கள் கருத்து என்ன?

சத்குரு: பொதுவாக நாம் இதனை, படைப்பின் அடிப்படையான இருமைத்தன்மையாகக் குறிப்பிடுகிறோம். இணைகளின் கூறுகளுள் ஒன்று கடிகாரச்சுற்றில் அதாவது வலஞ்சுழியாகச் சுழல்கிறது, மற்றொன்று எதிர் கடிகாரச்சுற்றில் அதாவது இடஞ்சுழியாகச் சுழல்கிறது. இதனையே நீங்கள் மேல், கீழ் என்று விவரிக்கிறீர்கள். பொருள்தன்மையான யதார்த்தம் என்று நாம் அறிந்துணரும் ஒட்டுமொத்த படைப்பும், இந்த இரண்டுக்கும் இடையில் நிகழ்கிறது. இந்த சுழற்சி நின்றுவிட்டால், பிறகு படைப்பும் இருக்காது.

இது எப்போதும் சிவன் மற்றும் சக்தி என்று குறிக்கப்படுகிறது. மற்றும், இது நமது உடல்களுக்குள், ஈடா மற்றும் பிங்களா என்று அறியப்படுகிறது. நமக்குள் எதிர் கடிகாரச்சுற்றில் சுழல்வது ஈடா, மற்றும் கடிகாரச்சுற்றில் சுழல்வது பிங்களா என்பது ஒரு தெளிவான உணர்தலாக உள்ளது. இந்த செயல்முறையை தலைகீழாக மாற்றக்கூடிய யோக முறைகள் உள்ளன. ஒன்றின் சுழற்சியை நீங்கள் மாற்றினால், அடுத்தது இயல்பாக அதனைப் பின்பற்றுகிறது.

சிவன் பாதி ஆணாகவும், மறுபாதி பெண்ணாகவும் சித்தரிக்கப்படும் அர்த்தநாரி குறியீட்டுக்குப் பின்னால் படைப்பின் இந்த இருமைத்தன்மை இருக்கிறது. அவர் உடல்ரீதியாக பாதி பெண்ணாகவும், பாதி ஆணாகவும் ஆனதாக அது குறிக்கவில்லை. மாறாக, நமக்குள் ஒரு பகுதி கடிகாரச்சுற்றிலும், மற்றொன்று எதிர் கடிகாரச்சுற்றிலும் சுழலும் படைப்பின் உள்நிலைக் கட்டமைப்பைக் குறிக்கிறது.

இடது பக்கம், ஈடா என்று அறியப்படுவது, பெண்தன்மையான அம்சத்தைக் குறிக்கிறது. அவற்றின் குணாதிசயங்களின்படி, எதிர்கடிகாரச்சுற்று பெண்தன்மை என்றும், வலதுபக்கத்தின் கடிகாரச்சுற்று திசையானது, அதாவது பிங்களா ஆண்தன்மை என்றும் கருதப்படுகிறது. இது படைப்பின் ஒவ்வொரு அம்சத்துக்கும், பூமிக்கிரகம் உள்ளிட்ட அனைத்துக்கும் உண்மையானது.  நாம் அதை எப்படிப் புரிந்துணர்கிறோம் என்றால், பொருள்தன்மையான படைப்பில் நாம் இந்த பூமியின் ஒரு சிறிய துணுக்காகத்தான் இருக்கிறோம். பூமியின் இயல்பும், மற்ற அனைத்து படைப்பும், தானாகவே உடலில் வெளிப்படுத்திக்கொண்டு உள்ளது ஏனென்றால், அது அதே செயல்முறையாக உள்ளது.

பூமியின் மீது, வடகோளத்தில் ஒரு குழாயை நீங்கள் திறந்தால், அதிலிருந்து கொட்டும் நீர் கடிகாரச்சுற்றில் சுழல்கிறது. அதையே நீங்கள் தென்கோளத்தில் செய்தால், அது எதிர் கடிகாரச்சுற்றில் சுழல்கிறது. இந்த இரண்டு விசைகளின் முரண்பாடுதான் எல்லாவற்றையும் ஒன்றாகப் பிடித்து வைத்துள்ளது. இந்த முரண்பாடு இல்லையென்றால், பூமியின் சுழற்சியே அதன் அழிவுக்கு விளைவாகக்கூடும். ஆகவே, ஒரு யோகக் கண்ணோட்டத்தில் இருந்து, வழக்கமான புரிதலில் புவியீர்ப்பு விசை இல்லை. இரண்டு விசைகளின் முரண்பாடுதான் அனைத்தையும் இணைத்து, அதை அப்படியே வைத்திருக்கிறது. நமது உடலுக்குள் இந்த விசைகளின் முரண்பாடுதான் உடலை இணைத்துப் பிடித்திருக்கிறது.

இந்த உடலை நீங்கள் களைய விரும்பினால், நீங்கள் உடலின் ஒரு பாகத்தை அதே இடத்தில் நிறுத்திக்கொண்டு, மற்றொரு பாகத்தின் சுழற்சியை மாற்றிவிட வேண்டும். இது யூகம் போன்று தோன்றலாம், ஆனால் யோகிகள் ஒரு அறைக்குள் சென்றுவிட, அவர்கள் வெளியிலிருந்து பூட்டப்பட்ட பிறகு, அவர்களது ஆடைகள் மட்டும் மிஞ்சியிருக்க, உடல் மறைந்துவிட்ட நிதர்சனமான சூழல்கள் இருந்துள்ளன. இது ஏனென்றால், நீங்கள் உடலின் ஒரு பாகத்தை அப்படியே வைத்துக்கொண்டு, மற்றதன் சுழற்சியை மாற்றினால், உடல் தானாகவே பொருட்கூறுகளைப் பிரித்துவிட்டு (dematerialize), இருத்தலில் இருந்து இல்லாமைக்குச் சென்றுவிடும்.

இதை நான் முன்பே கூறியுள்ளேன்: கல்லறைக்கு என்னைச் சுமப்பதற்கு நான்கு பேரை ஒருங்கிணைக்கும் தொந்தரவு ஒருவருக்கும் இருக்காது; நானாகவே அதற்கு நடந்து சென்றுவிடுவேன், மற்றும் நான் உடலைக்கூட இங்கு விட்டுச்செல்ல மாட்டேன். நீங்கள் ஒரு பாகத்தை அப்படியே வைத்துக்கொண்டு, மற்றதன் சுழற்சியை மாற்றினால், உடல் தானாகவே பொருட்கூறுகளைப் பிரித்துவிட்டு, இருத்தலில் இருந்து இல்லாமைக்குச் சென்றுவிடும்.

இருமையியல்பைக் கண்டறிதல்: பிரபஞ்சம் மற்றும் மறைஞானத்தின் சாராம்சம்

கேள்வி: இயற்பியலின் ஒரு பிரிவாகிய குவாண்டம் இயங்கியலில், ஆய்வின் பல பகுதிகளில் தீர்மானவாத அறிவியல் (deterministic science) இல்லை, அதாவது அவை அறுதியானவற்றைக் காட்டிலும் சாத்தியங்களைக் கையாள்கின்றன. ஒரு புள்ளி மற்றும் ஒரு எதிர்ப்புள்ளி என்ற இந்த இரண்டுடன் தொடர்புடைய இருமையியல்பு என்பது குவாண்டம் இயங்கியலின் அத்தியாவசியமான ஒரு அம்சமாக உள்ளது. ஒரு முழுமையான அமைப்பின் ஒரு பாகத்தில் நிகழும் இடையூறு, மற்றொரு பாகத்தைப் பாதிக்கிறது. இருமையியல்பு மறைந்தால், பிரபஞ்சம் அதன் கட்டமைப்பை இழக்கக்கூடும் என்றுகூட சிலர் விவாதிக்கின்றனர். ஏனென்றால் பிரபஞ்சத்தின் கட்டமைப்பு, இருமையியல்பைச் சார்ந்திருப்பதாக அவர்கள் சிந்திக்கின்றனர். அது குறித்து உங்களால் கூறமுடியுமா?

சத்குரு: யோகக் கலாச்சாரத்தில், இவையனைத்தையும் ஆயிரக்கணக்கான வருடங்களாக நாம் அறிந்து வந்துள்ளோம். நீங்கள் சுற்றிலும் உள்ள படைப்பைப் பார்த்தால், எஞ்சியிருக்கும் உங்கள் வாழ்க்கை முழுக்க ஆராய்ந்தாலும் ஒரு மரத்தில் ஒரு இலையைக்கூட முழுவதுமாகப் புரிந்துகொள்ளமாட்டீர்கள். தற்போது, நீங்கள் அதனை அணுகும் வழியில், அதை அறிந்துகொள்வதற்கு வழியே இல்லை. படைப்பின் இயல்பு உங்களுக்குத் தெளிவாவதற்கு, நீங்கள் இருத்தலின்மை எய்துவதுதான் ஒரே வழி.

முக்கியமாக, பாகம் மற்றும் முழுமை என்ற கருத்தாக்கம், மனித மனதின் ஒரு வடித்தெடுத்த கலவை. இந்த வேறுபடுதல், பிழைப்புக்குத் தேவையானது. இந்த இருமைத்தன்மை இல்லாமல், படைப்பு சாத்தியமாக இருக்காது. இந்த விவாதம் நடைபெறுவதற்காக, நீங்கள் மற்றும் நான், இருவரும் தேவைப்படுகிறோம். நாம் இங்கே ஒரே தனிநபராக அமர்ந்திருந்தால், அங்கே உரையாடல் இருக்காது. அது ஒரு வாய்மொழி உரையாடலாக இருந்தாலும் அல்லது ஒட்டுமொத்த அண்டவியல் செயல்பாடாக இருந்தாலும், இரண்டு தன்மைகளின் இருப்பு தேவையாக உள்ளது.

மறைஞானத்தின் ஒட்டுமொத்த அம்சமும் தனக்குள்ளேயே ஆழமாகச் செல்வதற்கானது, ஏனென்றால் எல்லா படைப்பும் அங்கிருந்தே ஊடுறுவிப் பரவுகிறது. தற்போது நீங்கள் பயன்படுத்திவரும் வழிமுறைகளையும், நெறிமுறைகளையும் கடந்து, அறிதலுக்கான ஒரு வித்தியாசமான வழி இருப்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், நீங்கள் தேங்கிப்போவதற்கு வாய்ப்பிருக்கிறது.

இந்த இருமைத்தன்மை இல்லாமல், படைப்பு சாத்தியமாக இருக்காது.

நாம் கடந்தகால, மற்றும் தற்கால மறைஞானிகளை எடுத்துக்கொண்டால், அவர்களது அணுகுமுறைகள் வேறுபடலாம் என்றாலும், அவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். ஒரு குறிப்பிட்ட மறைஞானி அவருக்கே உரிய தனித்துவமான அணுகுமுறை மற்றும் புரிதலைக் கொண்டிருக்கலாம், ஆனால் அவர் மற்றவரது வழிமுறையை புறந்தள்ளமாட்டார். இது ஏனென்றால், படைப்பில் இருக்கும் ஒவ்வொரு அணுவும் சிவனுக்கான ஒரு வாசல்கதவு என்று அவர்கள் நம்புகின்றனர். எந்தக் கதவைத் திறப்பது என்பது முற்றிலும் உங்களது தேர்ந்தெடுத்தலைச் சார்ந்தது.

நமது உணர்வில், அண்டவெளியானது விரிவடையக்கூடிய அல்லது சுருங்கக்கூடிய ஒன்றாகவே எப்போதும் பார்க்கப்படுகிறது. நேரமும் இடமும் நமது மனதின் உருவாக்கங்கள். அண்டமானது முடிவில்லா பரப்புடையது என்று நாம் கூறுகிறோம்; அதே நேரத்தில், அதை ஒரு கடுகுக்குள் அடைத்துவிட முடியும், ஏனென்றால் காலமும், அண்டவெளியும் நீட்டிக்கக்கூடியது, மற்றும் அவற்றை சுருட்டி எடுத்து, ஒரு சின்னஞ்சிறு விதைக்குள் அடக்கிவிடவும் முடியும். இவற்றை அறிவியலும் கண்டறிந்துள்ளதாக நான் எண்ணுகிறேன்.

படைப்பின் ஒவ்வொரு சிறு துணுக்கும் படைப்பாளிக்கான வாசல்கதவு. ஆனால் உங்களுக்குத் திறப்பதற்கான மிக எளிதான வாசல்கதவு, நீங்களேதான். ஏனென்றால் அதனிடம் உங்களுக்கு மகத்தான அணுகல் உள்ளது. அதை எப்படி அணுகுவது மற்றும் உங்கள் இருப்பின் எந்தத் திசையிலிருந்து அணுகுவது என்பதெல்லாம் உங்களைப் பொறுத்தது. ஒரு 500 வருடங்களுக்குப் பிறகு, யாராவது என் பெயரில் ஒரு மதத்தை உருவாக்கினால் மட்டும், அப்போது அது, “இது மட்டும் தான்” என்பது போலாகிறது. “இது மட்டும் தான்” என்பது அறியாதவர்களின் வாக்குமூலம்; எந்த மறைஞானியும் அதை எப்போதும் கூறியதில்லை.

யோகாவின் அடிப்படையான இயல்பும், மறைஞானமும் இதுதான்: நீங்கள் முழுமையான இருத்தலின்மை அடைந்தால் மட்டுமே, நீங்கள் படைப்பை அறிவீர்கள்.