வாழ்வின் மர்மங்கள்

காவேரி ஒரு பெண்தெய்வமா?
கிழக்கத்திய கலாச்சாரங்களில் தெய்வீகம் குறித்த கண்ணோட்டம்

உயிரை ஊட்டி வளர்க்கும் இயற்கையின் மூலக்கூறுகளை கிழக்கத்திய கலாச்சாரங்கள் எப்படி வழிபடுகின்றன என்பது குறித்த சத்குருவின் அழுத்தமான பிரதிபலிப்புகளையும், காவிரி நதியுடன் அவரது தனிப்பட்ட பிணைப்பு பற்றியும் விவரிக்கும் சத்குரு, மரப்பயிர் விவசாயத்தின் மூலம் சூழலியல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் காவிரிப்படுகைப் பகுதிக்கு புத்துயிரூட்டும் நோக்கமுடைய முன்னோடி இயக்கமான காவேரி கூக்குரல் இயக்கம் குறித்தும் விவரிக்கிறார்.

கேள்வி: காவேரிக் கரையோர டெல்டா பகுதிகளுக்கு நான் பயணித்தபோது, நதியைச் சுற்றிலும் பல கோவில்களும் வழிபாட்டுத் தலங்களும் இருப்பதோடு, பல்வேறு சடங்குகளும் நடைபெற்று வருவதைப் பார்த்தேன். காவேரியை நீங்கள் ஒரு தெய்வமாகப் பார்க்கிறீர்களா?அந்தக் கண்ணோட்டம், காவேரி கூக்குரல் இயக்கத்திற்கான உங்களது பணிகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

தெய்வீகம் இயற்கையாகப் பாயுமிடம்

நீங்கள் காவிரிக் கரையில் வசிப்பவராக இருந்து, ஆறு மெல்லிய கோடாக ஓடும் ஒரு வறட்சியான வருடத்தை அனுபவித்தால், நீங்கள் உணவுக்கும், நீருக்கும் ஒரு பற்றாக்குறையை அனுபவிக்க நேரிடலாம். இந்த சூழ்நிலையின் தாக்கத்தால் உங்கள் குழந்தைகளை இழக்குமாறு நேர்வதை கற்பனை செய்துபாருங்கள். பின்வரும் வருடத்தில், மீண்டும் காவிரி கரைபுரண்டு ஓடும்போது, அவளை நீங்கள் வணங்குவீர்களா, மாட்டீர்களா?

தெய்வம் மற்றும் பெண்தெய்வம் என்ற இந்தக் கருத்தியலைப் புரிந்துகொள்வதற்கு, முற்றிலும் வித்தியாசமான ஒரு கண்ணோட்டத்தில் இருந்து அதைப் பார்க்கவேண்டும். கிழக்கத்திய நாகரிகங்களில், எங்கோ ஒரு தெய்வம் அல்லது பெண்தெய்வம் இருக்கிறது என்பது கிடையாது. மாறாக, வாழ்வை நிலைக்கச்செய்யும் எந்த விஷயமும் வணங்கப்படுகிறது. உதாரணத்துக்கு, உணவு, அன்னலக்ஷ்மி என்று குறிப்பிடப்படுகிறது; மரங்கள் வனஸ்ரீ என்று அழைக்கப்படுகிறது, மற்றும் பசுக்கள் காமதேனு என்று அடையாளம் காணப்படுகின்றன, ஏனென்றால் அவை அனைத்தும் நமது உயிரைப் பேணிக் காக்கின்றன. நீர் ஒரு கடவுளாகக் கருதப்படுகிறது, மற்றும் காற்று, மற்றொரு கடவுளாக இருக்கிறது.

இது சிலருக்கு அற்பமாகத் தோன்றக்கூடும், அதனால் அவர்கள், “ஒரே ஒரு கடவுள்தான் இருக்கிறார். இத்தனை கடவுள்களை நீங்கள் எப்படி உருவாக்கலாம்?” என்று வாதாடலாம். அப்போது, கடவுள் ஒருவரே என்ற கருத்தியல் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்பதை நினைவில்கொள்வது முக்கியமாக உள்ளது. மாறாக, நீர், காற்று மற்றும் மண் ஆகியவை மனிதர்களால் உருவாக்கப்படவில்லை, ஆனால் நமது வாழ்வில் அவற்றைச் சார்ந்திருக்கிறது. கடந்த கால மக்கள், அவர்களது பிழைப்பு நதியைச் சார்ந்திருந்தது என்ற விழிப்புணர்வில் இருந்தனர், ஆகவே அவர்கள் நதியை பெண்தெய்வமாக வணங்கினர். இது ஒரு அழகான கண்ணோட்டம்.

உணர்ச்சிபூர்வமான தொடர்பின் ஆற்றல்

இன்று, மக்கள்தொகை அழுத்தங்கள், அரசாங்கக் கொள்கைகள், நவீன விவசாயம், மற்றும் வரலாற்றுரீதியாக சிரமங்கள் போன்றவை நாட்டில் பல்வேறு நிலைகளில் ஒரு வீழ்ச்சிக்கு பங்களித்துள்ளன. நான் காவிரி நதியைச் சுற்றிலும் என் குழந்தைப்பருவத்தைக் கழித்தேன், ஆனால் அவளை நான் ஒரு பெண்தெய்வமாகப் பார்க்கவில்லை. ஏறக்குறைய நான்கு வருடங்களுக்கு, தினமும் நான் காவிரி ஆற்றில் நீந்தினேன். ஒருமுறை, நான் தலைக்காவிரியில் இருந்து, மைசூருக்கு நெருக்கமான தொலைவு வரை படகுச்சவாரிகூட செய்தேன். என் பயணம் ஒரு பெரிய அணையினால் தவிர்க்க இயலாத நிலையில் நிறுத்தப்படும்.

மனிதர்கள் எதைப்பற்றி எல்லாம் உணர்ச்சி கொள்கிறார்களோ அதைப் பாதுகாக்கின்றனர்.

காவிரியுடனான எனது ஈடுபாடு மகத்தானது. இந்தியாவின் ஆயிரக்கணக்கான பெண்கள் காவேரி என்ற பெயர் தாங்கி நிற்கின்றனர். காவேரி கூக்குரல் இயக்கத்தை நான் தொடக்கிவைத்தபோது, நான் சென்ற ஒவ்வொரு கிராமத்திலும் அனைவரிடமும் இப்படி அறிவுறுத்தினேன், "இந்த வருடம் இந்த கிராமத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தால், அவள் காவேரி என்று பெயரிடப்பட வேண்டும்.” இது ஏனென்றால், ஏதோ ஒரு விஷயத்தைக் காப்பாற்றுவதற்கு, உணர்ச்சி தேவைப்படுகிறது. மனிதர்கள் எதைப்பற்றி எல்லாம் உணர்ச்சி கொள்கிறார்களோ அதைப் பாதுகாக்கின்றனர்; அவர்கள் பாராமுகமாக இருப்பவற்றை ஒதுக்கிவிடுகின்றனர். உதாரணத்துக்கு, உணர்ச்சிரீதியான பந்தத்தின் காரணமாக, ஒரு நபர் அவரது துணையை அல்லது குழந்தையைப் பாதுகாக்கிறார்.

உணர்வுரீதியான தொடர்பு இல்லாமல், நீர் என்பது ஒரு ஆதாரவளமாக மட்டும் புரிந்துகொள்ளப்பட்டால், அதைப் பயன்படுத்திவிட்டு, பிறகு ஒதுக்கிவிட முடியும் – நவீன உலகத்தில் இது ஒரு பரவலான மனோபாவமாக உள்ளது. மண்ணும், நீரும் உயிர் உருவாக்கும் விஷயங்கள். நமது முன்னோர்கள் இதனை உணர்ந்திருந்தனர். தென்னாட்டின் மகாமுனிவர், அகஸ்தியர், மிகச்சரியாக நதியின் மையப்புள்ளியில் அவரது சக்திகளை விட்டுச் சென்றார்.

ஈரோடு அருகே காவேரி ஆற்றில் அமைந்துள்ள நட்டாற்றீஸ்வரர் கோவில்

காவிரியின் வளமிக்க கடந்தகாலத்தினை திரும்பிப் பார்ப்போம்

ஏறக்குறைய 6000 ஆண்டுகளுக்கு முன்பு, நதியின் மையப்புள்ளியில் நட்டாற்றீஸ்வரர் என்ற ஒரு கோவில் கட்டப்பட்டது. இந்த நதிகளுக்கு எதிர்காலத்தில் அச்சுறுத்தல்கள் இருக்கும் என்ற தொலைநோக்குடன் இது செய்யப்பட்டது. தென்னிந்தியா ஒரு அடர்ந்த மழை காடாக இருந்த அந்தக் காலத்திலேயே அதை அவர்கள் எதிர்பார்த்தனர். நதியின் ஒவ்வொரு நீர் மட்டத்தையும் பொறுத்து பல்வேறு சடங்குகள் நிறுவப்பட்டன. நதியைப் பற்றிய ஒருவிதமான விழிப்புணர்வை உருவாக்குவது அதன் நோக்கமாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் அது காணாமல்போய்விட்டது.

இப்போது, கோடையில் கடற்கரையில் இருந்து சுமார் 175 கிமீ நிலப்பகுதியில் காவிரி வற்றிவிடுகிறது; இந்த நிலைமை ஏறக்குறைய நான்கிலிருந்து நான்கரை மாதங்களுக்கு நீடிக்கிறது. காவிரிப்படுகையில் இருக்கும் விவசாயிகள், அவர்களது வளமான நிலத்தைப்பற்றி, “பொன்” என்று குறிப்பிடுமளவுக்கு ஒரு காலத்தில் பெருமிதம் கொண்டிருந்தவர்கள், இப்போது ஒரு வருடத்திற்கு ஒரே ஒரு பயிர் வளர்க்குமளவுக்குக் குறைத்துவிட்டனர். வருடந்தோறும் நான்கு பயிர்கள் வளர்க்கும் வழக்கத்திலிருந்து இது குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாக உள்ளது. அதன் விளைவாக, இந்த விவசாயிகள், ஒரு காலத்தில் வளமிக்கவர்களாக இருந்தவர்கள், இப்போது கடுமையான சவால்களை எதிர்கொண்டிருக்கின்றனர்.

உங்களிடமுள்ள மிக உயர்ந்த விஷயம் உயிர், கடவுள் அல்ல.

நான்கரை மாதங்களுக்கு, டெல்டாவும் இல்லை, நதியும் இல்லை. ஆனால் டெல்டா எங்கே போனது? மணல் கொள்ளையர்கள் மணலை அள்ளுகின்றனர். அதனுடனேயே, ஒட்டுமொத்த நாகரிகத்தின் வளர்ச்சிக்குப் பங்காற்றிய வண்டல் மண்ணையும் அவர்கள் அகற்றிவிடுகின்றனர். பன்னிரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், காவிரி கழிமுகப் புள்ளியில், கப்பல்கள் வந்து நிற்கும் ஒரு துறைமுகம் ஏற்கனவே அங்கு இருந்தது. அந்த நிலப்பகுதி மக்களுடைய வாழ்வின் எல்லா வளமும் காவிரி கொண்டுவந்து சேர்த்ததன் விளைவாகவே இருந்தது. ஆகையினால், வளமும், நல்வாழ்வும் கொண்டுவந்த காவிரி ஒரு பெண்தெய்வமாகப் பார்க்கப்படுகிறாள்.

அதே முறையில்தான் நான் உணர்கிறேனா? நான் அந்த உணர்வில் இல்லை. விஷயங்களை எப்படி மதிப்பீடு செய்வது என்பதை நான் அறிந்துள்ளேன். அவற்றை ஒரு தெய்வம் அல்லது பெண் தெய்வம் என்ற நிலைப்பாட்டுக்கு உயர்த்தும் தேவை எனக்கு இல்லை. உங்களிடமுள்ள மிக உயர்ந்த விஷயம் உயிர், கடவுள் அல்ல என்பதை நான் அறிந்துள்ளேன். என் உயிரை உருவாக்கும் ஒவ்வொன்றையும் நான் புனிதமானதாக மதிக்கிறேன். அதனை நீங்கள் கடவுள் அல்லது பெண் கடவுளாக உருவகப்படுத்த விரும்பினால், அது எனக்கு முற்றிலும் சம்மதம், ஆனால் எனது மனம் அப்படிச் செயல்படவில்லை. இருப்பினும், நதியின்பொருட்டு மக்கள் அவ்வளவு வலிமையான உணர்ச்சியை அவர்களுக்குள் வளர்த்திருப்பதை நான் பாராட்டுகிறேன். இது ஏனென்றால் இந்த உணர்ச்சிகள் இல்லையென்றால், அவர்களது தினசரி தேவைகளைச் சந்திப்பதற்கு அவர்கள் நதியை அழித்துவிடக்கூடும். துரதிருஷ்டவசமாக, ஏற்கனவே பெருமளவுக்கு இந்த அழிவு நிகழ்ந்துள்ளது.

காவேரி கூக்குரல்: ஒரு நிலையான எதிர்காலத்தை உருவாக்குவது

இந்த வருடத்தில், காவேரி கூக்குரல் இயக்கமானது, தனியார் விவசாய நிலங்களில் 2.5 கோடி மரங்களை நடும் குறிக்கோளுடன் உள்ளது. இது காடுவளர்க்கும் முன்னெடுப்பு அல்ல, இது மரப்பயிர் விவசாயம். காவேரி கூக்குரல் வெற்றி பெற்றதனால், மத்திய அரசாங்கம் 13 நதிப்படுகைகளுக்கான ஒரு விரவான திட்ட அறிக்கையை உருவாக்கியுள்ளது. காவேரி நதிப்படுகை சுமார் 83,000 சதுர கிலோமீட்டர் மற்றும் நாம் இணைந்து பணியாற்றும் 5.2 கோடி விவசாயிகளை உள்ளடக்கியுள்ளது. இந்த இயக்கமானது ஒரு மாநிலத்தில் நன்றாகவும், மற்றொன்றில் சற்று மெதுவாகவும் முன்னேறுகிறது; மரங்களின் வளர்ச்சி அடிப்படையில் விவசாயிகளுக்கான மானியங்களுடன், அதற்கு உறுதுணையாக பல சட்டங்களும் நிறுவப்பட்டுள்ளன.

அது மிக அற்புதமாக செயல்பட்டுவருகிறது, ஆனால் வளர்ச்சி வேகத்தில் எனக்கு அது திருப்தியளிப்பதாக இல்லை. எனது இலக்கு 242 கோடி மரங்களை நடுவதுதானே தவிர, 2.5 கோடி மரங்களை மட்டும் நடுவதல்ல. நமது வாழ்நாளிலேயே கணிசமான அளவுக்கு மாற்றம் ஏற்படுவதைப் பார்க்கவேண்டும் என்றால், அடுத்த ஆறிலிருந்து எட்டு வருடங்களுக்குள் குறிப்பிட்ட இலக்கு எட்டப்படவேண்டும். நம்மால் இதனை சாதிக்கமுடிந்தால், பிறகு 15ல் இருந்து 20 வருடங்களுக்குள், நதிகளின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை நாம் காண்போம். துரதிருஷ்டவசமாக, ஒரு நதி வற்றிப்போவதனால் நமது வாழ்க்கைக்கும், பூமியின் மற்ற ஒவ்வொரு உயிருக்கும் ஏற்படும் தாக்கங்களை மக்கள் இன்னமும் புரிந்துகொள்ளாத காரணத்தால், மரம் நடுவதில் முன்னேற்றம் மெதுவாக உள்ளது.

பிரச்சனைகள் வரும் முன்பே உணர்ந்து தடுப்பதுதான் மனித வழி, வந்தபிறகு அவற்றிலிருந்து மீள்வது அல்ல.

நமது திட்டத்தின் அளவீட்டினை ஒரு மாதிரி எடுத்துக்காட்டாக அறிவித்து நாம் காட்சிப்படுத்தியபோது, இந்த முயற்சியில் நமது கூட்டாளியாகிய ஐக்கிய நாடுகளின் பாலைவனமாதலைத் தடுக்கும் அமைப்பு, “இது ஒரு மாதிரி எடுத்துக்காட்டு அல்ல, பூமியின் மீது இந்தக் காலகட்டத்துக்கான மிகப்பெரிய திட்டம் இது”, என்று குறிப்பிட்டனர். அது மிகப் பெரியது என்று அவர்கள் எண்ணுகின்றனர், ஆனால் அது போதாது என்று நான் எண்ணுகிறேன். என் சொந்த திருப்திக்காக நான் எதையும் செய்வதில்லை. நான் என் கண்களை மூடிக்கொண்டால், இந்த உலகத்துடன் எனக்கு எந்தத் தொடர்புமில்லை. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அது ஒரு தீர்வாக இல்லையென்றால், அதில் ஈடுபாடு செலுத்தும் ஆர்வம்கூட எனக்கு ஏற்படுவதில்லை.

ஒரு தீர்வை நாம் கொண்டுவர முடியுமா? ஒரு தீர்வு காணப்படலாம்; சூழ்நிலைகள் முன்னேற்றமடையலாம். முன்னேற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது, ஆனால் மிக மெதுவான வேகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதன் பொருள் என்னவென்றால், நாம் ஒரு மாற்றத்தைக் காண்பதற்கு முன்பு, ஒரு தலைமுறை குறிப்பிடத்தக்க துன்பத்தை தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கும். இது ஒரு விவேகமான அணுகுமுறை என்று நான் எண்ணவில்லை. பிரச்சனைகள் வரும் முன்பே உணர்ந்து தடுப்பதுதான் மனித வழி, வந்தபிறகு அவற்றிலிருந்து மீள்வது அல்ல.. துரதிருஷ்டவசமாக, நமது தற்போதைய வேகத்துக்கு முன்னெச்சரிக்கையைவிட அதிகமாக மீட்டெடுத்தல்தான் தேவைப்படுகிறது. மீட்டெடுக்கும் வேகத்தை அதிகரிப்பதற்கான இலக்குடன் நாம் செயல்படுகிறோம், அதற்கு எல்லாத் தரப்புகளில் இருந்தும் ஆதரவு தேவை.

போற்றி வாழ்தல்: ஒரு கலாச்சார நுண்ணறிவு

இந்த நாட்டின் சரித்திரத்தில், ஒரு முனிவர் அறிவுறுத்தியபோது, துரிதமான செயலில் ஈடுபட்டு, அரசர் அவரது திறனுக்கேற்றவாறு அதனைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தினார். நான் முடியாட்சிக்குத் திரும்புவதற்கு ஆலோசனை கூறவில்லை, ஆனால் அதற்கு பதில், நமது மக்களாட்சியில் சிறிது விவேகத்தைக் கொண்டுவருமாறு கூறுகிறேன். உணர்வுபூர்வமான ஈடுபாடு இல்லாமல் எதையும் நீண்டகால அளவில் பாதுகாக்க முடியாது என்பதை அப்போதைய முனிவர்கள் புரிந்திருந்த காரணத்தால், பல தென்னிந்தியக் கோவில்கள் கட்டப்பட்டன. முடிவாக, உணர்வுபூர்வமாக வலிமையான தொடர்பு கொண்டிருக்கும் அந்த விஷயங்களை மட்டும்தான் நீங்கள் பராமரிப்பீர்கள்.

முக்கியமாக, கடவுள் என்ற கருத்து மக்களின் மனங்களில் இடம்பிடித்தது ஏனென்றால், படைப்பின் மூலத்துக்கு அவர்களிடம் எந்த விளக்கமும் இல்லை.

உணர்வுபூர்வமான தொடர்பு இல்லாதபோது, ஒரு விஷயத்தை இன்று நீங்கள் கவனித்துக்கொள்ளக் கூடும், ஆனால் நாளை அதை நீங்கள் தூக்கி எறிந்துவிடலாம். நீங்கள் ஆழமாக உணர்வுபூர்வமான தொடர்பு கொண்டிருக்கும் விஷயங்கள் மட்டும்தான் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் தங்கியிருக்கிறது. ஆகவே அதைக்குறித்த மக்களின் உணர்ச்சிகளை வலிமையாக வைத்திருப்பதில் அவர்கள் முதலீடு செய்தனர். ஆனால் இப்போது, இந்த உணர்ச்சிகளை நாம் பயன்படுத்துகிறோமா? இல்லை, நாம் பயன்படுத்துவதில்லை. “இது உங்கள் பெண்தெய்வம்”, என்று நான் கூறவில்லை. நான் கேட்பதெல்லாம், “மூன்று நாட்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லாவிட்டால், தண்ணீர் உங்களுக்குக் கடவுளாகிவிடுமா?” என்பதுதான்.

முக்கியமாக, கடவுள் என்ற கருத்து மக்களின் மனங்களில் இடம்பிடித்தது ஏனென்றால், படைப்பின் மூலத்துக்கும், நமது உயிரை எது உருவாக்குகிறது என்பதற்கும் அவர்களிடம் எந்த விளக்கமும் இல்லை. கிழக்குக் கலாச்சாரங்களில், “கடவுள்” என்ற ஒற்றைக் கருத்து இல்லை. ஒரு குறிப்பிட்ட அளவுக்கான செயல்பாட்டை விஞ்சியிருக்கும் எந்த ஒரு விஷயமும் இறைத்தன்மை என்று கருதப்படுகிறது. உதாரணத்துக்கு, மக்கள் சச்சின் டெண்டுல்கரை “கிரிக்கெட்டின் கடவுள்” என்றழைக்கின்றனர், ஏனென்றால் வழக்கமான மனித வரையறைகள் என்று கருதப்படுவதைத் தாண்டி அவர் விஞ்சி இருக்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், நாம் மேன்மையானதை வணங்குகிறோம்.

நமது தினசரி வாழ்க்கைக்கு முக்கியத்துவமான, நமது மண், அல்லது நாம் பயன்படுத்தும் கருவிகள் போன்ற எல்லாப் பொருட்களையும்கூட நாம் வழிபடுகிறோம். ஒரு விவசாயி அவரது கலப்பைக்கு அல்லது ட்ராக்டருக்கு முதலில் தலைவணங்காமல் ஒருபோதும் அதனைப் பயன்படுத்தமாட்டார். அவரது வாழ்வாதாரத்துக்கு அது அத்தியாவசியமானது என்பதை அவர் புரிந்திருக்கிறார். அதே மரியாதை பண்ணை விலங்குகளுக்கும் வழங்கப்படுகிறது. அவரது வாழ்க்கைக்கு பங்களிப்பு வழங்கும் எதையும் அவர் புனிதமானதாகப் பார்ப்பது நல்லது.

இல்லையென்றால், நமது உயிரை உருவாக்கும் எல்லா விஷயங்களுக்கும் இன்றைக்கு மரியாதையும், மதிப்பும் குறைந்திருப்பதுதான் நிகழ்கிறது. அது நமது மண்ணாக இருந்தாலும், நதிகள், மலைகள், மரங்கள், அல்லது நம்மைச் சுற்றியிருக்கும் மக்களாக இருந்தாலும், மதிப்பளிக்காமல் இருப்பது என்பது ஒரு குற்றமே.