
இந்துவாக இருப்பது என்றால் என்ன அர்த்தம், காலங்காலமாக இந்த நாகரீகத்தின் சாராம்சம் எப்படித் தனித்துவத்துடன் பாதுகாக்கப்பட்டது என்பதை சத்குரு தெளிவுபடுத்துகிறார். மிக ஆழமான பாரம்பரிய இசை, கணிதம், மறைஞானம், மற்றும் ஒரு வளமான கலாச்சாரத் திரைக்களஞ்சியம் ஆகிய அனைத்தும் இமயமலை மற்றும் இந்தியப் பெருங்கடலுக்கு இடைப்பட்ட நிலப்பகுதியிலிருந்து பிறந்தவை. இந்தப் பண்பாட்டு நாகரீகத்தின் வசீகரத்துக்குள் மூழ்குவோம்.
கேள்வியாளர்: நமஸ்காரம், சத்குரு. எனது கேள்வி, உண்மையில் இந்துத்துவம் என்பது என்ன?
சத்குரு: இந்து, ஒரு தத்துவம் அல்ல. இந்து என்பது ஒரு நிலப்பகுதி, மற்றும் காலப்போக்கில் அது ஒரு நாகரீகமாக உருவெடுத்தது. அரசியல் சூழல்கள் மற்றும் அதிகார மோதல்களின் காரணத்தால், மக்கள் அதைத் திரித்தும், மாற்றிவிடவும் கூடும், ஆனால் முக்கியமாக, இந்து என்பது நிலப்பகுதியில் வேர்கொண்டிருப்பது. இமாலயத்துக்கும், இந்து மகா சமுத்திரத்துக்கும் இடைப்பட்ட நிலப்பகுதி இந்து என்று கருதப்படுகிறது. இங்கு வாழ்ந்த மக்கள் இயல்பாகவே இந்துக்கள் என்று அழைக்கப்படுவதுடன், நிலப்பகுதியானது இந்துஸ்தானம், இந்துக்களின் நிலம் என்றும் குறிப்பிடப்படுகிறது.
இந்த நாகரீகம் ஒரு தனித்த நம்பிக்கை, போதனை, அல்லது புத்தகத்தின் வாயிலாக வெளிப்பட்டதல்ல. அங்கே பல்வேறு தரப்பட்ட பூகோள அமைப்பு, இனத்தன்மை, மொழிகள், உணவு, மற்றும் பண்பாடு இருக்கிறது. இந்த நாகரீகமானது, பயமற்ற, குற்ற உணர்வற்ற, மற்றும் பேராசை இல்லாத மனிதர்களின் விளைவாக உள்ளது. தண்டனையின் பயம், குற்றவுணர்ச்சி, மோட்சவெகுமதிகளின் தூண்டில் இவற்றிலிருந்து விடுபடும்போது, இயல்பாகவே, மனித புத்திசாலித்தனம் நமது உச்சநிலை இயல்பைத் தேடும்.
இந்தத் தேடுதலில், இந்த நாகரீகம் வானியல், கணிதம், மற்றும் சங்கீதத்தை நேர்கொண்டது. இந்திய பாரம்பரிய சங்கீத அடிப்படைகளின் சிக்கலான நுட்பங்களைப் பொறுத்தவரை, அதைப்போன்று வேறெதுவும் இல்லை. உலகத்தின் ஒவ்வொரு திறமையான இசைக்கலைஞரும் அதற்கு சாட்சியமளிக்கமுடியும். ஒரு சிக்கலான அடித்தளம் இருக்கும்போது, அதன் மீது நீங்கள் கட்டமைப்பதற்கு வரையறை இல்லை. அதேபோல், அங்கே கணிதம் மற்றும் வானியல் குறித்த மிகச்சிக்கலான புரிதலும் இருக்கிறது.
இந்தக் கலாச்சாரத்தில், ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே, பூமி உருண்டையானது, மற்றும் அது சூரியனைச் சுற்றி வருகிறது என்பதையும் நாம் அறிந்துகொண்டோம். பூமி, பிரபஞ்சத்தின் மையம் என்பதை நாம் ஒருபோதும் நம்பவில்லை. இந்தப் புரிதலை நாம் அடைந்தது ஏனென்றால், நாம் தேடுதல் உடையவர்களாக இருந்தோம், நம்பிக்கையாளர்கள் அல்ல. நீங்கள் உண்மையாக அறிவியல்தன்மை கொண்டவர் என்றால், நீங்கள் ஒரு தேடுபவராக இருக்கவேண்டும். நீங்கள் ஒரு அறிவியலாளராக இருந்துகொண்டு ஒரு நம்பிக்கையாளராக இருக்கமுடியாது ஏனென்றால் நம்பிக்கை என்றால் உங்களால் சற்றும் புரிந்துகொள்ளமுடியாத விஷயங்களைப்பற்றி நீங்கள் முடிவுகள் உருவாக்குவது.
இந்தத் தேடுதலில், நாம் கடந்து வந்தது கணிதம், சங்கீதம், வானியல், மறைஞானம் – பல மந்திரம் மற்றும் மறைஞான விஷயங்கள். நமது தேடுதலும், புரிதலும் ஆழமாகிக்கொண்டே சென்று, மிகவும் சூட்சும நிலையில் ஆழமாகிவிட, அப்போது நாம் கண்டது சூனியம். நாம் சூன்யத்தைக் கண்டபோது, அதை, “ஷிவா” என்றோம். பிறகு, இந்த சூன்யம்தான் எல்லாவற்றுக்கும் அடித்தளமாக இருப்பதை நாம் கண்டோம். பிரபஞ்சத்தின் மாபெரும் அதிசயம் இது: அனைத்தும் சூன்யத்திலிருந்து வெளிவருகிறது, மீண்டும் சூன்யத்துக்கே திரும்பிச் செல்கிறது. அனைத்தும் – நீங்கள், நான், இந்த பூமிக்கிரகம், இந்த சூரியமண்டலம், இந்த எல்லா பால்வெளிகளும், மற்றும் இந்த அண்டம் – இது ஒவ்வொன்றுமே வெறும் ஒரு வெளிப்பாடுதான்.
எல்லாவிதமான வழிகளிலும் தேடிக்கண்டறியும் ஒரு நாகரீகமாக இது இருக்கிறது. ஒரு அமைப்புரீதியான ஒழுங்குமுறை மற்றும் கடுமையான தேடுதல் வழியிலிருந்து, எதுவும் விலக்கப்படவில்லை. அகோரிகள், தாந்திரீகர்கள், மற்றும் வித்தியாசமான அணுகுமுறைகளுடன் பல்வேறு மக்கள் இருக்கின்றனர். நீங்கள் தேடிக்கொண்டிருப்பதும் மற்றும் நீங்கள் என்கிற உயிரின் மையத்தைத் தொடும் நோக்கமும், முக்கியமான விஷயமாக இருக்கிறது.
உயிரின் மையம் எங்கேயோ பால்வெளியின் நடுவில் இல்லை, ஆனால் ஒவ்வொரு உயிரிலும் இருப்பதை நாம் அறிந்திருக்கிறோம். நீங்கள் ஒரு ஆணாக, பெண்ணாக, விலங்காக, அல்லது ஒரு எறும்பாக இருந்தாலும் – உயிரின் மையம் உங்களுக்குள் இருக்கிறது. உயிரின் மூலம் உள்ளுக்குள் துடிக்காமல் வாழ்வு நிகழமுடியாது.
நூறு வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட இன்றைக்கு மனிதனின் காரண அறிவு மிக அதிக செயலூக்கத்துடன் உள்ளது. ஏனென்றால் கடந்த காலங்களில் இருந்ததைவிட, காரண அறிவின் மீது கோட்பாடுகளும், மதக் கொள்கைகளும் ஏற்படுத்தும் தாக்கம் குறைந்துள்ளது. மக்கள், தங்களது வாழ்க்கையை நன்கு கையாளவில்லை என்றால், அது பலன் தராது என்பதைப் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர். அதன் பொருள் என்னவென்றால், “ என் வாழ்க்கை எனது கர்மவினை”, என்பதனை அவர்கள் புரிந்துகொள்கின்றனர். அதன் பொருளாவது, அவர்கள் இந்துக்கள் ஆகின்றனர்.
ஆகவே, இந்து என்பது ஒரு –யிஸம், மதம், அல்லது ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை முறை அல்ல. இந்து என்பது ஒரு நிலப்பகுதி. நிலப்பகுதியின் காரணத்தால், மக்கள் இந்து ஆகிவிட்டனர். மக்களின் காரணத்தால், நாகரீகம் இந்து ஆனது. நாகரீகத்தின் காரணத்தால், இந்த தேசம் இந்துஸ்தானம் என்றானது. உங்கள் காரண அறிவை நீங்கள் பயம், குற்றவுணர்ச்சி, மற்றும் பேராசை இவைகளிலிருந்து விடுவித்தால், நீங்கள் இந்து ஆகிறீர்கள்.
இந்துக்கள் ஒரு குறிப்பிட்ட விதமான மக்கள் அல்ல. இது சனாதன தர்மம் என்றழைக்கப்படுகிறது. சனாதனம் என்ற சொல்லுக்கு நிரந்தரமான(ஆதியந்தமற்ற) என்பது பொருள். தர்மம் என்றால் மதம் என்பது பொருளல்ல – தர்மம் என்றால் விதிமுறை என்று பொருள். ஆகவே, நிரந்தரமான விதிமுறை என்ன? நாம் இங்கே அமர்ந்திருக்கும்போது, நாம் அனைவரும் வெவ்வேறானவர்கள். ஆனால் இறுதியில், நீங்கள் எரிக்கப்பட்டாலும் அல்லது புதைக்கப்பட்டாலும், அனைவரும் மண்ணுக்குத் திரும்பிச் செல்கிறோம்
அனைத்தும் ஒரே மூலத்திலிருந்து வருகிறது என்பதை நீங்கள் இறக்கும்போது உணர்வீர்களா அல்லது இப்போதே உணர்வீர்களா? அதை இப்போது உணர்வதற்கு நீங்கள் ஆர்வம்கொண்டால், நீங்கள் ஒரு சனாதனி. உங்களது ஆதியந்தமில்லாத இயல்பை அடைவதற்கு நீங்கள் ஆர்வம் கொள்ளும்போது, நீங்கள் சனாதன தர்மம், நிரந்தர விதிமுறையுடன் இசைந்திருக்கிறீர்கள்.
உங்கள் தனிப்பட்ட உருவாக்கத்துக்கு பல எல்லைகள் உள்ளன. வாழ்க்கையில் நீங்கள் என்னவாக இருந்தாலும் அது பொருட்டில்லை, உங்களது உருவாக்கத்துடன் நீங்கள் அடையாளப்படும் வரை, மற்றும் அந்த உருவாக்கத்தின் மூலத்தை தேடாத வரை, இன்னமும் நீங்கள் துன்பம்தான் அடைவீர்கள். மூலத்தினுடைய இருப்பின் அடிப்படையான, நிரந்தர இயல்பை நீங்கள் இன்னமும் அடையவில்லை. இந்த உடலை நீங்கள் சேகரித்து, பிறகு ஒரு நாள் களைகிறீர்கள் என்பதை நீங்கள் உணர்ந்துவிட்டால், இது எதைப்பற்றியது என்று தேடுவதற்கான புத்திசாலித்தனத்தை நீங்கள் அடைகிறீர்கள்.
கடந்த ஆயிரம் ஆண்டுகளில், இந்த நிலப்பகுதியும், மக்களும் கணக்கற்ற அக்கிரமங்களைக் கண்டுள்ளனர். இந்த ஒட்டுமொத்த நாகரீகமும் எப்படி இயற்கையாகக் கட்டமைக்கப்பட்டது என்ற காரணத்தால், அப்போதும் நாம் நமது இருப்பின் தன்மையைத் தக்கவைத்தோம். ஏனென்றால், அது ஒரு மதமாக இல்லாமலும், எவருடைய சிரச்சேதம் எல்லாவற்றையும் சிதறடிக்குமோ அத்தகைய ஒற்றைத் தலைவர் இல்லாததும் அதற்கான காரணமாக இருக்கிறது. ஒரு கோட்பாடோ அல்லது ஒரு புத்தகம் எரிக்கப்பட்டால், அனைத்தும் இழந்துபோகும் விளைவோ இங்கு இல்லை.
அது தனிமனிதத் தேடுதலாக இருந்தது. படையெடுப்பாளர்கள் சாத்தியமான அனைத்தையும் செய்தனர் – அவர்கள் எல்லா தலைவர்களையும், மத போதகர்களையும் கொன்று, ஆயிரக்கணக்கான கோவில்களை சூறையாடிச் சீரழித்தனர். ஆனால் அவர்களால் சனாதன தர்மத்தைக் கொல்லமுடியவில்லை ஏனென்றால் அது ஒவ்வொருவரின் இதயங்களிலும் மற்றும் மனங்களிலும் இருந்தது.
அறிந்துகொள்வதற்கான இயல்பான பேராவலை நீங்கள் கொன்றுவிட முடியாது. நான் முன்னமே கூறியுள்ளதைப்போல், உங்கள் மனதை நீங்கள் பயம், பேராசை, மற்றும் குற்றவுணர்ச்சியிலிருந்து விடுவித்தால், இந்த உயிர் இயற்கையாகவே அதன் நிரந்தர இயல்பைத் தேடும். இந்த அளவுக்கான ஆதிக்கசக்தியுடன் படையெடுக்கப்பட்டு, ஆனால் இன்னமும் அதன் கலாச்சாரத்தை பெருமளவுக்குத் தக்கவைத்திருக்கும் ஒரே நிலப்பகுதி இது மட்டும்தான். நீங்கள் ஒரு அமைப்பை அழிக்கமுடியும், ஆனால் ஒருங்கிணைக்கப்பட்ட, ஒரு தன்னிச்சையான குழப்பத்தை நீங்கள் அழிக்கமுடியாது.
பயம், குற்றவுணர்வு, மற்றும் பேராசையிலிருந்து விடுபடும் திசையில் மக்கள் தொகையை நாம் நகர்த்தினால், உலகெங்கும் சனாதன தர்மம் முளைத்தெழுவதை நாம் பார்ப்போம். சனாதன தர்மம் என்றால், அனைவரும் ஒரு மந்திரத்தை உச்சாடனம் செய்வார்கள் அல்லது பூஜை செய்வார்கள் என்பது அர்த்தமல்ல. அது அப்படி அல்ல, ஆனால் மக்கள் அனைவரும் தேடுதலில் ஈடுபடுவார்கள். அதுதான் முக்கியமானது. அவர்கள் எப்படித் தேடுகிறார்கள் என்பது நமக்குப் பொருட்டல்ல. அவர்கள் தமது நிரந்தர இயல்பையும் மற்றும் அவர்களது உச்ச நிலை சாத்தியத்தையும் தேடுகையில், அவர்களை நாம் சனாதனி என்று அழைக்கிறோம். இது ஏனென்றால், சனாதனா என்றால் ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தைக் குறிப்பதல்ல – சனாதனா என்றால் நிரந்தர இயல்பு.
ஆகவே, இந்துத்துவம் என்பது என்ன? அப்படி ஒரு விஷயம் இல்லை; தத்துவம் என்பது இல்லை. துரதிருஷ்டவசமாக மக்கள் பிழைப்பு நோக்கங்களுக்காக அதை ஒரு தத்துவமாக உருவாக்க முயல்கின்றனர். ஆனால் நான் நமது பிழைப்புக்காக அஞ்சவில்லை – நான் ஒரு உருமாற்றத்தினைத்தான் பார்க்கிறேன். நான் போதிய அளவு இந்துவாக இல்லை என்று மக்கள் எண்ணுகின்றனர், ஆனால் இந்த மண்ணில் நான் பிறந்திருக்கும் காரணத்தால், பூகோள அமைப்பின்படி, நான் ஒரு இந்து. மேலும் நாம் யார் என்பதன் ஆதியந்தமில்லா இயல்பை அறிந்துகொள்வதற்கு நான் எப்போதும் பேராவலுடன் இருந்துள்ள காரணத்தால், நான் ஒரு சனாதனி, தவிர நான் எந்த தத்துவங்களுக்கும் ஆதரவளிப்பது காரணமல்ல.
ஒவ்வொரு மனிதரும் அவரது உச்சபட்ச இயல்பைத் தேடுவதை நான் காணவேண்டும்; அப்போது ஒவ்வொருவரும் ஒரு சனாதனியாக இருக்கிறார். ஆனால் அவர்கள் ஒரு மதத்துக்கு மாறுகின்றனர் என்று எண்ணவேண்டாம், ஏனெனில் அங்கே மாறுவதற்கானது என்று எதுவுமில்லை – கருத்தாக்கம் இல்லை, தத்துவம் இல்லை, கடவுள் இல்லை. அது என்னவென்றால், உங்கள் கவனம் உருவாக்கத்திலிருந்து அதன் மூலத்துக்கு இடம்பெயரும்பொழுது, அதன் பொருள் நீங்கள் ஒரு சனாதனி.
உருவாக்கங்கள் நிலையற்றவை. அவைகள் கால்தடங்களைப் போன்றவை – இன்றைக்கு இங்கே இருந்து, நாளைக்கு மறைந்துவிடுபவை. ஆனால் மூலம் எப்போதும் அங்கே இருக்கிறது. உங்களது ஆர்வம் உடலில் இருந்து மூலத்துக்கு இடம்பெயர்ந்துவிட்டால், நீங்கள் ஒரு சனாதனி ஆகியுள்ளீர்கள். நீங்கள் நிரந்தர இயல்பைத் தேடுகிறீர்கள். இது உலகத்துக்கு நிகழவேண்டும் – ஒரு மதமாக இல்லாமல், ஒருதத்துவமாக இல்லாமல், ஆனால் அனைத்தையும் கடந்திருப்பது என்ன, தற்போது உருவாகியிருப்பது என்ன, என்பதை அறிந்துகொள்வதற்கான ஒரு இயல்பான பேராவலாக இருக்கவேண்டும்.
உருவாக்கங்கள் பலவாக இருப்பதுடன் அவைகள் அற்புதமாக உள்ளன. ஆனால் நீங்கள் உருவாக்கத்துடன் அடையாளப்பட்டுவிட்டால், மற்ற உயிர் வடிவங்களை, ஒரு உயிராகக்கூடக் கருதாத பல மனிதர்களைப்போல் நீங்கள் மிகவும் சிறிதாகிவிடுவீர்கள். சனாதனியாக இருப்பது என்றால், ஒருவரது உடலியலை அல்லது உளவியலை புறக்கணிப்பது என்பது அர்த்தமல்ல. நாம் அதிலிருந்து விலகிச் செல்வதற்கு விரும்பவில்லை – நாம் அதற்கும் மேலாக இருக்க விரும்புகிறோம், அதனால் நமது உடலியலையும், உளவியலையும் நாம் விரும்பும்படி நம்மால் பயன்படுத்தமுடிகிறது.
தற்போது, பெரும்பாலான மனிதர்களுக்கு, அவர்களது உடலியல் மற்றும் உளவியல் தேவைகள் அவர்களது எல்லா நேரத்தையும் ஆக்கிரமிக்கிறது. சனாதனம் என்றால், எல்லா உருவாக்கங்களுக்கும் மேலாக இருப்பது. உங்களது மிகப்பெரும் தடைகளாக, உங்களுடைய உடலும், மற்றும் உங்களுடைய மனமும் இருக்கிறது. பிரபஞ்சத்திலேயே மிகவும் புனிதமான இடத்திற்கு நாம் உங்களை அழைத்துச் செல்லும்போது, அங்கே படிகள் இருந்தால், அந்தப் படிகளையே நீங்கள் தடைகளாகத் தவறாகப் புரிந்துகொண்டால், அது ஒரு துயரமாகவே இருக்கும். அதுதான் பெரும்பாலான மனிதர்களுக்கு நிகழ்ந்துள்ளது.
இந்த உடல், இந்த மனம், இந்த மூளைத்திறன், இத்தனை உணர்ச்சிகள், இத்தனை சக்திகள், இந்த இரசாயனம், ஆகிய அனைத்தும் படிக்கற்களாக உள்ளன. ஆனால் தற்போது அவற்றை உங்கள் வாழ்வின் தடைக்கற்களாக நீங்கள் உணர்கிறீர்கள். நீங்கள் அதை மதம், குடும்பம், திருமணம், அல்லது வேறு ஏதோ ஒன்றாக அழைத்தாலும் - இந்த அம்சங்கள் நீங்கள் மேலேறியும், கடந்து செல்வதற்குமான படிக்கற்களாக இருக்கவேண்டும், ஆனால் துரதிருஷ்டவசமாக, அவைகள் புதைமணலாக ஆகியுள்ளன. உங்கள் உடலையும், மனதையும் நீங்கள் படிக்கற்களாக்கி, அதன் மீது ஏறி நின்றுவிட்டால், நீங்கள் ஒரு சனாதனி.