பகிர்வுகள்

தலைசிறந்த உலக விஞ்ஞானிகள் ஈஷா யோக மையத்தில் தங்கள் Science20 மாநாட்டு அனுபவத்தை நம்முடன் பகிர்கிறார்கள்

G20ன் அறிவியல்20 (S20) உச்சி மாநாட்டிற்காக, உலகெங்கிலும் உள்ள சிறந்த விஞ்ஞானிகள் 2023 ஜூலை 21-22 வரை ஈஷா யோக மையத்தில் ஒன்றுகூடினர். இந்த மாநாடு, சர்வதேச வல்லுநர்களால் அறிவியல் சார்ந்த ஒருமித்த கருத்தின் அடிப்படையில் வகுக்கப்பட்ட பரிந்துரைகளை, கொள்கை வகுப்பாளர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

இங்கே, மூன்று புகழ்பெற்ற பிரதிநிதிகள் நிகழ்வின் அனுபவத்தையும், நிகழ்வு நடைபெற்ற இடத்தின் தனிச்சிறப்பையும் பற்றி பகிர்ந்துகொள்கிறார்கள்.
பேராசிரியர் ஜெரால்ட் ஹாக், ஜெர்மன் புவியியல் சார்ந்த காலநிலை நிபுணர்; சுவிட்சர்லாந்தில் ETH Zürichன் பேராசிரியர்; காலநிலை புவி வேதியியல் துறையின் இயக்குனர் மற்றும் Mainzல் உள்ள Max Planck Institute for Chemistryன் அறிவியல் உறுப்பினர்; மற்றும் லியோபோல்டினா தேசிய அறிவியல் அகாடமியின் தலைவர்..

பேட்டியாளர்: கடந்த இரண்டு நாட்களாக, உச்சிமாநாட்டில் இந்த சந்திப்புக் கூட்டங்களை நீங்கள் நடத்தியிருக்கிறீர்கள். உங்களை மிகவும் கவர்ந்தது எது?

பேராசிரியர் ஜெரால்ட் ஹாக்: இங்கே எங்களுக்கு வழங்கப்பட்ட விருந்தோம்பல். இறுதியில் ஒரு நல்ல ஒருமித்த கருத்துக்கு விஞ்ஞானிகள் உடன்படவில்லை என்றாலும், நாங்கள் அதை அடைந்துவிட்டோம் என்று நினைக்கிறேன். எங்களிடம் மூன்று மையக்கருக்கள் உள்ளன. ஒன்று ஆற்றலை மையமாகக் கொண்டது. நான் ஒரு காலநிலை விஞ்ஞானி - காலநிலை மற்றும் ஆற்றல் ஆகியவை ஒன்றுக்கொன்று நேரடியாகத் தொடர்புடையவை. சமூகம் மற்றும் கலாச்சாரத்திற்கான உலகளாவிய ஒருங்கிணைந்த மருத்துவமுறை மற்றும் அறிவியலைப் பற்றி நாங்கள் பேசினோம், இது மிகவும் முக்கியமானது.

பேட்டியாளர்: ஈஷா யோக மையத்தில் இருந்த அனுபவம் எப்படி இருந்தது?

பேராசிரியர் ஜெரால்ட் ஹாக்: நான் இப்படியொரு இடத்தில் இருந்ததில்லை என்று நினைக்கிறேன். நான் அரிதாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நபர், ஆனால் நான் இங்கே நிறைய ஆனந்தமான புன்னகையுடன் கூடிய இளைஞர்களைப் பார்க்கிறேன். எங்களுக்கு இங்கே அளிக்கப்பட்ட விருந்தோம்பல் மிகவும் பிரமாதமானது. நேற்று, சத்குருவிடம் இருந்து அருமையான உரையாடலைப் பெற்றோம். பருவநிலை மாற்றம் குறித்து நான் அவரிடம் ஒரு கேள்வி கேட்டபோது, அதற்கு அவர் சிறப்பாக பதிலளித்தார். ஒரு காலநிலை விஞ்ஞானியாக, சுற்றுச்சூழலைப் பற்றிய அவரது பார்வையையும் ஒட்டுமொத்த அணுகுமுறையையும் நான் மிகவும் பாராட்டுகிறேன். மண்ணுக்கான அவரது முன்னெடுப்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்று. எனவே, ஈஷா மையத்தில் இரண்டு நாட்கள் அருமையாக இருந்தது.

டாக்டர். முனிர் M. எல்டெசோகி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான King Abdulaziz நகரத்தின் தலைவர் மற்றும் சவுதி அரேபியாவின் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கான ஆணையத்தின் ஸ்தாபனக் குழுவின் தலைவர்.

டாக்டர். முனிர் M. எல்டெசோகி: இந்தியாவில் நடைபெறும் G20 மாநாட்டில் நான் இரண்டாவது முறையாகப் பங்கேற்கிறேன். இந்திய G20 கூட்டமைப்பிற்கு சவுதி அரேபியாவின் நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். முந்தைய சந்திப்பில் எனது அனுபவம் சிறப்பானது என்றாலும், இம்முறை உண்மையில் அதைவிட அளப்பரியது. கோயம்புத்தூர் விமான நிலையத்தில் நாங்கள் வந்து இறங்கியது முதலே இது ஒரு வித்தியாசமான அனுபவமாக உள்ளது. அவர்கள் எங்களை மிகவும் பாரம்பரிய விருந்தோம்பல் முறைப்படி அழகாக வரவேற்றனர். இந்த இடத்தில் இருப்பதன் தனித்துவமான அனுபவமும், பிரதிநிதிகளுடன் ஒரே இடத்தில் தங்கியிருந்து, அவர்கள் அனைவருடனும் ஒன்றாக இணைந்து பழகுவதற்கான சிறந்த வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.

நிச்சயமாக, இந்த சந்திப்பு மிகவும் முக்கியமானது. சுற்றுச்சூழலில் இருந்து ஆரோக்கியம் வரை மற்றும் சமூகத்திற்கான அறிவியல் என S20ன் கீழ் அறிவியல் தொடர்பான முக்கிய அம்சங்களைப் பற்றி பேசினோம். நிச்சயமாக, இது மிகவும் தனித்துவமான, நேர்மறை அதிர்வுகள் கொண்ட ஒரு சூழலாகும். எனவே, எங்களை இங்கே அழைத்ததற்கு மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன். இதன் ஓர் அங்கமாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் இந்திய G20 மாநாடு வெற்றி பெறுவதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.

பேட்டியாளர்: நிகழ்வு நேரத்தின்போது, அறிவியல் மற்றும் ஆன்மீகத்தின் மையக்கரு பேசுபொருளானது. மனிதகுலம் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களுக்கும் தீர்வு காண்பதில், பங்கேற்பாளர்களின் பார்வையில் இது எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நினைக்கிறீர்கள்?

டாக்டர் முனிர் எல்டெசோகி: இந்திய G20 மாநாட்டின் மையக்கரு “ஒரு குடும்பம்”. எனவே, ஒன்றாகச் சேர்ந்து, இதுபோன்ற ஓர் இடத்தில், இத்தகைய சவால்களை எப்படி எதிர்கொள்வது என்று சிந்திப்பது, புதிய தரிசனங்களைத் திறக்கும் என்று நினைக்கிறேன். நிச்சயமாக, இந்த விதமான தலைப்புகளை போலியான ஒரு அறிவியலாகப் பார்க்கும் நபர்கள் உள்ளனர். ஆனால் இந்த தலைப்புகளும் உரையாடல்களும் நிகழ்ந்தவிதம், மிக அருமையான ஒரு கலவையாக இருந்தது. மொத்தத்தில், இது மிகவும் நேர்மறையான சக்தி என்பதை வெளியில் கொண்டாட்டத்தில் இருக்கும் நபர்களிடமிருந்து நீங்கள் கேட்கமுடியும். எனவே, வெற்றிகரமான நிகழ்வுக்கு மீண்டும் வாழ்த்துகள், மேலும் இதுபோன்ற இன்னும்பல நிகழ்வுகள் அரங்கேறும் என நான் நம்புகிறேன்.

சஞ்சீவ் சன்யால், இந்தியப் பொருளாதார நிபுணர், பிரபல வரலாற்றாசிரியர் மற்றும் இந்தியப் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்.

சஞ்சீவ் சன்யால்: ஈஷா ஆசிரமத்தில் நடந்த Science20 மாநாட்டில் கலந்துகொண்டது முற்றிலும் அற்புதமான அனுபவம். நாம் அறிந்ததைப் போலவே, இது ஒரு அழகான இடம், கூடவே நாங்கள் இங்கே பெற்ற அன்பான விருந்தோம்பலும் அற்புதமானது. நான் இதற்கு முன்பு பலமுறை இங்கு வந்திருக்கிறேன், எப்போதும் இங்கு வருவதை அனுபவித்து மகிழ்கிறேன்.

பேட்டியாளர்: அறிவியல் மற்றும் ஆன்மீகத்தின் தனித்துவமான ஒரு சங்கமத்தை நாங்கள் இங்கே காண்கிறோம். உலகம் இப்போது நல்வாழ்வை அணுகும் விதத்தில், முன்னுதாரணமாக இருக்கும் ஒரு மாற்றத்தை, நீங்கள் இங்கே காண்கிறீர்களா?

சஞ்சீவ் சன்யால்: பழைய முறையில், கணினி ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் Dry scienceல் கட்டுப்பாடுகள் இருந்தநிலையில், தற்போது சிறந்த வரவேற்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். நிச்சயமாக, அறிவியலை மட்டுமே சார்ந்த குறுகிய பார்வையாக இல்லாமல், பொதுவாக வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க, பரந்துபட்ட விஷயங்களைப் பற்றிய புரிதல் தேவைப்படுகிறது. இதன் விளைவாக, Science20 மாநாட்டை நடத்துவதற்கு ஈஷா ஆசிரமம் என்பது ஆவலைத்தூண்டும் ஓர் இடமாகும். இங்கு நாம் ஒருங்கிணைந்த முழுமையான ஒரு பார்வையை பெறமுடியும்.

பேட்டியாளர்: வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் மற்றும் வளங்களால் இந்தியாவின் எதிர்காலப் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

சஞ்சீவ் சன்யால்: இந்தியப் பொருளாதாரம் ஏற்கனவே உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில், இது உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும். வளர்ந்துவரும் பல்வேறு தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு, மரபியல் மற்றும் வேறெந்த துறையாக இருந்தாலும், முன்னணியில் நாம் இருப்போம் என்பது இயல்பானது. நிச்சயமாக, இது எதிர்கால வேலைவாய்ப்புகள், ஏற்றுமதிகள் மற்றும் பல விஷயங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மிகத் தெளிவாக, இது நாம் மிகவும் கவனம் செலுத்த வேண்டிய ஒன்று. அடுத்த தலைமுறை தொழில்முனைவோர், விஞ்ஞானிகள் மற்றும் சிந்தனையாளர்கள் இந்த பல்வேறு துறைகளிலும் முன்னணியில் இருக்கவேண்டிய தேவையுள்ளது.