நடப்புகள்

நாக பஞ்சமி - சத்குருவின் முன்னிலையில் தொன்மையான சடங்குகள்

ஒரு வருடத்திற்கு முன்பு, 2022 அக்டோபர் 9ம் தேதி பௌர்ணமி இரவில், பெங்களூருவில் உள்ள சத்குரு சந்நிதியில் சக்திவாய்ந்த நாக பிரதிஷ்டையை சத்குரு செய்தார்.

இந்த ஆண்டு, 21 ஆகஸ்ட் 2023 அன்று, முதலாவது நாக பஞ்சமி விழா, புனிதமான நாகாவைக் கொண்டாடும் ஓர் ஒப்பற்ற திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வு ஆன்லைனில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

நாகாவிற்கு அர்ப்பணங்களை வழங்கும் வாய்ப்பு பங்கேற்பாளர்களுக்குக் கிடைத்தது.

விழாவிற்கு அனைவரையும் வரவேற்ற சத்குரு, பின்னர் பல்வேறு கலாச்சாரங்களிலும் பகுதிகளிலும் நாகாவிற்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தைப் பற்றி விவாதித்தார். மனித விழிப்புணர்வை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், நமது விழிப்புணர்வை விரிவுபடுத்துவது சாதாரண உணர்வுகளுக்கு அப்பால் நம்மை அழைத்துச் செல்கிறது என்பதையும், இது வாழ்க்கையைப் பற்றிய ஆழமான புரிதலுக்கு வழிவகுக்கும் என்ற கருத்தையும் சுட்டிக்காட்டினார்.

நாகாவுடன் ஈடுபடுவது, புரிந்துகொள்ளும் திறனை விரிவுபடுத்த உதவும் என்பதை விளக்கிய சத்குரு, ஒவ்வொருவரும் தங்கள் சொந்த கருத்துகளை முன்னிறுத்தாமல் நிகழ்வில் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டார். எதிர்காலத்தில், நாகா தொடர்பான குறிப்பிட்ட யோக செயல்முறைகளை முன்னெடுப்பதற்கான திட்டங்கள் இருப்பதைப் பற்றியும் சத்குரு குறிப்பிட்டார். சமூக நெறிமுறைகள் அல்லது வெளிப்புற தாக்கங்களால் வாழ்க்கை கட்டுப்படுத்தப்படக்கூடாது, ஆனால் நமது உள்நிலை அனுபவங்களும் தரிசனங்களும் நமது செயல்பாடுகளுக்கு வழிகாட்ட வேண்டும் என்று அவர் கூறினார்.

சத்குரு நாகாவிற்கு ஆரத்தியை அர்ப்பணித்து, சடங்குகளைத் தொடங்கி வைத்தார்.

தொன்மையான நாகா மண்டல பூஜை செயல்முறையை பங்கேற்பாளர்கள் அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்தது. புனிதமான நாகாவின் அருளைப் பெறுவதற்கான இந்தப் பாரம்பரிய சடங்கு, உடுப்பி உபாசகர்களால் நாகா சந்நிதியில் சத்குருவின் முன்னிலையில் நடத்தப்பட்டது.

இந்த செயல்முறை, நாகா மண்டல நிருத்யா எனப்படும் நடனத்தை உள்ளடக்கியதாக உள்ளது. இது நாகாக்களின் தெய்வீக அருளை வரவேற்கக் கூடியதாக கருதப்படுகிறது.

ஜாத்ரே எனப்படும் பாரம்பரிய கிராமிய கண்காட்சியில் உணவுக் கடைகள், கேளிக்கை விளையாட்டுகள் மற்றும் கைவினைப்பொருட்கள் மட்டுமல்லாமல், நாட்டு கால்நடை இனங்களும், விவசாயத்தில் உதவக்கூடிய கருவிகளும் காட்சிப்படுத்தப்பட்டன.

பாரம்பரியம் மற்றும் சமூகத்தின் இந்த அம்சங்கள், புனிதமான நாக பஞ்சமி தருணத்தில் உயிரோட்டமிக்க கலாச்சாரப் பின்னணியை முன்னிறுத்துவதாக அமைந்தன.