நடப்புகள்

சத்குருவைத் தொடருங்கள்

கடந்த சில வாரங்களின் சத்குரு நிகழ்வுகள் பற்றிய ஒரு தொகுப்பு!

சிவனை ஆராய்ந்தறிய ஒரு கலந்துரையாடல்: சத்குருவுடன் பொருளாதார நிபுணர் பிபேக் தேப்ராய்

31 ஜூலை

பிபேக் தேப்ராய் இந்தியப் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் மட்டுமல்ல, பாரம்பரிய சமஸ்கிருத நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சிறந்த நூலாசிரியரும் ஆவார். சமீபத்தில் அவர் மொழிபெயர்த்த சிவபுராணம் மூன்று தொகுதிகள் கொண்ட புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது, அதை அவர் சத்குருவுக்கு அர்ப்பணித்தார். ஈஷா யோக மையத்திற்கு வருகைதந்த அவர், நாகா சந்நிதி முன்னிலையில் சத்குருவுடன் அமர்ந்து, சிவனின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றி ஆராய்ந்தறியும் விதமாக கலந்துரையாடினார்.

இந்த சுவாரஸ்ய கலந்துரையாடலில், சிவனின் பல்வேறு அம்சங்கள், அவருடன் தொடர்புடைய அடையாளங்கள், சடங்குகளின் தன்மை மற்றும் ஒருவரின் உணர்வை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் ஆகியவற்றைப் பற்றி சத்குரு எடுத்துரைக்கிறார். சிவன் ஒரு தனிமனிதன் அல்ல, ஆனால் அவர் "எது இல்லையோ அது" அல்லது இருப்பின் ஆதாரமான ஒன்றுமில்லாததை குறிப்பதாக சத்குரு விளக்கினார்.

குறியீடுகள் மற்றும் முழுமையானவற்றின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய சத்குரு, யந்திரம், தந்திரம் மற்றும் மந்திரம் ஆகியவை குறித்த ஆழமான புரிதலையும் வழங்கினார். மனிதகுலத்திற்கு வல்லமை அளிக்கப்படும்போது, விழிப்புணர்வுடன் வழிநடத்தப்படாவிட்டால் தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயம் எப்போதும் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். சில ஆன்மீக அம்சங்களை விளக்குவதில் அறிவியலின் கட்டுப்பாடுகள் குறித்து பேசிய அவர், புரிந்துகொள்வதற்கு அறிவாற்றலை மட்டுமே நம்புவதில் உள்ள பிரச்சனைகளைப் பற்றி பேசினார்.

ஆன்மீகப் பயிற்சிகளைப் பொறுத்தவரை, தொடர்ந்து செய்யப்படும் பயிற்சியின் அவசியத்தை சுட்டிக்காட்டி, ஆன்மீகப் பாதையில் குறுக்குவழிகளைத் தவிர்த்து, ஒரு குறிப்பிட்ட அளவிலான அசைவின்மையையும் விழிப்புணர்வையும் அடைவதே இறுதிநோக்கம் என்று சத்குரு தெளிவுபடுத்தினார்.

ஆன்மீகத்தில் வளர்வதற்கு தன்னைப் பற்றிய கற்பனை எண்ணங்களிலிருந்து விடுபட வேண்டியதன் அவசியத்தை உணர்த்திய சத்குரு, அசாதாரணமானதாக மாறுவதற்கு "சாதாரணமாக" மாறுவதுதான் முன்நிபந்தனை என்று எடுத்துரைத்தார்.

தேவியை இல்லம்கொண்டு செல்வது: சத்குருவுடன் யந்திர வைபவம்

1 ஆகஸ்ட்

புனிதமான பௌர்ணமி இரவில், யந்திர வைபவத்தில் பங்கேற்பவர்களுக்கு லிங்கபைரவி தேவியின் பிரதிஷ்டை செய்யப்பட்ட வடிவத்தை சத்குரு வழங்கினார்.

சத்குருவுடன் அடுத்த யந்திர வைபவம் 2023 டிசம்பர் 25 முதல் 27 வரை கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும்.

சத்குரு தரிசனம்: சூரியனில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த ஒரு நுட்பமான பார்வை

6 ஆகஸ்ட்

சூரியன் மறையத் தொடங்கி அந்திமாலைப் பொழுதில், தியானலிங்கத்திற்கும் சந்திரகுண்டத்திற்கும் இடையே அமைதியான இடத்தில் தரிசனத்திற்காக அமர்ந்தார் சத்குரு. சூரியனின் மேற்பரப்பில் வெப்பக்கதிர்வீச்சின் அதிகரிப்பால், அடுத்துவரும் பதினொன்று முதல் பன்னிரெண்டு மாதங்களுக்கு அன்னை பூமியின் மீதும் அனைத்து உயிரினங்களின் மீதும் அவை ஏற்படுத்தவிருக்கும் தாக்கங்களைப் பற்றி சத்குரு பேசினார்.

சூரியனின் வெப்பக்கதிர்வீச்சுக்கு பூமியின் எதிர்வினையைப் பொறுத்து, பல்வேறு விளைவுகள் ஏற்படலாம் என்று அவர் கூறினார். அத்தகைய ஒரு விளைவாக வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உண்டாகும் என்றும், அதேசமயம் எரிமலை வெடிப்புகள் சூரியனைத் தடுத்து குளிர்விக்கும் விளைவை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். இதன்காரணமாக பருவமழைக் காலங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உண்டாகலாம் என அவர் குறிப்பிட்டார். இதற்காக நாம், பாலைவனமாவதைத் தடுக்கும் விதமாக தாவர இனங்களைப் பராமரித்து பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இந்த மாற்றங்கள் நிகழக்கூடிய காலம் முழுவதும் தங்கள் உடலின் தேவைகளில் கவனம் வைக்குமாறு அனைவரையும் வலியுறுத்தினார். ஆன்மீக சாதகர்கள் தாங்கள் தயாராக இருந்தால், இந்த சூரிய சக்தியின் அதிகரிப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளலாம். "நீங்கள் வாழ்க்கைக்குத் தகுதியானவராக இருந்தால், எல்லா நேரமும் நல்ல நேரமே" என்று சத்குரு மேலும் கூறினார்.

வீரேந்திர சேவாக்: 'குருவுடன் வேகமான பயணம்'

8 ஆகஸ்ட்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சாம்பியனான வீரேந்திர சேவாக் அவர்கள், மூன்றாவது முறையாக ஈஷா யோக மையத்திற்கு வருகைதந்து, சத்குருவைச் சந்தித்தார். சூரியகுண்டத்தில் நீராடி புத்துணர்வுபெற்றதோடு, லிங்கபைரவியை வணங்கிய அவர், அருகிலுள்ள கிராமங்களின் பழங்குடியின குழந்தைகளுக்கு உணவு வழங்கினார். .

ஈஷாவிற்கு அவர் வருகைதந்த நிகழ்வை, அவர் சமூக ஊடக தளமான Xல் (முன்னர் ட்விட்டர் என்று அழைக்கப்பட்டது), “With the Master, the Journey is Faster :)" என்று குறிப்பிட்ட அவர், "ஈஷா யோக மையத்திற்கு 3வது முறையாக வருகைதந்தேன். ஒவ்வொரு முறையும் முன்பிருந்ததை விட ஆழமாகத் தொடப்பட்டேன். சத்குரு ஒரு அபூர்வ மனிதர், அப்படிப்பட்ட ஒரு சிறந்த குருவின் காலத்தில் வாழ்வதற்கு நாம் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள். பல அம்சங்களில் நம்பமுடியாத பணிகள், இதில் பல கவனிக்கப்படாமலே போகலாம். சத்குருவின் அன்பு, கருணை மற்றும் அர்ப்பணிப்பிற்கும் நன்றி. உங்களுடைய அருளால், உள்ளத்தில் உள்ள தெய்வீகத்தை அனுபவிப்பதன் விலைமதிப்பற்ற பேரின்பத்தை நாங்கள் அறிகிறோம்" என்று பதிவிட்டிருந்தார்.

ஈஷா யோக மையத்தில் சத்குருவுடன் சுதந்திர தினம்

15 ஆகஸ்ட்

இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தன்று காலை 7:00 மணியளவில், ஆதியோகி மற்றும் சத்குரு முன்னிலையில் நடந்த தேசியக் கொடியேற்றும் விழாவிற்காக ஆசிரமத்தினர், பிரம்மச்சாரிகள், தன்னார்வலர்கள், விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்கள் கூடினர்.

ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களும் ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களும் இந்தியாவின் செழுமையான மற்றும் பல்வேறுபட்ட கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இந்தியாவின் தேசிய கீதமான "ஜன கண மன" பாடலை வழங்கினர்.

மாலை வேளையில், இந்தியாவின் மூவர்ணக் கொடி ஆதியோகியில் ஒளிக்காட்சியாக புரொஜெக்ட் செய்யப்பட்டிருந்தது. சுதந்திர தினக் கொண்டாட்ட தருணத்தில் சத்குரு ஒரு ட்விட்டர் பதிவில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார். “ஆதியோகி பிரபஞ்சம் முழுவதும் ஒன்றாக இருப்பதைக் குறிக்கிறார். அனைத்தும் ஒன்றே என்பதை ஒருவர் தனக்குள் உணர்வதற்குத்தான் யோகா. மனிதர்கள் நெடுங்காலமாக வேறுபாடுகளை பாகுபாடுகளாக மாற்றி, அவற்றை மோதலாக மாற்றியுள்ளனர். உயிராக இருப்பவை யாவையும் அனைவரும் அரவணைப்பதற்கான நேரமிது, பிரபஞ்சத்துடன் யோக நிலையில், அதாவது பிரபஞ்சத்துடன் ஒன்றியிருப்பதற்கான நேரமிது. இந்த குறுகிய வாழ்க்கையில், இந்த சாத்தியம் மட்டுமே முன்னேறுவதற்கான வழி. ஆதியோகியும் அவர் நமக்கு யோக அறிவியலாக வழங்கியுள்ள நல்வாழ்வுக்கான தொழில்நுட்பங்களும் கடந்தகாலத்தைச் சேர்ந்தவை அல்ல, எதிர்காலத்தையும் பூமியில் மனிதகுலத்தின் எதிர்கால நல்வாழ்வையும் சேர்ந்தவை."

இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய ராணுவத்துடன் இணைந்து "மன அழுத்த மேலாண்மை மற்றும் முழுமையான ஆரோக்கியத்திற்கான யோகா" என்ற முன்னெடுப்பை ஈஷா தொடங்கியுள்ளது. தென்னக இராணுவ கமாண்ட் பிரிவின் அதிகார வரம்பிற்குட்பட்ட 9 மாநிலங்களில் 23 இடங்களில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு ஒரு வாரம் முழுக்க பாரம்பரிய ஹடயோகா வகுப்புகளை இலவசமாக வழங்குவதை இந்த முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த யோகப் பயிற்சிகள், மனதின் சமநிலை, ஸ்திரத்தன்மை மற்றும் உள்நலனை மேம்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன என்று சத்குரு விளக்கினார். தொடக்க விழாவிற்கு, தெற்கு பிராந்திய தரைப்படையின் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் திரு.அஜய் குமார் சிங் அவர்கள் தலைமை தாங்கினார். இராணுவ வீரர்கள் எதிர்கொள்ளும் சவால்களை முன்னிறுத்தி, இந்தியாவின் கலாச்சார ஆன்மீக வேர்களுடன் இணைவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். சத்குருவின் சிறப்பான ஆதரவிற்கு தனது நன்றிகளையும் அவர் தெரிவித்தார்.