யோகா & ஞானம்

தர்மம் - சுயதர்மம்: வாழ்க்கையை எளிமையாகவும், நேர்த்தியாகவும் எப்படி நடத்திச்செல்வது

தர்மத்தின் உண்மையான அர்த்தத்துக்குள் ஆழமாகப் பயணித்து, தர்மம் மற்றும் ஸ்வதர்மத்துக்கு இடையிலான வித்தியாசத்தையும், செயலுக்குள் இறங்குவதற்கு முன்னால் ஒருவர் தன்னையே யோகத்தில் நிலை நிறுத்திக்கொள்ளவேண்டிய முக்கியத்துவத்தையும் சத்குரு விளக்குகிறார்.

கேள்வியாளர்: நமஸ்காரம், சத்குரு. மகாபாரதத்தில், கிருஷ்ணர் ஸ்வதர்மம் குறித்துப் பேசுகிறார். தர்மத்துக்கும், ஸ்வதர்மத்துக்கும் இடையில் என்ன வித்தியாசம்?

சுயதர்மம்: பருப்பொருள் விதிகள் தாண்டி வாழ்ந்திருப்பது

சத்குரு: தர்மம் என்பது, இன்றைக்கு சித்தரிக்கப்படுவதைப்போல் ஒரு மதம் அல்ல. தர்மம் என்றால், “சட்டம்”(விதிகள்) . எல்லா உயிர்களையும், உயிருள்ள, உயிரில்லாதவைகளையும் நிர்வகிக்கும் அடிப்படைச் சட்டம் ஒன்று உள்ளது. ஸ்வ என்றால் “சுயம்”; ஆகவே ஸ்வதர்மம் என்பது “சுயத்தின் சட்டம்”. அது சுயத்தின் இயல்பு, மற்றும் அது எப்படி இயங்குகிறது என்பதைக் குறித்தது. பருப்பொருள் சட்டங்கள் இருப்பதுபோல், சுயத்தின் சட்டம் என்பது இருக்கிறது. சுயத்தின் சட்டங்களின்படி நீங்கள் வாழவேண்டும், பருப்பொருள் சட்டங்களின்படி அல்ல என்று கிருஷ்ணன் கூறுகிறார்.

பருப்பொருள் விதிகளின்படி நீங்கள் வாழ்ந்தால், இன்றைக்கு நாம் நண்பர்களாக இருக்கக்கூடும், மற்றும் நாளைக்கே ஏதோ ஒன்று தலைதூக்கலாம், அதனால் நான் சண்டையிட நேரலாம். இது தேசங்கள், இனங்கள், சமூகங்களுக்கு இடையில் மட்டுமல்ல, நெருக்கமான உறவுகளிலும்கூட – கணவன்-மனைவி, தந்தை-குழந்தை, தாய்-குழந்தைக்கு இடையிலும்கூட இது நிகழ்கிறது. ஏனென்றால் இதுதான் பருப்பொருள் சட்டம் : நீ அங்கு அமர்ந்திரு, நான் இங்கு அமர்ந்திருக்கிறேன்; அதை விரும்புவதாக நாம் உணர்ந்தால், நாம் அணைத்துக்கொள்வோம். ஆனால் ஒருவர் மற்றவர் தலைமீது அமர்ந்தால், அது செயல்படாது.

ஸ்வ என்றால் “சுயம்”; ஆகவே ஸ்வதர்மம் என்பது “சுயத்தின் தர்மம்”.

அல்லது, இப்படி வைத்துக்கொள்ளலாம், ஒரு கொசு வெறுமனே உட்கார்ந்திருந்தால், ஒருவேளை நீங்கள் அதை விட்டுவிடலாம். ஆனால் அது கடிக்கத் தொடங்கினால், நீங்கள் அதை அடித்துவிடுவீர்கள். இதுதான் பருப்பொருளின் இயல்பு. அதைப்போல, அர்ஜுனன், “ நான் எப்படி என் சகோதரனை, என் தாத்தாவை, மற்றும் என் குருவைக் கொல்லமுடியும்,” என்று யுத்தத்தின் எதிர்ப்பக்கத்தில் இருந்தவர்களைப்பற்றி வருந்தும்போது, கிருஷ்ணன் அவனிடம் கூறுகிறார், “ஒரு போர் வீரனாக உனது தர்மம், போரிடுவதுதான். அதிலிருந்து விலகி ஓடினால், நீ ஒரு கோழையாகப் பார்க்கப்படுவாயே தவிர, ஒரு அமைதியான நபராக அல்ல. இதற்கு வெகு காலம் முன்னரே நீ அமைதி குறித்துப் பேசியிருக்கவேண்டும். இப்போது நீ யுத்தகளத்தில் நின்றுகொண்டிருப்பதால், நீ கொன்றாக வேண்டியுள்ளது. இது உனது விருப்பமோ அல்லது அவர்களுடையதோ அல்ல; இது பருப்பொருளின் வழி.”

மீறுகைகள் தொந்தரவைத் தூண்டுகின்றன

பருப்பொருளானது எல்லைகளுடன் உள்ளது. எல்லைகளின் மீறல் இருந்தால், உதாரணமாக உங்கள் எதிரி எல்லையைக் கடக்கிறார் என்றால், அங்கே தொந்தரவு இருக்கும். உங்கள் அண்டை அயலார், நண்பர், வாழ்க்கைத்துணை, குழந்தை, மற்றும் உலகத்தில் இருக்கும் மற்ற ஒவ்வொருவருடனும் இதுதான் உண்மையாக இருக்கிறது. ஒவ்வொருவருக்கும், ஒரு எல்லை உண்டு, உங்களுக்கு அவர்கள் எவ்வளவு அன்பானவர்களாக இருந்தாலும், அது பொருட்டல்ல. நாம் எல்லையைப் பராமரித்தால்தான், பருப்பொருள் உலகத்தில் அனைத்தும் செயல்படமுடியும். எல்லையின் எந்த மீறலும், வன்முறையைத் தூண்டும். அது வார்த்தைகளுடன் ஆரம்பிக்கலாம், அதைத் தொடர்ந்து தள்ளிவிடுவதும், பிறகு வெட்டுவதும் நிகழலாம். உங்களுக்கு அது நிகழாது என்று எண்ணிவிட வேண்டாம்; நீங்களும் அதைச் செய்வீர்கள். இதுதான் பருப்பொருளின் வழி.

சுயதர்மத்தைப் பின்பற்றுவதற்கு, நீங்கள் உள்முகமாகத் திரும்பவேண்டும்.

நீங்கள் அதனுடன் போராட விரும்பவில்லை என்றால், எல்லைகள் இல்லாத சுயத்தின் வழியாகிய உங்கள் சுயதர்மத்தை நீங்கள் பின்பற்றவேண்டும் என்று கிருஷ்ணன் கூறுகிறார். அப்போது நீங்கள் இங்கு அமர்ந்துகொண்டு, எல்லா இடங்களிலும் இருக்கமுடியும்; அல்லது நீங்கள் இங்கே அமர்ந்துகொண்டு, எங்குமே இல்லாமல் இருக்கமுடியும். அதற்கு அர்த்தம், அங்கே மீறல் இருக்காது நீங்கள் யார் எல்லையையும் மீறமாட்டீர்கள், யாரும் உங்கள் எல்லையையும் மீறமாட்டார்கள். இதனை நீங்கள் அனுபவபூர்வமாக உணர்ந்தால்,  யுத்தத்தில் போரிடுமாறு நான் உங்களுக்குக் கூறவேண்டியதில்லை. ஆனால் நீங்கள் பருப்பொருள் விதிகளின்படி வாழ்ந்துகொண்டு, சண்டையைத் தவிர்க்க முயன்றால், அது எதற்கும் உதவாது;  நீங்கள் அப்போது சண்டையிடத்தான் வேண்டும்.

சுயதர்மத்தைப் பின்பற்றுவதற்கு, நீங்கள் உள்முகமாகத் திரும்பவேண்டும். நீங்கள் பருப்பொருளின் விதிப்படி வாழ்ந்தால், மோதல்கள் எப்போதும் ஒரு அடிதான் தள்ளியிருக்கிறது. நீங்கள் அவற்றைத் தாமதிக்கவேண்டும் இல்லையென்றால் நீங்கள் தவிர்க்கவியலாமல் யாருடனாவது மோதுவீர்கள். ஒவ்வொரு உயிருக்கும் அதற்கே உரிய தர்மம் உள்ளது. ஒருவருக்கு எது நல்லதோ, அது மற்றவருக்கு நல்லதாக இல்லாமல் இருக்கலாம். ஒரு அரசருக்கென்று ஒரு தர்மம் உள்ளது; ஒரு போர் வீரருக்கு, மற்றொரு தர்மம் இருக்கிறது. ஒரு கணவருக்கு, ஒரு தர்மம் உள்ளது; ஒரு மனைவிக்கென்று, மற்றொரு தர்மம் இருக்கிறது. பெற்றொருக்கு ஒரு தர்மம உள்ளது; குழந்தைகளுக்கு மற்றொரு தர்மம் உள்ளது. இவை அனைத்தும் வெவ்வேறு ஆர்வங்கள் கொண்டவை, மற்றும் மக்களின் தர்மம், எந்தப் புள்ளியிலும் மோதிக்கொள்ளக்கூடும்.

உங்களை யோகாவில் நிலை நிறுத்திக்கொள்ளுதல்

அதனால்தான் கிருஷ்ணர் கூறினார், “யோகஸ்த குரு கர்மானி”, அதாவது, “முதலில் யோகாவில் உங்களை நிலை நிறுத்திக்கொள்ளுங்கள்; பிறகு செயல்படுங்கள்”. யோகா என்பது ஒரு தர்மம், மற்றும் யோகா என்றால் ஒருமை. முதலில் உங்களை யோகாவிலும், பிறகு மற்ற தர்மங்களிலும் உங்களை நிலை நிறுத்திக்கொள்ளுங்கள். மேலும் ஒவ்வொரு முனையிலும், மற்றவர்களுடன் நீங்கள் மோதிக்கொள்ளாத விதத்தில் அதைச் செயல்படுத்துங்கள். ஆகவே, உலகத்தில் செயல்படத் தொடங்குவதற்கு முன்பாக, முதலில் உங்களை யோகாவில்  நிலைப்படுத்திக்கொள்ளுங்கள். செயல் என்று வரும்பொழுது, நம் ஒவ்வொருவருக்கும், ஒரு வித்தியாசமான தர்மம் உண்டு.

உலகத்தில் செயல்படத் தொடங்குவதற்கு முன்பாக, முதலில் உங்களை யோகாவில் நிலைப்படுத்திக்கொள்ளுங்கள்.

நீங்கள் குறைந்தபட்ச எதிர்ப்புடன் ஒரு கூட்டத்தினைக் கடந்து செல்லக்கூடிய அளவுக்கு, உங்கள் தர்மத்தை நீங்கள் வடிவமைக்கவேண்டும். எந்த வழியாக இருந்தாலும், சிறிதளவேனும் எதிர்ப்பும், உராய்வும் இருக்கும். ஆனால் நீங்கள் அதிகமான உராய்வை ஏற்படுத்தினால், நீங்கள் எங்கும் சென்றடையமாட்டீர்கள். இந்தக் கலாச்சாரத்தில் வேறூன்றியுள்ள ஆழமான ஞானம் இது. சமீபத்தில்கூட, உலகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மோதல் குறித்து கேட்கப்பட்டபொழுது, நாட்டின் அரசியல் தலைவர்களுள் ஒருவர், ஒரே வரியில் கூறினார்: “ இது யுத்தத்தின் காலம் அல்ல.” ஏனென்றால் நாம் கழிகளுடன் அல்லது வாள்களுடன் சண்டையிட்டுக்கொண்டிருக்கவில்லை; இனி ஒரு யுத்த காலம் ஒருபோதும் இல்லை என்ற அளவுக்கு நமது யுத்த கருவிகள் உள்ளன. அந்த வழியில் விஷயங்களை அமைதிப்படுத்த முயன்றால், அதன் விளைவாக எழும் உராய்வு அனைத்தையும் எரித்துவிடும்.

யோகா – உண்மையான சுயதர்மம்

தற்போது, ஒரு அணு ஆயுதப்போர் எந்தக் கணத்திலும் நிகழக்கூடும் என்பதைப்போல், ஒரு சாத்தியக்கூறு இருப்பதாக மக்கள் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். யாரோ ஒருவர் இரண்டு தவறுகளைச் செய்தால், அது நம்மை அந்தத் திசையில் நகர்த்திவிடக்கூடும். ஆகவே, உங்களை யோகாவில் நிலை நிறுத்திக்கொள்வது முதல் விஷயமாக உள்ளது. யோக நிலைகள் பெரிய தசைகளைக் கட்டமைப்பது குறித்ததல்ல, அவை ஸ்திரத்தன்மை குறித்தது. “ஸ்திரசுகமாஸனம்” – உங்கள் ஆசனம் சுகமாகவும், ஸ்திரமாகவும் இருக்கவேண்டும்.

நீங்கள் பேரண்ட விழிப்புணர்வைப் புரிந்துகொள்ளவில்லை என்றாலும், நாம் அனைவரும் ஒரே மண்ணிலிருந்து வந்துள்ளோம், மற்றும் அதே மண்ணுக்கு மீண்டும் திரும்பிச் செல்வோம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். நமது உடல்கள் ஒரே கட்டுமானப் பொருளால் உருவாக்கப்பட்டது. உங்களை மட்டுமே ஒரு உடலாக நீங்கள் உணரலாம், ஆனால் இந்த உடல்கூட எல்லாவற்றுடனும் ஒருமித்து இருக்கிறது. நாம் அனைவரும் ஒரே குமிழியில் இருந்துதான் காற்றினை சுவாசித்துக்கொண்டு இருக்கிறோம். இது எல்லாமே ஒன்றுதான் என்று நீங்கள் விழிப்புணர்வடைந்தால், நீங்கள் எந்தத் திசையில் செல்ல விரும்பினாலும், குறைந்தபட்ச எதிர்ப்புடன் வாழ்வில் பயணிப்பதற்கு உங்களை அனுமதிக்கும் ஒரு தர்மத்தை நீங்கள் உருவாக்குவீர்கள். இதுதான் சுயதர்மம்.