யோகா & ஞானம்

எந்த விதமான வாழ்வியல் சூழலிலும் எப்படி முழுமையான உற்சாகத்துடன் இருப்பது?

நீங்கள் சிலநேரங்களில் உற்சாகமின்றி, வாழ்வின் மகிழ்ச்சியை உணரமுடியாமல் இருக்கிறீர்களா? இந்தப் பதிவில், “முழுமையான” சாத்தியத்தில் வாழ்வது என்ற கருத்துக்குள் ஆழமாகப் பிரவேசிக்கும் சத்குரு, உங்கள் வாழ்க்கையில் ஒரு ஆனந்தமயமான சூழலை உருவாக்குவதற்கு, உங்களது உணர்ச்சிரீதியான ஆற்றலை எப்படித் தன்வயப்படுத்தி, நிர்வகிப்பது என்பதைக் குறித்த ஆழ்ந்த ஞானத்தை வழங்குகிறார்.

முழுமையாக இருப்பது - வெற்று வேகத்துடன் இருப்பது

கேள்வியாளர்: நமஸ்காரம், சத்குரு. எனது கேள்வி, நீங்கள் கூறுவதைப்போல் “எப்போதும் முழுமையாக இருப்பது” என்பதைப் பற்றியது. நாங்கள் ஆசிரமத்தில் இருக்கும்பொழுது, “முழுமை” என்று நான் அழைக்கும் ஏதோ ஒன்றை உணரமுடிந்தது. ஆனால் என் வழக்கமான குடும்பம், வேலை, காலக்கெடுக்கள் போன்றவைகளுக்கு திரும்பிச் செல்லும்பொழுது, அது எப்படியோ மறைந்துவிடுகிறது. இந்த முழுமையான உற்சாக நிலையை எப்படிப் பராமரிப்பது? இதற்காக நான் மேல்நிலை வகுப்புகளில் பங்கேற்கவேண்டுமா?

சத்குரு:  முழுமையாக இருப்பது என்றால், நீங்கள் எப்போதும் “வெற்று வேகத்துடன்” இருப்பது என்று அர்த்தமல்ல. முக்கியமான விஷயம் என்னவென்றால், அனுபவரீதியாக முழுமையாக இருக்கிறீர்கள். செயல்பாட்டை பொறுத்த அளவில், முழுமை என்பதே இல்லை.  நீங்கள் எவ்வளவு செய்தாலும், மேலும் அதிகமாக ஏதோ ஒன்றைச் செய்வதற்கும், மேலும் சிறப்பாகச் செய்வதற்குமான சாத்தியமும் எப்போதும் இருக்கிறது. உங்கள் வாழ்க்கை அனுபவம் முழுமையாக இருக்கிறதா என்பதுதான் கேள்வி. அனுபவரீதியாக முழுமையாக இருப்பதன் உச்சபட்ச அம்சம் என்னவென்றால், அனைத்தையும் அவை உள்ளபடியே நீங்கள் உணர்கிறீர்கள்.

அனைத்தையும் உள்ளபடியே உணர்தல் என்பது சுவாசம், ஒரு மரம், உணவு, மண், மற்றும் ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் உள்ளடக்குகிறது. பிரபஞ்சத்தின் ஒரு குறிப்பிட்ட தனிச்சிறப்பு மிக்க நிகழ்வை , “பின்னிப்பிணைதல்”, என்ற வார்த்தையால் இன்றைக்கு விஞ்ஞானிகள் விவரிக்கின்றனர். யோகத்தில், “ஒத்திசைவு” என்ற வார்த்தை எப்போதும் பயன்படுத்தப்படுகிறது. ஒட்டுமொத்த பிரபஞ்சமும் ஒத்திசைவுடன் உள்ளது; எதுவும் தொடர்பற்று இல்லை. ஒவ்வொரு இணைஅணுத் துகளும் மற்ற ஒவ்வொன்றுடனும் இணக்கத்தில் உள்ளது; இல்லையென்றால், இந்த சிக்கலான அமைப்பு செயல்படாது. அப்படிப்பட்ட இணக்கமான தன்மைக்கு நீங்கள் வந்தால், அப்போது நீங்கள் முழுமையாக இருக்கிறீர்கள் என்று நான் கூறுவேன். ஆனால் அது வெகு தொலைவில் இருப்பதாகத் தோன்றலாம்.

வாழ்வின் சாத்தியங்களைக் கைப்பற்றுதல்

அதைப்போல், இது என்னுடைய மனம், மற்றும் அது உங்களுடைய மனம். சில நேரங்களில் நாம் உடன்பட்டு, ஒன்றாகிவிட்டதாக எண்ணி, ஒன்றுடன் ஒன்றாக இருக்கக்கூடும். ஆனால் அடுத்த கணமே, இது எனது மனம், மற்றும் அது உங்கள் மனம் என்றாகிவிடுவதை நீங்கள் பார்ப்பீர்கள். ஆனால் என் வாழ்வு மற்றும் உன் வாழ்வு என்பதைப் போன்ற ஒரு விஷயம் இல்லை. வாழ்வு என்பது பிரபஞ்சத்தின் தனித்துவமான நிகழ்வு. இது, வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பிரபஞ்சம். நீங்கள் சிறிதளவு கைப்பற்றியுள்ளீர்கள், நான் சிறிதளவு கைப்பற்றியுள்ளேன். உங்கள் வாழ்வின் உணர்தல் எவ்வளவு மேம்பட்டுள்ளது என்பது எவ்வளவு உயிர்த்தன்மையை நீங்கள் கைப்பற்றுகிறீர்கள் என்பதைச் சார்ந்தது. ஆகவே, யோகமுறை என்பது, குறிப்பிட்ட செயல்முறைகள் மற்றும் வழிமுறைகள் மூலமாக நீங்கள் வாழ்வின் மிகப்பெரும் சாத்தியமாக உருவெடுப்பதைப் பற்றியதாக இருக்கிறது.

அதிகம் செய்வதாலோ, அதிகம் சிந்திப்பதாலோ, அல்லது மற்றவர்களைக்காட்டிலும் சிறந்த விஷயங்களைப் பெற்றிருப்பதாலோ இல்லாமல், ஆனால் வெறுமனே ஒரு உயிராக இங்கு இருப்பதனால் மட்டுமே, நீங்கள் ஒரு பெரும் “இருப்பாக” ஆகமுடியும். வெறுமனே இருப்பாக வாழ்வது சாத்தியம்தான், ஆனால் அதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு முன்னேற்பாடு தேவைப்படுகிறது. அது சோப்பு குமிழிகளை ஊதுவதைப் போன்றது – நீங்கள் பயிற்சி செய்யவேண்டும். உதாரணமாக, நாம் சோப்பு குமிழிகளை ஊதும்பொழுது, உங்கள் குமிழியைவிட, என்னுடையது பெரியதாக வந்தால், அப்போது நான், “அந்தப் பெரிய குமிழியைப் பாருங்கள்; அது என்னுடையது” என்று சொல்லக்கூடும். ஆனால் இரண்டு குமிழிகளுமே இறுதியில் வெடிக்கத்தான் செய்கிறது. அப்போது, “இது என்னுடைய காற்று” என்று நான் உரிமை கொண்டாடமுடியாது. அனைத்துமே ஒரே காற்றுதான்.

அடுத்த கணமே, இது எனது மனம், அது உங்கள் மனம் என்றாகிவிடுவதை நீங்கள் பார்ப்பீர்கள்.

ஷாம்பவி மஹாமுத்ராவுடன் நீங்கள் என்ன செய்வதற்கு முயற்சிக்கிறீர்கள் என்றால், உங்களை அதிக சக்திவாய்ந்தவராக்கிக்கொள்வதற்கோ அல்லது செயல்திறனை அதிகரித்துக்கொள்வதற்கோ அல்ல. அது ஒரு விளைவு மட்டுமே. விளைவுக்காக ஒருபோதும் செயல்படாதீர்கள். நீங்கள் ஒரு மாமரம் நடுவதாக வைத்துக்கொள்வோம்; அதன் பிறகு நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், மண், உரம், நீர், சூரியவெளிச்சம், மற்றும் மரத்தின் ஊட்டச்சத்து குறித்து கவனித்துக்கொள்வது மட்டும்தான். மரம் நன்றாக வளர்ந்தால் மாம்பழங்கள் வரும்.

பிரச்சனை என்னவென்றால், மக்கள் மாம்பழத்தில் மட்டும்தான் ஆர்வம் கொள்கின்றனர், மரத்தில் ஆர்வம் இல்லை. மேலும் மண் பரப்புக்குக் கீழே என்ன இருக்கிறது என்பதில் ஒருவருக்கும் ஆர்வமில்லை: அதாவது, வேர்கள். நீங்கள் மாம்பழத்தை மட்டுமே விரும்பினால், முடிவில், எல்லாமே தோற்றமெய்மையாகவே இருக்கும். ஒரே விஷயம் என்னவென்றால், அப்படிப்பட்ட மாம்பழங்களை உங்களால் சாப்பிடமுடியாது. இந்த விதமான அணுகுமுறையுடன் வாழ்க்கை செயல்படுவதில்லை.

மனரீதியான பிரச்சனையை கையாளுதல்

ஆகவே, இந்த உயிரின் திறனை மட்டும் நீங்கள் அதிகரிக்கவேண்டும். அதிகமாகச் செயல்படுவதற்கு முயற்சிக்காதீர்கள் ஏனென்றால் அது உங்களைக் கொல்லக்கூடும். தற்போது, ஒவ்வொருவரும் மன அழுத்தம், மனரீதியான நோய்கள் போன்றவை பற்றி அவை ஒரு சாதரண நிகழ்வுகள் போன்று அதிகம் பேசுகின்றனர். ஒரு மனரீதியான பெருந்தொற்று வரவிருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கையிடும் அளவுக்கு இது இருக்கின்றது.

ஒரு பெருந்தொற்று என்றால் என்ன? அடிப்படையில் அது என்னவென்றால், ஒரு சில மக்களுக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்றால், நாளடைவில் நம் அனைவருக்கும் அது ஏற்படும். மனரீதியான ஒரு பெருந்தொற்று பற்றி நாம் பேசும்போது, ஏறக்குறைய அனைவருமே ஒரு காலகட்டத்தில் சமநிலையில்லாதவர்களாக கருதப்படுவார்கள் என்பதே அதன் பொருள். இது வெகு தூரத்தில் இல்லை. துன்பப்படுவது சாதாரணமானது என்று மக்கள் நினைக்கும்போது, அவர்கள் ஏற்கெனவே மனநிலை பாதிப்பில் இருக்கின்றனர் என்றுதான் அர்த்தம்.

உங்களது துன்பத்திற்குக் காரணமாக இருப்பது வேறு யாரோ அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் துன்பப்படுவது ஏனென்றால், உங்களுக்குள் எழும் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் எப்படிக் கையாள்வது என்று உங்களுக்குத் தெரியவில்லை.

ஒரு மனநலக் காப்பகத்தில் அப்படித்தான் இருக்கிறது. மருத்துவரைத் தவிர, ஒவ்வொருவரும் தாங்கள் சாதாரணமாக இருப்பதாக நினைக்கின்றனர். உங்களது துன்பத்திற்குக் காரணமாக இருப்பது வேறு யாரோ அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். நீங்கள் துன்பப்படுவது ஏனென்றால், உங்களுக்குள் எழும் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் எப்படிக் கையாள்வது என்று உங்களுக்குத் தெரியவில்லை. உங்களுடைய புலன் உறுப்புகள் நீங்கள் விரும்பும் விதமாகச் செயல்படவில்லை என்றால், நீங்கள் துன்பமடைவீர்கள். உங்களது விரல்கள் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதைச் செய்யாமல், ஆனால் உங்கள் கண்களைக் குத்துவதற்குத் தொடங்கினால், நீங்கள் துன்பமடைவீர்கள்; அது உங்களைக் குருடாக்கிவிடக்கூடும்.

ஆனந்தமான சூழலை உருவாக்குதல்

அதைப்போலவே, தற்போது, உங்கள் எண்ணங்களும், உணர்ச்சிகளும் வெளிப்பட்டு, உங்களைக் குத்தி, குருடாக்குவது மட்டுமல்லாமல், நோய்வாய்ப்படவும் வைக்கிறது. இது அனைத்தும் நிகழ்வது ஏனென்றால், நீங்கள் வாழ்க்கையை பகுதிகளாகப் பிரித்து, அதை இப்படித் தீர்மானிப்பது அல்லது இதை அப்படித் தீர்மானிப்பது என்று எண்ணிக்கொண்டு, தனித்தனியாகக் கையாள முயற்சிக்கிறீர்கள். முழுமையான தன்மையில் இருப்பது என்றால், நீங்கள் பித்துப்பிடித்த ஒரு நபரைப்போல் வெறுமனே செயல்பட்டுக்கொண்டு இருப்பது என்று அர்த்தமல்ல. முழுமையான தன்மையில் இருப்பது என்றால் உணர்வுபூர்வமாக நீங்கள் முழுமையில் இருக்கின்றீர்கள்.

இதை இந்த விதமாகப் பார்ப்போம்: தற்போது முழுமையான தன்மையில் இருப்பதுபற்றி கவலைவேண்டாம். அதற்குத் தேவையான சூழலை மட்டும் அமைத்துக்கொள்ளுங்கள். முழுமையான தன்மையில் இருப்பதற்கு, மிகவும் தேவைப்படும் ஒரு சூழல் என்னவென்றால், நீங்கள் உங்கள் இயல்பிலேயே ஆனந்தமானவராக இருப்பதுதான். உங்கள் எண்ணங்களும், உணர்ச்சிகளும் நீங்கள் விரும்புவதைச் செய்தால், நீங்கள் ஆனந்தமாக இருப்பீர்கள். ஆனந்தம் இலக்கு அல்ல. இந்த உயிர் வளமடைவதற்காகத் தேவைப்படும் சூழல்தான் ஆனந்தம்.

அந்த சூழலை நீங்கள் உருவாக்காமல், எப்படியாவது அதை மேம்படுத்திக்கொள்ளலாம் என்று எண்ணினால், பிறகு உங்களுக்கான ஒரே ஆனந்தம், உங்களைச் சுற்றிலும் இருக்கும் ஒவ்வொருவரும் உங்களைக்காட்டிலும் மோசமாக இருந்தால் உங்களுக்குள் ஏற்படும் அந்த ஒரு ஆனந்தம் மட்டும்தான். அது ஆனந்தம் அல்ல – அது ஒரு நோய். ஆகவே, நீங்கள் மேலும் வகுப்புகளில் பங்கேற்கவேண்டுமா? ஒரே ஒரு கணத்தில் செய்யக்கூடியது என்னவோ, அதற்கு ஒரு ஆயுட்காலம் மற்றும் தொடர் வகுப்புகள் தேவைப்படுவது ஏனென்றால் பெரும்பாலான மக்கள் தவணைகளில் வருகின்றனர். நீங்கள் முழுமையாக எங்களிடம் வந்தால், உங்களுக்கு ஒரே கணத்தில் அதை நாம் செய்துவிடுவோம்.

உணர்ச்சிரீதியான ஆற்றலை தன்வசப்படுத்துதல்

உங்களுக்கும், மற்ற பலருக்கும், பாவ ஸ்பந்தனா என்றழைக்கப்படும் ஒரு வகுப்பு உள்ளது. அது முற்றிலுமான ஒரு உணர்ச்சிரீதியான புத்தாக்கம். முந்தைய எந்தத் தலைமுறையைக்காட்டிலும், இந்தத் தலைமுறையினருக்கு இது அதிகம் தேவைப்படுகிறது. பொதுவாகக் கூறினால், 21 ஆம் நூற்றாண்டுத் தலைமுறையினர் உணர்ச்சிரீதியாக இறுக்கமானவர்கள். அவர்கள் எல்லா விதமான விஷயங்களையும் கூறுவார்கள், ஆனால் உண்மையில் அவர்களுக்குள் எதையும் வெளிப்படுத்துவதற்கு அவர்களால் முடியாது. இது நல்லது கிடையாது. நீங்கள் உணர்ச்சிரீதியாக தடையற்று இருக்கவேண்டும் ஏனென்றால் உணர்ச்சி என்பது ஒரு அபாரமான சக்தி.

உணர்ச்சிகரமாக இருப்பது பலவீனத்தின் அறிகுறி என்ற தவறான கருத்து மக்களிடம் உள்ளது. துயரம் ஒரு உணர்ச்சியாக இருப்பதைப்போல, ஆனந்தம் ஒரு உணர்ச்சியாக இருக்கிறது. உணர்ச்சியானது, இனிமையானதா அல்லது இனிமையில்லாததா என்பது வேறு விஷயம். உணர்ச்சி என்பது ஒரு பலவீனம் அல்ல, ஆனால், அது மனிதரை உந்தித்தள்ளும் ஒரு ஆற்றலாக இருக்கிறது. உங்களில் பெரும்பாலோருக்கும், உங்களது உணர்ச்சியே உங்களின் வலிமையான பகுதியாக இருக்கிறதேயன்றி, உங்களது உடலோ, காரண அறிவோ, அல்லது சக்தியோ அல்ல.

இது நல்லது கிடையாது. நீங்கள் உணர்ச்சிரீதியாக தடையற்று இருக்கவேண்டும் ஏனென்றால் உணர்ச்சி என்பது ஒரு அபாரமான சக்தி..

ஏதோ ஒன்றைக்குறித்து நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படும்போதுதான், நீங்கள் உண்மையில் முழு வேகத்தில் செயல்படுகிறீர்கள். ஆனால், ஏராளமான கணக்கீடுகளின் காரணமாக, இது வெளிப்பாடு காணப்படுவதில்லை. நீங்கள் உருவாக்கும் எல்லா கணக்கீடுகளும், வரம்புக்கு உட்பட்ட தரவுகளுடன் இயங்கும் வரம்புக்கு உட்பட்ட காரண அறிவிலிருந்து வருகிறது. உலகத்தைப்பற்றியும், உங்களைச் சுற்றியுள்ள உயிர்பற்றியும் நீங்கள் கொண்டிருக்கும் எல்லா தீர்மானங்களும் அதன் அடிப்படையில்தான் இருக்கிறது. பிரபஞ்சத்தின் இயல்பு எப்படிப்பட்டது என்றால், அது எங்கு தொடங்குகிறது மற்றும் எங்கு முடிவடைகிறது என்பதை அறிவியல் சார்ந்த மக்களோ அல்லது மதம் சார்ந்த மக்களோ அறிந்து கொள்ள இயலவில்லை.

உயிரின் புத்திசாலித்தனத்தை விழித்தெழச்செய்தல்

அது கோடிக்கணக்கான துண்டுகள் கொண்ட ஒரு திருகுவெட்டுப் புதிர் போன்று இருக்கிறது, ஆனால் நீங்கள் ஐந்து துண்டுகளை மட்டும் கண்டுபிடித்துவிட்டு, அது எந்த மாதிரி தோன்றுகிறது என்று ஒரு முடிவுக்கு வருகிறீர்கள். இதைச் செய்யாமல் இருப்பதே சிறந்தது. உங்களது புத்திசாலித்தனம் செயலூக்கத்துடன் இருப்பதை நீங்கள் விரும்பினால், உங்கள் வாழ்க்கைப் பற்றி உண்மையில் உங்களுக்கு எதுவும் தெரியவில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் அல்லது எங்கு செல்வீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? நாம் புரிந்துவைத்துள்ள சில விஷயங்கள் சமூகரீதியாக மட்டுமே தொடர்புடையவை, ஆனால் இருத்தலின்படி, உங்கள் உயிர் வாழ்க்கை குறித்து ஒரு துளியளவும் உங்களுக்குத் தெரியாது. “எனக்குத் தெரியாது”, என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டால், உங்கள் புத்திசாலித்தனம் கூர்மையாகும்.

உங்கள் உடல் உறங்கினால்கூட, உங்களது புத்திசாலித்தனம் கூர்கவனத்துடன் இருக்கவேண்டும். இது உயிருக்குத் தேவையாக இருக்கிறது. மதம், தத்துவம், கருத்தியல்களின் முடிவுகள் அல்லது நீங்கள் உருவாக்கியுள்ள உங்களுக்கே உரிய விஷயங்களைப் பின்பற்றுவதன் மூலம், உங்களது புத்திசாலித்தனத்தை நீங்கள் உறங்கவைத்துவிட்டால், வாழ்வில் நீங்கள் பெறவேண்டியதை இழந்துவிடுவீர்கள். வாழ்வின் இயல்பு எப்படி இருக்கிறது என்றால், அடிப்படையில், நாம் அனைவரும் இழப்பவர்களாக இருக்கிறோம் ஏனென்றால் காலம் ஒன்றுதான் நம்மிடத்தில் இருக்கிறது. மற்றவை அனைத்தும் கற்பனையே. நம்மிடத்தில் இருப்பது காலம் மட்டுமே என்ற நிலையில், அதை நாம் ஒவ்வொரு கணமும் இழந்துகொண்டிருக்கிறோம். ஆகவே, எந்தவழியில் பார்த்தாலும், நீங்கள் “இழப்பவராக” இருக்கிறீர்கள் – குறைந்தபட்சம் ஆனந்தமான மனிதராக இருங்கள்.