விழிப்புணர்வுடன் வாழ்தல்

மிகமிக அதிகம் என்பது எவ்வளவு? அக்கறை மற்றும் நுகர்வை, உணர்திறனுடன் சமன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள்

தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் உணர்வுகள் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? உங்களுக்கான உணவை நீங்கள் விளைவிக்கும் நிலையில், தாவரங்களை உணவாக எடுத்துக்கொள்வதுடன், அவற்றின் மீது அக்கறை கொள்வதை எப்படி சமரசம் செய்துகொள்வது என்று போராடுகிறீர்களா? உணர்திறன் மற்றும் இணைத்துக்கொள்ளுதலுடன் எழும் இந்தத் தடுமாற்றத்தை அணுகுவது எப்படி என்று இந்தப் பதிவில், சத்குரு ஆழமான அறிவை வழங்குகிறார்.

கேள்வியாளர்: சத்குரு, நான் ஒரு தாவரப்பிரியை. என் உணவை இயற்கையாக நானே வளர்த்துக்கொள்வதுடன், அதைச்செய்வதற்கு மற்றவர்களுக்கும் ஊக்கமளிக்கிறேன். நான் பிராணிகளின் மீதும் பிரியம் கொள்கிறேன். பிராணிகளின் பதில்வினைகள் நன்றாகத் தென்படுகின்றது, ஆனால் தாவரங்கள் அதேபோல் பதில்வினை அளிப்பதாக நான் நம்புகிறேன், மேலும் அவற்றுள் சிலவற்றுடன் என்னால் தொடர்புகொள்ள முடிகின்றது. அதனால், நான் அவற்றை எப்படிச் சாப்பிடமுடியும்?

சத்குரு: உங்கள் “குழந்தைகளை” நீங்கள் சாப்பிடமுடியுமா என்று நீங்கள் கேட்கிறீர்கள். உங்கள் குழந்தைகளாக நீங்கள் கருதுவதை சாப்பிடுவது நல்லது, ஏனென்றால் நீங்கள் சாப்பிட வேண்டியதைவிட அதிகமாக ஒருபோதும் சாப்பிடமாட்டீர்கள். அதை நீங்கள் குறைத்துக்கொள்வதுடன், நீங்கள் எதைச் சாப்பிடுகிறீர்களோ அதனுடன் அதிக உணர்வுடனும் இருப்பீர்கள்.

இணைத்துக்கொள்ளுதல் இல்லாத வல்லமை: பேரழிவுக்கான செயல்முறை

எந்த ஒரு மனிதரையும் குறிப்பிட்ட சாத்தியங்களுடன் வல்லமை அளித்து, ஒரு சக்திவாய்ந்த செயல்முறைக்கு தீட்சை வழங்குவதற்கு முன்பு, அவர்களுக்குள் இந்தப் படியை எடுப்பதில் நாம் எப்போதும் உறுதி செய்துகொள்கிறோம்: “நான் உலகத்திற்கே ஒரு தாயாக இருக்கிறேன்.” அது இல்லாமல், நாம் அவர்களை வல்லமைப்படுத்துவது கிடையாது ஏனென்றால் இணைத்துக்கொள்ளும் தன்மை இல்லாத வல்லமை ஒரு அபாயகரமான விஷயம். அது உங்களுடைய தனிமனித இயல்பு குறித்ததாக இருக்கலாம், அல்லது உங்கள் குடும்பம், சமூகம், தேசம், இனம், மதம், அல்லது வேறு எதுவாகவும் இருக்கலாம் – இந்த எல்லா விஷயங்களுமே கொடுமையான சக்திகளாகியுள்ளன. கடந்த பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளில், இந்த பூமியில் அவை பெரும் எண்ணிக்கையிலான மக்களைக் கொன்று குவித்துள்ளன.

நீங்கள், “என் குலம், என் வம்சம், என் இனம், என் மதம், என் தேசம், என் இது, என் அது,” என்று கூறும்பொழுது, அது அடிப்படையில் இணைத்துக்கொள்ளுதல் இல்லாமை என்பதுதான். நீங்கள் இணைத்துக்கொள்ளும் தன்மையில் இல்லாதபோது, உங்களை வல்லமையாக்காமல் இருப்பது சிறந்தது. வல்லமை இல்லையென்றால், நீங்கள் சிறிது பாதிப்பைத்தான் ஏற்படுத்துவீர்கள். வல்லமையுடன், நீங்கள் அளவிடமுடியாத பாதிப்பை ஏற்படுத்துவீர்கள்.

உலகத்துக்கு ஒரு தாய் போல இருந்து, ஒவ்வொரு உயிரையும் உணரும் திறனுடன் இருப்பது மேலானது

தற்போது, ஒரு தலைமுறையாக, நாம் அதிசிறந்த வல்லமையுடன் இருக்கிறோம். ஆயிரம் வருடங்களுக்கு முன்னால், ஆயிரம் மனிதர்கள் சேர்ந்து செய்யமுடிந்ததை, இன்றைக்கு ஒரு மனிதரால் செய்துவிடமுடிகிறது. ஏனென்றால் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் நாம் வல்லமை பெற்றிருக்கிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலை இருக்கும்போது, உலகத்துக்கு ஒரு தாய் போல இருந்து, ஒவ்வொரு உயிரையும் உணரும் திறனுடன் இருப்பது மேலானது. உணவு சாப்பிடாமல் உங்களால் பிழைத்திருக்கமுடியாது. நீங்கள் சாப்பிட வேண்டியுள்ளது. உங்களது சொந்த “குழந்தைகளை” நீங்கள் சாப்பிடவேண்டுமென்றால், எப்படிச் சாப்பிடுவீர்கள்? ஆரம்பத்தில், நீங்கள் துன்பப்படுவீர்கள், ஆனால் சிறிது காலம் கழித்து, நீங்கள் அதனுடன் இணக்கமாகிவிடுவீர்கள்.

நீங்கள் அக்கறைகொள்ளும் ஏதோ ஒன்றை அழிக்கவேண்டுமென்றால், நீங்கள் அதனைக் கூடுமானவரை குறைந்தபட்சமாகத்தான் செய்வீர்கள். தேவைக்கு அதிகமாக ஒருபோதும் நீங்கள் செய்யமாட்டீர்கள். நமது உணவு, செயல்பாடு, மற்றும் ஒவ்வொன்றுடனும் இது நிகழ்ந்தால், பல வழிகளிலும், நாம் உலகத்தைப் புரட்டிப் போட்டுவிடுவோம். விலங்குகள் கதறுகின்றன, அதனால் அவை பதிலாற்றுகின்றன; மற்றும் தாவரங்கள் கதறுவதில்லை, அதனால் அவை பதிலாற்றுவதில்லை என்ற எண்ணத்துடன், விஷயங்களை வேண்டுமென்றே அற்பமாக்கும் பொறிக்குள் விழுந்துவிடாதீர்கள். அவை கதறவில்லை என்று யார் கூறியது? உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு நுண்ணுயிரியும் அவற்றுக்கே உரிய வழியில் பாதிப்பினால் கதறுகின்றன.

உயிரை உணரும் திறனுடன் இருப்பது

நான் மண் காப்போம் பயணத்தில் இருந்தபொழுது, அனைவரும் என்னிடம் கேட்டவாறு இருந்தனர், “இவை அனைத்தையும் எப்படி நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள்? நீங்கள் மண் விஞ்ஞானியா அல்லது சுற்றுச்சூழலாளரா?” நான் ஒரு சூழலியளாளரும் அல்ல, மண் விஞ்ஞானியுமல்ல; நான் நிச்சயமாக ஒரு சுற்றுச்சூழலாளர் அல்ல. இந்த பூமியின் மற்ற எந்த ஒரு புழுவையும் போன்றவன்தான் நான். ஒரு புழுவிடம் நீங்கள் கேட்டால், அதைச் சுற்றிலும் இருக்கும் மண்ணுக்கு என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பதை அது அறியுமா? அது நிச்சயமாக அறிந்திருக்கிறது ஏனென்றால் அதனுடைய வாழ்வை மண் பாதிக்கிறது. அது உங்கள் வாழ்க்கையையும் பாதித்துக்கொண்டிருக்கிறது, ஆனால் நீங்கள் அதை உணர்வதற்கான உணர்திறன் அற்றுப்போயிருக்கிறீர்கள்.

நீங்கள் அதைக் கவனிப்பதில்லை ஏனென்றால் வாழ்க்கைக்கு என்ன நிகழ்ந்துகொண்டு இருக்கிறதோ அதைவிடவும், உங்கள் தலைக்குள் நிகழ்ந்துகொண்டு இருப்பது அதிக முக்கியமானதாகிவிட்டது. இல்லையென்றால், அது கவனிக்கக்கூடியதுதான். ஏதோ ஒன்றை உங்களுடைய பாகமாக நீங்கள் பார்க்கிறீர்கள் என்றால், இயல்பாகவே நீங்கள் அதை உணரும் திறனுடன் இருப்பீர்கள். இந்த தாவரப்பிரியை, பிராணியின் அம்மா என்ற வார்த்தைகளையெல்லாம் விடுங்கள் – இது அதனை மிகவும் சாதாரணமாகப் பார்ப்பதற்கான விதம். ஆனால் நியாயமாகப் பார்த்தால், ஏதோ ஒரு வழியில் உங்களின் ஒரு பாகமாக இல்லாத எந்த விஷயமாவது இந்த உலகத்தில் இருக்கிறதா? நீங்கள் இதுவரை வாழ்ந்துள்ள காலங்களில், உங்கள் வெளிமூச்சை எந்தத் தாவரம், எந்த உயிரினம், அல்லது நுண்ணுயிரி தனக்குள் உள்வாங்கியது என்பது உங்களுக்குத் தெரியாது.

ஏதோ ஒன்றை உங்களுடைய பாகமாக நீங்கள் பார்க்கிறீர்கள் என்றால், இயல்பாகவே நீங்கள் அதை உணரும் திறனுடன் இருப்பீர்கள்.

ஏதோ ஒரு வழியில், நீங்கள் எல்லாவற்றுடனும் தொடர்புடையவராக இருக்கிறீர்கள். வாழ்வை உணரும் திறன் கொள்வதும், நம்மைச் சுற்றிலும் இருக்கும் உயிர்களைக் குறித்து இணைத்துக்கொள்ளுதலுடன் இருப்பதும் மிகவும் முக்கியமானது. ஒரு பெண்ணாக, ஒரு தாயாக இருப்பதுதான் இணைத்துக்கொள்ளுதலோடு இருப்பதற்கான ஒரே வழி என்று நீங்கள் எண்ணினால், அது நல்லதுதான், ஆனால் “அம்மா”வாக வேண்டாம் ஏனென்றால் தாய்மார்கள் வழக்கமாக அற்பமான விஷயங்களைச் செய்கின்றனர். அவர்கள் முற்றிலும் பாரபட்சமாக இருப்பதற்கு மரபுரீதியாகவும், உள்தன்மையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளனர். அவர்களது குழந்தைகளைப் பாதுகாக்கும் மிக முக்கியமான ஒன்றுக்காக, குழந்தைகளின் சார்பில் ஆதரவாக அளவுகடந்த பாரபட்சத்துடன் இருப்பதே ஒரு தாயின் இயல்பாக உள்ளது.

பிழைப்பு தாண்டிய கண்ணோட்டம்

அது உங்களுக்கு ஆதரவாக இருக்கும்வரை நீங்கள் ஆனந்திப்பீர்கள். அதுவே உங்களுக்கு எதிராகத் திரும்பும்போது, அது எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று நீங்கள் பார்ப்பீர்கள். அதுதான் பிழைத்திருத்தலின் உந்துதல். அதனை எல்லா இடங்களிலும் விரிவுபடுத்தாதீர்கள், ஏனென்றால் பிழைத்திருத்தலின் உந்துதல் எப்போதும் “நீயா நானா” என்றுதான் இருக்கிறது. பிழைப்பு செயல்முறையைத் தாண்டிய ஒரு புத்திசாலித்தனம் மனிதரிடம் உள்ளது. அதுதான் உயரவேண்டியுள்ளது. இந்த இரண்டு அடிப்படையான விஷயங்களும் உங்களுக்குள் இருக்கிறது: பிழைத்திருத்தலுக்கான உங்கள் உந்துதல் மற்றும் விரிவடைதலுக்கான உங்கள் பேரார்வம்.

விரிவடைதலுக்கான பேரார்வத்தை நீங்கள் வல்லமைப்படுத்தவேண்டும், பிழைத்திருத்தலுக்கான உந்துதலை அல்ல. ஏனென்றால், இந்த அளவுக்கான புத்திசாலித்தனம் மற்றும் வல்லமையுடன், பிழைத்திருத்தலுக்கான உந்துதலை நீங்கள் வல்லமையாக்கினால், அது மிகவும் அழிவுகரமான ஒரு செயல்முறையாக இருக்கும்.