நடப்புகள்

சத்குருவுடன்

In the Grace of Yoga

மற்றும் யக்ஷா 2023

உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 2,800 பேர் ஈஷா யோக மையத்திற்கு நேரடியாக வருகை தந்ததோடு, 10,000க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் மூலமாக மஹாசிவராத்திரிக்கு முன்னதாக நடைபெற்ற 'In the Grace of Yoga' நிகழ்ச்சியில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியின்போது, சக்திவாய்ந்த செயல்முறைகள் மற்றும் வழிகாட்டுதலுடன் கூடிய தியானங்கள் மூலம் யோகாவின் பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து அனுபவித்து உணர்ந்திட சத்குரு பங்கேற்பாளர்களுக்கு வழிகாட்டினார். மஹாசிவராத்திரிக்கு பங்கேற்பாளர்கள் தயாராவதற்கு உதவும் விதமாக இந்த நிகழ்ச்சி சிறப்பாக கட்டமைக்கப்பட்டிருந்தது. மேலும், பங்கேற்பாளர்களிடம் உள்நிலை மாற்றத்தையும் நுட்பமான உள்நிலை பார்வையையும் இந்நிகழ்ச்சி கொண்டு வருகிறது.

நாள் 1: வாழ்க்கையின் அற்புதத்தை அனுபவிப்பதற்கான ஓர் அழைப்பு

பிப்ரவரி 15 அன்று, அருள் தன்மை என்பதன் உண்மையான அர்த்தம் என்ன, அது எப்படி ஒருவரை பொருள்நிலை தர்க்க அறிவிற்கு அப்பால் சென்று, வாழ்க்கையின் அற்புதத்தை உண்மையில் அனுபவித்திட உதவுகிறது என்பது பற்றிய சத்குருவின் ஆழமிக்க உரையுடன் நிகழ்வு தொடங்கியது. பின்னர் அவர், உள்நிலை மாற்றம் வழங்கும் ஒரு தியான செயல்முறையை பங்கேற்பாளர்களுக்கு வழங்கியபோது, ஆனந்தத்தாலும் நன்றியுணர்வினாலும் பலரது கண்களிலும் பரவசக் கண்ணீர் வழிந்தோடியது .

"நான் இதற்கு முன்பு இரண்டு முறை மஹாசிவராத்திரிக்கு சென்றிருக்கிறேன். ஆனால் இந்த முறை, இந்நிகழ்ச்சிக்குப் பதிவுசெய்து என்னை தயார்ப்படுத்திக்கொள்ள முடிவு செய்தேன். சத்குரு நம்மை தனிப்பட்ட முறையில் வழிநடத்துவதால், அது அற்புதமாக இல்லாமல் வேறெப்படி இருக்க முடியும்? முதல் வகுப்பிலிருந்தே, சூழ்நிலையை மிகச்சரியாக அமைத்து, ஆழமான தியானத்தை சத்குரு எங்களுக்கு வழங்கினார். அது என்னை ஆனந்தத்தில் திளைக்கச் செய்தது,” என்று பங்கேற்பாளர்களில் ஒருவர் பகிர்ந்து கொண்டார்.

யக்ஷா: இந்துஸ்தானி கிளாசிக்கல் பாடகர் ஜெயதீர்த் மேவுண்டியுடன் பக்தி ரசத்தில் திளைத்த தருணங்கள்

இந்துஸ்தானி பாரம்பரிய இசைப் பாடகரான ஜெயதீர்த் மேவுண்டியின் இசை நிகழ்ச்சியின் ஒரு மயக்கும் மாலைப் பொழுதாக யக்ஷா 2023ன் முதல்நாள் நிகழ்ச்சி தொடங்கியது. மஹாசிவராத்திரியின் முன்னோட்டமாக, ஆண்டுதோறும் பாரம்பரிய இசை மற்றும் நடனத்தின் மூன்று நாள் கொண்டாட்டமாக இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. நிகழ்ச்சி மேடையிலிருந்து இறங்கிய பிறகு, “நான் சத்குருவை YouTubeல் பின்தொடர்ந்து வருகிறேன். இங்கு வந்து சத்குருவிற்காக சேவைசெய்ய வேண்டுமென்ற கனவு எனக்கு இருந்தது. அதனால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இங்குள்ள சூழல் தெய்வீகமானது." என்று திரு.மேவுண்டி அவர்கள் பகிர்ந்துகொண்டார்.

நாள் 2: பஞ்சபூத சுத்திகரிப்பு மற்றும் சமநிலை

இரண்டாவது நாள், சக்திவாய்ந்த பஞ்சபூத சுத்திகரிப்புக்கான செயல்முறையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து சத்குருவுடனான ஒரு நிகழ்வில் ஞாபகப்பதிவு, கர்மா மற்றும் உங்கள் ஸ்மார்ட்ஃபோன் உங்களை எப்படி சமநிலையாக்க உதவும் என்பதைப் பற்றி சத்குரு பேசினார்! பின்னர் அவர், வழிகாட்டுதலுடன் கூடிய ஒரு தியானத்துடன் நிகழ்வை நிறைவு செய்தார்.

யக்ஷா: ஷஷாங்க் சுப்ரமணியத்தின் ஈர்க்கும் புல்லாங்குழல் இசை

கர்நாடக இசையின் புல்லாங்குழல் கலைஞர் ஷஷாங்க் சுப்ரமணியத்தின் கவர்ந்திழுக்கும் இசையால் அந்த மாலைப் பொழுது சிறப்பாக அமைந்தது. அவரது நுட்பமான இசை வெளிப்பாடுகள் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது. நிகழ்ச்சிக்குப் பிறகு பேசிய அவர், “ஈஷா யோக மையத்திற்கு நான் வருவது இது நான்காவது முறை. இங்கு வந்து நிகழ்ச்சிகளை நடத்துவது எனக்கு ஓர் பிரமாதமான அனுபவமாகும். வன்முறையில்லா அமைதியான சூழலுக்கான இலக்கை நோக்கி அயராது உழைக்கும் அற்புதமான மனிதர்களின் சமூகத்துடன் இங்கிருப்பது எப்போதும் ஒரு அற்புதமான அனுபவம்.

நாள் 3: சரியான சூழலை உருவாக்குதல்

மஹாசிவராத்திரிக்கு முந்தைய கடைசி நிகழ்வில், இது ஒரு மதம் சார்ந்த விழா அல்ல, ஆனால் கோள்களின் நிலையிலும், வானியல் அமைப்பிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது மனித உடலமைப்பில் இயற்கையான சக்தி எழுச்சிக்கு வழிவகுக்கிறது என்பதையெல்லாம் எடுத்துரைத்து, சத்குரு மஹாசிவராத்திரிக்காக பங்கேற்பாளர்களைத் தயார் செய்தார். ஒருவரின் நல்வாழ்வுக்காகவும் ஆன்மீக வளர்ச்சிக்காகவும் இந்த வாய்ப்பை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்த முடியும் என்பதை அவர் குறிப்பாகச் சுட்டிக்காட்டினார்.

யக்ஷா: மாதவி முத்கலின் ஒடிசி நடனக் குழுவின் கலைநயமிக்க நிகழ்ச்சி

யக்ஷாவின் இறுதிநாள் மாலையில், காளிதாசரின் காவியமான குமாரசம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, பார்வதியின் சிவ பக்தியைக் கூறும் ஒரு கதையைச் சித்தரிக்கும் வகையில் ஒடிசி நடனம் நடைபெற்றது. நேர்த்தியான நடன அசைவுகளால், மாதவி முத்கலின் நடனக் குழு வழங்கிய இந்நிகழ்ச்சி பார்வையாளர்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது .

“இந்தியாவிற்கு வருவது எனக்கு இதுவே முதல்முறை. இந்த செழுமையான கலாச்சாரம் என்னை வியக்க வைக்கிறது. வண்ணங்கள், இசை, நடனம் மற்றும் இங்குள்ள எல்லாவற்றிலும் ஆன்மீகத் தன்மை இருப்பதாகத் தெரிகிறது,” என்று இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பங்கேற்பாளர் பகிர்ந்து கொண்டார்.

நாள் 4: மஹாசிவராத்திரியின் உற்சாகக் கொண்டாட்டம்

மஹாசிவராத்திரி அன்று, பங்கேற்பாளர்கள் தியானலிங்கத்தில் சத்குருவுடன் ஒரு சிறப்பு பஞ்சபூத கிரியாவில் கலந்துகொண்டனர். பஞ்ச பூதங்களைத் தூய்மைப்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த செயல்முறையான இது, "பஞ்சபூதங்களின் அற்புதத்தை உணர்தல்" என்ற மையப்பொருளைக் கொண்டு நிகழ்ந்த இந்த நிகழ்ச்சியின் நிறைவாக அமைந்தது.

யோக மரபில், பஞ்ச பூதங்களைத் தூய்மைப்படுத்துவது மிகவும் அடிப்படையான ஒரு ஆன்மீக செயல்முறையாகும். பஞ்சபூத கிரியா உடலையும் மனதையும் உறுதிப்படுத்துகிறது; உளவியல் ரீதியான உறுதியற்ற தன்மைகளைச் சமநிலைப்படுத்துகிறது. மேலும், பலவீனமான நிலையில் இருப்பவர்களைப் பலப்படுத்துகிறது.

“பஞ்சபூத கிரியா நிகழ்ச்சியை, நான் ஈஷாவில் மேற்கொண்ட எல்லா நிகழ்ச்சிகளையும் விட மிகவும் வித்தியாசமானதாக உணர்ந்தேன். முழு செயல்முறையின் போதும் என் முதுகுத்தண்டில் சக்திவாய்ந்த  ஏதோவொன்று நடந்துகொண்டிருந்தது. பின்னர், எனது உள்நிலையில் முற்றிலும் தூய்மைப்படுத்தப்பட்டதைப் போல உணர்ந்தேன்” என்று Grace of Yoga பங்கேற்பாளர் ஒருவர் பகிர்ந்துகொண்டார்.

இவ்வாறு தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டு, பங்கேற்பாளர்கள் ஆதியோகியின் முன்னிலையில் இரவு ழுழுவதும் நடைபெறும் உற்சாகத் திருவிழாவில் பங்கேற்கத் தயாராக இருந்தனர். அவர்களில் ஒருவர் இவ்வாறு பகிர்ந்து கொண்டார், “நள்ளிரவு தியானம் சிறப்பான ஒரு அனுபவமாக இருந்தது. நான் உண்மையிலேயே யோகாவின் அருளிலும், சத்குருவின் அருளிலும் இருப்பதாக உணர்ந்தேன்.