பகிர்வுகள்

ஒரு நல்ல நோக்கத்தை முன்னிறுத்தி ஒரு  சைக்கிள் பயணம்: குழந்தைகளின் கல்விக்கு துணை நிற்கும் விதமாக இந்தியா முழுவதும் 2,500 கி.மீ. பயணம்

கிராமப்புற குழந்தைகளின் கல்விக்கு ஆதரவாக 23 நாட்களில் இந்தியா முழுவதும் 2,500 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டிய ரமேஷ் ஜெயராமின் பயணத்தைப் பற்றி அறியுங்கள். தனது பயணத்தின் வழித்தடம் எங்கும் முன்பின் அறிந்திராத நபர்களின் கனிவான உபசரிப்பை பெற்று, தான் நிர்ணயித்த இலக்கை அவரால் வெற்றிகரமாக அடைய முடிந்தது. பேரார்வம், மனிதாபிமானம் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றின் எழுச்சியூட்டும் ஒரு அனுபவம் இது!

ஒரு பயிற்சிக்கான பயணமாக 100 கிலோமீட்டர்கள் சைக்கிளில் சென்றுவிட்டு வீடு திரும்புவது ஒருவிதமானது. ஆனால் 24-25 நாட்களுக்கு தினமும் 100+ கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டுவது என்பது வேறு விஷயம். நான் தனி ஆளாக பயணத்தைத் தொடங்கியபோது என் மனதில் இருந்தது என்ன? கோயம்புத்தூரிலிருந்து குர்கானுக்கு எனது காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, என் மனதில் நான் சைக்கிள் ஓட்டிய அனுபவத்தை மெல்ல மெல்ல அசைபோடும் போது எனது பயணதூரத்தை நான் உணர துவங்கினேன்.

2,500 கிலோமீட்டர் பயணத்திற்கான விதை

புற்றுநோயிலிருந்து தப்பிப்பிழைத்தவரும், 7 முறை Tour de France[1] என்ற 3600 கி.மீ. நீளும் வருடாந்திர போட்டியின் சாம்பியனானவருமான, எனது ஹீரோக்களில் ஒருவரான லான்ஸ் ஆம்ஸ்ட்ராங், ஊக்கமருந்து பயன்படுத்தியதற்கான ஆதாரங்களால் அவரது பட்டங்கள் பறிக்கப்பட்டது பற்றி நான் மிகுந்த கோபத்தில் இருந்தேன். போதைப்பொருள் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் இடைவிடாமல் முன் வைக்கப்பட்டபோது, அவர் எப்போதும் அதை மறுத்ததுடன் அவ்வாறு கூறியவர்கள் பற்றி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சிறிது காலத்திற்குப் பிறகான அவரது ஒப்புதல் வாக்குமூலம் எனக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரான்ஸில் ஒவ்வொரு கோடையிலும் 23 நாட்களுக்கு நடக்கும் டூர் போட்டிகளில் அவரது 7 வெற்றிகளை நான் தொடர்ந்து பார்த்துள்ளேன்.

எனது ஹீரோ சாமானிய மனிதனாக வீழ்ந்ததை ஒரு தீவிர ரசிகனாகக் கண்டு நான் உடைந்து போனேன். அப்போதுதான் எனது சொந்த நீண்ட தூர சைக்கிள் பயணத்திற்கான விதைகள் விதைக்கப்பட்டன என்று நினைக்கிறேன். Tour de Franceன் அதே கால அளவில் 23 நாட்கள் சைக்கிள் ஓட்டுவதன் மூலம், எனது சாதனையை நான் சாத்தியமாக்க முடியும். மேலும் வீழ்ச்சியடைந்த என் ஹீரோவின் புண்படுத்தும் நினைவுகளுக்கு இதை ஒரு மாற்றாக ஆக்க முடியும். எனவே குர்கானில் இருந்து கோவைக்கு பயணத்தை தொடங்கினேன்.

[1] 3,600 கிலோமீட்டருக்கு மேல் செல்லும் வருடாந்திர சைக்கிள் போட்டி

தனிப்பட்ட ஒரு பயணம் என்பதைத் தாண்டி...

இது ஒரு தனிப்பட்ட பயணமாகத் தொடங்கினாலும் கேள்வி என்னவென்றால், அது மகத்தானதாக மாறியது எப்படி என்பதுதான்?! ஈஷா வித்யாவைப் பற்றி எனக்குத் தெரியும். மேலும், ஒரு திரைப்பட ஆசிரியரான நான் கல்வித்துறையில் ஈடுபட்டுள்ளதோடு, தரமான கல்வியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டுள்ளேன். எனவே கிராமப்புற குழந்தைகளின் கல்விக்கு விழிப்புணர்வையும் நிதியையும் திரட்டி உதவ முடிவு செய்தேன். ஈஷா வித்யாவிற்காக 33 லட்சம் ரூபாய் திரட்டும் இலக்குடன், பயணத்தைத் தொடங்கினேன்.

நிதி திரட்டுவதில் உதவிட தன்னார்வலர்களின் ஒரு குழுவை நான் ஒருங்கிணைத்தேன்; தகுதியுள்ள நன்கொடையாளர்களிடம் கோரிக்கையை முன்வைத்தேன். மேலும், Fuel a Dream என்ற மக்களிடம் நிதி திரட்டும் தளத்துடன் இணைந்தேன்.

எனது 2,500-கிமீ பயணம் முழுவதிலும், பயணத்தில் நான் பயன்படுத்தும் சைக்கிள் நிறுவனமான Speroல் உள்ளவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தொழில்நுட்ப உதவியளித்து, எனக்கு ஆதரவளித்தனர். பயணத்தின் போது எனது காரை ஒரு ஆதரவு வாகனமாக ஓட்டிக் கொண்டுவருவதற்காக ஜெய்பால் சிங் அவர்களை நியமித்தேன். 29 டிசம்பர் 2022 அன்று எல்லாம் கச்சிதமாக அமைக்கப்பட்டு பயணம் தொடங்கியது.

தொடங்கிய பயணம்…

முதல் வாரத்தில் எனக்கும் என் உடலுக்கும் நடக்கும் விஷயங்களைப் பழக்கப்படுத்திக் கொள்வதற்கான காலமாக இருந்தது. ஒவ்வொரு இரவும், நான் ஒரு புதிய இடத்திற்குச் சென்றடைந்து, அங்கேயே தங்குமிடத்தைக் கண்டுபிடித்தாக வேண்டும். நான் என் பயணத்தின் வழித்தடத்தில், அதன் சில பகுதிகளை ரசித்தேன். ஆனால் பெரும்பாலும், உடலைத் தயார் செய்துகொண்டு, அந்த தூரத்தையும் இலக்கையும் அடைவதே நோக்கமாக இருந்தது. இரண்டாவது வாரத்திலிருந்து, அது அருமையான ஒன்றாக ஆனது! நான் என் சைக்கிள் பயணத்தை உண்மையிலேயே ரசிக்க ஆரம்பித்தேன். நான் ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரம் மற்றும் கர்நாடகம் ஆகிய 5 மாநிலங்களைக் கடந்து இறுதியாக தமிழ்நாட்டிற்குள் நுழைந்தேன்.

இந்த மாநிலங்கள் ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான தன்மையைக் கொண்டுள்ளன - ஒலிகள், இயற்கைக் காட்சிகள் மற்றும் வாசனைகள் - இது ஆச்சரியமாக இருக்கிறது. சைக்கிள் போன்ற ஒரு திறந்த வாகனத்தில் இந்த நாட்டில் பயணம் செய்வதென்பது, காரில் அமர்ந்து பயணிப்பதை விட மிகவும் வித்தியாசமானது. சைக்கிளின் மெதுவான வேகம், கிராமப்புறங்களின் அழகை இரசிப்பதற்கும் அனுபவிப்பதற்கும் வாய்ப்பாக அமைந்தது. எனக்கு நுட்பமான வாசனை திறன் உள்ளது, எனவே மத்தியப் பிரதேசத்திலுள்ள பெருஞ்சீரக வயல்களின் நறுமணத்தையும், கர்நாடகாவில் டிராக்டரில் ஏற்றப்படும் புதிதாக விளைந்த சிவப்பு மிளகாய் வற்றல் நெடியின் வாசனையையும் என்னால் அனுபவிக்க முடிந்தது.

துருவ நட்சத்திரத்தைத் தொடர்ந்த எனது அந்தி மாலைப் பயணத்தை நான் குறிப்பிட விரும்புகிறேன். ஒவ்வொரு நாள் மாலையும் நான் சூரியன் மறையும் போது, அதே இடத்தில் துருவ நட்சத்திரத்தைப் பார்ப்பேன். இது எனக்கு ஒரு உறுதியான நம்பிக்கையாக இருந்தது, "நான் திடமாக இங்கிருக்கிறேன். உனது பயணத்தின் இறுதியிலும் உன்னைக் காண்பேன்!" என்று அது கூறுவது போல் இருந்தது. தொடர்ந்து 24 நாட்களுக்கு சூரிய அஸ்தமனத்தை காண்பதென்பது தேசிய தலைநகர் பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு உண்மையிலேயே ஒரு பரிசுதான்.

இந்தியாவின் மனிதநேயமிக்க மனிதர்கள்

எனது பயணத்தின் வழித்தடம் முழுவதும், முன்-பின் அறிந்திராத பல்வேறு மனிதர்களின் அன்பை நான் அனுபவித்தேன். அதற்கு பிரதிபலனாக என்னால் நன்றியை மட்டுமே வெளிப்படுத்த முடியும், "நன்றி!" அந்த மக்கள் தங்கள் கருணையின் வெளிப்பாட்டால் செய்த அந்த எளிய செயல்கள் இல்லாமல் போயிருந்தால், என்னால் இந்த பயணத்தை சரியான நேரத்தில் முடித்திருக்க முடியாது.

என் சைக்கிள் டயர் பஞ்சர் ஆனபோது, அதிநவீன சைக்கிள் என்பதால் யாரும் தொட முன்வராத நிலையில், சாலையோர மெக்கானிக் ஆரிஃப் தைரியமாக அந்தப் பணியைச் செய்தார். நர்மதா ஆற்றின் மீதுள்ள ஒரு பாலத்தில் புகைப்படங்களை கிளிக் செய்யும் போது, நான் தவறிவிட்ட எனது சைக்கிளிங் கண்ணாடியைத் திருப்பித் தருவதற்காக அங்கே ஒவியம் வரைந்து கொண்டிருந்த ஒரு ஓவியர் குழுவினர் 25 கிமீ தூரம் பயணித்து வந்தனர்.

இந்த கருணை மிக்க செயல்கள் மனிதநேயத்தின் மீது உங்களுக்கு நிச்சயம் நம்பிக்கையை ஏற்படுத்தும். சைக்கிளிங் கண்ணாடி இல்லாமல், என்னால் இரவு முழுவதும் சவாரி செய்ய முடியாது. மேலும், பஞ்சர் சரி செய்யப்படாமல் இருந்திருந்தால், நான் ஒரு நாளையே இழந்திருப்பேன். ஏனென்றால், சைக்கிளை இன்னொரு வாகனத்தில் ஏற்றி அருகிலுள்ள நகரத்திற்கு எடுத்துச் செல்வதைத் தவிர வேறு வழி இல்லை. சிறிய விஷயங்கள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது, அது மனித நேயத்தின் விளைவால் நிகழ்ந்தது! இந்தப் பயணம் முழுவதும் நான் அனுபவித்து உணர்ந்தது இதுதான்.

விடைபெறுதல்…

நான் இந்த பயணத்தில் இடைவெளி எடுத்தேனா? ஆம், 18 வது நாளில், என் உடல் தளர்ந்துவிட்டது, நான் ஒரு நாள் முழுவதும் ஓய்வெடுக்க வேண்டியிருந்தது. அப்படி நான் செய்ததில் மகிழ்ச்சிதான். அந்த இடைவெளி என் உடலையும் உயிர்சக்தியையும் புத்துணர்ச்சியடையச் செய்தது; மேலும், எந்த பிரச்சனையும் இல்லாமல் கோயம்புத்தூரை அடைய என்னால் முடிந்தது. நான் இந்த கட்டுரையை எழுதும்போது, ஈஷா வித்யாவிற்காக 31 லட்சம் நிதி திரட்டியுள்ளோம்! ஒரு பயணத்தின் நோக்கம் பலரின் உதவியால் சாத்தியமானதைப் பற்றி நினைத்து நான் நெகிழ்ச்சியுடன் இருக்கிறேன். இதை சாத்தியமாக்கியவர்கள் ஒவ்வொருவருக்கும் நான் தலைவணங்குகிறேன்.

வணக்கம்!

ரமேஷ் ஜெயராம், குர்கான்