சத்குரு எக்ஸ்குளூசிவ்

கிருஷ்ணனின் சுவாரஸ்யமான வெளிப்பாடுகள்: விளையாட்டுத்தனம், ஆழ்ந்த தன்மை, மற்றும் ஒரு தீர்க்கதரிசனம்

தெய்வீகம் மற்றும் மனிதத்தின் சிக்கலான ஒரு கலவையாக, வியப்பூட்டும் அசரீரியுடன் துவங்கிய கதைக்கு நாயகனான கிருஷ்ணன், சந்தேகமில்லாமல் வரலாற்றில் மிகவும் புதிரானவர்களுள் ஒருவராகவே இருக்கிறார். “லீலா – விளையாட்டுத்தனத்தின் பாதை” என்ற நிகழ்ச்சியை சத்குரு அறிமுகப்படுத்தி, வாழ்வின் மிக ஆழமான பரிமாணங்களை விளையாட்டுத்தனமாக வெளிப்படுத்துவதற்கு என்ன தேவைப்படுகிறது என்பதை விளக்கினார்.

கிருஷ்ணன், கட்டுக்கடங்காத உற்சாகமிக்க குழந்தையாக, ஓயாமல் குறும்புகள் செய்பவனாக, வசீகரிக்கும் குழலிசைப்பவனாக, அழகாக நாட்டியமாடுபவனாக, அனைவரும் நேசிக்கக்கூடியவனாக, உண்மையான துணிவுடைய வீரனாக, இரக்கமின்றி எதிரிகளை வீழ்த்துபவனாக, வீடுதோறும் அன்பால் இதயங்களை பரிகொடுக்கச் செய்தவனாக, கூர்மையான ராஜதந்திரம் தெரிந்தவனாக, முற்றிலும் கண்ணியமாக, மிக உயர்ந்த யோகியாக, தெய்வீகத்தின் வண்ணமிகு அவதாரமாகத் திகழ்ந்தவன்.

கிருஷ்ணன் – நுட்பமான சிக்கலும், வர்ணக்கலவையும் உருவானவன்.

“கிருஷ்ணன்” என்று நாம் குறிப்பிடும் விழிப்புணர்வின் சாராம்சத்தை நீங்கள் சுவைக்கவேண்டும் என்றால், உங்களுக்கு “லீலை” அவசியம். லீலை என்றால் விளையாட்டுத்தனத்தின் பாதை. இது கடுமையானவர்களுக்கான பாதை அல்ல. இது வெறுமனே விளையாட்டுத்தனம் குறித்தது அல்ல, ஆனால் வாழ்வின் ஆழமான அம்சங்களை விளையாட்டுத்தனமாக வெளிப்படுத்தலைக் குறித்தது. இந்த வெளிப்பாட்டை விளையாட்டுத்தனமாக உங்களால் நடத்திகொள்ள முடியாது என்றால், கிருஷ்ணன் அங்கே இருக்கமாட்டான். பெருவாரியான உலகமக்கள் வாழ்வின் ஆழமான பரிமாணங்களைத் தவறவிடுவதற்கான காரணம் என்னவென்றால், அவர்களுக்கு விளையாட்டுத்தனமாக இருப்பது எப்படி என்பது தெரியவில்லை.

இந்தப் பாதையில் நீங்கள் விளையாட்டுத்தனமாகப் பயணிக்கவேண்டும் என்றால், உங்களுக்கு அன்பு நிறைந்த இதயம், ஆனந்தம் நிறைந்த ஒரு மனம், துடிப்பான ஒரு உடல் தேவை. இல்லையென்றால் அங்கே லீலை இல்லை. ஆடலும், பாடலும் இல்லாமல் நம்மால் கிருஷ்ணனைப் பற்றிப் பேசமுடியாது. விளையாட்டுத்தனமான வழியில் வாழ்வின் ஆழமான பரிமாணங்களை ஒருவர் கண்டுணர்வதற்கு, அவர்கள் தங்களது விழிப்புணர்வு, கற்பனையுணர்வு, நினைவாற்றல், வாழ்வு, மற்றும் மரணத்துடன் விளையாடுவதற்கு விருப்பத்துடன் இருக்கவேண்டும். லீலை என்றால், யாரோ ஒருவருடன் நடனமாடுவது மட்டுமல்ல. நீங்கள் நேசிப்பவர், மற்றும் உங்கள் எதிரி இருவருடனும் நடனமாடுவதற்கு நீங்கள் விருப்பத்துடன் இருக்கவேண்டும். வாழ்வு மற்றும் மரணம் இரண்டு நிலைகளுடனும் நடனமாடுவதற்கு நீங்கள் விருப்பத்துடன் இருக்கவேண்டும். உங்களது மரணத்தின் கடைசி கணத்திலும் நடனமாடுவதற்கு நீங்கள் விரும்பினால் மட்டும்தான், அங்கே லீலை இருக்கிறது.

இந்தப் பாதையில் நீங்கள் விளையாட்டுத்தனமாகப் பயணிக்கவேண்டும் என்றால், உங்களுக்கு அன்பு நிறைந்த இதயம், ஆனந்தம் நிறைந்த ஒரு மனம், துடிப்பான ஒரு உடல் தேவை.

லீலை என்பது பேரார்வத்தின் பாதை. உங்கள் இதயத்தில் பித்துநிலை இல்லையென்றால், இந்தப் பாதையில் நீங்கள் நடக்கமுடியாது. நீங்கள் அதிகம் அறிவுசார்ந்தவர் என்றால், கிருஷ்ணன் உங்களுக்கானவர் இல்லை. உங்களுக்கு ஒரு நிலையான அறிவும் ஆனால் பித்தேறிய இதயமும் தேவை. கிருஷ்ணன் நாணயத்தின் இருபக்கம். ஒரு பக்கத்தைமட்டும் நீங்கள் பார்த்தால், அவனை நீங்கள் புரிந்துகொள்ள முடியாது. சில நேரங்களில் அவன் இந்தப்பக்கம் விழுவான், மற்றும் சில நேரங்களில் அவன் அந்தப்பக்கம் விழுவான். அவன் தனது வாழ்க்கை முழுவதும், பண்டைய ஞானத்திற்கான அதீத மதிப்புடன், நியாயமான வழியில் வாழும் தர்மத்தை நிலை நாட்டுவது பற்றியே பேசினான். அதே நேரத்தில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்களால் சுமக்கப்பட்ட பாரம்பரியங்கள், சடங்குகள், மற்றும் புராதனமான பழக்கங்களை அவன் இகழ்ச்சியுடன் அலட்சியப்படுத்தினான்.

கிருஷ்ணனின் மாயாஜால வழிகள்

அவனைச்சுற்றிலும் பலவிஷயங்கள், அறிவான விஷயங்கள், அன்பான விஷயங்கள், ஆனந்தமான விஷயங்கள், இரக்கமற்ற விஷயங்கள், கொடூரமான விஷயங்கள், மற்றும் முற்றிலும் அதிசயமான விஷயங்கள் நிகழ்ந்தன. அவனைச் சுற்றி நிகழாத ஒரே விஷயம் மந்தத்தன்மை. பித்துத்தன்மை, காதல், கொலை, சூது, ஆனந்தம், பரவசம், அதிசயங்கள் – மந்தத்தன்மை நீங்கலாக - அனைத்தும் அவனைச் சுற்றி நிகழ்ந்தன. கிருஷ்ணன், ஒரு ஆணாக, அவனது வாழ்க்கையில் அவன் மேற்கொண்ட நோக்கமாக, தெய்வீகத் தன்மை கொண்டவனாக, மனிதனாக இருக்கும் பலவீனமுடைய அதே நேரத்தில் மிகவும் உயிரோட்டமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தவனாக – இந்த எல்லா விஷயங்களும் ஒரு சிக்கலான வலைப்பின்னலாக நெய்யப்பட்டுள்ளன.

ஒரே ஒரு விஷயத்தின் பிம்பமாக மட்டும் அவனைப் பார்ப்பது சரியல்ல ஏனென்றால் அவனது வாழ்க்கையின் ஒரு அம்சத்தை மட்டும் தனித்துப் பார்ப்பதனால், அவன் முற்றிலும் திரிக்கப்பட்ட தன்மையில் முன்னிறுத்தப்படுவான். அவன் அவ்வளவு பன்முகப் பரிமாணங்களுக்கு உரித்தான நிலையில், அவனது ஒவ்வொரு பரிமாணத்திலிருந்தும் குறைந்தபட்சம் சிறிதளவேனும் நீங்கள் தொடவில்லையென்றால், அது அவனுக்கு இழைக்கப்படும் ஒரு முழுமையான அநீதியாக இருக்கும்.

அசரீரி

இன்றைய உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் மதுராவில், யாதவர்கள் என்று குறிப்பிடப்படும் ஒரு சமூகத்தில் கிருஷ்ணன் பிறந்தான். இந்த சமூகத்தில் உக்கிரசேனன் மிக முக்கியமான ஒரு தலைவனாக இருந்தான். அவன் முதுமையடைந்து கொண்டிருந்தான். அவனுக்கு அடுத்ததாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதைக் குறித்த எந்த மனசாட்சியும் இல்லாத அவனது மகனால், தந்தை இறக்கும்வரை காத்திருக்க இயலவில்லை. ஒரு அரசனுக்கு, ஆட்சியை மட்டும் குறிக்கோளாகக் கொண்ட மகன் இருந்துவிட்டால், ஒன்று அரசர் விரைவில் இறந்துவிடவேண்டும் அல்லது அவர் காட்டிற்குச் சென்றுவிடவேண்டும்; இல்லையென்றால், ஆட்சிமோகம் கொண்ட மகன் ஏமாற்றமடைகிறான்.

உக்கிரசேனனுடைய நீதிபரிபாலனமும், அரசைக் கையாளும் வழிகளையும் கண்டு கம்சன் ஏமாற்றமடைந்தான்; அவன் அதை மிகவும் பழைய பாணியானது என்று நினைத்தான். எப்போதுமே இளைய தலைமுறையானது, பழைய தலைமுறையினர் பழங்காலத்தினர் என்று எண்ணுகிறது. கம்சனுடைய அதிகார ஆசையினால் காத்திருக்க இயலவில்லை; ஆகவே அவன் தனது தந்தையையே சிறைப்படுத்தி, ஆட்சியின் தலைமைப்பொறுப்பைக் கைப்பற்றினான். கம்சன் மற்றொரு பேரரசனான ஜராசந்தனுடன் கைகோர்த்தான். ஜராசந்தன், கிழக்கு திசையிலிருந்த, கொடுங்கோன்மைக்கு பெயர்பெற்ற, இரக்கமற்ற ஒரு அரசன். அப்போது அவன் அறிந்திருந்தவரையிலான ஒட்டுமொத்த உலகத்தையும் வெற்றிகொள்வது அவனது கனவாக இருந்ததுடன், அவன் தனது இராஜ்ஜியத்தை அதிவிரைவாக விரிவுபடுத்திக்கொண்டிருந்தான். கம்சன் அவனுடன் கூட்டாளியானான், ஏனென்றால் அந்த நேரத்தில் வல்லமை பெறுவதற்கான ஒரே வழி, அதுவாகத்தான் இருந்தது.

கம்சனின் சிறிய தந்தையாரின் மகள் தேவகிக்கு, யாதவர்களின் தலைவர்களுள் ஒருவரான வாசுதேவருடன் திருமணம் நிகழ்ந்தது. திருமணம் முடிந்ததும் புதுமணத் தம்பதியரை, கம்சன் தனது தேரில் அழைத்துச் செல்லும்போது, ஒரு அசரீரி கேட்டது. வானத்திலிருந்து கேட்ட இந்தக் குரல், “கம்சனே, நீ உன் சகோதரியை திருமணம் முடித்து மகிழ்ச்சியுடன் அழைத்துச் செல்கிறாய், ஆனால் அவளது எட்டாவது குழந்தை உன்னை வதம் செய்யும். அதுதான் உன் முடிவாக இருக்கும்,” என்று கூறியது.