நடப்புகள்

மஹாசிவராத்திரி 2023: இரவு முழுவதும் ஷிவா! ஷிவா!  முழக்கம்

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற 29வது மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தில் பங்கேற்றவர்கள் கண்கொள்ளா அலங்காரக் காட்சிகளைக் கண்டுகளித்தனர். அலங்காரக் குழுவினர் இந்த ஆண்டு ஒளிரும் ராட்சத நீலநிற அல்லி மலர் வடிவ ஸ்தம்பங்களை நிகழ்வு நடைபெறும் இடம் முழுவதும் அமைத்து, அரங்கை ஒளிரவும் மலரவும் செய்தனர்.அந்தக்காட்சி, மணம் வீசும் அல்லி மலர் குளத்தால் ஆதியோகி சூழப்பட்டிருப்பதைப் போல் தோன்றியது.

நமது சிறப்பு விருந்தினரான மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்களுக்கான ஒரு சிறப்பான வரவேற்பாக இது அமைந்தது. தென்கயிலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்திற்குத் தான் வருகை தருவதற்கு முன்னதாக, ஸ்ரீசைலத்திலும் காசியிலும் உள்ள சிவன் கோயில்களைத் தரிசனம் செய்ததைத் தனது உரையில் மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் பகிர்ந்து கொண்டபோது, அவர் ஓர் ஆன்மீக யாத்திரையில் இருப்பதாக நமக்கு எண்ணத் தோன்றியது.

ஆசிரமத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட புனிதமிக்க இடங்களான சூரியகுண்டம், சந்திரகுண்டம், தியானலிங்கம், லிங்கபைரவி, நந்தி போன்ற இடங்களுக்கு சத்குருவுடன் அவர் சென்று பார்வையிட்ட போது அவரது பக்தியும் நெகிழ்வும் நம் இதயத்தைத் தொட்டது. சத்குரு அவரைக் கூடவே வழிகாட்டி அழைத்துச் சென்று அவ்விடங்களைப் பற்றி விளக்கினார்.

மக்கள் மத்தியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் இந்த மண்ணில் தன்னை உணர்தல் மற்றும் முக்திக்கான பல்வேறு பாதைகளின் இதயமாக சிவன் எவ்வாறு விளங்குகிறார் என்பதைப் பற்றி எடுத்துரைத்தார்: “ஷிவா என்பது நமது மதம், உணர்வுகள் மற்றும் ஆன்மீக சிந்தனையின் ஒட்டுமொத்த தொகுப்பாக இருக்கிறதா என்று சில சமயங்களில் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. முக்தி, மோட்சம் அல்லது நிர்வாணம் என்றும் அழைக்கப்படும் உச்சபட்ச விடுதலைக்கான பல்வேறு பாதைகளைக் கவனியுங்கள். பக்தியின் பாதை, ஞானத்தின் பாதை, யோகப் பாதை மற்றும் பலவற்றைப் பற்றி உலகெங்கிலும் உள்ள பல்வேறு மரபுகள் பேசுகின்றன. மேலும், சிவபெருமான் ஒருவரே இந்த பாதைகளுக்கெல்லாம் வழிகாட்டும் ஒளியாக உணரப்படுகிறார்.” என்றார்.

"ஆஉம் நமஹ் ஷிவாய" என்ற அவரது எழுச்சிமிக்க உச்சாடனத்தோடு அந்த இரவுக் கொண்டாட்டம் ஆரம்பமாகின.

சம்ஸ்கிருதி மாணவர்களின் நடன நிகழ்ச்சி அரங்கேறியது. நிறம், சக்தி மற்றும் அருள் தன்மையின் உருவகமாக, அவர்கள் "பஞ்சாக்ஷரம்" என்ற நடன நிகழ்ச்சியை வழங்கினர். ந-ம-ஷி-வா-ய எனும் புனிதமிக்க ஐந்து எழுத்து மஹாமந்திரத்தின் ஒரு கொண்டாட்டமாக இது அமைந்தது.

நிலாத்ரி குமார் அவர்கள் தனது புதிய கண்டுபிடிப்பான 'ஜிதார்' என்ற மின்சார சித்தாரின் மூலம் மக்களை உற்சாகம் கொள்ளச் செய்தார்.

அடுத்ததாக, பார்வையாளர்களுக்கு பல்வேறு இசை வகையிலும் மொழிகளிலும் பிரபலமான பாடகர்களின் குழுவினர் இசை விருந்து படைத்தனர். மங்கலி, குட்லே கான், அனன்யா சக்ரபொர்த்தி, நிஹார் ஷெம்பேகர் மற்றும் மீனல் ஜெயின் ஆகிய பாடகர்கள் வழங்கிய கீதங்கள் ஒன்றிணைந்த ஒரு மெல்லிசைக் கோர்வையாக நிகழ்வுக்கு உற்சாகம் சேர்த்தன.

நள்ளிரவினை நோக்கி இரவு நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், சத்குரு மேடையில் அமர்ந்து மஹாசிவராத்திரி ஏன் ஆன்மீக சாதகருக்கு மிகவும் முக்கியமானது என்பதைப் பற்றிப் பேசினார்: இந்நாளில் இயற்கையாகவே உயிர்சக்தி மேலெழுவதால்,ஒருவரின் ஆன்மீக வளர்ச்சியின் இன்றியமையாத ஒரு படியான உள்நிலை மாற்றத்திற்கு இதை ஒருவர் பயன்படுத்திக்கொள்ள முடியும். மனநிலையிலான பெருந்தொற்றைத் தடுப்பதற்கு ஒருவரின் உள்நலனில் முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய சத்குரு, ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் பதினைந்து நிமிடங்களாவது ஒரு எளிய யோகப் பயிற்சிக்காக அர்ப்பணிக்க உறுதி எடுக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

நள்ளிரவு தியானம் மற்றும் நெருப்பு நடனத்துடன் சத்குருவின் நிகழ்வு நிறைவடைந்தது. பங்கேற்பாளர்களில் பலருக்கு இந்த இரவில் அவர்கள் எதிர்பார்த்த முக்கிய அம்சமாக இதுதான் இருந்தது.

ஆரத்தி நிகழ்வைக் கண்டு பெரிதும் ஈர்க்கப்பட்ட நடிகை ஜூஹி சாவ்லா "இந்த ஆரத்தி!  கடவுளே…! பார்ப்பதற்குப் பிரமிப்பை உண்டாக்குகிறது. இது மிகவும் பிரமாதமாகச் செய்யப்பட்டது, மேலும் நமது கலாச்சாரத்தின் மீது எனக்கு மிகவும் பெருமிதத்தை உண்டாக்கியது!

கேள்வி - பதில் நிகழ்ச்சியில், சத்குரு சனாதன தர்மத்தைப் பற்றிய ஒரு கேள்விக்குப் பதிலளித்தார். நமது இருப்புநிலைக்கான அடிப்படைகளைக் கையாளக்கூடிய கோட்பாடுகளின் என்றென்றும் நிலைத்திருக்கும் ஒரு கட்டமைப்பாக அது அமைந்துள்ளதை அவர் விவரித்தார். சனாதன தர்மம் இன்று ஒரு கலாச்சாரமாகப் பார்க்கப்படுகிற அதேவேளையில், உச்சபட்ச விடுதலையை நோக்கி இட்டுச் செல்வதே அதன் அடிப்படை நோக்கம் என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

இந்த அடிப்படையில், தர்க்கரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் சரியான தீர்வுகளைத் தேடும் இன்றைய உலகத்திற்கான கருவிகளை வழங்கியுள்ள ஒரு மூலமாக ஆதியோகி விளங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பங்கேற்பாளர்களைத் தூக்கம் தழுவ முயன்ற அதிகாலை வேளையில், ஜார்ஜியாவின் பாலே நடனக் குழுவினர் பார்வையாளர்களை ஆர்வத்துடன் தங்கள் இருக்கைகளில் உட்கார வைத்து, தங்களின் அசத்தலான உற்சாக நடனத்தால் ஈர்த்தனர். புவியீர்ப்பு விசைக்கு எதிராக, காற்றில் தாவியபடி, அவர்கள் தங்கள் அழகான கலாச்சாரத்தை லட்சக்கணக்கான மக்களுக்குக் காட்சிப்படுத்தினர். ஜார்ஜிய கலைஞர்களில் ஒருவர், “இந்த அனுபவத்தைப் பெற்றதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இது எங்கள் வாழ்க்கையின் இறுதி வரை எங்களுடன் இருக்கும். சத்குருவைச் சந்தித்து, அவருக்கு முன்பாக நின்று, அவருடன் நடனமாடுவது எங்களுக்கு நம்பமுடியாததாக இருந்தது." என்றார்.

ராஜஸ்தானி நாட்டுப்புற இசையின் அடையாளமான மாமே கான் அவர்கள், திறமையான தெலுங்கு பாடகர் ராம் மிர்யாலா அவர்கள், கர்நாடகாவின் ஜனபதா நாட்டுப்புற கலைஞர் தேவானந்த வரபிரசாத் அவர்கள், கேரளத்தின் புனித கலையான தெய்யம் நடனக்குழுவினர் மற்றும் தமிழ் நாட்டுப்புற நட்சத்திரம் வேல்முருகன் அவர்கள் போன்ற, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பாரம்பரியங்களிலிருந்தும் வந்திருந்த கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் இந்த இரவு, பன்முகத்தன்மை கொண்ட ஒரு கொண்டாட்டமாக அமைந்தது.

இத்தகைய நிகழ்ச்சிகளின் பரபரப்பான கால அட்டவணையுடன், 12 மணிநேரம் மிக வேகமாகப் பறந்தோடியது! அடுத்த மஹாசிவராத்திரிக்கு என்னென்ன கொண்டாட்டம் காத்திருக்கிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.