மனநலப் பிரச்சனை உங்களை நிர்ணயிக்கவிடாதீர்கள். மனநலப் பிரச்சனைகள் குறித்தும், அதைக் கடந்து சென்று நலமடைதல் குறித்தும் சத்குரு பேசுகிறார்.
ஒரு நோயினைக் கண்டறிவதே தண்டனையின் தாக்கத்தை ஏற்படுத்தவேண்டிய அவசியமில்லை
மருத்துவரால் மருந்தானது நன்கு துல்லியமாக அளவீடு செய்யப்பட்டால், அது உங்களை மந்தமாகவோ அல்லது தூக்கக்கலக்கமாகவோ உணரச் செய்யக்கூடாது. இருப்பினும் ஒருவிதமான மயக்கநிலையை நீங்கள் உணர்ந்தால், அது உங்களை பாதிக்கலாம். ஆனால் இந்த பாதிப்பின் காரணம், நீங்கள் போதிய எச்சரிக்கை இல்லாமல் இருப்பதுதானேயன்றி, நீங்கள் அருளை உள்வாங்கும் திறனில்லாமல் இருப்பது காரணமல்ல. ஆனால் மருந்துகள் எடுத்துக்கொண்டு, பகற்பொழுது முழுவதும் நல்ல கவனத்துடன் இருக்கும் மக்கள் பலபேர் இருக்கின்றனர். அவர்கள் இரவில் சற்றுக் கூடுதலாக உறங்கக்கூடும், அது பரவாயில்லை. அருளை உள்வாங்க முடியாத அளவுக்கு நீங்கள் மந்தமாகிவிடுவீர்கள் என்கிற ரீதியில் நீங்கள் சிந்திக்கவேண்டாம். அனைத்துக்கும் மேல், உங்கள் மனநிலை குறித்த கண்டுபிடிப்பு என்னவாக இருப்பினும், குறிப்பாக உளவியல் சூழல் என்று வரும்போது, அதுவே முழுமையானது அல்ல. அது தற்போதைய ஒரு நிலை, அவ்வளவுதான்.
சங்கரன்பிள்ளையும், அவரது 10 டாலர் நிவாரணமும்
சங்கரன்பிள்ளை மனநல மருத்துவர் ஒருவரிடம் சென்று, "டாக்டர், எனக்கு ஒரு பிரச்சனை, அதாவது நான் எனது படுக்கையின் மீது உறங்கினால், என் படுக்கைக்குக் கீழே யாரோ ஒருவர் இருப்பதாக நினைக்கிறேன். ஆகவே, படுக்கைக்குக் கீழே உறங்க முயற்சித்தால், அப்போதும் என் படுக்கைக்கு மேலே யாரோ இருப்பதாக நினைக்கிறேன். நான் அளவற்ற துன்பத்தில் இருக்கிறேன், என்னால் நாட்கணக்காக, வாரக்கணக்காக தூங்க இயலவில்லை. யாரோ என் படுக்கைக்குக் கீழே அல்லது படுக்கைக்கு மேலே இருப்பதாக எப்போதும் எண்ணம் எழுகிறது" என்றார். மனநல மருத்துவர், “அடுத்த 18 மாதங்களுக்கு, வாரத்துக்கு மூன்று முறை, ஒரு குறிப்பிட்ட சிகிச்சைக்காக நீங்கள் என்னிடம் வரவேண்டும். நான் உங்களுக்கு ஒரு தள்ளுபடி அளிக்கிறேன். வழக்கமாக என் சிகிச்சைக் கட்டணம், ஒரு மணி நேரத்துக்கு 100 டாலர்கள், ஆனால் நான் உங்களுக்காக அதை எண்பதாக குறைத்துக்கொள்கிறேன். அடுத்த திங்கட்கிழமையில் இருந்து நாம் தொடங்கலாம்,” என்று பதில் கூறினார். அதற்கு சங்கரன்பிள்ளை, “இதைப் பற்றி இன்று இரவு யோசித்துவிட்டு சொல்கிறேன்,” என்று மருத்துவரிடம் கூறினார்.
மறுபடியும் அவர் வரவேயில்லை. ஆறு மாதங்கள் கழித்து, மருத்துவர் தற்செயலாக சங்கரன்பிள்ளையை ஒரு மது விற்பனைக் கடையில் சந்தித்தார். அவர் நலமுடன் இருப்பதாகத் தோன்றியது. மருத்துவர் கேட்டார், “நீங்கள் ஏன் மீண்டும் வரவில்லை? என்ன நிகழ்ந்தது?” சங்கரன்பிள்ளை பதிலளித்தார், “நீங்கள் உங்கள் கட்டணம் ஒரு மணி நேரத்துக்கு எண்பது டாலர்கள், வாரத்துக்கு மூன்று முறை, 18 மாதங்களுக்கு என்று கூறினீர்கள். அதைப்பற்றி நினைத்துக்கொண்டே தூங்கச் சென்றேன். அவ்வளவு தொகை செலவழிக்க எனக்கு விருப்பமில்லை. அன்றைக்கு நான் மது அருந்தச் சென்றேன். மது ஊழியரிடம் என் பிரச்சனையைப் பற்றி கூறினேன், அவர் பத்து டாலர்களில் என் பிரச்சனையைத் தீர்த்துவிட்டார். எப்படியென்றால், அவர் சில கருவிகளுடன் என் வீட்டிற்கு வந்து, என் படுக்கையின் கால்களை அகற்றிவிட்டார். இப்போது என் படுக்கையின் கீழ் ஒருவரும் இல்லை என்பது எனக்கு தெரியும்.”
சாத்தியக்கூறுகளில் கவனம் செலுத்துங்கள்
நோய் குறித்த கண்டுபிடிப்பு என்னவாக இருந்தாலும், அதை ஒரு தகுதி போல சுமக்காதீர்கள். இந்த அடையாளத்தை எறிந்துவிடுங்கள். அதைச் செய்வதற்கான வழிகள் உள்ளன. உங்கள் எஞ்சிய வாழ்நாளில் மருந்துகளின் உதவியுடன் இருப்பதற்கு பதில், நீங்கள் சிறிது நேரம் செலவழிக்க விரும்பினால், உங்களுக்கு எங்களால் உதவமுடியும். இது அருள் குறித்தது மட்டுமல்ல, உங்கள் வாழ்வின் பல்வேறு சாத்தியங்களை நீங்கள் தவறவிடக்கூடும். ஏனெனில், நீங்கள் யார் என்பதன் முழுமையான ஆற்றலை உணர்வதற்கு அனுமதிக்காத மருந்துகளின் பிடியில் நீங்கள் இருந்துகொண்டிருக்கிறீர்கள். ஆகவே, இத்தகைய விஷயங்களில் இருந்து வெளியில் வருவதற்கு நீங்கள் நேரம் ஒதுக்கவேண்டும்.
ஒரு பிரச்சனை இருந்தால், அதற்கு நாம் கவனம் செலுத்துவது அவசியம், ஆனால் உங்கள் மனதில் அதைப் பூதாகரமாக்கிக்கொள்ள வேண்டாம்.
உங்களுக்கு ஏதோ ஒரு நோய் இருக்கிறது என்று நீங்கள் யோசிக்கத் தொடங்கினால், அது பல வழிகளில் வாழ்க்கையைச் சிக்கலாக்கிவிடும். ஒரு பிரச்சனை இருந்தால், அதற்கு நாம் கவனம் செலுத்துவது அவசியம், ஆனால் உங்கள் மனதில் அதைப் பூதாகாரமாக்கிக்கொள்ள வேண்டாம். தங்களிடம் ஏதோ தவறாக இருக்கிறது என்று இடையறாமல் யோசனை செய்வது ஒரு மிகப்பெரிய நோய். இந்த நோயால் பல மனிதர்கள் துன்பத்தில் இருந்துகொண்டிருக்கின்றனர். யாரோ ஒருவரால் செய்ய முடிந்த ஒன்றை, உங்களால் செய்ய இயலாமல் போகலாம் – அதனால் என்ன? உங்களால் செய்யமுடிந்ததை இயன்ற அளவு சிறப்பாக செய்யுங்கள். வாழ்க்கையில் அதுதான் முக்கியம்.
மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடுவதை நிறுத்துங்கள்
யாரோ ஒருவரைப் போல் நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா என்பது உங்கள் வாழ்க்கை குறித்த கேள்வி அல்ல. உங்களால் முடிந்த அனைத்தையும் நீங்கள் செய்கிறீர்களா? – அதுதான் கேள்வி. ஒரு வெட்டுக்கிளி, புலியாகத் தேவையில்லை; அது ஒரு வெட்டுக்கிளியாகவே மிக நன்றாக இருக்கிறது. “ஒரு வெட்டுக்கிளியையும், ஒரு புலியையும் ஒப்பிடமுடியுமா?” என்று கேட்டால், அவர்களை ஏன் நீங்கள் ஒப்பிடவேண்டும்? அவர்கள் இரண்டு தனித்துவமான உயிரினங்கள். ஒரு வெட்டுக்கிளியைப் போல், ஒரு புலியால் தாவமுடியுமா? யாரோ ஒருவருடன் உங்களை ஒப்பிட்டுக்கொண்டு, நீங்கள் நோயுற்றவர் என்று எண்ணிக்கொள்வது அனைத்தும் சமூக முட்டாள்தனம்.
உங்கள் குழந்தைகளை நீங்கள் பள்ளிக்கு அனுப்பும்பொழுது, வேறொரு குழந்தையைப்போல் படிப்பில் அவர்கள் சிறப்பானவராக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் மற்ற ஏதாவது ஒன்றில் சிறப்பாக இருக்கலாம். ஆசிரியர்கள் என்ன கூறுகின்றனர் என்பதில் மட்டும் அவர்கள் கவனமில்லாமல் இருக்கலாம்; ஆனால் உடனடியாக, நீங்கள் அவர்களை மருத்துவரிடம் அழைத்துச் செல்வீர்கள். மருத்துவரும், அவர்கள் ADD, ADHD, XYZ குழந்தைகள் என்றெல்லாம் கூறுகிறார். ஆங்கிலத்தின் எல்லா எழுத்துக்களையும் பயன்படுத்திவிடுகின்றனர். ஒரு குழந்தையை ஏன் இப்படி முத்திரையிடுகிறீர்கள்?
உங்களால் முடிந்த அனைத்தையும் நீங்கள் செய்கிறீர்களா?
பல வருடங்களுக்கு முன்னர், நான் சென்னையில் ஒரு வகுப்பு நடத்திக்கொண்டிருந்தபோது இது நிகழ்ந்தது. ஒருநாள் அதிகாலை வகுப்பில், ஒருவர் அழுகையில் வெடித்தவாறு கூறினார், “என் மகள் படிக்காமல் இருப்பது குறித்து எனக்கு மிகுந்த வருத்தம். அவளுக்கு படிப்பதில் ஆர்வமில்லை. அவளுக்கு என்ன நிகழுமோ என்று எனக்கு உண்மையிலேயே கவலையாக உள்ளது.” நான் கேட்டேன், “அவளுக்கு எத்தனை வயது?” அவர், “அவளுக்கு நாலரை வயதாகிறது.” உடனே நான், “முட்டாளே, இந்த வயதில் அவள் எதையும் படிப்பதே கூடாது; ஆனால் அவள் நன்றாக படிப்பதில்லை என்று வருந்துகிறீர்கள்; அதை மறந்துவிடுங்கள்,” என்றேன்.
ஆகவே, “I’m bipolar” என்று கூறி, உங்களுக்கு நீங்களே இந்தத் தவறைச் செய்யாதீர்கள். மனதளவில் மிகக் கச்சிதமான ஆரோக்கியமுடைய யாராவது ஒரு நபராவது இங்கு உண்டா? மற்றவர்களும் வித்தியாசமான பல பிரச்சனைகளுடன், உங்களைப் போன்றுதான் உள்ளனர். அதனுடனேயே அவர்கள் ஒருவாறு செயல்பட்டுக்கொண்டு வாழ்கின்றனர். ஆகவே, மருத்துவரின் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு ஒரு கட்டத்தை எட்டியிருந்தால், அதைத் தாண்டி உங்களையே வளர்த்துக்கொள்வதுதான், எப்போதும் உங்கள் முதன்மையான இலக்காக இருக்கவேண்டும். அதற்காக சிறிது நேரத்தையும், சக்தியையும் நீங்கள் முதலீடு செய்யவேண்டும். உங்கள் நல்வாழ்வுக்காக உங்களுக்கு நேரம் இல்லை என்று கூறாதீர்கள். பிறகு எதற்காக இங்கு இருக்கிறீர்கள்?
உங்கள் நல்வாழ்வுக்காக முதலீடு செய்யும் நேரம்
உங்கள் சொந்த நலனுக்காக நேரம் இல்லாத அளவுக்கு, நீங்கள் அவ்வளவு மகத்தான குறிக்கோள் கொண்டிருக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை, பிழைப்புக்காகத்தான் நீங்கள் பணம் சம்பாதிக்கிறீர்கள். நீங்கள் உடல் நலம் குன்றியிருந்தால், உங்கள் வாழ்க்கையின் போக்கை சிறிதும் மாற்றிக்கொள்ள முடியாத விதத்தில் உங்கள் வாழ்க்கையை நீங்கள் உருவாக்குகிறீர்கள். பிரமிக்கத்தக்க ஏதாவது தோன்றினால்கூட, உங்கள் வாழ்வின் போக்கை உங்களால் மாற்றமுடிவதில்லை.
நாம் செய்ய விரும்பும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், மக்கள் தங்களது உள்தன்மையின் நலனுக்காக கவனம் செலுத்தக்கூடிய விதமான இடங்களை உள்ளடக்கிய, ஆன்மீக அடிப்படை வசதிகளை உலகத்தில் உருவாக்கவேண்டும்.
நீங்கள் ஒரு பாதையில் சென்றுகொண்டிருக்கும்பொழுது, நாளைக்கு வேறு எங்காவது பிரம்மிப்பூட்டும் ஏதாவது தோன்றினால், அந்த இடத்திற்கு உங்களால் செல்ல முடியவேண்டும். இல்லையென்றால், வாழ்வின் முக்கியத்துவம்தான் என்ன? ஒருவழிப் பாதையில் மட்டும்தான் உங்களால் செல்லமுடியும், ஏனென்றால் நீங்கள் செலுத்தவேண்டிய பல தொகைகள் நிலுவையில் உள்ளன – ஆனால், இதை நீங்கள் மாற்றுவதற்கான நேரம் இது. நீங்கள் மாற்றவில்லை என்றால், பிறகு எதுவும் மாறாது. உங்கள் ஆரோக்கியமோ அல்லது நல்வாழ்வோ, அல்லது உங்கள் ஆன்மீக செயல்முறையோ எதுவும் மாற்றமடையாது.
உங்கள் மனரீதியான பிரச்சனையைத் தீர்ப்பதற்கு, நிலத்தில் வேலைசெய்வதும், அதனுடன் தொடர்பில் இருப்பதும் சிறந்த ஒரு வழியாக இருக்கிறது. நீங்கள் மண்ணுடன் தொடர்பில் இருக்கும்போது, இயற்கையாகவே, நீங்கள் சமநிலையாகவும், ஆரோக்கியமாகவும் உணர்கிறீர்கள். முழுநேர விவசாயம் இல்லையென்றாலும், தினமும் குறைந்தபட்சம் இரண்டு, மூன்று மணி நேரங்கள் நிலத்தில் நின்று ஏதாவது செய்வது நலமாக இருக்கும். மேலும், நாம் செய்ய விரும்பும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், மக்கள் தங்களது உள்தன்மையின் நலனுக்காக கவனம் செலுத்தக்கூடிய விதமான இடங்களை உள்ளடக்கிய, ஆன்மீக அடிப்படை வசதிகளை உலகத்தில் உருவாக்கவேண்டும். தற்போது அது முற்றிலும் இல்லாமல் இருக்கிறது.
Bipolar உங்களது அடையாளம் அல்ல
உங்களது Bipolar குறைபாட்டை சிறிது காலம் நீங்கள் மறந்துவிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் சுகவீனங்களை மறந்துவிட்டு, நன்றாக வாழவேண்டும் என்பது எனது விருப்பம். உங்களுக்குள் இருக்கும் எந்த நாட்பட்ட நோயையும் தாண்டி நீங்கள் செயல்படமுடியும். ஒரு தொற்றுப்பரவல் போல, வெளியிலிருந்து வருவது என்பது வேறு. வெளியிலிருந்து ஏதோவொன்று உங்களைத் தாக்கும்போது, அதை மருத்துவர்களிடம் விட்டுவிடுங்கள். உள்ளிருந்து உருவாகும் எந்த விஷயத்தையும் தீர்ப்பதற்கு ஒரு வழி உண்டு. உங்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படும் வரை, மருந்துகள் எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால் அதிலிருந்து வெளிவருவதற்கான குறிக்கோளுடன் நீங்கள் செயல்படவேண்டும்.
இந்தக் குறுகிய வாழ்க்கையில், நீங்கள் நோயுற்று வாழவேண்டியதில்லை. நன்றாக வாழ்வதற்கு, முதன்மையானதும், முக்கியமான விஷயமாகவும் இருப்பது என்னவென்றால், உங்கள் ஆரோக்கியம் குறித்து நீங்கள் அளவுக்கதிகமாக வருத்தப்படாதிருப்பது. இது கவனமில்லாமல் இருப்பது குறித்ததல்ல. எச்சரிக்கை மற்றும் நோய் குறித்த அச்சம், இந்த இரண்டுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது – அதை வேறுபடுத்தும் கோடு உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். இப்போதிருந்து, உங்களை ஒரு Bipolar என்று அடையாளப்படுத்தாதீர்கள். அது உங்கள் பெயர் அல்ல. தற்போது, ஏதோ பிரச்சனை இருக்கிறது; உங்களுக்கு அவர்கள் மருந்துகள் அளித்துள்ளனர். ஆனால், எத்தனை மாதங்களில் நீங்கள் அதிலிருந்து வெளியில் வருவது மற்றும் அதற்காக நீங்கள் என்ன செய்ய தயாராக இருக்கிறீர்கள் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.