இந்த சரளமான உரையாடலில், சத்குரு அவரது சொந்த நகரான மைசூருவில் நடைபெறும் தசரா கொண்டாட்டங்களின் இனிமையான நினைவுகளையும், அந்த புகழ்பெற்ற ஊர்வலம் குழந்தைகளின் இதயங்களில் உருவாக்கும் பிரமிப்பினையும் பற்றி ஆவல் மேலிட பகிர்ந்துகொள்கிறார். உலகப் பிரசித்தி பெற்ற ஆயுர்வேத நிபுணர், டாக்டர். வசந்த் லாட், தசரா, நவராத்திரி மற்றும் தேவியின் முக்கியத்துவம் குறித்து, ஆயுர்வேதத்தின் கண்ணோட்டத்தில் இருந்து பேசுகிறார். தாவரங்களை, பெண்தன்மையானது அல்லது ஆண்தன்மையானது என்று எப்படி அடையாளம் காணமுடியும் என்பதையும் அவர் விளக்குகிறார்.
சத்குரு: நான் மைசூருவில் இருந்து வருகிறேன். தசரா, மைசூரு நகரின் ஒரு பெரிய நிகழ்ச்சி. ஒவ்வொரு வருடமும், தசரா ஊர்வலத்துக்காக மக்கள் கூடுகின்றனர். அப்போது அங்கே பல விஷயங்கள் நிகழ்கின்றன. எனது குழந்தைப்பருவ நாட்களிலிருந்தே, நான் பல தசரா ஊர்வலங்களுக்கு சென்றுள்ளேன். நாங்கள் மிகவும் சிறியவர்களாக இருந்தபோது, எனது பெற்றோர் எங்களை அழைத்துச் சென்றனர், அதன்பிறகு, நாங்களாகவே சென்றோம். ஆனால் எனக்கு பதினாறு அல்லது பதினேழு வயதாக இருக்கும்போது, “அந்த ஊர்வலத்தில் என்ன இருக்கிறது?” என்று நினைத்து வேறு இடங்களுக்கு சென்றோம்.
ஒரு தசரா நாளில், 40 குழந்தைகள் இருந்த ஒரு சிறிய ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்றேன். இந்தக் குழந்தைகள் எப்படி இருந்தனர் என்றால், நான் அவர்களுடன் விளையாடச் சென்றால், அவர்கள் ஓடோடிவந்து, என்னைக் கட்டியணைத்துக் கொள்வார்கள். இது எனக்கு நம்பவியலாத அளவுக்கு அவர்களது கைவிடப்பட்ட நிலையை வெளிப்படுத்தும். அவர்களிடம் நான், “இது தசரா நேரம் – நீங்கள் ஊர்வலத்தைப் பார்த்ததுண்டா?” என்று கேட்டேன். அவர்களுள் பலரும் நான்கிலிருந்து ஐந்து வயது குழந்தைகளாகவும், ஒரு சிலர் சுமார் பன்னிரண்டு வயதாகவும் இருந்தனர். அவர்கள் ஒருவர்கூட தசரா ஊர்வலத்தைப் பார்த்திருக்கவில்லை.
அவர்கள் அனைவரையும் ஊர்வலத்தைக் காண்பதற்கு அழைத்துச் செல்ல நான் முடிவு செய்தேன். எனது நண்பனிடம் இருந்து ஒரு மட்டடார் ட்ரக் வாங்கி, ஒரு பெரியவரின் துணையோடு இந்தக் குழந்தைகளை அதில் ஏற்றிக்கொண்டு, ஊர்வலம் நடைபெறும் இடம் நோக்கிச் சென்றேன். அந்தக் குழந்தைகள் ஊர்வலத்தைப் பார்ப்பதற்கு வசதியாக ஒரு நல்ல இடத்தில் நிறுத்தினேன். ஊர்வலத்தில் வந்த மஹாராஜா, யானைகள், குதிரைகளைப் பார்ப்பதில் அவர்கள் எவ்வளவு ஆர்வமும், குதூகலமும் அடைந்தனர் என்பதை என்னால் ஒருபோதும் மறக்கமுடியாது. அந்த இடத்திலேயே அமர்ந்து அழுதுவிட்டேன். ஊர்வலத்தைக் காண்பதன் அர்த்தம் அன்றைக்கு விளங்கியது.
நாம் வளர்ந்து பெரியவர்களானதுமே, சில திரைப்படங்களை அல்லது வேறு சில பொழுதுபோக்குகளைக் கண்டதும், நாம் மறந்துவிடுகிறோம். அதற்கு முன்னர், தசரா ஊர்வலங்களைக் காண்பதில் நாம் பேரார்வம் கொண்டோம், ஆனால் பின்னாட்களில், “அதில் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது? பலமுறை நான் அதைப் பார்த்துள்ளேன்,” என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அந்தக் குழந்தைகளைக் கண்ட பிறகு, “நான் மைசூருவில் இருந்தால், என்னவாக இருந்தாலும், ஊர்வலத்துக்கு செல்லவேண்டும்,” என்று நினைத்தேன்.
டாக்டர். வசந்த் லாட்: ஆயுர்வேதத்திலும்கூட தசரா போன்ற நாட்கள் முக்கியத்துவமானவை. உதாரணமாக, நவராத்திரியின்போது – தேவியின் ஒன்பது தினங்களும், இரவுகளும் – தேவியின் ஒவ்வொரு பெயருக்கும் ஆயுர்வேதத்தில் முக்கியத்துவம் உள்ளது. இவையே வனஸ்பதி மூலிகைகளின் பெயர்கள். அந்தக் குறிப்பிட்ட நாட்களில், ஒன்பது குறிப்பிட்ட மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட தேநீரை அருந்தினால், அது தெளிவு, ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியைத் தருகிறது. மேலும் வியப்பூட்டும் வகையில், அது மூன்று தோஷங்களையும் சமன் செய்து, உடலில் உள்ள நச்சு வளர்சிதை மாற்றக் கழிவுகளையும் (ama) எரிக்கிறது. ஆகவே, சம்பிரதாய சடங்கு என்றழைக்கப்படும் ஒவ்வொரு நிகழ்விலும் ஆயுர்வேதம் முழுமையாக இணைந்துள்ளது.
சத்குரு: அது ஒருவிதமாக கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. பாரம்பரிய மருத்துவம் என்பது, ஒரு மருத்துவரின் அறிவைக் குறித்ததாக இல்லை. ஒவ்வொருவரும் தங்களுக்கு என்ன செய்துகொள்வது என்று அறிந்திருப்பதைக் குறித்த விஷயமாக இருந்தது. இதன் ஒரு பகுதியாக, கிராமப்புற இந்தியாவின் 123 கிராமங்களில், நாம் மூலிகைத் தோட்டங்கள் உருவாக்கினோம். யாராவது நன்கொடை வழங்கும் ஒரு சிறிய நிலத்தில், நாம் 108 விதமான மூலிகைகளை வளர்த்தோம். மூலிகைகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும் மக்களுக்கு கற்பித்தோம். அவர்களது சொந்த உபயோகத்துக்கு அவர்கள் மூலிகைகளை பறித்துக்கொள்ள முடியும்.
இப்போதெல்லாம், குழந்தைகளுக்கு வயிற்றுவலி அல்லது யாரோ ஒருவருக்கு தலைவலி வரும்போது, அவர்கள் மருத்துவரிடம் செல்கின்றனர். நாங்கள் வளர்பருவத்தில் இருந்தபோது, இந்த எல்லா விஷயங்களும் வீட்டிலேயே கையாளப்பட்டன. உங்கள் வயிறு மந்தமானால், நீங்கள் நோய்வாய்ப்படவில்லை – அது என்னவென்றால், உங்கள் உடல் ஏதோவொன்றைத் தவிர்க்கிறது. ஆனால் இன்றைய நடைமுறையில், உங்களுக்கு சிறிது வயிற்றுவலி இருந்தாலும், நீங்கள் நோய்வாய்ப்படுகிறீர்கள். ஆகவே, நாம் இந்த மூலிகைத் தோட்டங்களைத் தொடங்கினோம். இவற்றை அந்தந்த கிராம மக்கள் பராமரித்து வருகின்றனர்.
சத்குரு: தென்னிந்தியாவின் பழங்குடி கலாச்சாரத்தில், தாவரங்கள் ஆண்தன்மையானது மற்றும் பெண்தன்மையானது என அடையாளம் காணப்படுகின்றன. ஆயுர்வேதத்தில் பெண்தன்மை மூலிகைகள் மற்றும் ஆண்தன்மை மூலிகைகள் என்ற ஒரு விஷயம் இருக்கிறதா?
டாக்டர். வசந்த் லாட்: அது சரிதான். அது சிவ ஸ்வரோதயாவை[1] அடிப்படையாகக் கொண்டது. சிவ ஸ்வரோதயா என்பது சூரியஸ்வார், சந்திரஸ்வார், ஈடா, பிங்களா மற்றும் சுழுமுனை ஆகியவற்றின் அற்புதமான அறிவியல். ஒவ்வொரு தாவரத்திலும் ஈடா பிங்களா மற்றும் சுழுமுனை உள்ளது. ஒரு இலையை எடுத்துக்கொண்டால், அதற்கு ஒரு மைய ஓட்டம் உள்ளது - அதுதான் சுழுமுனை. ஒவ்வொரு இலைக்கும், ஒரு சூரிய பக்கமும், ஒரு சந்திர பக்கமும் உள்ளது. பளிச்சிடுவது சூரிய பக்கம். ஏனென்றால் அது சூரிய சக்தியை எடுத்துக்கொள்கிறது, மற்றும் மங்கலானது சந்திர பக்கம். மேலும் இலை மீதான குறுக்குக் கோடுகள், சீரா என்று அழைக்கப்படுகிறது. அந்த சீரா கோடுகளை நீங்கள் எண்ணும்போது அவை இரட்டைப்படை எண்ணாக இருந்தால், அது பெண்மரம். அந்தக் கோடுகளின் எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருந்தால், அது ஆண்மரம். இந்த விதமாக, இலையின் மீது இருக்கும் படுக்கைக் கோடுகளின் வாயிலாக, தாவரத்தின் பாலினத்தை அறியமுடியும். இது மிகவும் சுவாரஸ்யமானது.
தாவரங்களில் ரச-வீர்ய-விபாக் என்பதும் உள்ளது. ரச என்பது சுவை, வீர்ய என்பது உஷ்ணமும், குளிர்ச்சியும் ஏற்படுத்தும் சக்தி, மற்றும் விபாக் என்பது செரிமானத்துக்குப் பிறகான விளைவு. அடுத்து ப்ரபாவ். ப்ரபாவ் என்பது பீலுபாக் மற்றும் பித்ருபாக் மீதான செயல்பாடு. பீலுபாக் என்பது செல் சவ்விற்கு அணுவின் நிலையில் நிகழ்கிறது. பித்ரு என்றால் பெற்றோர், அதாவது மரபுக் காரணிகள். ஆகவே மூலிகையானது மரபு காரணி மற்றும் RNA, DNA வரை நீள்கிறது.
ஆயுர்வேதம், உண்மையில் ஆண் மரங்கள் மற்றும் பெண் மரங்கள் பற்றி பேசுகிறது. ஆண் மற்றும் பெண் சக்தி, சிவ-சக்தி, புருஷ்-ப்ரக்ரிதி, யிங்-யாங், ஈடா-பிங்களா – இவை தாவரத்தில் உள்ளன.
[1] ஒரு பழமையான சமஸ்கிருத தாந்திரீக நூல்