ஈஷா யோக மையத்திற்கு அருகிலிருக்கும் வனப்பகுதிகளில் வாழும் பழங்குடியின பெண்கள் தங்களுக்கான சொந்த தொழிலை உருவாக்குவதற்கும் அவர்களது சமூகத்தினருக்கு சிறந்த வாழ்வினை அமைத்துக் கொள்வதற்குமான சக்தியை ஈஷா தன்னார்வலர்கள் வழங்கியுள்ளனர். இம்மக்களின் தற்சார்பு நோக்கிய அற்புதமான பயணத்தைப் பற்றி நாம் மேலும் தெரிந்துகொள்வோம்.
இதை சற்று கற்பனை செய்து பாருங்கள். முதன்முதலாக நீங்கள் விமானத்தின் ஏறுபாதையில் நடந்து செல்லும்போது, உங்கள் இதயம் படபடக்கிறது; அதேசமயம் ஒரு உற்சாக சிற்றலை உங்களுக்குள் ஏற்படுகிறது. நீங்கள் உங்கள் இருக்கையில் அமர்ந்து, பெல்ட் போட்டு, அனைத்தும் ஒரு கனவோ என்று நினைப்பதற்குள், மேகங்களுக்கு மத்தியில் வானத்தில் பறந்தாகிவிட்டது. ஜூலை 22, 2022 அன்று வானில் பறந்த பழங்குடியின பெண்களின் பொதுவான உணர்வு இதுதான்.
தானிகண்டி, மடக்காடு, முள்ளங்காடு மற்றும் பட்டியார் கோவில்பதி ஆகிய கிராமங்களிலுள்ள பழங்குடியின மக்களுடன் சேர்ந்து, இவர்களை அக்கிராமங்களில் இருந்து விமானத்தில் ஏறும் முதல் பயணிகளாக, ஈஷா ‘கிராம புத்துணர்வு இயக்கம்’ செயல்படுத்தியுள்ளது.
‘விமானம் தரையிலிருந்து மேலெழும்பியவுடன், பெண்கள் அனைவரும் தங்கள் குடும்பங்களுடன் சேர்ந்து இரு கைகளையும் உயர்த்தி மகிழ்ச்சி கூக்குரலிட்டனர்’ என்று சிரிப்புடன் நினைவு கொள்கிறார் சுவாமி சிதகாஷா, ஈஷா கிராம புத்துணர்வு இயக்கத்தின் முக்கிய தன்னார்வலர்களில் ஒருவர். பூமி வெகு வேகமாக தங்களுக்கு அடியில் கடந்து செல்வதைப் பார்த்து அந்த குழு மிகவும் பிரம்மிப்பு அடைந்திருந்தது.
“மேகங்களைத் தாவி பிடிக்க முடியுமென நான் நினைத்தேன்! இது கனவுபோல் இருந்தது” என்று ஒரு பெண்மணி பெருமகிழ்ச்சியுடன் தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார். சிலர் தங்கள் முகங்களை விமானத்தின் ஜன்னல் கதவுகளில் பதித்து, கீழே பூமியில் ஆதியோகி சிலை தென்படுகிறதா என்று ஆராய்ந்து பார்த்தனர். ஆனால் அவர்கள் அதனை காண முடியாமல் ஏமாற்றமடைந்ததை பார்த்து சிலரிடமிருந்து சிரிப்பலை எழுந்தது.
கோயம்புத்தூர் விமானநிலையத்தில் அவர்களை ஒரு சிறு கொடியுடன் வரவேற்றதிலிருந்து, அவர்களது முதல் விமான பயணத்திற்காக கேக் வெட்டியது, உணவு உபசரிப்பு என, இண்டிகோ ஏர்லைன்ஸ் அவர்களது அனுபவத்தை மேலும் சிறப்பாக்கினர். இது மட்டுமல்லாமல், அவர்கள் சென்னை வந்தடைந்தவுடன், முன்னதாக எடுக்கப்பட்ட ‘’குரூப் போட்டோ’ அழகான ஃப்ரேம் இட்டு ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டது.
சென்னை வந்தவுடன் பழங்குடியின பெண்களை பல தொலைகாட்சி சேனல்கள் நேர்முக பேட்டி கண்டனர். அப்போது அவர்கள் தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தியதில் ஈஷாவின் பங்கைப் பற்றி விவரித்தனர். அதன் பின்னர் ‘PVR’ நிறுவனம் அவர்களை சத்யம் சினிமா தியேட்டரில் படம் பார்க்க பலத்த கைதட்டலுடன் வரவேற்றது.
இந்த பழங்குடியின பெண்களைப் பற்றி கேள்விப்பட்ட தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் மருமகளான திரைப்பட இயக்குனர் திருமதி. கிருத்திகா உதயநிதி, அவர்களை தனியாக சந்தித்து அவர்களின் உயரே-பறக்கும் துணிகர முயற்சியைப் பாராட்டினார். “நாங்கள் இதுவரை நேரில் பார்த்திராத மக்கள் எங்களை மிகுந்த அன்புடன் வரவேற்றனர். நாங்கள் ஸ்டாலினின் மருமகளுடனும் கலந்துரையாடினோம்”, என்று ஒரு அக்கா கண்கள் மின்ன ஆச்சரியத்துடன் கூறினார்.
“நாங்கள் தியேட்டரை அடைந்தவுடன், எங்கிருக்கிறோம் என்றே எங்களுக்கு தெரியவில்லை. படங்களுடன் கூடிய பெரிய விளம்பரப் பலகைகளை பார்த்தவுடன் தான், நாங்கள் ஒரு படத்தை பெரிய ஸ்கிரீனில் பார்க்கப்போகிறோம் என்று ஊகித்தோம்!” என்று ஒரு பெண்மணி ஆச்சரியத்துடன் கூறினார்.
இந்த பழங்குடியின பெண்கள் தங்கள் வீட்டை விட்டு அதிகம் வெளியே செல்ல தேவையில்லாமல், வனப்பகுதியில் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதால், அவர்களது வெளியுலக தொடர்பு அதிகம் குறைந்து காணப்படுகிறது. அவர்கள் கிராமத்திலிருந்து பக்கத்திலுள்ள ஊருக்கு செல்வதே நிறைவேறாத கனவாக இருந்தது; பின்னர் சென்னைக்கு செல்வதைப் பற்றி கேட்கவும் வேண்டுமா? இப்போது, அவர்கள் குழந்தையைப் போன்று அப்பாவித்தனத்துடன் தெரிந்தாலும், இப்பெண்கள் அவர்களது சமூகத்தில் பெரிதாக மதிக்கப்படும், தங்கள் சொந்த கால்களில் திடமாக நிற்கும் நபர்கள்.
பார்வையாளர்கள் தங்கள் வாகனங்களிலிருந்து இறங்கியவுடன், அவர்கள் கண்களுக்கு விருந்தாக ஆதியோகியின் கம்பீரமான முகமும், செவிகளுக்கு விருந்தாக இனிமையான ‘யோக யோக யோகேஷ்வராய’ மந்திரமும் ஒருவித பிரம்மிப்பையும், பேரின்பத்தையும் உருவாக்கும். சிறிது தூரம் அந்த பாதையில் சென்றால், நாவிற்கும், வயிற்றுக்கும் சுவையான பலவகை உணவுகள் மற்றும் தின்பண்டங்கள் கொண்ட கடைகள் அவர்களுக்காக அணிவகுத்து தயாராக இருக்கும். இந்த அழகான பெண்மணிகள், தங்கள் கடைகளின் பின்னணியில் ஒரு புது தோற்றத்துடன் காட்சியளிப்பார்கள் - தொழிலதிபர்களாக!
2017ல் ஆதியோகி திறந்து வைக்கப்பட்டவுடன், பார்வையாளர்களின் எண்ணிக்கை திடீரென வானளவுக்கு உயர்ந்தது. வணிகப் பொருட்கள், தின்பண்டங்கள், உணவு மற்றும் பானங்களுக்கான தேவையும் அதனுடன் சேர்ந்து உயர்ந்தது. இதனால், ஈஷா யோக மையத்திற்கு அருகிலிருக்கும் உள்ளூர்வாசிகளின் வாழ்க்கையும் தரம் வாய்ந்ததாக மாறியது. வெள்ளியங்கிரி மலையடிவாரத்திலுள்ள கிராமத்திலிருந்து 11 துணிகரமான, தன்னார்வமிக்க பழங்குடியின பெண்கள் தேநீர் கடை அமைக்கும் சாதனையை மேற்கொண்டனர்.
இந்த தானிகண்டி பழங்குடியினரின் குடியிருப்புகள் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால், தமிழ்நாட்டின் கிராமங்களில் மேற்கொள்ளப்படும் பொதுவான தொழிலான விவசாயம் செய்வதற்கு இங்கு வாய்ப்பில்லை. இதனால் இவர்கள் நிலையான வருமானம் கிடைக்காமல், அவ்வப்போது கிடைக்கும் கூலி தொழிலுக்கோ அல்லது பண்ணை வேலைக்கோ தான் செல்ல வேண்டியுள்ளது. இது போதாதென்று, அவர்களது மோசமான நிலமையை மேலும் அதிகப்படுத்தும் விதமாக, அவர்களுள் எண்ணிவிடும் அளவு சிலர்தான் 8வது வரை படித்துள்ளனர், மற்றவர்கள் உணவு தேவைக்காக சம்பாதிக்க வேண்டியிருப்பதால், படிப்பை முற்றிலும் கைவிட்டுள்ளனர்.
உத்வேகம், உற்சாகம் மற்றும் அனைவரையும் இணைத்துக்கொள்ளும் தன்மையுடைய சுவாமி சிதகாஷா, ஈஷா யோக மையத்தை சுற்றி வசிக்கும் உள்ளூர் குழுக்களுடன் நெருக்கமாக பணியாற்றுவார். எப்போதும் அவர் கிராமவாசிகளுடன் தீவிரமாக செயலாற்றுவதை அல்லது அவர்களுக்கு புது விஷயங்களை கற்றுக்கொடுத்து அவர்களது வாழ்வை மேம்படுத்த உதவுவதை காணலாம்.
ஒருநாள் காலை அவர் கிராமத்திற்கு சென்று உணவு கடைகள் அமைப்பது பற்றி ஒரு புதிய யோசனை சொன்னார். “தானிகண்டி பெண்களை, தொழிலமைக்க ஒத்துக்கொள்ள வைப்பது ஒரு பெரிய சவாலாக இருந்தது. அவர்கள் தங்களுக்கு தெரியாத, புதிய ஒன்றைத் துவங்க தயங்கினர்.” மேலும் சிரித்துக்கொண்டே “அவர்களை நம்பவைக்க சிறிதுகாலம் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் அவர்களின் பலனளிக்கும் முடிவுகளைப் பார்த்தபிறகு, தளராமல் அதை நிகழ்த்தியதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார்.
இந்த கடைகளை நடத்திக்கொண்டிருக்கும் பெண்களுள் ஒருவரான காயத்ரி அக்கா கூறுகையில், “எங்களுக்கு விற்பனைப் பற்றி, பொருட்கள் வாங்குவது பற்றி, வாடிக்கையாளரிடம் எப்படி பேசுவது, இலாபம் சம்பாதிப்பது எப்படி, இவை எதுவுமே தெரியாது. இதனைப் புரிந்துகொள்வது எங்களுக்கு கடினமாக இருந்தாலும், ஈஷா கிராம புத்துணர்வு இயக்கமும் மற்ற தன்னார்வலர்களும், என்ன நடந்தாலும் எங்களுக்கு எல்லா உதவியும் செய்வார்கள் என்று சுவாமி உறுதியளித்தார். அதன் பிறகு நாங்கள் 11 பேரும் இந்த திட்டத்தைப் பற்றி பேசி முடிவெடுத்து ஒப்புக்கொண்டோம்.”
அந்த சமயத்தில், தங்கள் வாழ்க்கையில் ஒரு வேகமான மாற்றம் ஏற்படப்போவதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
ஒவ்வொருவரும் தலா 200 ரூபாய் பங்களித்து, சில பாத்திரங்களையும், அடுப்பினையும் கடனாக வாங்கி, 2018 ஏப்ரல் 8 அன்று தேநீர் கடையை துவக்கி நடத்த ஆரம்பித்தனர். ஆனால் இந்த பெண்களுக்கும், ஈஷா கிராம புத்துணர்வு இயக்கத்திற்கும் இது ஒன்றும் ஒருநாள் வேலையல்ல. பல மாத பயிற்சிகள் மேற்கொண்டு, தங்களை தயார்படுத்திக் கொண்டதுதான் அவர்களது வெற்றிக்குக் காரணம். “தொழில் மேலாண்மையை விடுங்கள், முதலில் அவர்களுக்கு தேநீர் தயாரிப்பிலிருந்து, கூட்டத்தை சமாளிப்பது வரை எல்லாமே ஒரு போராட்டமாக இருந்தது” என்கிறார் சுவாமி சிதகாஷா.
“எங்களுக்கு லாபத்தை எப்படி கணக்கிடுவது என்று தெரியாமல் எங்கள் பொருட்களை விற்பனை விலைக்கும் குறைவாக விற்பனை செய்திருக்கிறோம்,” என்று காயத்ரி அக்கா நினைவுபடுத்தி பார்க்கிறார். ஆனால் சுவாமியின் வழிகாட்டுதல், அப்பெண்களுக்கு கடை அமைப்பு, பண மேலாண்மை, தளவாடங்கள் (logistics), வாடிக்கையாளர் சேவை மற்றும் பொருட்கள் விநியோகம் ஆகியவை பற்றி புதிய திறன்களை கற்றுக்கொள்ள உதவியாக இருந்தது. அவர்களது பழைய வாழ்க்கையிலிருந்து ஒரு பெரும் மாற்றமாக இருந்தாலும், அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு முன்னேறினர்.
“அவர்கள் எல்லா சிரமங்களையும் கடந்து வந்து பயனுள்ள ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். அவர்களின் மாற்றத்தைப் பார்ப்பது உண்மையாக உத்வேகம் கொடுப்பதாக உள்ளது” என்கிறார் சுவாமி. அவர்களது வருமானமும், இலாபமும் உயர உயர, அவர்களது சமூக அந்தஸ்த்தும் உயர்ந்தது. “இப்பெண்கள் அவர்களது சமூகத்தில் உயர்வாக மதிக்கப்படுகிறார்கள். அவர்களை தீபாவளி மற்றும் ஜென்மாஷ்டமி போன்ற பண்டிகைகளுக்கு நன்கொடை வழங்குமாறு கூட மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்” என்கிறார் சுவாமி.
“எங்களால் இப்போது, இளைய தலைமுறையினர் கல்வி கற்க உதவி செய்து, அவர்கள் எங்களை மாதிரி அல்லாமல், படித்து பட்டமும் பெற வைக்க முடியும். நாங்கள் சம்பாதித்த பணத்தினால், வீட்டிற்கு தேவையான பொருட்கள் மற்றும் எல்லோருக்கும் புது துணிகள் எடுக்கவும் முடிகிறது. எனக்கு தேவையான சிறு நகைகளை கூட என்னால் வாங்க முடிந்தது” என்று காயத்ரி அக்கா பெருமிதத்துடன் நினைவு கூறுகிறார். “நாங்கள் வெற்றியை அனுபவிக்கத் துவங்கியவுடன், மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். இப்போது நாங்கள் ஒரு மாதத்திற்கு 10,000 முதல் 15,000 கூட சம்பாதிக்கிறோம், எங்களில் பலருக்கும் சேமிப்புக் கணக்கு கூட உள்ளது!”
இந்த கடைகள் எல்லாம் மிகவும் வெற்றிகரமாக நடப்பதைப் பார்த்து, முதலில் தொழில் தொடங்க ஆர்வம் இல்லாமல் இருந்த தானிகண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள மற்ற பழங்குடியினர் கூட சுவாமியைப் பார்த்து பேசியிருக்கிறார்கள். “சுவாமி, எங்களுக்கு அருகிலேயே அவர்களுக்கும் கடைகள் அமைத்து கொடுத்திருக்கிறார். அவர்களும், எங்களைப் போலவே வளரவேண்டும் என்று சொல்கிறார். நாங்கள் மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக இருந்ததற்கு பெருமைப்படுகிறோம்” என்கிறார் அக்கா.
சத்குரு அவர்கள், கிராம மக்களின் நலத்திட்டங்களில் பெரும் அக்கறை எடுத்துக்கொள்கிறார். சத்குருவும், ஈஷா கிராம புத்துணர்வு இயக்க தன்னார்வலர்களும் ஒன்றாக அமர்ந்து, உள்ளூரில் வசிக்கும் சமூகங்களின் வாழ்வை மேம்படுத்த பல வழிகளில் யோசிப்பார்கள் என்கிறார் சுவாமி சிதகாஷா. “சத்குரு, மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான உதவிகளை செய்ய எனக்கு வாய்ப்பினை வழங்கியுள்ளார். இதனால் கிடைக்கும் மனநிறைவிற்கு ஈடாக இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை,” என்று சுவாமி பகிர்ந்து கொள்கிறார்.
இரு கைகளையும் கூப்பி வணக்கம் வைத்தபடி “இந்த ஆசிரமத்திற்கும், இங்கு வசிக்கும் மக்களுக்கும் எனது நன்றியுணர்வை வெளிப்படுத்த ‘நன்றி’ என்ற வார்த்தை மட்டும் போதாது. நான் பிறந்ததிலிருந்து, ஈஷா யோக மையம் என்னைப் பேணி காத்து வருகின்றது. நாங்கள் சத்குருவை சந்தித்தபோது, சுவாமி எங்கள் எல்லோருக்கும் ஒரேமாதிரியாக வாங்கிய நீலநிற புடவைகளை நாங்கள் அணிந்து கொண்டதை மறக்கவே முடியாது. நாங்கள் சத்குருவுடன் பேசியதையும், அவருடன் சேர்ந்து சிரித்ததையும் மிகவும் மகிழ்ந்து அனுபவித்தோம்; நாங்கள் நடனம் கூட ஆடினோம்! இன்று என்னால் என் குடும்பத்தையும், என்னையும் காப்பாற்றிக்கொள்ள முடியும், இந்த பெருமையெல்லாம் என் குருநாதரையே சென்றடையும்” என்கிறார் காயத்ரி அக்கா.