ஞானமடைதல் பற்றி நாம் எண்ணியிருந்த அனைத்தையும், சத்குருவின் ஆச்சரியப்படுத்தும் வெளிப்பாடுகள் மாற்றிவிடக்கூடும். அதை நோக்கி ஒரு குறிப்பிட்ட நிலையில் நாம் முயற்சி செய்தால், உண்மையிலேயே அது அடையக்கூடியதாக இருக்கலாம்! மேலும் அறிந்துகொள்ள வாசியுங்கள்.
சத்குரு: உங்களது வாழ்க்கையை நீங்கள் வாழுகின்ற விதத்தைப் பார்க்கும்பொழுது, நிர்ப்பந்திக்கும் உணர்ச்சிகளால் நீங்கள் ஆளப்படுவதை கவனிப்பீர்கள். உதாரணமாக, இன்று உங்கள் மனைவியின் பிறந்த நாளாக அல்லது உங்களது கணவரின் முக்கியமான நாளாக இருக்கும்பட்சத்தில், எதுவும் தவறாகப் போகாமல் இருப்பதை நீங்கள் உறுதிச்செய்ய விரும்புகிறீர்கள் – ஆனால் அன்றுதான் உங்களுக்குள் கோபம் மேலெழும் நாளாக இருக்கிறது, அதுவும் எந்தக் காரணமும் இல்லாமல்!
ஒருமுறை இப்படி நிகழ்ந்தது. ஒருநாள் அதிகாலையில், சங்கரன்பிள்ளை வீதியில் நடந்தவாறு, உரத்த குரலில் சாபமிட்டுக்கொண்டிருந்தார். "உனது வாழ்க்கையை சைத்தான் எடுத்துக்கொள்ளட்டும்! உனது வாயிலிருந்து புழுக்கள் வெளியேறட்டும்!" இதுபோன்று அவர் கத்தியவாறு இருந்தார். அவரது அண்டைவீட்டினரில் ஒருவர் அவரை நிறுத்திக் கேட்டார், “அதிகாலையில் இப்படி யாரை நீங்கள் சபிக்கிறீர்கள்?” சங்கரன்பிள்ளை கூறினார், “யார் என்பது பொருட்டில்லை. வெகு விரைவிலோ அல்லது சற்று நேரம் கழித்தோ, யாராவது இந்த வழியாக வரக்கூடும்.” அது யாரைக் குறித்தோ அல்லது எதைக் குறித்தோ அல்ல. அது உங்களிடம் இருந்து வெளிப்படும் ஒரு நிர்ப்பந்திக்கும் உணர்ச்சி. உங்களைச் சுற்றி இருப்பவர் எவராக இருந்தாலும், அவர் பாதிப்படைகிறார்.
மக்கள் அவர்களது வாழ்க்கை முழுவதும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர், ஆனால் எதுவும் மாறுவதில்லை. உங்கள் கர்மக் கட்டமைப்பு எந்த விதமாக இருக்கிறதோ, அந்த விதமாகத்தான் மனம் இயங்குகிறது. நீங்கள் எந்த விதமான பதிவுகளைச் சேர்த்துள்ளீர்கள் என்பதை பொறுத்துள்ளது. ஒரு குறிப்பிட்ட விதத்திலான பதிவுகள் உங்களுக்குள் உருவாக்கியுள்ள கட்டுப்பாடுகளை கடந்து செல்வதற்கு, வேறொரு விழிப்புணர்வு நிலைக்கு நீங்கள் உயரவேண்டும், அல்லது உங்கள் சக்திகளை நீங்கள் நிலைமாற்றமடையச் செய்யவேண்டும்.
விழிப்புணர்வு நிலையை உயர்த்துவது சாத்தியம்தான், ஆனால் அது மிகவும் தந்திரமானதும், ஏமாற்றக்கூடியதாகவும் இருக்கிறது. மக்கள் தங்களது விழிப்புணர்வு நிலை மிகவும் உயர்ந்தது என்று நம்புகின்றனர், ஆனால் அவர்களை சோதனைக்கு உட்படுத்தினால், மிக மோசமாக அவர்கள் தோல்வியடைவார்கள். ஏனென்றால் மனதின் இயல்பு எப்படிப்பட்டது என்றால், அது இறுதிவரை உங்களை ஏமாற்றமுடியும். பெரும்பாலான மக்களும் அவர்களது மனதின் ஒரு சிறு துளியைத்தான் பயன்படுத்துகின்றனர், அதனால் அதனை சாதாரணமாக நினைத்துவிடுகின்றனர். ஆனால் உண்மையில், அது ஒரு மிகச் சிக்கலான கருவி.
மக்கள், அவர்கள் மாறியுள்ளதாக நம்புகின்றனர், ஆனால் உண்மையில், அவர்களுடைய சூழ்நிலைகள்தான் சற்றே கூடுதல் அனுகூலமாக அமைந்துள்ளது. சூழ்நிலைகள் தீவிரமானால் அவை மீண்டும் அதே இடத்திற்கே வந்துவிடும். உங்களது விழிப்புணர்வு நிலையை உயர்த்துவதன் பொருள் என்னவென்றால், வாழ்க்கையின் செயல்முறைகளுக்கு நீங்கள் பாதிப்படையாத விதத்தில், வாழ்க்கையை அணுகுவது; நீங்கள் யார் என்பதை வெளிச்சூழ்நிலைகள் முடிவு செய்வதில்லை. அதுகூட ஒரு சாத்தியம்தான், ஆனால் பெரும்பாலான நேரங்களில், அது மிகப்பெரிய ஏமாற்றும் விளையாட்டாகவே உள்ளது.
உங்கள் சக்திகளை நிலைமாற்றமடையச் செய்வது ஒரு நிச்சயமான, உறுதியான வழியாக இருக்கிறது, ஏனெனில், உங்களையே நீங்கள் முட்டாளாக்கிக்கொள்ளவோ அல்லது விஷயங்களைக் கற்பனை செய்துகொள்ளவோ முடியாது. உங்களுக்கு தேவையானது என்னவென்றால், உங்களது பயிற்சியில் ஒருவித அர்ப்பணிப்பும் ஈடுபாடும் மட்டுமே. நீங்கள் சரியான புரிதல் மற்றும் வழிகாட்டுதலுடன், உங்களது சக்திகளின் மீது தாக்கம் ஏற்படுத்தும் அளவுக்கு போதிய செயல் செய்தால், சக்திகளின் நிலையில் நீங்கள் எளிதாக ஞானமடைய முடியும். உங்கள் விழிப்புணர்வுநிலை மேற்செல்லாமல் இருக்கலாம், ஆனால் உங்கள் சக்திகள் ஞானமடைந்த நிலைக்கு செல்லும்.
கடந்த 20-25 வருடங்களாக, சக்திகள் ஞானமடைந்த நிலையில், ஆனால் அவர்களது விழிப்புணர்வு உயர்ந்திராத பலரை நாம் உருவாக்கியுள்ளோம். ஒரு குறிப்பிட்ட வழியில் நாம் அதனை செயல்படுத்திவருகிறோம், ஆனால் மக்களின் விழிப்புணர்வை பெரிய விதத்தில் உயர்த்துவதற்கு நாம் முயற்சிப்பதில்லை, ஏனென்றால் அது உங்களை ஒட்டுமொத்த வாழ்நாளிற்கும் தவறான பாதையில் எடுத்துச் செல்லமுடியும். பிறகு, உங்கள் வாழ்க்கையின் இறுதியில், உங்களையே நீங்கள் முட்டாளாக்கிக்கொண்டு இருந்திருப்பதை உணர்கிறீர்கள். அதனால், மனதினை நாம் மெதுவாக முதிர்வடைய செய்கின்றோம். ஆனால் உங்கள் சக்திகள் ஒரு குறிப்பிட்ட உச்சத்தை அடைந்திருக்கும் காரணத்தால், அப்போதும் நீங்கள் அறிவில்லாத விஷயங்களைச் செய்யக்கூடும் என்றாலும், இந்த அறிவில்லாத செயல்கள் உண்மையில் உங்கள் வாழ்வை ஆதிக்கம் செய்வதில்லை.
உங்கள் உடல், மனம் மற்றும் உணர்ச்சிகளை எப்படி கையாள்வது என்று வேறொருவரைக் கேட்டால், உங்கள் வாழ்க்கையே வீணாகிப் போய்விடலாம். அவற்றைக் கையாளத் தேவையான கருவிகள் அனைத்தும் உங்களிடம் இப்போது உள்ளன. நீங்கள் உட்கார்ந்து உண்மையாகவே சம்யமா[1] நிலையில் இருந்தால், உங்கள் மனம் உங்களுக்கே அன்னியமாகிவிடும். நீங்கள் விரும்பினால் அந்த அன்னியரை நேசிக்கலாம், இல்லாவிட்டால் அவரை விட்டுவிடலாம். சம்யமா ஒரு தடுப்பூசியைப் போன்றது. நீங்கள் வைரஸை எதிர்த்து சண்டை போடத் தேவையில்லை – ஒரு ஊசி போட்டால் அது முடிந்துவிடும்.
ஒரு குருவானவர், உங்கள் இருளை அகற்றுபவர். அவர் குருவாக இருப்பது, நீங்கள் தரையைத் தொட உதவுவதாலோ, உங்கள் மனதளவிலான பிரச்சனைகளை சரிசெய்வதாலோ, நீங்கள் இன்னும் அமைதியாக இருக்க உதவுவதாலோ கிடையாது. அவர் குருவாக இருப்பது, இன்னும் உங்கள் அனுபவத்தில் இல்லாத பரிமாணங்களை உங்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட முடிவதால்தான். அதுதான் அவர் இங்கு இருப்பதன் நோக்கம். எனவே உங்கள் குப்பையை முடிந்த அளவு சீக்கிரமாக அப்புறப்படுத்துங்கள். தேவையான கருவிகள் அனைத்தும் உங்களிடம் இருக்கிறது.
[1] ஈஷாவின் உயர்நிலை வகுப்பான சம்யமா நிகழ்ச்சியில் வழங்கப்படும் தியானம்
ஈனோ என்ற ஒரு ஜென் குருவைப் பற்றி அழகான கதை ஒன்று உண்டு. ஈனோ மடாலயத்துக்கு வந்தபோது, குரு அவரைப் பார்த்துவிட்டு, மற்ற அனைவரிடமும் அறிவித்தார், “ஈனோ ஞானமடைந்தவர்”. அடுத்த நாளில், ஈனோவை அவர் அடுத்த 12 ஆண்டுகளுக்கு சமையலறையில் வேலை செய்யுமாறு பணித்தார். இது ஏனென்றால், ஈனோவின் சக்திகள்தான் ஞானமடைந்திருந்தது, ஆனால் அவரது விழிப்புணர்வு உயர்ந்திருக்கவில்லை. இன்றைக்கு நம்மைச் சுற்றிலும் சக்திரீதியாக ஞானமடைந்த நூற்றுக்கணக்கானவர்கள் நம்மிடம் உள்ளனர், ஆனால் அவர்களது விழிப்புணர்வு உயர்ந்திருக்கவில்லை, மற்றும் அதற்காக நாம் அவசரமும் கொள்ளவில்லை. அது மெல்லமெல்ல முதிர்ச்சியடையும்.
நீண்ட காலமாக நெருக்கமான மக்கள் வட்டத்தில் ஒரு குறிப்பிட்ட செயல்முறையை நாம் செய்துகொண்டுள்ளோம். சுஷும்ன நாடியின் மீது நீங்கள் முழுமையாக கவனம் வைத்து, அது முறைப்படி தொடப்பட்டால், சுஷும்னா உயிரோட்டம் பெற்று, ஒளிர்கிறது. அது ஒளிரத்தொடங்கிவிட்டால், சக்திகள் முதிர்வடைந்து, மிகக் குறைந்த கால அளவிலேயே ஞானமடைகிறது. சிவன்கூட அதனைக் குறித்து பேசியிருக்கிறார். “தண்டுவடம் தொடப்படும்பொழுது, உங்களுக்கு உள்ளேயும், உங்களைச் சுற்றிலும் ஒரு வெளிச்சம் ஒளிரத் தொடங்குகிறது”, என்றார் சிவன்.
ஒரு ஞானமடைந்த மனிதரின் ஒளி உங்களிடம் காணப்படும், ஆனால் ஞானமடைந்த மனிதரின் விழிப்புணர்வு உங்களிடம் இருக்காது. நீங்கள் வெறுமனே அமைதியாக அமர்ந்தால், ஒரு ஆற்றல் நிரம்பிய மனிதராக இருக்கிறீர்கள். நீங்கள் வாய் திறந்தால், ஒரு முட்டாளாக இருக்கிறீர்கள். அப்படித்தான் நீங்கள் இருப்பீர்கள். ஆனால் அந்த விதமாக இருப்பது நல்லது மற்றும் சாதிப்பதற்கு அது எளிது. உங்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் அர்ப்பணிப்பு மட்டுமே. குறிப்பாக நான் இங்கே இருக்கும்பொழுது, அதைச் செய்வது மிகவும் எளிது. முதுகுத்தண்டை நாம் தொட்டுவிட்டாலே, அது ஒளிரமுடியும்.
கேள்வியாளர்: சத்குரு, எனது முதுகுத்தண்டு தொடப்பட்டுள்ளதா என்று நான் எப்படி அறிந்துகொள்வது?
சத்குரு: உலகெங்கும் இருக்கும் ஏறக்குறைய அனைத்து ஈஷா தியான அன்பர்களுக்கும், சக்திரீதியாக அவர்களுடன் நிகழ்ந்துகொண்டிருப்பது என்னவாக இருந்தாலும், அதற்குக் காரணம் போதனை அல்ல. ஆன்மீக செயல்முறை முற்றிலும் இருத்தல் குறித்தது. ஆன்மீகப் பாதையில், உங்களது எண்ணங்கள், கருத்தாக்கங்கள், தத்துவங்கள் மற்றும் அபிப்ராயங்களுக்கு இடமில்லை. மனதை சமன்படுத்துவதற்கு, ஈஷா யோகாவை ஒரு திறனுள்ள கருவியாக நாம் பயன்படுத்துகிறோம். மனரீதியான செயல்முறையில் இருக்கும் தடையை சமன்படுத்துவதற்கு, அது ஒரு சாதனமாக இருக்கிறது. அது உங்களை ஒரு முட்டாளைப்போல உணரச் செய்வதால், உங்களது கருத்துக்கள், மதிப்பீடுகள், மற்றும் நீங்கள் முட்டாள்தனமாக நம்பிக்கொண்டிருப்பது என்னவாக இருந்தாலும், அதனுடன் உங்களை நீங்களே தொடர்புபடுத்திக் கொள்வதில்லை.
அவை எல்லாவற்றுடனும் உங்களையே நீங்கள் அடையாளப்படுத்திக்கொள்ளாத கணமே, ஒரு திறந்தநிலை உருவாகிறது. அந்தத் திறப்பு நிகழும் கணமே, உங்களது தண்டுவடம் தொடப்படும். நீங்கள் அதை ஒளிரவிடுவதோ அல்லது அதனைத் தடுத்து, ஒளிர்வதைக்காட்டிலும் அதிக உஷ்ணம் உருவாக்குவதோ, உங்களைப் பொறுத்தது.
கேள்வியாளர்: நான் அதை மேன்மேலும் எப்படி வளர்த்தெடுப்பது?
சத்குரு: அதை நீங்கள் மேற்கொண்டு வளர்க்கவேண்டும் என்றால், அதற்கு நீங்கள் மிக அதிகமான கவனம் செலுத்தவேண்டும். உங்களுக்கு உரித்தான அனைத்திலும் நீங்கள் கவனம் செலுத்தவேண்டும். தற்போது உங்களுக்கு இருப்பது போதுமானதல்ல, ஏனெனில் அதில் அவ்வளவு அதிகமாக உள்ளது, ஆனால் இன்னமும் உருப்பெறாத நிலையில் உள்ளது. அதனுடன் உங்களுக்கு தொடர்பு இல்லை. உங்களது மனதளவிலான கவனம்கூட தற்போது அதில் முழுமையாக இல்லை.
உங்கள் வாழ்க்கையின் வெவ்வேறு காலகட்டங்களில், மற்றும் ஒரு நாளின் வெவ்வேறு நேரங்களிலும்கூட, உங்கள் கவனம் வெவ்வேறு நிலைகளில் உள்ளது. நீங்கள் உங்கள் வேலையைச் செய்யும்பொழுது, நீங்கள் ஒருநிலையிலான கவனத்தில் இருக்கிறீர்கள். உங்களுக்கு மிகவும் விருப்பமான ஏதோ ஒன்றைச் சாப்பிடும்போது, நீங்கள் வேறொரு நிலையிலான கவனத்தில் இருக்கிறீர்கள். உங்கள் வாழ்வின் எந்த ஒரு நேரத்திலும் உங்களுக்கு இருக்கும் உச்சபட்ச கவனம் என்னவாக இருந்தாலும், அது உங்களுக்கு சாத்தியப்படும் முழுத்திறனில் ஒரு சிறு பகுதியாகத்தான் உள்ளது.
நான் உங்களை வெள்ளியங்கிரி மலைகளுக்கு நடுவில், இரவின் அடர்த்தியான இருளில், டார்ச் போன்றவை எதுவுமில்லாமல் தனியே விட்டுவிட்டால், காட்டு விலங்குகளின் சப்தம் உங்களுக்குக் கேட்கிறது, அப்போது சட்டென்று நீங்கள் வேறொரு நிலையிலான கவனத்தில் இருப்பீர்கள். வாழ்வா, மரணமா என்பது கேள்வியாக இருந்தால், நீங்கள் முற்றிலும் வித்தியாசமான ஒரு கவனத்துடன் இருப்பீர்கள்.
பல வருடங்களுக்கு முன்பு, யோக மையத்தில் நாங்கள் ஒரு சிறு குழுவாக இருந்தபோது, நான் அவர்களை இரயில் பாதையில் ஒரு நடைப்பயணத்துக்கு அழைத்துச் சென்றேன். அந்தப் பாதை சுப்ரமண்யாவுக்கும், மங்களூருக்கும் இடையில் 36 கிலோமீட்டர் நீளத்தில், 300க்கும் அதிகமான பாலங்கள் மற்றும் 100க்கும் அதிகமான சுரங்கப்பாதைகளுடன் இருந்தது. சில சுரங்கப்பாதைகள் ஒரு கிலோமீட்டருக்கும் கூடுதல் நீளமாக இருக்கிறது; பகலிலும்கூட, அங்கே கும்மிருட்டு நிலவுகிறது. நீங்கள் அந்த மாதிரி ஒரு இடத்தில் இருந்தால், உங்கள் கவனம் மிக அதிகமாக உயருகிறது. இந்த மாதிரி உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணமும் நீங்கள் கவனம் வைத்திருந்தால், அப்போது உண்மையாகவே நீங்கள் ஒளிவீசுவீர்கள்.