அமெரிக்க நடிகை கேட் கிரஹாம் சத்குருவுடன் நேர்காணல்
19 ஜூலை
நடிகையும், பாடகரும், நடனக் கலைஞரும், ஐ.நாவின் அகதிகளுக்கான ஆணையத்தின் (UNHCR) நல்லெண்ணத் தூதருமான கேட் கிரஹாம், டென்னிசியில் உள்ள ஈஷா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்னர்-சயின்சஸ் மையத்தில் சத்குருவை சந்தித்தார். நிப்பானா அல்லது முக்தி என்பதன் பொருள், இளமை என்பது எதைப் பொறுத்தது, மனிதர்கள் மீது நவக்கிரகங்களின் தாக்கம் மற்றும் மண் காப்போம் போன்ற பல்வேறு தலைப்புகளில் அவர்களின் உரையாடல் அமைந்தது.
மண்ணை மீட்டெடுப்பதன் சாரம்
21 ஜூலை
அமெரிக்க மண் நுண்ணுயிரியலாளர் டாக்டர் எலைன் இங்ஹாம் மற்றும் ஆராய்ச்சியாளர்-சூழலியலாளர் ஜான் டி.லியு ஆகியோருடன் இணைந்த சத்குரு மண், சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு முகாம்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களையும் பாதிக்கும் மண் உணவு வலை (Soil Food Web) ஆகியவற்றைப் பற்றிய ஓர் ஆழமிக்க உரையாடலில் ஈடுபட்டார். விவசாயிகள் தங்களது மண்ணில் உயிர்த்தன்மையை மீட்டெடுக்கவும், இலாபத்தை அதிகரிக்கவும் எவ்வாறு உதவுவது என்பது பற்றிய தகவல்களை டாக்டர் எலைன் அவர்களின் மண் உணவு வலை பள்ளியானது வழங்குகிறது.
லிசா பர்க் போட்காஸ்ட்டில் சத்குரு
21 ஜூலை
லிசா பர்க் அவர்களுடனான இந்த நேர்காணலில், நமது மண்ணுக்கு ஊட்டமளிப்பதற்கு அவசர நடவடிக்கை தேவை என்பதையும், இல்லையெனில், மனிதர்களுக்கு உணவளிக்க முடியாது என்பதையும் சத்குரு விளக்கினார். இன்று நாம் என்ன செய்கிறோம் என்பது எதிர்கால சந்ததியினர் எப்படி வாழ்வார்கள் என்பதை தீர்மானிக்கும் என்ற உண்மையை முன்னிறுத்திய இந்த உரையாடல், மண் அழிவைச் சுற்றியே அமைந்திருந்தது.
சத்குருவுடன் நாக பஞ்சமி சத்சங்கம்
2 ஆகஸ்ட்
நாக பஞ்சமியை முன்னிட்டு நிகழ்ந்த ஒரு சிறப்பு சத்சங்கத்தில் மழையையும் கூட பொருட்படுத்தாமல், ஈஷா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்னர் சயின்ஸஸ் மையத்தில் உற்சாகமிக்க பங்கேற்பாளர்கள் கூடியிருந்தனர். மேலும், ஆன்லைனில் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் இந்நிகழ்வில் இணைந்தனர். புனிதமிக்க நாகத்தின் சிறப்புகள் பற்றியும், சர்ப்பங்களைப் பற்றிய தேவையற்ற பயத்தை நீக்குவது பற்றியும் சத்குரு விரிவாகப் பேசினார். நம் வாழ்வில் நாகத்தின் முக்கியத்துவத்தை விளக்கி, 9 அக்டோபர் 2022 அன்று பெங்களூரு ஈஷா யோக மையத்தில் நடக்கவிருக்கும் நாகப் பிரதிஷ்டையில் பங்கேற்பதற்கு சத்குரு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.
எரிக் சோலேம் சத்குருவுடன் கலந்துரையாடல்
12 ஆகஸ்ட்
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் எரிக் சோலேம் அவர்கள் மண்ணைப் பற்றிய உரையாடலில் ஆன்லைனில் சத்குருவுடன் இணைந்தார். மண்ணை இரசாயனங்களின் தொகுப்பாக பார்ப்பதை நிறுத்திவிட்டு, மனித நல்வாழ்வுக்கு இன்றியமையாத, மிகப்பெரிய உயிர்ச்சூழல் மண்டலமாக அணுக வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான கண்ணோட்டத்தை சத்குரு முன்வைத்தார். வெற்றிகரமாக தொடங்கப்பட்டுள்ள மண் காப்போம் இயக்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள செயல்பாட்டின் வேகத்தை எவ்வாறு தக்கவைத்துக்கொள்வது என்பது குறித்து பொருத்தமான கேள்விகளை எரிக் சோலேம் கேட்டார். நீண்டகாலம் இவ்வியக்கம் நிலைத்து வெற்றிபெற, பொருளாதார ரீதியாக விவசாயிகளின் லாபகரமான முன்னெடுப்பாக இது மாறவேண்டும் என்று சத்குரு வலியுறுத்தினார்.
ஈஷா யோக மையத்தில் சத்குரு மற்றும் முக்கிய விருந்தினர்களுடன் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள்
15 ஆகஸ்ட்
சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டுகளின் கொண்டாட்டத்தில், காமன்வெல்த் நாடுகளின் பொதுச்செயலாளரும், ஆஸ்தல் சீமாட்டியுமான மாண்புமிகு பேட்ரிசியா ஜெனட் ஸ்காட்லாந்து (ராணியின் ஆலோசகர்) அவர்களும், இந்தியாவின் G20 உச்சிமாநாட்டின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா, IFS, அவர்களும் சத்குருவுடன் கலந்து கொண்டனர். ஆதியோகி முன்னிலையில் மூவர்ணக் கொடியை சத்குரு ஏற்றினார். இதைத் தொடர்ந்து சம்ஸ்கிருதி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
காமன்வெல்த் நாடுகளில் இந்தியாவின் முக்கியத்துவத்தைப் பற்றியும், மண் காப்போம் இயக்கம் காமன்வெல்த்தின் சூழலியல் பார்வையுடன் எவ்வாறு முழுமையாக ஒத்துப்போகிறது என்பதைப் பற்றியும் மாண்புமிகு பேட்ரிசியா அவர்கள் பேசினார்.
திரு.ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா அவர்கள் பேசும்போது, கடந்த 75 ஆண்டுகளில் இந்தியா என்ன சாதித்துள்ளது என்பதையும், அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா உலக அளவில் ஒரு பெரிய சக்தியாக எப்படி உருவெடுக்கும் என்பதையும் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார். உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க நாடுகளின் குழுவான G20-ன் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கும் என்றும் குறிப்பிட்ட அவர், இந்தியாவில் நடைபெறும் G20 மாநாட்டின் 190 கூட்டங்களில் முக்கியமான ஒரு கூட்டம் கோவையிலுள்ள ஈஷா யோக மையத்தில் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
நிகழ்வின் இறுதியில் சத்குரு உரையாற்றுகையில், இந்தியா ஒரு வளமான தேசமாக மட்டுமல்லாமல், அதன் ஞானம் மற்றும் கலாச்சார வலிமையின் மூலம் சக்தி பெற்று, உலகிற்கு நல்வாழ்விற்கான ஒரு கலங்கரை விளக்கமாக மாறும் என்றும் பேசினார்.
இந்நிகழ்வுக்கு முன்தினம், மாண்புமிகு பேட்ரிசியா அவர்கள் மண் காப்போம் இயக்கத்தின் களப்பணியினை பார்ப்பதற்காக பொள்ளாச்சியிலுள்ள வேளாண்காடுகளின் மாதிரி பண்ணைக்கு வருகை தந்திருந்தார்.
ஆகஸ்ட் 14 அன்று இந்தியாவின் வெளியுறவு செயலாளரும், இந்தியாவுக்கான G20 தலைமை ஒருங்கிணைப்பாளருமான திரு.ஹர்ஷ் ஷ்ரிங்லாவை சத்குரு தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினார்.