சிறப்புக் கட்டுரை

உங்கள் எதிர்பார்ப்புகள் ஏன் உங்கள் மகிழ்ச்சியை குறைக்கின்றன?

ஒரே முனைப்பான கவனம், மகத்தான விளைவுகளை அளிக்கமுடியும், ஆனால் உங்கள் எதிர்பார்ப்புகள், நிறைவாக உணர்வதை மேலும் மேலும் தள்ளிப்போட்டால் என்ன நிகழும்? உங்கள் எதிர்பார்ப்புகளுக்கும் உங்கள் மகிழ்ச்சிக்கும் இடையே உள்ள தொடர்பையும், உங்கள் வாழ்க்கையில் உண்மையான வெற்றியை அடைய நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதையும் சத்குரு விளக்குகிறார்

கேள்வியாளர்: நான் அளவுக்கதிகமாக மக்களிடம் பற்றுகொள்வதோடு, அவர்களிடமிருந்து மிக அதிகமாக எதிர்பார்ப்பும் கொள்கிறேன். எதிர்பார்ப்புகளில் இருந்து நான் எப்படி விடுபடுவது?

சத்குரு: பற்று என்று நீங்கள் கூறுவது, தனிப்பட்ட தன்மையின் இயல்பான விளைவாகவே இருக்கிறது. ஒன்றுக்கும், மற்றொன்றுக்கும் இடையில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் கணமே, இயல்பாகவே அதனுடன் நீங்கள் சிக்கிக்கொள்கிறீர்கள். நாம் கழிவு, கனி இரண்டையும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் எதைச் சாப்பிடுவது என்ற கேள்வி வரும்போது, நாம் பழத்தைத் தேர்வு செய்கிறோம் – இது நாம் தேர்வு செய்வது.

ஒரு குறிப்பிட்ட செயல் என்று வரும்போது, நாம் விரும்பியவாறு தேர்ந்தெடுக்கிறோம். ஆனால் இங்கே வெறுமனே அமர்ந்திருக்கும்போது, தேர்வு செய்வதற்கான தேவை எங்கிருந்து வருகிறது? இணைத்துக்கொள்ளுதல் என்றால், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் தேர்வு செய்யாதிருப்பது.

பற்றும், வெறுப்பும், ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்

இணைத்துக்கொள்ளுதல் என்றால், உங்களது பகுத்தறிவை இழந்துவிடுவது என்பதல்ல. பகுத்துப் பார்க்கும் அறிவு இருக்கிறது, ஆனால் செயல் நிகழ்த்துவதற்கு மட்டும்தான் அதை நீங்கள் பயன்படுத்துகிறீர்களே தவிர, இங்கு வெறுமனே இருப்பதற்காக அல்ல. இங்கு இருப்பதற்கு, நீங்கள் எந்த விதத்திலும் பகுத்துப் பார்க்கத் தேவையில்லை. உயிராக இருப்பதற்கு, நீங்கள் பகுத்து ஆராய்ந்தால் அது வேலை செய்யாது. ஆனால் செயல்படுவதற்கு, உங்களுக்கு பகுத்துப் பார்த்தல் தேவை; இல்லையென்றால், அறிவுபூர்வமாக உங்களால் செயல்பட முடியாது.

ஒருவரிடத்தில் அளவற்ற பற்று கொண்டிருப்பது இயல்பாகவே மற்ற பலருடன் ஆழமான ஒரு வெறுப்பு கொள்வதற்கு வழிகாட்டுகிறது. ஒரு நபருடன் நீங்கள் கொண்டுள்ள நேசத்தை சமன்செய்வதற்கு, ஒரு மக்கள் கூட்டத்திடமே நீங்கள் ஆழமான வெறுப்பு கொள்கிறீர்கள். அவர்களை உங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. தயவுசெய்து இதை உங்களுக்குள் கவனமாக உற்றுநோக்கி, அது எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.

மாறவேண்டியது என்ன

உங்களுடைய எதிர்பார்ப்புகள் மக்களைப் பற்றி மட்டுமல்ல – எல்லாவற்றைப் பற்றியும் இருக்கின்றன. “வாழ்க்கை எப்படி நிகழவேண்டும் என்று நான் நினைக்கிறேனோ, அந்த மாதிரி நிகழவில்லை.” - மனித வாழ்க்கையின் துன்பத்திற்கு இது மட்டும்தான் மூலக்காரணம். உலகத்தை மாற்றுவதைவிட, உங்கள் எண்ணத்தை மாற்றுவது எளிது. முதலில், நீங்கள் நினைப்பது உங்களுக்கு மிகவும் முக்கியமாக இருக்கும்பொழுது, இந்த சிந்தனைத் திறனுக்கு நீங்கள் பொறுப்பேற்றுள்ளீர்களா, அல்லது நீங்கள் மனபேதியின் நிலையில் இருக்கிறீர்களா? உங்கள் எண்ணங்களில் எழும் ஒவ்வொன்றும் உங்கள் வாழ்க்கையில் உண்மையானால், நீங்கள் முடிந்துவிடுவீர்கள். அதிர்ஷ்டவசமாக, அது உண்மையாவதில்லை.

உலகத்தை மாற்றுவதைவிட, உங்கள் எண்ணத்தை மாற்றுவது எளிது.

எனது ஆசீர்வாதம் இது, “உங்கள் கனவுகள் மெய்ப்படாமல் போகட்டும்.”  ஏனென்றால் உங்கள் எதிர்பார்ப்புகள் வாழ்க்கையின் மிகக் குறுகிய கண்ணோட்டத்தில் இருந்து வருகிறது. இந்த உலகில் நீங்கள் அதிகபட்ச பலனடைய விரும்பினால் – ஆன்மீகரீதியாக மட்டுமல்ல, பொருளாதாரரீதியாகவும் – அங்கே எதிர்பார்ப்புகள் இருக்கக்கூடாது.

ஆரோக்கியமற்ற எதிர்பார்ப்புகளின் சூழலும் அதன் மூலக்காரணமும்

எதிர்பார்ப்பு இல்லையென்றால், நோக்கம் இல்லை என்று அர்த்தமல்ல. ஆனால், “நான் விரும்பியது எனக்குக் கிடைக்கவில்லை. எனக்கு வேண்டியது நிகழவில்லை”, என்று நீங்கள் கணக்குப் போடுவதில்லை. ஒரு குறிப்பிட்ட திசையில் செல்ல விரும்புகிறீர்கள், ஆனால் எவ்வளவு தூரம் நீங்கள் செல்வீர்கள் என்பது உங்களிடம் எவ்வளவு எரிபொருள் உள்ளது என்பதைப் பொறுத்துள்ளது. மேலும் உங்களுக்கு எதிர்பார்ப்புகள் இருந்தால், உங்கள் வாகனத்தின் எஞ்சினை முறுக்கேற்றுவதிலேயே எப்போதும் உங்கள் எரிபொருளை வீணாக்கிக்கொண்டு இருப்பதுடன், நீங்கள் வெகுதொலைவிற்கு செல்லவும் மாட்டீர்கள்.

உங்களைச் சுற்றிலும் பல எதிர்பார்ப்புகள் உள்ளன, ஏனென்றால் உங்களது குழந்தைப் பருவத்திலிருந்தே, “நீ என்னவாகப் போகிறாய்? நீ ஒரு மருத்துவராக வருவாயா அல்லது தகவல் தொழில்நுட்பப் பொறியாளராக வருவாயா?” என்று சுற்றிலும் இருப்பவர்கள் கேட்டுக்கொண்டே உள்ளனர். தங்களது குழந்தைகள் குறித்து பெற்றோர்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்புகள் பெரும்பாலும் நிஜமற்றதாகவும், முட்டாள்தனமாகவும் உள்ளது. அது அவர்களுக்கும் நல்லதில்லை, குழுந்தைகளுக்கும் நல்லதில்லை. குழந்தைப் பருவத்திலிருந்தே, அதே நடைமுறையை நீங்கள் பழக்கப்படுத்துகிறீர்கள்.

உங்களது எதிர்பார்ப்புகளுக்கு உங்கள் மீது ஏன் அவ்வளவு பலமான பிடிமானம் இருக்கிறது என்றால், “இது, இது, இது மட்டும் நிகழ்ந்துவிட்டால், நான் மகிழ்ச்சியாக இருப்பேன்,” என்று நீங்கள் நினைக்கிறீர்கள். எப்பொழுதும் நீங்கள், மகிழ்ச்சி என்பது நாளை குறித்தது, இன்றைய விஷயம் அல்ல என்று நினைக்கிறீர்கள். நீங்கள் விரும்பும் விஷயங்கள் உங்களிடமிருந்து ஒவ்வொரு நாளும் சிறிது விலகினால், உங்களுடைய எதிர்பார்ப்பு மேலும் மேலும் வலிமையடைகிறது, நீங்கள் மேலும் மேலும் துன்பப்படுகிறீர்கள்.

எல்லாவற்றையும் மாற்றும் ஒரு அணுகுமுறை

இப்போது, நீங்கள் நிஜமாகவே பரவசத்தில் இருக்கிறீர்கள், ஆனால் ஒரு குறிப்பிட்ட விஷயம் நிகழவேண்டும் என்று விரும்புகிறீர்கள். அதனை நீங்கள் பின்தொடர்ந்துகொண்டு இருக்கிறீர்கள், ஆனால் நாளைக்கே, உங்களுக்கு விருப்பமானதை நெருங்குவதற்கு பதில், அது மேலும் உங்களைவிட்டு விலகிச் செல்கிறது என்று வைத்துக்கொள்வோம். இருப்பினும் நீங்கள் ஆனந்தமாக இருக்கும் காரணத்தால், அது பெரிய அளவில் துன்பத்தை உருவாக்காது.

உங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்பது மற்றவரால் அல்லாமல், உங்களால் முடிவு செய்யப்படுவதை முதலில் நிலைநிறுத்துங்கள்.

ஆகவே, உங்களை நிலைநிறுத்திக்கொள்ளாமல், உலகத்தில் விஷயங்களைச் செய்வதற்கு நீங்கள் முயற்சிக்கிறீர்கள். இதனை முன்னரே கிருஷ்ணன் கூறியுள்ளான், “யோகஸ்தஹ குருகர்மானி.” அதாவது, முதலில் உங்களை யோகத்தில் நிலைப்படுத்துங்கள்; பிறகு செயலாற்றுங்கள். ஆனால், நீங்கள் ஒரு குளறுபடியான நிலையில் செயல்படத்தொடங்கி, இப்போது யோகாவின் பக்கம் திரும்புகிறீர்கள். உங்களிடம் இருந்து, மற்றவர்களிடம் இருந்து, உலகத்திடம் இருந்து என்ன வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவற்றை மறந்துவிடுங்கள். உங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்பது மற்றவரால் அல்லாமல், உங்களால் முடிவு செய்யப்படுவதை முதலில் நிலைநிறுத்துங்கள். இந்த ஒரு விஷயத்தை மட்டும் நீங்கள் செய்துவிட்டால், இயல்பாகவே, நீங்கள் இனிமையாக இருப்பதைத்தான் விரும்பித் தேர்வு செய்வீர்கள்.

நீங்கள் மிகவும் இனிமையாக இருக்கும்போது, உங்களது சிந்தனை மாறுகிறது: “இன்னமும் 10,000 விஷயங்கள் என் வாழ்க்கையில் நிகழாமல் இருக்கிறது - அதனால் என்ன? ஆனந்தமான உற்சாகத்துடன், நான் அதைத் தேடிச்செல்வேன் என்பதுடன் அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாய்ப்புகள் இப்போது மேலும் அதிகமாக உள்ளது. அவைகள் நிகழவில்லை என்றால், அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஏனென்றால், எப்படி இருந்தாலும் இங்கு வாழ்ந்திருக்கும் என் அனுபவம் எனக்கு அற்புதமாகவே இருக்கிறது.”

எதிர்பார்ப்புகளில் இருந்து நன்றியுணர்வுக்கு நகர்தல்

அடித்தளத்தை நிலைப்படுத்தாமல், நாம் எங்கேயோ செல்ல முயற்சிக்கிறோம் – அதுதான் பிரச்சனை. உங்களது காரை ஓட்டவேண்டும் என்றால், அது சரியான நிலையில் இருக்கிறதா என்பதை நீங்கள் முதலில் பார்க்கவேண்டும். அதனுடைய இரண்டு சக்கரங்கள் சரியாக பொருத்தப்படாமல், ஜாக்கியின் மீது இருக்கும்போதே நீங்கள் அதை ஓட்டுவதற்கு முயன்றால், அது பேரழிவாக இருக்கும்.

நீங்கள் இளமையாக இருக்கும்பொழுது, உங்களையே ஸ்திரப்படுத்திக் கொள்வதற்கான நேரம் இது, உடனே கார் ஓட்டுவதற்கு அல்ல. சக்கரங்களை நன்றாக பொருத்துவதற்கு முன்பு நீங்கள் ஓட்டினால், அது வலி மிகுந்ததாகவும், பேரழிவாகவும் இருக்கப்போகிறது. உங்களுக்கு நீங்களே அதைச் செய்துகொள்ளாதீர்கள். இந்த வாழ்வை அது எப்படி இருக்கிறதோ அந்த விதமாக பார்த்தால், படைப்பின் பிரம்மாண்டமான தன்மையினால் நீங்கள் ஆட்கொள்ளப்படுவதைத் தவிர்க்கமுடியாது. மலைகள், ஏரிகள், சமுத்திரங்கள், எல்லையில்லாத பிரபஞ்சம் மற்றும் இந்த பூமியில் நிகழ்ந்துகொண்டிருக்கும் அளவிடற்கரிய உயிரினங்கள் அனைத்துமே நமக்கு பிரம்மிப்பூட்டுகிறது.

உயிரின் செயல்முறையை உற்று நோக்கும்போது – அதன் பன்மை, அதன் புத்திகூர்மை மற்றும் ஒரு ஒருங்கிணைந்த சக்தியாக இந்த சின்னஞ்சிறு கிரகத்தின் மீது வாழ்ந்துவரும் இலட்சோபலட்சம் கோடி உயிரினங்களின் சமநிலை - உங்களை வியப்பில் ஆழ்த்தாமல் இருக்கமுடியாது. இந்தப் படைப்பில் இருக்கும் எல்லா உயிர்களுக்குமான நன்றியுணர்வின் ஆழமான அனுபவம் உங்களுக்கு கிடைக்கட்டும்.