பல்வேறு உலகளாவிய முரண்பாடுகளுக்கு ஏன் அமைதியாகத் தீர்வு காணப்படுவதில்லை
உக்ரைனின் போர், உலகமெங்கும் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியுள்ளது. இருப்பினும், சமீப காலங்களில் நிகழ்ந்துள்ள பல மோசமான போர்களுள் ஒன்றாகத்தான் அது இருக்கிறது. இன்றைய முடிவில்லாத வன்முறையான முரண்பாடுகளுக்கான காரணங்களை விவாதிக்கும் சத்குரு, அடுத்த 25 ஆண்டுகளில் நாம் ஒவ்வொருவரும் இரண்டு முக்கியமான அணுகுமுறைகளின் மூலம் உண்மையான உலக அமைதிக்கு எப்படி பங்களிக்க முடியும் என்றும் கூறுகிறார்.
கேள்வி: அநேகமாக, பூமியில் இருக்கும் மிக வளமான மண் இப்போது போர் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நாட்டில் இருக்கிறது – அதுதான் உக்ரைன். அது குறித்து நாம் என்ன கூறமுடியும்? நாம் என்ன செய்கிறோம்?
சத்குரு: ஏறக்குறைய உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு தேசமும், ஆயுதங்கள், போர்க்கருவிகள், குண்டுகள் மற்றும் ஏவுகணைகளைக் கட்டமைப்பதிலும், சேமிப்பதிலும் ஏராளமான பணத்தை முதலீடு செய்துள்ளது. போர்த் தளவாடங்களின் உற்பத்தியாளர்கள் “ஸ்மார்ட் குண்டுகள்”, என்று விளம்பரம் செய்கின்றனர். விமானத்திலிருந்து போடக்கூடிய குண்டு, ஜன்னல் வழியாக சென்று ஒரு குறிப்பிட்ட வீட்டினை தாக்குமளவுக்கு செய்யமுடியும் என்று கூறுவதுடன், அதற்காக பெருமையும் கொள்கின்றனர்.
இங்கே ஒரு ஆயிரம் பேர் என்ன நிகழ்கிறது என்று அறியாமலே அமர்ந்திருக்கின்றனர்; ஒரு குண்டு விழுந்தால் அனைவருக்கும் இறப்பு நிச்சயம் – இதில் புத்திசாலித்தனம் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. அது படுமுட்டாள்தனமான செயல். குறைந்தபட்சம், ஒட்டுமொத்தமாக அழிக்கக்கூடிய இந்த பயங்கரமான தொழில்நுட்ப ஆயுதங்களையாவது பயன்படுத்தாதீர்கள்.
இது ஒரு தேசத்தில் மட்டுமல்ல – உலகமெங்கும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்த குண்டுகள் அனைத்தும் உற்பத்தியில் குவிந்துகொண்டிருக்கும்போது, நாம் அதை வேடிக்கைப் பார்க்கிறோம். குண்டு வெடிப்பு இல்லாத அல்லது குறைந்தபட்சம் முகம் சேதமாக்கப்படாத ஒரு திரைப்படம்கூட இல்லை, மேலும் நாம் அதை ரசித்துப் பார்க்கிறோம். அதுவே உண்மையாக கண்ணெதிரில் நிகழும்போது, நாம் அதிர்ச்சியடைகிறோம். வாழ்க்கை அவ்வாறு செயல்படுவதில்லை.
பேரழிவு நிகழ்ந்த பின் துயரப்படுவீர்களா, அல்லது பேரழிவை மாற்றியமைக்கும் தலைமுறையாக நீங்கள் இருப்பீர்களா? நம்மிடம் இருக்கும் தேர்வு இதுமட்டும் தான். பூமியில், இது நமக்கான நேரம். இப்பொழுது நாம் எப்படிப்பட்ட தாக்கத்தினை உலகத்தில் ஏற்படுத்தப்போகிறோம் என்பதைக் குறித்து நமது மனதில் முடிவு செய்துகொள்ள வேண்டும்.
போர்கள் ஏறக்குறைய தவிர்க்க இயலாதவைகளாக இருக்கின்றன, ஏனென்றால் உலகத்தின் பொருளாதாரங்கள் போரின் மீது கட்டமைக்கப்படுகின்றன. பூமியின் பெரும் தொழிற்சாலைகளுள் ஒன்றாக ஆயுதங்களும், போர்த் தளவாடங்களும் இருக்கின்றன. துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை உற்பத்தி செய்து, விற்பனை செய்தால், அவைகள் பயன்படுத்தப்படாது என்று எப்படி நீங்கள் நினைக்கிறீர்கள்? மனிதர்களை உங்களால் மாற்றமுடிந்தால், அற்புதமானது. அது சாத்தியமில்லை என்றால், குறைந்தபட்சம் ஆயுதங்களால் அவர்களுக்கு வல்லமை அளிக்காதீர்கள். போர்களை நிறுத்தும் நோக்கம் நமக்கு இல்லை என்றே தோன்றுகிறது.
அது நமக்கு நிகழும்பொழுது அல்லது நமக்கு நெருக்கமாக அது நிகழும்பொழுது, நாம் அழுது துடிப்போம். அது வேறு எங்கேயோ நிகழும்பொழுது, நமக்கு நாடகமாக இருக்கிறது. போரைப் பற்றிய இந்த மனிதத்தன்மையற்ற போக்கு, படுகொலைகள் மற்றும் பிற மக்கள் அனுபவிக்கும் துன்பம் ஆகியவற்றிலிருந்து நாம் வெளிவர வேண்டும்.
பெரும்பாலான கொடிய விஷயங்கள், தீய நோக்கங்களால் நிகழவில்லை, ஆனால் உணர்ச்சியற்ற தன்மையினால் மட்டுமே அவை நிகழ்ந்திருக்கின்றன. வாழ்க்கை முழுவதும் நீங்கள் தூங்குகிறீர்கள். தூங்குவது ஒரு குற்றமா? இல்லை, தூக்கம் ஒரு நல்ல விஷயம். ஆனால் நீங்கள் உங்கள் வாழ்க்கை முழுவதும் தூங்கினால், அது ஒரு பேரழிவு. மண் சார்ந்த விஷயத்திலும், போர் சார்ந்த விஷயத்திலும் உலகத்துக்கு அதுதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது – நாம் கண் விழிக்காமல் ஆழ்ந்து உறங்குகிறோம்.
எண்ணற்ற போர்கள் நிகழ்ந்துள்ளன. முதல் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போரில், போதுமான துயரங்களை நீங்கள் பார்க்கவில்லையா? அப்படிப்பட்ட பாதகங்களுக்கு மனிதர்கள் ஆளாகக்கூடாது, ஆனால் மக்கள் அவற்றை அனுபவித்தனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒருவிதமான விவேகம் வந்ததாகத் தோன்றியது. ஐரோப்பாவில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்திலும் மீண்டும் அப்படிப்பட்ட போர்கள் ஒருபோதும் நிகழக்கூடாது என்று கூறினர்.
அவர்கள் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கினர். நாடுகளிடையே எழும் பிரச்சனைகளுக்கு ஒருவரை ஒருவர் சுட்டுக்கொள்ளாமல், நாம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஒரு உலக அமைப்பை உருவாக்குவது இதன் நோக்கம். நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று எண்ணுவதற்கு நாம் ஒரு கனவுலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. நமக்கு பொருளாதாரப் பிரச்சனைகள் உள்ளன; நமக்கு எல்லைப் பிரச்சனைகள் உள்ளன; நம்மிடையே முரண்பட்ட நம்பிக்கைகள் உள்ளன – உண்மையாகவே நமக்கு பிரச்சனைகள் உள்ளன. பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான ஒரு தளம் அமைப்பதுதான் நமது நோக்கம். ஆனால் என்ன நிகழ்ந்துள்ளது? நாம் அந்த அமைப்பைப் புறந்தள்ளிவிட்டு, ஒருவருக்கொருவர் நம் விருப்பம்போல செயல்படுகிறோம்.
இரண்டாம் உலகப் போர் முதல், உலகமெங்கும் எத்தனை போர்கள் நிகழ்ந்துள்ளன? 2000 ஆண்டு துவங்கியபோது, 20ஆம் நூற்றாண்டு கொடுமையான போர்கள் நிறைந்த ஒன்றாக இருந்தது – 21 ஆம் நூற்றாண்டு தகவல் தொழில்நுட்பத்தின் காலம் – நாம் சண்டையிடப்போவது கிடையாது என்று நாம் கூறினோம். ஆனால் 2000 ஆண்டிலிருந்தே, உலகெங்கும் எத்தனை மோசமான போர்கள் நிகழ்ந்துள்ளன? எத்தனை தேசங்கள் அழிக்கப்பட்டுள்ளன? எண்ணற்ற தேசங்கள், அல்லவா?
ஒரே இரவில் உங்களால் மாற்றக்கூடிய விஷயங்கள் அல்ல இவை. ஆனால், முதலில் உங்கள் இதயங்களுக்குள் இது நிகழவேண்டும், உங்கள் கோபமும், வெறுப்பும் மறையவேண்டும்.
ஒரு தருணத்தில் நான் உலக அமைதி மாநாடுகள் பலவற்றிலும் பங்குகொள்வது வழக்கமாக இருந்தது. பிறகு நான் கவனித்தேன், பல பேருக்கு மாநாடு என்பது ஒரு தொழிலாக இருந்தது – அவர்கள் அதன் மூலம் வருவாய் ஈட்டுகின்றனர். உலக அமைதிக்காக நாம் செயல் செய்வதாக நினைத்துக்கொண்டு அங்கே அமர்ந்திருந்த ஒரே முட்டாள் நான் மட்டுமே.
அவ்வாறு நான் ஒரு குறிப்பிடத்தக்க மாநாடு ஒன்றில் இருந்தேன்; நோபல் பரிசு வென்ற பலரும், சில முன்னாள் மாகாணத் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர். அவர்கள் மாநிலத்தின் தலைவர்களாக இருக்கும்போது, போர் செய்வார்கள்; ஆனால் ஓய்வு பெற்றதற்குப் பிறகு, அமைதி குறித்து பேசுவார்கள். இது உலகத்தின் நடைமுறையாகவே இருந்துள்ளது. மூன்றாவது நாளின் மதியப்பொழுதில், ஒரு குறிப்பிட்ட நோபல் பரிசு பெற்றவரின் உரை நடக்க இருந்தது. அவர் மேடையில் எழுந்து நின்று, அவரது ஃபைலைப் பிரித்து வைத்துக்கொண்டு, பக்கம் பக்கமாக 42 பக்கங்களையும் தலை நிமிராமல் வாசிக்கத் துவங்கினார். நான் முதல் வரிசையில் அமர்ந்துகொண்டு, ஒவ்வொரு வார்த்தையையும் கிரகிக்கும் முயற்சியில் இருந்தேன். பிறகு சற்று நேரம் கழித்து ஹாலை சுற்றுமுற்றும் பார்த்தேன், அமைதி நிறைந்திருந்தது – ஏனென்றால் அங்கிருந்த அனைவரும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். “இதுதான் உலக அமைதி”, என்று நினைத்துக்கொண்டேன்.
பிறகு பேசுவதற்கான எனது முறை வந்தது. நான் கூறினேன், “கடந்த மூன்று நாட்களில், உலக அமைதியை உருவாக்குவது குறித்து ஆரவார உரைகளைக் கேட்டிருந்தேன். ஆனால் நான் நேர்மையாக உங்களைக் கேட்கிறேன் – உங்கள் மனம் அமைதியாக இருக்கிறது என்று எத்தனை பேரால் உங்கள் நெஞ்சில் கை வைத்துக்கூற முடியும்? உங்கள் மனதை அமைதிப்படுத்த முடியவில்லை என்றால், உலகத்தில் அமைதியை நிலைநாட்டுவது என்ற கேள்விக்கு இடமே இல்லை. மனித மனங்களில் நிகழ்ந்துகொண்டிருப்பது என்னவோ, அதன் உருப்பெருக்கிய வெளிப்பாட்டைத்தான் உலகத்தில் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.” இந்தப் பூமியில் மனிதர்கள் இல்லாமல் இருந்தால், உலகம் அமைதியாக இருக்கும்.
பிறகு, அன்றைய பிற்பகல் அமர்வில் ஏன் அனைவரும் தூங்கிவிட்டீர்கள் என்று வினவினேன். அதற்கு அவர்கள், “சத்குரு, நேற்று மாலையில், ஒரு பகார்டி கொண்டாட்டம் இருந்தது,” என்றனர். கட்டுப்பாடற்ற பானங்கள், ஆகவே அனைவரும் அமைதியாகிவிட்டனர். இறுதியாக நான் சென்ற உலக அமைதி மாநாடும் அதுதான்.
அனைவரது மனதையும் அமைதிப்படுத்த நம்மால் முடியாது. நீங்கள் உங்களுடையதை அமைதிப்படுத்தலாம்; நான் என்னுடையதை அமைதிப்படுத்தலாம்; அவர் அவருடையதை அமைதிப்படுத்த முடியும். அது அந்த விதமாக மட்டும்தான் செயல்படுகிறது. நாம் உலகம், சமூகம் மற்றும் மனிதகுலம் குறித்துப் பேசுகிறோம் – இவை வெறும் வார்த்தைகள். இங்கிருப்பது மனிதர்கள் மட்டுமே. ஒவ்வொரு தனிமனிதரும் அவர்களது பிரச்சனைகளைத் தீர்க்கவில்லை என்றால், உலகத்தில் பிரச்சனைகள் ஒருபோதும் தீராது. அது பல வழிகளிலும் வெளிப்படும்.
நீங்கள் அனைவரும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வலுவான ஒரு அறிக்கையினை வெளியிட வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். எதற்கும் தளராத உறுதி இருந்தால் தவிர, எதுவும் நிகழ்வதில்லை. ஒருநாள் மட்டும் அதைச் செய்து, பிறகு விட்டுவிடாதீர்கள். குறைந்தபட்சம் இப்போதிலிருந்தாவது, அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சிகள் இராணுவத் தளவாடங்களுக்கு பயன்படுத்தப்படக்கூடாது என்று நீங்கள் அனைவரும் கோரிக்கை எழுப்ப வேண்டும். அந்த இலக்கு நோக்கி நீங்கள் வலியுறுத்த வேண்டும். இது ஒரே இரவில் சாதிக்கப்படப் போவதில்லை. இந்த ஒரு தலைமுறையாக நீங்கள் நெருக்கடி அளித்தால், அடுத்த 25 வருடங்களில் அதற்கு ஒரு முடிவு ஏற்படலாம். ஆனால், அதற்கு தளராத உறுதிப்பாடு தேவை.