சங்கரன் பிள்ளையிடம் ஒரு வயதான கழுதை இருந்தது. அதை அவர் விற்க முயற்சி செய்தார். ஆனால் யாரும் அதை வாங்க முன்வரவில்லை. பின்னர் ஒருநாள் காலை, அந்த கழுதை சத்தம் போட்டு கனைத்துக்கொண்டு இருந்தது. தவறுதலாக அருகிலிருந்த வறண்ட ஒரு கிணற்றுக்குள் அது விழுந்துவிட்டது. அந்த கழுதை பயந்து போய் வெளியே வரவேண்டும் என்ற முயற்சியில் அவ்வாறு பல்வேறு கொடூரமான சத்தங்களை எழுப்பிக் கொண்டிருந்தது. சங்கரன் பிள்ளையின் நண்பர்கள் மற்றும் அருகிலிருந்த விவசாயிகள் அங்கு வந்து அந்த சூழலைக் கண்டார்கள். அவர்கள் கூறினார்கள், "இது எதற்கும் உபயோகம் இல்லாத வயதான கழுதை. நாங்கள் முன்பே இந்த வறண்ட கிணற்றை மூடிவிட வேண்டும் என்று கூறியிருந்தோம். இப்போது இந்த கிணற்றை கழுதையோடு சேர்த்து புதைத்து மூடிவிடலாம்" என்றார்கள்.
அவர்கள் கூடை கூடையாக மண்ணைக் கிணற்றுக்குள் கொட்டத் துவங்கினார்கள். ஒவ்வொரு முறை ஒரு கூடை மண் கிணற்றுக்குள் இருந்த கழுதையின் மேல் விழுந்தபோதும், அந்த கழுதை மண்ணை உதறிவிட்டு அதன் மேல் ஏறி நின்றுகொண்டது. அவ்வாறு தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருந்தது. பின்னர் அவர்கள், "என்ன அதிசயம்! இது உண்மையிலேயே மிக புத்திசாலியான கழுதை," என்று வியந்தனர். அவர்கள் மேலும் மேலும் மண்ணை கொட்டியபோது கழுதை மெதுவாக மேலே ஏறி ஏறி முடிவில் கிணற்றை விட்டு வெளியேறியது. திடீரென சங்கரன் பிள்ளைக்கு இந்த புத்திசாலியான கழுதையின் மேல் மிகவும் பிரியம் பிறந்தது. அவர் சென்று அந்த கழுதையை கட்டிப்பிடிக்க முயன்றார். ஆனால் கழுதை பின்னால் திரும்பி அவரின் முகத்தில் ஓங்கி உதைத்துவிட்டு ஓடிவிட்டது.
வாழ்க்கை உங்களை நோக்கி எதை எறிந்தாலும், அதை உதறிவிட்டு அதன் மேல் ஏறி நில்லுங்கள். உங்கள் வாழ்வில் உங்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு அனுபவமும் உங்களை மேலும் சிறந்தவராக அறிவார்ந்தவராக மாற்றவேண்டும். வெறும் இனிமையான அனுபவங்களை மட்டும் தேடாதீர்கள். உங்களை நோக்கி எது வந்தாலும், அதை உங்களின் வளர்ச்சிக்கான, முதிர்ச்சிக்கான மற்றும் நல்வாழ்விற்கான அடித்தளமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த உலகம் உங்களை நோக்கி என்ன எறியக்கூடும் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது. ஆனால் அதை எவ்வாறு நீங்கள் உபயோகிக்க முடியும் என்பதை 100 சதவிகிதம் உங்களால் தீர்மானிக்க முடியும். உங்களை நோக்கி வரும் ஒவ்வொரு விஷயத்திலும் சிறந்ததை நீங்கள் கட்டாயம் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
சிறுவயதாக இருக்கும்போதே பல மோசமான நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் நிகழ்ந்தால், கட்டாயமாக மற்றவரைக் காட்டிலும் விரைவாக மற்றவர்களைக் காட்டிலும் புத்திசாலியானவராக நீங்கள் உருவாக வேண்டும். ஆனால் பெரும்பாலான மக்கள் காயப்படுவதை தேர்ந்தெடுக்கிறார்கள். மக்கள் தங்கள் காயங்களை வெற்றி சின்னம் போல அணிந்து கொள்கிறார்கள், "உனக்கு தெரியுமா, எனக்கு என்ன நிகழ்ந்தது என்று?" மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்தார்கள் என்பது கேள்வியல்ல. நீங்கள் உங்களுக்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது தான் மிகப்பெரிய கேள்வி. நீங்கள் சிறந்ததையே செய்ய வேண்டும்.