அன்னையர் தினத்தினை முன்னிட்டு, தாய் ஆக எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நமது இந்தியப் பாரம்பரியத்தில் வழங்கப்பட்ட கவனிப்பு நிலைப் பற்றியும் தாய் மற்றும் சேய்க்கு ஒரு உகந்த சூழ்நிலையை இன்றும் கூட நாம் எவ்வாறு உருவாக்க முடியும் என்பதைப் பற்றியும் சத்குரு அவர்கள் நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்.
கேள்வியாளர்: நமது வாழ்க்கை முழுவதும் நமது மனதினைப் பக்குவப்படுத்த கடினமாக முயற்சி செய்கின்றோம். குழந்தை கருவில் இருக்கும்போதே மனித மனத்தினை வடிவமைக்க வழிகள் ஏதேனும் இருக்கின்றதா?
சத்குரு: கருத்தரிப்பிற்கு முன்பிலிருந்து கருத்தரிப்பு வரை, கர்ப்பகாலத்தின் பல்வேறு காலகட்டங்களிலிருந்து குழந்தைப் பிறப்பு வரை, மேலும் தாய் அந்த குழந்தைக்கு பாலூட்டும் காலம் வரை, பெண்கள் எப்படி சாப்பிட வேண்டும், அவர்கள் என்ன செய்ய வேண்டும், அவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய மனிதர்கள், பார்க்க வேண்டிய உருவ வகைகள், கேட்க வேண்டிய சப்தங்கள் என ஒரு முழு செயல்முறை இந்தியாவில் பொதுவாக இருந்தது. இது அனைத்துமே மிக நன்றாக உருவாக்கப்பட்டிருந்தது, ஆனால் வாழ்க்கை மாறிவிட்டது.
இன்று பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்கின்றார்கள். அவர்கள் புகை, சத்தங்கள், இரைச்சல்கள், தகாத வார்த்தைகள் என எல்லாவிதமான விஷயங்களையும் சந்திக்கலாம். ஏதோ ஒரு வகையில் கருவில் இருக்கும் குழந்தைக்கும் நாம் இதை செய்கின்றோம்.
ஒன்றரை வருட காலத்திற்கு விடுப்பு எடுத்துவிட்டு திரும்பவும் செல்வது போன்ற எந்த ஒரு வேலைவாய்ப்பும் இல்லை. பல காரணங்களுக்காக, அடுத்த தலைமுறையை உருவாக்கும் செயல்முறையை தீவிரமாக நாம் பொருட்படுத்துவதில்லை. அதற்கு தேவையான கவனத்தை நாம் வழங்குவதில்லை, அதற்கான மிகப்பெரிய விலையை காலப்போக்கில் நாம் வழங்க வேண்டிவரும். இந்த செயல்முறைக்குத் தேவையான நேரத்தையும் கவனத்தையும் பெண்கள் அர்ப்பணிப்பதற்கான இடத்தினை நமது சமூக சூழ்நிலைகள் பெரும்பாலும் அனுமதிப்பதில்லை
கர்ப்பமாக இருப்பது என்பது இனப்பெருக்கம் பற்றியது மட்டுமல்ல - இதன் அர்த்தம் அடுத்த தலைமுறையை உருவாக்குதல். இந்த பூமியில் நாம் உற்பத்தி செய்யும் அனைத்து தயாரிப்புகளிலும், அற்புதமான மனிதர்களை உருவாக்குதல் என்பது மிக முக்கியமான ஒன்று, இல்லையா? ஆனால் நாம் எப்படி போற்றி செய்ய வேண்டுமோ அப்படி செய்வதினை மிக கடினமான ஒன்றாக இருக்கும்படி இன்றைய சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலையினை நாம் உருவாக்கியுள்ளோம். சில தனிப்பட்ட பெண்கள் அல்லது குடும்பங்களால் ஓரளவிற்கு அதுபோல் செய்ய முடியலாம்; ஆனால் பெரிய சமுதாயத்திற்கு அது கேள்விக்குறியாக உள்ளது.
மனித உடலின் நுண்ணறிவு என்பது எப்படிப்பட்டது என்றால், கைக்குழந்தையின் பாலினத்தைப் பொறுத்து தாய் சுரக்கும் பாலின் தன்மை மாறுபடுகின்றது. இந்த உடல் ஒரு கச்சா இயந்திரம் அல்ல - இது பூமியின் தொழில்நுட்பத்தின் சிறந்த ஒன்று. அதனால் நாம் இதனை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். பரிணாம அளவில், மனித அமைப்பின் வடிவமைப்பினை முழுமைப்படுத்த பல இலட்சம் ஆண்டுகளை இயற்கை எடுத்துக்கொண்டுள்ளது. ஆனால் நமது பொருளாதார நல்வாழ்விற்கான விரக்தியில், உயர்ந்த நிலையில் செயல்புரிவதற்கும் ஒரு குறிப்பிட்ட விதத்திலான மனிதர்களை உருவாக்குவதற்கும் தேவையான கவனத்தினை நாம் செலுத்துவதில்லை
அதனால், குழந்தை கருவில் இருக்கும்போதே அதன் அறிவினை வளர்ப்பது எப்படி? குறைந்த அளவு தொந்தரவு, சரியான அதிர்வுகள், சரியான சத்தங்கள், சரியான உணவு வகை போன்ற குழந்தை வளர்வதற்கான சூழ்நிலை மிகவும் முக்கியமானது. இன்று, உலகின் பல பாகங்களில் கருவுற்ற பெண்கள் ஊட்டச்சத்து குறைபாடுடன் இருக்கும்போது, சரியான அதிர்வுகள் மற்றும் சூழ்நிலைகளை உருவாக்குவது என்பது எவ்வாறு சாத்தியம்.
இதற்காக நாம் செய்யக்கூடிய ஒன்று, ஒவ்வொரு வீட்டிலும் முடிந்தால் ஒவ்வொரு வேலையிடங்களிலும் ஒரு பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தினைக் கொண்டிருக்கலாம். அவர்கள் உடலில் வைத்துக்கொள்ளக்கூடிய சக்தியூட்டப்பட்ட பொருட்களையும் நாம் உருவாக்க முடியும். அது சிறந்த தீர்வு அல்ல; ஆனால் ஏதோ ஒரு வகையில், அது வெளிசூழ்நிலைகளின் தாக்கத்தை ஈடுசெய்கின்றது. அவர்கள் பிரதிஷ்டை செய்த இடத்தில் வாழ்ந்து தூங்கினால், கருவில் மலரும் புது உயிருக்கு கொஞ்சம் நிவாரணம் கிடைக்கும்.