சில வருடங்களுக்கு முன்னர், சத்குரு ஆன்மீகக்குழு ஒன்றை திபெத்தில் உள்ள கம்பீரமான கைலாய மலைக்கு அழைத்துச்சென்றார். அப்போது அவர் திபெத்திய பௌத்தத்தின் தொடக்கத்தையும் மற்றும் தாந்திரீகத்தில் அது வேரூன்றி இருப்பதையும் வெளிப்படுத்தினார். மேலும், அந்நிய ஆக்கிரமிப்பாளர்களால் எவ்வாறு தாந்திரீகம் திட்டமிட்டு அழிக்கப்பட்டது என்பதையும் அவர் விளக்கினார்.
கேள்வியாளர்: நமஸ்காரம் சத்குரு! முற்பிறவிக்குள் பின்னோக்கிச் செல்வது கர்மாவை தீர்க்க உதவுகிறதா?
சத்குரு: பொதுவாக "முற்பிறவி பின்னோக்கம்" என்பது முக்கியமாக ஒரு உளவியல் சார்ந்த செயல்முறையாகவே செய்யப்படுகிறது. நீங்கள் அந்த முறையில் முற்பிறவிக்குள் செல்வதில்லை. இல்லையென்றாலும்கூட, உங்களது மனம் உங்களால் ஒருபோதும் தொடமுடியாத பல அடுக்குகளைக் கொண்டுள்ளது. உபயோகிக்கப்படாத அதிகளவு திறன்களை உங்கள் மனம் கொண்டுள்ளது. உதாரணத்துக்கு, அனேகமாக ஒன்றுக்கு மேற்பட்ட தனிநபர் அடையாளக் குறைபாடு உடைய ஒரு நபர், ஒரு சாதாரண நபர் என்று அழைக்கப்படுபவரைக் காட்டிலும் மிக அதிகளவுக்கு தன் மனத்திறனை உபயோகிக்கிறார்.
வெவ்வேறு உணர்வின் நிலைகளை உருவாக்கக்கூடிய அளவுக்கு மனம் மிகவும் சிக்கலானது. உதாரணத்திற்கு, என்னை இப்போது நீங்கள் கண்டீர்கள்; என்னை ஒரு முன்னிலைப் பொருளாகக்கொண்டு, நீங்கள் விரும்பினால் உங்களால் ஒரு ஆயிரம் பக்கங்கள் எழுத முடியும். மனிதர்களுக்கு அத்தகைய திறன் உள்ளது. சிலர் அதை வளர்த்துள்ளார்கள், சிலர் அதை வளர்க்கவில்லை. ஆனால் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் அந்தத் திறன் உள்ளது.
நான் வெறுமனே ஒரு எண்ணத்தை உங்களுக்கு கொடுத்தால், அதை மையமாக்கி ஒட்டுமொத்த வாழ்வையும் உங்களால் வடிவமைக்க முடியும். இதுவே தாந்திரீகக் கலை. தாந்திரீகம் என்றால், அனைத்தையும் விரிவான நுணுக்கத்துடன் நீங்கள் உருவாக்கும் அளவுக்கு உங்களது மனதை உபயோகிப்பது. சக்தி சலன கிரியா மற்றும் நீங்கள் செய்யும் பிற பயிற்சிகள் யாவும் மிக எளிமையானவை. ஆனால் அவற்றை நீங்கள் செய்வதற்குகூட உங்கள் மனதை நீங்கள் உபயோகிக்க வேண்டும். அதை நீங்கள் ஒவ்வொரு நாளும் செய்துவந்தால், உங்கள் மனதை நீங்கள் ஒரு குறிப்பிட்ட வழியில் பயிற்றுவிக்கிறீர்கள்.
வாழ்வின் பொருள்தன்மையான தளத்தில், மனதின் கூருணர்வு வியக்கத்தக்க விஷயங்களைச் செய்ய முடியும் – அது தன்னளவில் ஒரு உலகையே உருவாக்க முடியும். இந்த உடல் மெல்ல மெல்ல உருவாக்கப்பட்டது; ஒவ்வொரு அணுவும், ஒவ்வொரு விவரமும் உள்ளிருந்து உருவாக்கப்பட்டது. பிரம்மாண்ட அளவிலான மனக்குவிப்பு இதற்குத் தேவைப்பட்டது. இந்த மனக்குவிப்பு முழுமையான உணர்வுடன் நிகழ்ந்தால், அப்போது நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறீர்கள். இல்லையென்றால், அது மனதின் கூருணர்வு மட்டுமே. மனதின் கூருணர்வு வியக்கத்தக்க விஷயங்களைச் செய்ய முடியும். நீங்கள் விரும்பினால் ஒரு புது உலகையே உங்களால் படைக்கக்கூடிய ஒரு நிலைக்கு, தாந்திரீகத்தில் அவர்கள் மனக்குவிப்புடன் செயல்படுவது வழக்கமாக இருந்தது.
கைலாயமானது தாந்திரீக மலையாக அறியப்படுகிறது. மேலும் திபெத், தாந்திரீக பூமியாக அறியப்படுகிறது. ஆனால் தாந்திரீகம் இங்கே துவங்கவில்லை. திபெத்துக்கு தாந்திரீக செயல்முறைகளைக் கொண்டுசென்ற முதல் குருமார்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அவ்வாறு சென்ற முதல் குரு சாந்தரக்ஷிதா. அவர் அந்த செயல்முறையை ஓரளவுக்கு துவக்கிவைத்தார். ஆனால் அவர் தாந்திரீகராக இருந்ததைவிட அதிகமாக ஒரு பௌத்தராக இருந்தார். தன்னுடைய போதனைகளால், மக்களை அவர்களின் பழைய மாந்திரீகப் பயிற்சிகளிலிருந்து விலக்கி, ஆன்மீகத்தின் பக்கம் திருப்ப இயலவில்லை என்பதை அவர் உணர்ந்தபோது, அதை செயல்படுத்தக்கூடிய சரியான குருவைத் தேடிக்கொண்டு சென்றார்.
தீவு ஒன்றில், ஒரு கையில் வைரமும், மற்றொரு கையில் ஒரு தாமரையோடும் அமர்ந்திருந்த ஒரு எட்டு வயது சிறுவனாக பத்மசாம்பவரை அவர் கண்டறிந்தார். அதற்கான ஒரு மறைஞான பின்புலம் இருந்தது. நாம் அறிந்தவரையில், அது ஒரு தீவாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அது முற்றிலும் வேறுபட்ட ஒரு தளம். இந்த அடித்தளத்தில் இருந்துதான் வஜ்ராயன பௌத்தம் பிறந்தது. இது முழுமையான தாந்திரீகத்தை உள்ளடக்கியது. இன்று நீங்கள் திபெத்திய பௌத்தமாக காண்பது அதன் எச்சமாகவே இருக்கிறது. சமூகரீதியாக, இது பௌத்தம் மற்றும் தாந்திரீகத்தின் வசதியான ஒரு கலவை.
தன்னளவில் தாந்திரீகம் ஒருபோதும் சமூகத்தில் அங்கீகாரம் பெற்றிருக்காது. ஏனெனில் தாந்திரீகர்கள் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாத மனிதர்கள். பௌத்தம் மிகவும் நேர்மையானது மற்றும் தூய்மையானது. மிகவும் சாதுர்யமான ஒரு குருவான பத்மசாம்பவர், தாந்திரீகத்தையும், பௌத்தத்தையும் சரியான விகிதத்தில் கலந்தார். பௌத்தம் என்பது வெறும் வெளித்தோற்றம்தான். உண்மையில் அவர் தாந்திரீகத்தைதான் கொண்டுவந்தார்.
சமூகம் ஏற்றுக்கொள்வதற்காக பௌத்த சீருடையை அணிந்திருந்த தாந்திரீகர்கள் இவர்கள். துன்பங்களில் இருந்தும், மற்றும் அதைப்போன்ற விஷயங்களில் இருந்தும் உங்களை விடுவிப்பதற்கான அற்புதமான விஷயங்களை அவர்கள் செய்தனர். இதனை ஒருபோதும் எளிய தியான செயல்முறைகளால் மட்டும் செய்திருக்க முடியாது. திபெத்தில் செய்யப்பட்டது அதி அற்புதமானது. ஆனால் அது தலைமுறை தலைமுறையாக தொடரும்போது, அதிலுள்ள அறிவியல் மறைந்துபோய், வெறும் சீருடை மட்டுமே நிலைத்தது. அதைத்தான் இன்றைக்கு நாம் காண்கிறோம். அது முற்றிலுமாக தொலைந்துவிடவில்லை. ஆனால் பெரும்பாலும் காணாமல் போய்விட்டது.
தாந்திரீகம் என்றால், மீண்டும் உயிரை செயலுக்குள் ஈடுபடுத்துவது என்பது பொருள். இவை அனைத்தும் இந்தியத் துணைக்கண்டத்தில் உருவாகி, இன்னமும் ஒரு சிறிய அளவில் செயல்முறையில் உள்ளது. ஆனால் மக்கள் இது வேறு ஏதோ ஒன்று என்பதாக தவறாகப் புரிந்துகொண்ட காரணத்தால், இது பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்டது. பதிமூன்றாம் நூற்றாண்டில் ஆக்கிரமிப்பாளர்கள் வந்தபோது, தாந்திரீகம் என்று அறியப்பட்ட அனைத்தையும் அவர்கள் அழிக்கத் துவங்கினர். ஏனெனில் கடவுள் மட்டுமே படைப்பவர் என்பதற்கு இது எதிராக இருப்பதாக கருதப்பட்டது. படைப்புடன் நீங்கள் குளறுபடி செய்யமுடியாது – அதுதான் அவர்களின் கருத்து.
அதற்கு பின்னர், ஆங்கிலேயர்கள் வந்தபோது, பாலுறவு மற்றும் நிர்வாணம் போன்றவற்றால் அதிர்ச்சியுறும் அவர்களது 19ஆம் நூற்றாண்டு கருத்துகளுடன், அவர்களால் இயன்ற எல்லா இடங்களிலும் தாந்திரீகத்தை வேரோடு அழித்தனர். மிகக் குறைவாகவே அதன் எச்சம் மிஞ்சியுள்ளது. அதனையும் சில நவீன நூலாசிரியர்கள் முழுமையாக சிதைக்கின்றனர். அந்தக் காரணத்தினால், மிக அற்புதமான உயிரின் இந்தப் பரிமாணம் முழுமையாக தடம்புரண்டுவிட்டது.
ஆனால் கடந்த காலத்தில் இங்கு செய்யப்பட்ட பணிகளை நீங்கள் பார்த்தால், இது உண்மையிலேயே தனித்துவமானது.