மண் காப்போம்

சத்குருவின் மண் காப்போம் பயணம்
லண்டனில் இருந்து சோஃபியா வரை

#மண்காப்போம் இயக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சத்குருவின் இதுவரையிலான பைக் பயணத்தின் முக்கிய நிகழ்வுகளை இங்கே பார்வையிடுங்கள்.

லண்டன் மற்றும் பர்மிங்காம்

சத்குருவை வரவேற்ற லண்டனிலுள்ள
இந்திய ஹை கமிஷன்

லண்டனிலுள்ள இந்திய தூதரகம் சத்குருவை வரவேற்று உபசரித்தது. அவர் அங்கு சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்கள், கொள்கை வரையறைகளை உருவாக்குபவர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் மத்தியில் மண் காப்போம் இயக்கம் பற்றி பேசினார்.

பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் சத்குரு

மண் காப்போம் இயக்கம் மற்றும் 100 நாள், 30,000 கிமீ பைக் பயணம் தொடங்குவதற்கு முன்னதாக, சத்குரு இவ்வியக்கத்தை அறிமுகப்படுத்தி, தான் ஏன் இந்த முன்னெடுப்பை இந்த நேரத்தில் மேற்கொள்கிறார் என்பது குறித்து பேசினார். பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த பொது நிகழ்ச்சிக்கு பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பிரபு பிலிமோரியா தலைமை வகித்தார். இதைத் தொடர்ந்து லார்ட் பிலிமோரியாவுக்கும் சத்குருவுக்கும் இடையே கருத்தாழமிக்க ஒரு கலந்துரையாடல் நடந்தது.

லண்டனில் அரங்கு நிரம்பிய எக்ஸல் மாளிகையில் கலந்துரையாடல்

மண் காப்போம் பயணம் அதிகாரபூர்வமாக கொடியசைத்து துவங்கப்படுவதற்கு முந்தைய நாள், லண்டனில் எக்ஸல் அரங்கில் நடந்த பொது நிகழ்ச்சியில் 6,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மத்தியில் சத்குரு உரையாற்றினார். ஒரு சிறுமி மேடையில் வந்து, சத்குரு மேற்கொள்ளும் சவாலான பயணத்திற்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு நிகழ்வு முடிந்தது. சத்குரு பைக்கில் ஏறிச் செல்வதைக் காண ஏராளமான மக்கள் அரங்கிற்கு வெளியே கூடினர்.

மண் காப்போம் பயணம் லண்டனிலுள்ள நாடாளுமன்றத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது

புகழ்பெற்ற பிக் பென் கடிகாரம் மதியம் 2:00 மணியை எட்டியபோது, ​​சத்குருவைச் சுற்றி ஓர் உற்சாகமிக்க கூட்டம் கூடியிருந்தது. அவர் பைக்கில் ஏறியபோது அவரை உற்சாகப்படுத்தி, அவரது பயணத்திற்கு தங்கள் அன்பையும் வாழ்த்துகளையும் மக்கள் தெரிவித்தனர். சத்குரு ஒரு ட்வீட் மூலமாக, "பேச்சிலும் மண், பாட்டிலும் மண், சுவாசிப்பதிலும், உயிரிலும் மண்" என்ற ரீதியில் அடுத்த 100 நாட்களில் "உலகம் ஒரு நோக்கத்திற்காக ஒரு சக்தியாக எதிரொலிக்க வேண்டும்" என்று கூறி அனைவரையும் இயக்கத்திற்கு துணைநிற்க அழைத்தார்.

ஆம்ஸ்டர்டாம் (22 மார்ச்)

நெதர்லாந்த் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் டிஜீர்ட் டி க்ரூட் உட்பட, நெதர்லாந்தின் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என பெரும் மக்கள் கூட்டம் சத்குருவை வரவேற்று. அவரது பயணம் பாதுகாப்பாக இனிதாக அமைவதற்கு வாழ்த்துவதற்காக தெருக்களில் வரிசையாக நின்றபடி காத்திருந்தனர்.

சத்குருவின் கால அட்டவணை மூன்று நிகழ்வுகளுடன் இருந்தது. முதல் நிகழ்வாக, கோப்பெர்ட் உயிரியல் மையத்தில் ஒரு குழு உரையாடல் தொடங்கியது. நிலையான விவசாயம் மற்றும் தோட்டக்கலை மீதான கவனம் செலுத்துதல் தொடர்பாக இந்த உரையாடல் அமைந்தது.

பின்னர், நெதர்லாந்திற்கான இந்தியத் தூதர் ரீனத் சந்துவைச் சந்தித்த சத்குரு, இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார்.

மாலை நேரத்தில், RAI ஆம்ஸ்டர்டாம் கன்வென்ஷன் சென்டரில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் புகழ் கேரிஸ் வான் ஹவுட்டன் நடத்திய பொது நிகழ்ச்சியில் சத்குரு பங்கேற்றார். கேரிஸ் மண் மீதான தனது ஆழ்ந்த அக்கறையை வெளிப்படுத்தினார், குறிப்பாக ஒரு சிறுவனின் தாயாக! சத்குரு தனது குழந்தை மற்றும் வருங்கால சந்ததியினருக்காக இந்த பாரம்பரிய வளத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றி பேசினார். பேச்சின் முடிவில், ஒரு சிறுமி சத்குருவுக்கு பிஸ்தாவை அன்பளிப்பாக வழங்க மேடையை நெருங்கியதும், பார்வையாளர்கள் மனம் விட்டு சிரித்து மகிழ்ந்தனர்.

பெர்லின் (24­­–26 மார்ச்)

பெர்லினிலுள்ள பிராண்டன்பர்க் வாயிலில் சத்குரு உரை நிகழ்த்தினார். அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தியாக மண் இருப்பதை அவர் விளக்கினார். நாம் மண்ணையும் மற்றவற்றையும் எப்படி நடத்துகிறோம் என்பதில் ஒரு திருப்புமுனையாக இந்த தருணம் அமையக்கூடும் என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

சத்குருவின் உரை சீரான வேகத்தில் தொடர்ந்தது. பிரபல நடனக் கலைஞரும் நடன அமைப்பாளருமான நிகியாதா தாம்சன், பெர்லின் தொழிற்சாலையில் சத்குருவுடன் உரையாடினார். மோசமான மண்வளத்தின் தாக்கங்களால் நமது உணவின் ஊட்டச்சத்துகளின் தரத்தில் நிகழும் விளைவுகள் பற்றி சத்குரு பேசினார்.

அடுத்ததாக சத்குரு ஹோட்டல் பெர்லினில் பேஷன் மாடலும், நடிகையும் மனிதநேய ஆர்வலரான டோனி கார்னுடன் ஒரு கலந்துரையாடலில் ஈடுபட்டார். காலநிலை தாக்கங்களுக்கான ஆராய்ச்சியின் போட்ஸ்டாம் இன்ஸ்டிடியூட்டின் இயக்குனர், மரியாதைக்குரிய ஸ்வீடிஷ் சுற்றுச்சூழல் விஞ்ஞானி ஜோஹன் ராக்ஸ்ட்ரோம், ஹோட்டல் பெர்லினில் நிகழ்ந்த நிகழ்வில் பேசினார். அவர் மண் காப்போம் இயக்கத்தின் பின்னாலுள்ள அறிவியலைப் பாராட்டினார். கட்டாயத்திற்கு உட்பட்டு இடம்பெயர்தல் மற்றும் போர் உட்பட மண் அழிவின் பல பின்விளைவுகளை சத்குரு எச்சரித்தார்.

பெர்லினில் தனது இரண்டாவது நாளில், உற்சாகமிக்க உள்ளூர் மண் நண்பர்களின் ஒரு குழுவைச் சந்தித்த சத்குரு, 50 அடி நீளமுள்ள சுவரில் வரையப்பட்ட மண் காப்போம் சுவரோவியத்திற்கு தனது ஓவியப் பங்களிப்பை அளித்தார். உலகளாவிய இந்த இயக்கத்திற்கான ஓவியத்தை உருவாக்குவதற்கு ஓவியர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இறுதியாக பெர்லினிலுள்ள இந்திய தூதரகத்தில் நிறுத்திய சத்குருவை, அங்கு ஜெர்மனிக்கான இந்திய தூதர் பர்வதனேனி ஹரிஷ் அன்புடன் வரவேற்றார்.

ப்ராகிற்கு புறப்படுவதற்கு முன்பாக, பெர்லினிலுள்ள பிராண்டன்பர்க் வாயிலில் சத்குரு உரை நிகழ்த்தினார். அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தியாக மண் இருப்பதை அவர் விளக்கினார். நாம் மண்ணையும் மற்றவற்றையும் எப்படி நடத்துகிறோம் என்பதில் ஒரு திருப்புமுனையாக இந்த தருணம் அமையக்கூடும் என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

ப்ராக் (26-27 மார்ச்)

மண் காப்போம் பயணத்தின் அடுத்த நிறுத்தமாக ப்ராக் நகரம் இருந்தது. சார்லஸ் பாலத்தின் மீது சத்குரு பைக்கில் சென்றபோது உற்சாகமிக்க கூட்டம் அவரை வரவேற்றது. பின்னர் அவர்களிடம் உரையாற்றிய சத்குரு, நீடித்த நல்வாழ்வை விரும்பும் ஒரு தலைமுறை தாங்கள் என்பதை தங்களுக்கும் வருங்கால சந்ததியினருக்கும் நிரூபிக்குமாறு அந்த மக்களைக் கேட்டுக்கொண்டார்.

பிராகில் உள்ள இந்தியத் தூதரகத்தில், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் துணை அமைச்சர் (ஈவா வோல்ஃபோவா) மற்றும் வேளாண்மை அமைச்சகத்தின் துணை அமைச்சர் (ராடெக் லான்சி) ஆகியோரை சத்குரு சந்தித்து, மண் காப்பதற்கான உலகளாவிய கொள்கை வரைவு மற்றும் தீர்வுகள் அடங்கிய கையேட்டை அவர்களுக்கு வழங்கினார். பிராந்தியத்தின் அமைவிடம், காலநிலை, பொருளாதார நிலைமைகள் மற்றும் பாரம்பரிய விவசாய நடைமுறைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சிறந்த விஞ்ஞானிகளின் ஆலோசனையுடன் இந்த கொள்கை வரைவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சார்லஸ் பாலத்தின் மீது சத்குரு பைக்கில் சென்றபோது உற்சாகமிக்க மக்கள் கூட்டம் அவரை வரவேற்றது. பின்னர் அவர்களிடம் உரையாற்றிய சத்குரு, நீடித்த நல்வாழ்வை விரும்பும் ஒரு தலைமுறை தாங்கள் என்பதை தங்களுக்கும் வருங்கால சந்ததியினருக்கும் நிரூபிக்குமாறு அந்த மக்களைக் கேட்டுக்கொண்டார்.

வியன்னா (27-28 மார்ச்)

நிகழ்ச்சி நிரலில் அடுத்ததாக வியன்னா இருந்தது. இந்திய தூதரகத்தில், ஆஸ்திரியாவிற்கான இந்திய தூதர் ஜெய்தீப் மசூம்தாரை சத்குரு சந்தித்தார். அப்போது மண் காப்போம் இயக்கத்தின் ஆதரவாளர்களின் எண்ணிக்கை ஆஸ்திரிய மக்களை விட அதிகமாக இருப்பதாக நகைச்சுவையாக ஜெய்தீப் மசூம்தார் கூறினார்.

அடுத்து,  'மரியா-தெரேசியன்-பிளாட்ஸ்' என்ற இடத்தில் உள்ளூர் மண் காப்போம் இயக்கத்தின் ஆதரவாளர்கள் சத்குரு அவர்களை வரவேற்றனர். நாம் மண்ணின் ஒரு பகுதி என்பதை உலகுக்குத் தெரியப்படுத்துங்கள், அப்போது தான் நாம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று அவர் அங்கு கூடியிருந்த அனைவரையும் கேட்டுக்கொண்டார். அதன்பிறகு, 'மெஸ்ஸி வீன்' காங்கிரஸ் மையத்தில் மக்கள் கூட்டம் நிரம்பியிருந்த அரங்கில் சத்குரு அவர்கள் உரையாற்றினார்.

லுப்லியானா (29 மார்ச்)

சத்குருவின் முதல் நிறுத்தம் இந்திய தூதரகத்தில் இருந்தது, அங்கு ஸ்லோவேனியாவுக்கான இந்திய தூதர் நம்ரதா எஸ். குமார் அவரை வரவேற்றார்.

ஸ்லோவேனியாவின் மண் நண்பர்கள் கூட்டத்தில் சத்குரு பேசினார். மண் காப்போம் இயக்கம் ஒரு சூழலியல் இயக்கம் மட்டுமல்ல, அது மனிதனை துளிர்விட்டு அற்புதமான மனிதராக மலரச் செய்வது பற்றியது என்று அவர் விளக்கினார்.

பின்னர், சுமார் 2000 பேர் கொண்ட உற்சாகமான பார்வையாளர்கள் முன்னிலையில் அவர் நடிகர் கோரன் விஸ்ஜிக் உடன் ஒரு பொது கலந்துரையாடலை நிகழ்த்தினார். மக்கள் இவ்வியக்கத்திற்காக எவ்வாறு பங்களிப்பது என்ற கேள்விக்கு பதிலளித்த சத்குரு, நமது அரசாங்கங்களைச் செயல்படத் தூண்டும் வகையில் #மண்காப்போம் இயக்கத்துக்கான நமது ஆதரவை வெளிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பார்வையாளர்கள் சத்குருவுக்காக ஒரு ஃபிரிஸ்பீ பறக்கும் தட்டினைக் கொண்டு வந்தனர். சத்குரு எப்போதும் போல விளையாட்டு உற்சாகத்தில், மேடையில் நின்றபடி பார்வையாளர்களுடன் முன்னும் பின்னுமாக வீசினார்.

வெனிஸ் (30 மார்ச்)

Università Ca' Foscari-ல், சத்குருவை ஆவலுடனும் உற்சாகத்துடனும் மக்கள் கூட்டம் வரவேற்றது. பல்கலைக்கழகத்தில் நிபுணர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட சத்குரு, உலகத்தின் மண் வளத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

பின்னர் ஒரு தியான அன்பர் சத்குருவை வெனிஸைச் சுற்றி கோண்டோலா படகு சவாரிக்கு அழைத்துச் சென்றார். மண் காப்போம் பாடலை பாடியபடி கால்வாயின் மீதான பாலத்தில் பலரும் கூடியிருந்தனர்.

ரோம் (31 Mar ­– 3 ஏப்ரல்)

ரோமில், சத்குருவின் கால அட்டவணை மீண்டும் பரபரப்பானது. சத்குரு, விவசாய அமைச்சகத்தின் துணைச் செயலாளர் பிரான்செஸ்கோ பாட்டிஸ்டோனியைச் சந்தித்தார். மேலும் அவர், ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முன்னாள் தலைவர் அன்டோனியோ தஜானியையும் சந்தித்தார். தஜானி இயக்கத்திற்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

அதன்பின், வாடிகனில் உள்ள மாநிலச் செயலகம், ஒருங்கிணைந்த மனித வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான டிகாஸ்டரி மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (UNFAO) ஆகியவற்றின் அலுவலகங்களிலிருந்து சத்குருவுக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் UNFAOன் துணை இயக்குநர் ஜெனரல் மரியா ஹெலினா செமெடோவைச் சந்தித்தார், அவர் மண் காப்போம் இயக்கத்தை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டார். மேலும், UNFAOன் குறிக்கோள்களுடன் இவ்வியக்கம் எவ்வாறு ஒத்துப்போகிறது என்பதைப் பற்றி அவர் பேசினார்.

அடுத்த நாள் மாலை, வானொலி தொகுப்பாளர் கார்லோ பாஸ்டோர் தொகுத்து வழங்கிய நேரடி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரபல கலைஞர்களான ஃபேபியோ வோலோ, ஜியோவானி கக்காமோ, நோமி, மலிகா அயனே மற்றும் எலிசா ஆகியோரின் மனம் மயக்கும் நிகழ்ச்சிகள் அரங்கேறின.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு சிறு உரையாடலில், ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் (WFP) உதவி நிர்வாக இயக்குநரும் தலைமை நிதி அதிகாரியுமான மனோஜ் ஜுனேஜா, சத்குருவின் ஒருங்கிணைந்த அணுகுமுறையைப் பாராட்டி, #மண்காப்போம் இயக்கத்திற்கு தனது முழு ஆதரவையும் வழங்கினார்.

ரோமில் மூன்றாவது நாள் ஜெனிவாவுக்குப் புறப்படுவதற்கு முன்பு, கொலோசியத்திற்கு வெளியே சத்குருவைச் சந்திக்க மக்கள் கூடினர். இது தலைமுறை தலைமுறையாக இருக்கும் ஒரு சூழல் அல்ல, மாறாக மனித வரலாற்றில் உலக அளவில் மண் சீரழிவு ஏற்படுவது இதுவே முதல் முறை என்று சத்குரு எடுத்துரைத்தார். இந்த சூழலை மாற்றியமைக்கும் தலைமுறையாக நாம் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஜெனிவா (5­–6 ஏப்ரல்)

ஜெனிவாவில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் ஒரு சந்திப்பு கூட்டத்துடன் சத்குருவின் நாள் தொடங்கியது. அதன்பிறகு, UNOG, WHO மற்றும் IUCN உள்ளிட்ட உலகளாவிய அமைப்புகளின் தலைவர்கள் குழுவில் மண் காப்போம் இயக்கம் பற்றி சத்குரு ஐ.நா சபையில் பேசினார். ஜெனிவாவிலுள்ள ஐ.நாவின் கலந்துரையாடலுக்கான மிகப்பெரிய அரங்கம் உற்சாகமான பார்வையாளர்களால் நிரம்பியிருந்தது. மேலும், மண் காப்போம் இயக்கம் சிறப்பான அங்கீகாரத்தையும் கைதட்டலையும் அங்கே பெற்றது.

இந்நிகழ்ச்சியில் மற்ற பேச்சாளர்களாக டாக்டர் நவோகோ யமமோட்டோ (உதவி இயக்குநர் ஜெனரல், WHO), ஸ்டீவர்ட் மேகினிஸ் (துணை இயக்குநர் ஜெனரல், IUCN), இந்திரா மணி பாண்டே (ஐ.நா.வுக்கான இந்திய தூதர்), மற்றும் நாடியா இஸ்லர், ஐ.நா. ஜெனிவா இயக்குநர் ஜெனரல் பிரதிநிதி ஆகியோர் இருந்தனர்.

இந்த கருத்தாழமிக்க சந்திப்பு கூட்டத்தின் நிகழ்வுகள் குறித்து பக்கம் 4ல் மேலும் வாசித்து அறியுங்கள்

அதன்பிறகு, Earthworm அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி பாஸ்டியன் சாசெட் உடன் சத்குரு மேடையேறி, நமது மண்ணைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றியும், இவ்வியக்கம் குறித்து உலகளாவிய கவனத்தை ஈர்ப்பதற்காக நாம் குரல் கொடுப்பதன் முக்கியத்துவம் பற்றியும் ஒரு ஆழமான கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.

அன்று மாலை, ஜெனிவாவின் புகழ்பெற்ற, நகரத்தின் அடையாளங்களில் ஒன்றான Jet d'Eau நீரூற்று, மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக வண்ணங்களால் ஒளிர்ந்தது!

பாரிஸ் (8–10 ஏப்ரல்)

பாரிஸில், பிரான்சின் ஃபோன்டெய்ன்ப்ளூவில் உள்ள INSEAD வணிகப் பள்ளியில் மாணவர்களுடன் சத்குரு பேசினார். “4 per 1000: Soils for Food Security and Climate” என்ற இயக்கம், மண் காப்போம் இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. நாளின் முடிவில், மீண்டும் சத்குரு ஒரு பெரிய உணர்ச்சிமிக்க பார்வையாளர்கள் மத்தியில் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஜீன் ஃப்ரான்கோய்ஸ் சாஸனா (துணைத் தலைவர், வேளாண்மைக்கான ப்ரெஞ்ச் நேஷனல் ஆராய்ச்சி நிறுவனம்), க்ளேர் செனு, (ஆராய்ச்சி இயக்குநர், வேளாண்மைக்கான ப்ரெஞ்ச் நேஷனல் ஆராய்ச்சி நிறுவனம்) பால் லூ (நிர்வாகச் செயலாளர் 4p1000), ஜாவேத் அஷ்ரஃப் (பிரான்ஸுக்கான இந்தியத் தூதர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

சத்குரு, பாரிஸின் ஈபிள் கோபுரத்தின் முன் பொதுமக்களிடம் பேசினார். அதில், விழிப்புணர்வுடனும் பொறுப்புடனும் நாம் உலகம் முழுவதும் உள்ள மண் புத்துயிர் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்பதை அவர் தெரிவித்தார்.

பிரஸ்ஸல்ஸ் (10–11 ஏப்ரல்)

பெல்ஜியத்தின் முக்கிய சில்லறை வர்த்தக நிறுவனமான கோல்ரூய்ட் குழுமத்தின் செயல் தலைவர் ஜெஃப் கோல்ரூய்ட், சத்குருவை சந்தித்து, மண் ஆரோக்கியம் & மனித ஆரோக்கியம் ஆகியவற்றின் தொடர்பு குறித்து கலந்துரையாடினார். அதன்பிறகு, சத்குரு பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரிகளிடம் உரையாற்றினார், விழிப்புணர்வுடன் வணிகங்களை வடிவமைப்பதன் மதிப்பை அவர் வலியுறுத்தினார்.

பிரஸ்ஸல்ஸின் புகழ்பெற்ற அடையாளமான Atomiumல் மண் காப்போம் ஆதரவாளர்களிடம் சத்குரு பேசுகையில், இவ்வியக்கத்தின் சாராம்சம் யாருக்கும் எதிரானது அல்ல – இது அன்பில் விளையும் ஓர் உறவு என்பதை நினைவுபடுத்தினார்.

Maciej Golubiewski (ஐரோப்பிய ஒன்றிய விவசாய ஆணைய அமைச்சரவையின் தலைவர்) மற்றும் சால்வடோர் டி மியோ (ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர், விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக் குழு) ஆகியோரும் பிரஸ்ஸல்ஸில் சத்குருவைச் சந்தித்தனர்.

பின்னர், பெல்ஜியத்துக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா, பெல்ஜியத்திலுள்ள இந்திய தூதரகத்தில் சத்குருவுடன் ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்.

இறுதியாக, Patrizia Heidegger (ஐரோப்பிய சுற்றுச்சூழல் பணியகத்தின் உலகளாவிய கொள்கைகள் மற்றும் நிலைத்தன்மைக்கான இயக்குனர்), பெல்ஜிய நடிகர் Koen De Bouw ஆல் நடத்தப்பட்ட மண் காப்போம் இயக்கம் பற்றிய கலந்துரையாடலில் சத்குருவுடன் பிரஸ்ஸல்ஸில் இணைந்தார். இந்நிகழ்வில், கிராமி விருது பெற்ற காங்கோ-ஸ்வீடிஷ் இசைக்கலைஞரும் பாடகரும், இசையமைப்பாளர் மற்றும் நடனக் கலைஞருமான மொஹோம்பி அவர்களின் நேரடி நிகழ்ச்சியானது சிறப்பு கூட்டியது.

பான் (13 ஏப்ரல்)

காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. கட்டமைப்பு மாநாட்டின் துணை நிர்வாகச் செயலர் ஓவைஸ் சர்மத், சத்குருவை பான் நகரில் வரவேற்றார். காலநிலை மாற்றத்தை மாற்றியமைப்பதில் மண்ணின் முக்கியப் பங்களிப்பு பற்றி அவர்கள் கலந்துரையாடினர். மேலும், கொள்கை ஆவணத்தின் நகலை சத்குரு அவரிடம் கொடுத்தார்.

பாலைவனமாக்கலை எதிர்த்துப் போராடுவதற்கான ஐ.நா அமைப்பிடம் (UNCCD) நிர்வாகச் செயலர் இப்ராஹிம் தியாவ், மண் காப்போம் இயக்கம் பற்றியும், மண்ணைப் பாதுகாப்பதில் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் முக்கியத்துவம் குறித்தும் சத்குருவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

பின்னர், சத்குரு எலிசபெத் வின்கெல்மியர்-பெக்கரையும் (ஜெர்மன் பன்டேஸ்டாக் உறுப்பினர், மத்திய பொருளாதார விவகாரங்கள் மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின் நாடாளுமன்ற மாநிலச் செயலர்) சந்தித்து, மண்ணில் கரிமச்சத்து அதிகரிப்பதால் ஏற்படும் பல பொருளாதார நன்மைகளைப் பற்றி அவருடன் பேசினார்.

கொலோன் (13 ஏப்ரல்)

கொலோனில் மிகுந்த ஈடுபாடு கொண்ட பார்வையாளர்கள் மத்தியில் சத்குரு பேசினார். இவ்வியக்கத்தின் வேகம் அதிகரித்து வருவதையும், மண்ணைப் பற்றி அரசுகள் அடிக்கடி பேசத் தொடங்கியுள்ளதையும் அவர் குறிப்பிட்டார். ஆனால், இது கொஞ்சம் செய்துவிட்டு நிறுத்தும் காரியமல்ல என்று கூறி எச்சரித்தார்; மண் ஒரு முக்கியமான பிரச்சனை என்றும், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களில் முக்கிய பேசு பொருளாக அது இருக்க வேண்டும் என்றும் அவர் விளக்கினார்.

மிகவும் செல்வாக்குமிக்க ஒரு நாடாக ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜெர்மனியின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறும் என்று சத்குரு வலியுறுத்தினார். குழந்தைகள் சத்குருவுக்கு மலர் கிரீடத்தையும் கலைப்படைப்புகளையும் வழங்கி நிகழ்வை நிறைவு செய்தனர்.

பிராங்க்ஃபர்ட் (14 ஏப்ரல்)

பிராங்க்ஃபர்ட்டில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ரோமர்பெர்க் சதுக்கத்தில், சத்குரு அங்கு கூடியிருந்த உற்சாகமிக்க கூட்டத்தில் உரையாற்றினார். ஜெர்மனியின் கல்விக்கான மத்திய அமைச்சகத்தின் உற்சாகம் தரக்கூடிய பதில் பற்றியும், மண் காப்போம் இயக்கத்தில் குழந்தைகளை ஈடுபடுத்துவது பற்றியும் அவர் பேசினார்.

பிராட்டிஸ்லாவா (16 ஏப்ரல்)

சத்குருவை பாராளுமன்ற உறுப்பினர் ரோமானா தபக் மற்றும் ஸ்லோவாக்கியாவுக்கான இந்திய தூதரகத்தின் துணை தூதர் சுனிதா நரங் மற்றும் மண் நண்பர்களின் ஒரு உற்சாகக் குழு பிராட்டிஸ்லாவாவுக்கு வந்தபோது சந்தித்தனர். மண் காக்கப்பட வேண்டிய அவசியம் பற்றி பேசிய சத்குரு, பின்னர் அங்கிருந்த சில இளம் பங்கேற்பாளர்களைச் சந்தித்தார். ரோமானா அவர்கள் சத்குருவை ஸ்லோவாக்கிய பாராளுமன்றத்திற்கு வருகை தர அழைத்தார்.

சத்குரு பின்னர் அந்த அழைப்பை ஏற்று மீண்டும் ஒருமுறை ரோமானாவையும், ஸ்லோவாக்கியாவின் விவசாய துணை அமைச்சர் மார்ட்டின் குவாக்கையும் சந்தித்தார். எதிர்காலத்தில் ஐரோப்பா எதிர்கொள்ளக்கூடிய நீர்மட்டத்தை அதிகரிக்கும் பிரச்சனைக்கு தீர்வாக, மண்ணில் தாவரங்கள் இருக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி அவர் பேசினார்.

புடாபெஸ்ட் (17 ஏப்ரல்)

ஒரு ஹீரோவாய், நாயகனாய் நாம் நம் காலுக்கு அடியில் இருக்கும் மண்ணை காக்க வேண்டிய தேவையைப் பற்றியும், தன்னில் வாழும் பல்வேறு உயிர்களை மண் எப்படி பேணிக் காக்கிறது என்பதையும் அங்குள்ளோருக்கு உணர்த்தினார். ஹங்கேரி நாட்டுக்கான இந்திய தூதரகத்திலிருந்து ஒரு பிரதிநிதி சத்குரு அவர்களுக்கு இதயப்பூர்வமான வரவேற்பினை வழங்கினார். இந்நகரத்தின் குரல் தெளிவாய், உரக்க ஒலித்தால் தான் மீண்டும் இந்நகரத்திற்கு ஒரு யோகா வகுப்பு வழங்குவதற்கு, 2023ஆம் ஆண்டு வருவதாக எல்லோருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அறிவித்தார்.

ஹங்கேரி National Geographic சேனலுக்கு அளித்த பேட்டியில் சத்குரு, மண் மற்றும் சூழலியல் ஒவ்வொரு அரசியல் கட்சியினதும் அக்கறையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பெல்கிரேட் (18 ஏப்ரல்)

பெல்கிரேடில் உள்ள குடியரசு சதுக்கத்திற்கு சத்குரு வந்தடைந்தார். அவரை அங்கு அன்பான மக்கள் கூட்டமும் செர்பியாவுக்கான இந்திய தூதர் சஞ்சீவ் கோஹ்லியும் வரவேற்றனர். நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு உயிரின் மீதும், நம் சொந்த வாழ்க்கையின் மீதும் உண்மையான அன்பும் அக்கறையும் கொண்ட இவ்வியக்கத்தை ஆதரிக்குமாறு அனைவரையும் சத்குரு வலியுறுத்தினார்.

சத்குரு, செர்பியாவின் விவசாய துணை அமைச்சரிடம் மண் புத்துயிராக்கத்திற்கான கையேட்டை வழங்கினார். மேலும் அமைச்சருக்கும் இயக்கத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சத்குரு கையெழுத்திட்டார்.

சோபியா (19 ஏப்ரல்)

சத்குரு சோபியாவிற்கு வந்தவுடன் ஓர் இனிமையான வரவேற்பைப் பெற்றார். சுற்றுச்சூழல், காலநிலைக் கொள்கைகள் மற்றும் நீர்வள அமைச்சர் போரிஸ்லாவ் சாண்டோவை சத்குரு சந்தித்தார். அவர் இயக்கத்திற்கு தனது மனமார்ந்த ஆதரவை வழங்கினார்.

பல்கேரிய பாடகர்கள் - காஸ்மிக் வாய்ஸஸ், பொது நிகழ்வில் ஒரு மனமயக்கும் நிகழ்ச்சியை வழங்கினர். இன்றைய மனிதர்களுக்கு இவ்வளவு வசதிகள் இருந்தாலும், அது அவர்களை மகிழ்ச்சிக்கு நெருக்கமாக கொண்டுவரவில்லை, ஏனென்றால் மனித அனுபவம் உள்நிலையிலிருந்து வருகிறது என்றார் சத்குரு. சுற்றுச்சூழல் அமைச்சர், போரிஸ்லாவ் சாண்டோவ், நேரலை நிகழ்ச்சியின் போது இயக்கத்திற்கான தனது உறுதியான ஆதரவை வெளிப்படுத்தினார்.