மண் காப்போம்

The Daily Show நிகழ்ச்சியில், மண் காப்போம் இயக்கம் குறித்து ட்ரெவர் நோவாவுடன் சத்குரு அவர்களின் உரையாடல்

ட்ரெவர் நோவா, ஒரு நகைச்சுவையாளர், அரசியல் விமர்சகர் மற்றும் மிகப் பிரபலமான The Daily Show தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளர். அவரது நிகழ்ச்சியில் மண் காப்போம் இயக்கம் குறித்து பேசுவதற்கு சத்குரு அவர்களை அழைத்தார்.

ட்ரெவர்: சத்குரு, The Daily Show நிகழ்ச்சிக்கு தங்களை வரவேற்கிறேன். இப்பொழுது ஒரு விஷயம் எனக்கு விசித்திரமாக உள்ளது. இந்த பேட்டியைத் துவங்க முயற்சித்து, பிறகு தொழில்நுட்பக் கோளாறினால் தடைபட்டு, இப்பொழுது பேட்டியினை நாம் மீண்டும் துவங்குகிறோம். தற்பொழுது நான் எப்படி இருக்கிறேன் என்றால், ‘ஒரு குருவாக உங்களுடன் எந்த அளவு உண்மை தன்மையில் நான் இருக்கமுடியுமோ அந்த அளவு இருக்கிறேனா அல்லது இது, தானாகவே, உண்மையானதாக இல்லையா?’

சத்குரு: நீங்களாகவே இருங்கள். “உண்மையானது” என்று எதுவும் இல்லை. உண்மையானது என்ன என்பது ஒருவருக்கும் தெரியாது, ஏனென்றால் எல்லா இடங்களில் இருந்தும் எடுத்துக்கொண்ட ஓராயிரம் விஷயங்களின் விளைவாகத்தான் மனிதர்கள் இருக்கின்றனர்.

ட்ரெவர்: ஆழமான ஒன்று! அடுத்த சில மணி நேரங்கள் எங்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கப்போகிறது. அப்புறம், இன்று நான் கண் விழிக்கும்போது நேற்றைவிட இன்று மிகவும் மகிழ்ச்சியின்றி கண் விழித்தேன், ஏனென்றால் நமது நேர்காணலுக்காக நான் அதிகம் தயார் செய்துகொள்ள வேண்டியிருந்தது. உலகத்தின் ஒரு பகுதியில் போர் நிகழ்ந்துகொண்டிருப்பது எனக்கு தெரியும். பருவநிலை நெருக்கடியை நாம் எதிர்கொண்டிருக்கிறோம் என்பதும் எனக்கு தெரியும். இப்போது, உங்கள் வாயிலாக நாம் மண் நெருக்கடியையும் எதிர்கொண்டிருக்கிறோம் என்று நான் அறிந்துகொள்கிறேன். இதற்காக நாம் எதையும் செய்யவில்லை என்றால், 50 ஆண்டுகளில், நமக்கு மண் இல்லாததால் எதையும் விளைவிக்க முடியாமல் போகக்கூடும் என்றும் ஒரு சிலர் மதிப்பிடுகின்றனர். எனது அறியாமையை மன்னித்துவிடுங்கள் – நமக்கான மண்கூட தீர்ந்துபோகக்கூடிய ஒன்றாக இருப்பது எப்படி என்று எனக்கு தெரியவில்லை.

சத்குரு: கடந்த 50 முதல் 100 வருட காலங்களின் தொழில்மயமாக்கப்பட்ட விவசாயத்தினால் இது நிகழ்ந்துள்ளது – மண்ணில் உள்ள கரிமவளம், மீண்டும் சேர்த்து ஈடு செய்யாத காரணத்தால் குன்றி வருகின்றது. மண்ணை ஈடுசெய்வதற்கு, நமக்கு இலைதழைகள் அல்லது கால்நடைக் கழிவுகள் தேவை. இரண்டுமே விளைநிலங்களில் இருந்து காணாமல் போய்விட்டது. இயந்திரங்களைக் கொண்டு நம்மால் எல்லாவற்றையும் செய்யமுடியும் என்று நாம் நினைத்தோம்.

கடந்த 50 முதல் 100 வருடங்களின் தொழில்மயமாக்கப்பட்ட விவசாயத்தினால் இது நிகழ்ந்துள்ளது – மண்ணில் உள்ள கரிமவளம், மீண்டும் சேர்த்து ஈடு செய்யாத காரணத்தால் குன்றி வருகின்றது.

கால்நடைகளும், மனிதர்களும் செய்துகொண்டிருந்த வேலையை இயந்திரங்கள் செய்யமுடியும். ஆனால் கரிமப் பொருள் ஒரு இயந்திரத்தில் இருந்து வரமுடியாது. அது தாவரங்கள் மற்றும் கால்நடைக் கழிவிலிருந்து வரவேண்டும், ஆனால் அது இப்போது இல்லை. கரிமப் பொருட்களை மணலுடன் சேர்த்தால், அது மண்ணாகிவிடுகிறது. மண்ணிலிருந்து கரிமப் பொருட்களை நீக்கிவிட்டால், அது மணலாகிறது. தற்போது, பாலைவனமாதல் என்பது அபாயகரமான பிரச்சனைகளுள் ஒன்றாக இருக்கிறது. நீங்கள் கூறியதைப் போல, இன்னும் 50 அல்லது 60 ஆண்டுகளில், பயிர்களை வளர்ப்பதற்குப் போதுமான மண் இருக்காது.

ஆனால் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் 2045 வது வருடத்திற்குள், தற்போது நாம் விளைவிப்பதைவிட 40% குறைவான உணவைத்தான் உற்பத்தி செய்வோம் என்றும் அப்போதைய நமது ஜனத்தொகை 920 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர். நீங்கள் வாழ விரும்பும் உலகம் அது அல்ல. உங்கள் குழந்தைகளுக்காக நீங்கள் விட்டுச்செல்ல விரும்பும் உலகம் அது அல்ல. ஆகவே, நாம் இப்போதே செயல்படவேண்டும். இப்போதே செயல்பட வேண்டியதும், நமது கொள்கையில் அதற்கு உரிய இடமளிக்கவேண்டியதும் ஏன் முக்கியம் என்றால், UNFAO (United Nations Food and Agriculture Organization) ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய கூட்டமைப்பின்படி, சராசரியாக ஒவ்வொரு வருடமும் 27,000 உயிரினங்கள் அழிந்து வருகின்றன.

ட்ரெவர்: நாம் பயிரிடும் முறையினாலா? அல்லது வாழ்வின் இயற்கையான விளைவு இதற்கு காரணமாக இருக்கிறதா?

சத்குரு: இது ஏனென்றால் நுண்ணுயிர்களுக்கான கரிமப் பொருள் மண்ணில் இல்லை என்பதுதான் காரணம். உங்களுக்கே தெரியும், குடலில் நுண்ணுயிர்கள் இல்லாமல், நீங்கள் சாப்பிடும் உணவை செரிக்கமுடியாது. அதைப்போலவே, மண்ணில் நுண்ணுயிர் செயல்பாடு இல்லாமல், தாவரங்களால் தேவையான ஊட்டச்சத்தை மண்ணிலிருந்து பெறமுடியாது. ஆகவே, நல்ல விளைச்சலுக்காக இரசாயனங்களை அள்ளித்தெளித்தாலும், விளைப்பொருட்கள் தேவையான ஊட்டச்சத்து கொண்டிருப்பது இல்லை. சராசரியாக, அமெரிக்காவில் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை, உணவுப் பயிர்களின் ஊட்டச்சத்து சுமார் 90% குறைந்துள்ளது.

1920ல் ஒரு ஆரஞ்சுப்பழத்தைச் சாப்பிடுவதனால் நீங்கள் பெற்ற அதே அளவுக்கான சத்துக்களைப் பெற, இன்றைக்கு எட்டு ஆரஞ்சுகளைச் சாப்பிடவேண்டும். அது நிச்சயம் நடைமுறைக்கு ஒவ்வாதது. மெல்ல மெல்ல உணவு உற்பத்தி சரிந்து விழுந்துகொண்டிருக்கும் ஒரு இடத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். 2035ம் வருடத்திற்குள் உணவுப் பற்றாக்குறையினால் எண்ணற்ற உள்நாட்டுப் போர்கள் உலகெங்கும் வெடிக்கக்கூடும் என்று உணவு மற்றும் விவசாயக் கூட்டமைப்புஉலக உணவுத் திட்டம் கணிக்கின்றது. மேலும் அது ஆப்பிரிக்க நாடுகளிலோ அல்லது தென் அமெரிக்காவிலோ தான் நிகழவேண்டும் என்ற கட்டாயமில்லை. அது உலகின் எங்கு வேண்டுமென்றாலும் நிகழக்கூடும்.  என்ற அமைப்பு, 2035ம் வருடத்திற்குள் சிகாகோ, இல்லினாய்ஸ் சுற்றுவட்டாரங்களில் பஞ்சம் ஏற்படுவதைக் குறித்துப் பேசுகிறது.

2035ம் வருடத்திற்குள் உணவுப் பற்றாக்குறையினால் எண்ணற்ற உள்நாட்டுப் போர்கள் உலகெங்கும் வெடிக்கக்கூடும் என்று உணவு மற்றும் விவசாயக் கூட்டமைப்பு கணிக்கிறது.

ட்ரெவர்: இது பயங்கரமாக இருக்கிறது. பெருந்தொற்றுக்கு முன், மனிதர்களுக்கு எல்லாவற்றைக் குறித்தும் ஒருவிதமான துடுக்கான ஆணவம் இருந்தது என்று நினைக்கிறேன். எப்போதும் உலகம் இப்படியே நீடித்திருக்கும் என்றே நாம் நம்பினோம். தீர்ப்பு நாள் தீர்க்கதரிசனங்கள், அல்லது ஒரு கட்டத்தில் உலகம் அழிந்துபோவது, அல்லது பூமியில் மனிதர்கள் வாழமுடியாமல் போவது என்பதைப் போன்ற விஷயங்களை நாம் கேள்விப்படுகிறோம். ஆனால் பெருந்தொற்று வரும்வரை, உலகம் நிலைகுலைந்து நின்றுவிடும் என்பதற்கான தெளிவான உதாரணம் நமக்கு இருந்ததில்லை என்றுதான் நான் உணர்கிறேன்.

மக்கள்கூடக் கூறுவார்கள், “உலகத்தை எப்படி நிறுத்துவது? பயணத்தை அப்படியே எப்படி நிறுத்தமுடியும்? நாடுகளின் எல்லா செயல்பாடுகளையும் எப்படி நிறுத்துவது?” ஆனால் இப்போது நாம் அதைப் பார்த்துள்ளோம்.

சத்குரு: இது ஒரு இறுதித்தீர்ப்பு நாள் கணிப்பு அல்ல. இது விழித்துக்கொள்வதற்கான ஒரு அழைப்பு. நாம் கால ஓட்டத்தின் ஒரு கூர்முனையில் இருக்கிறோம். இங்கிருந்து சரியான விஷயங்களை இப்போது நாம் செய்தால், அடுத்த 15-20 வருடங்களில் குறிப்பிடத்தக்க அளவுக்கு இதனை திருப்பமுடியும்.

மண்ணின் கரிமப்பொருள் குறைந்தபட்சம் 3-6% இருக்கவேண்டும். மண்ணின் கரிமப்பொருள் 8-10% அதிகரித்தால், இப்போது இருப்பதைவிட பாசனத் தேவைகள் 30% ஆக குறைந்துவிடும், ஏனென்றால் கரிமவளம் கொண்ட மண்ணின் நீர்ப்பிடிப்புத் திறன் அதிகம். மண்ணின் கரிமவளம் 12-15% அதிகரித்தால், உங்களது பாசனத்தேவை 10-15% ஆக குறைந்துவிடும். அதாவது, 10 லிட்டர் நீர் தேவைப்படும் அதே பயிருக்கு நீங்கள் 1.5 லிட்டர் நீர் பயன்படுத்துவீர்கள். அதுதான் நிகழத்தேவை. இப்படித்தான் எல்லா இடங்களிலும் உள்ளது.

ஒரே தலைமுறையினராக நாம் இப்போது செயல்பட்டால், தேவையான கொள்கை மாற்றங்களை நாம் செய்யமுடியும்.

சூழலியல் என்று வரும்போது, மண் என்று வரும்போது, நமது நாட்டின் எல்லைகள், இனம், மதங்கள், சாதிகள், நம்பிக்கைகள், பாலினம், அரசியல் கருத்தாக்கங்கள் - எதுவும் பொருட்டல்ல. இது அனைவரையும் ஒன்றுபடுத்தும் காரணி. ஒரே தலைமுறையினராக நாம் இப்போது செயல்பட்டால், தேவையான கொள்கை மாற்றங்களை நாம் செய்யமுடியும். இது ஏதோ ராக்கெட் விஞ்ஞானம் அல்ல – முந்தைய காலத்தின் விவசாயிகள் அறிந்திருந்த ஒரு சாதாரணமான விஷயம் இது, ஆனால் கடந்த 50 வருடங்களில் நாம் மறந்துவிட்டிருக்கிறோம்.

ட்ரெவர்: அரசாங்கங்கள் இதைக் குறித்து ஏதாவது செய்வதற்காக முயற்சிக்கும் ஆர்வத்தின் அறிகுறிகள் உங்களுக்கு தென்படுகிறதா?

சத்குரு: கடந்த இரண்டு வருடங்களாக, பல்வேறு நாடுகளின் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகளிடம் பேசி வருகின்றேன். மேலும் பூமியில் உள்ள 730 அரசியல் கட்சிகளுக்கு, அவர்களது தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் அரசியல் தத்துவத்தின் ஒரு பகுதியாக மண் மற்றும் சூழலியலை சேர்த்துக்கொள்வதை உறுதிப்படுத்துவதற்காக, வேண்டுகோள் விடுத்து எழுதியுள்ளோம். அவர்களின் நம்பிக்கை என்னவாக இருந்தாலும் – வலது, இடது, மையம், அவர்கள் என்னவாக இருந்தாலும் – மண், நம் அனைவருக்கும் பொதுவான ஒரு காரணியாக இருக்கிறது.

நம்மைப் பிரிப்பது எது என்றே நாம் எப்போதும் பார்க்கிறோம் – நம்மை இணைப்பது எது என்று பார்ப்பதற்கான நேரம் இது. இந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வு போன்ற விஷயங்கள் உங்களுக்கு புரியவில்லை என்றால், குறைந்தபட்சம் நீங்கள் மண்ணிலிருந்து வருகிறீர்கள், மண்ணினால் வாழ்கிறீர்கள் மற்றும் நீங்கள் இறக்கும்போது, மீண்டும் மண்ணுக்கே செல்கிறீர்கள் என்பதை மட்டும் புரிந்துகொள்ளுங்கள். கடந்த இரண்டு வருடங்களில் நான் பார்த்தது என்னவென்றால், அபாயகரமான பிரச்சனை இருப்பதை அனைவரும் அறிந்திருக்கின்றனர். அதற்கான தீர்வு என்ன என்பதைக்கூட அனைவரும் அறிந்திருக்கின்றனர். ஆனால் அவர்கள், ஒரு முட்டாள் வந்து பூனைக்கு மணி கட்டட்டும் என்று காத்திருந்தது போல் உள்ளது. அதனால் இங்கு நான் இருக்கிறேன். எனக்கு 65 வயது, 30000 கிமீ வண்டியோட்டி செல்கிறேன்.

நம்மைப் பிரிப்பது எது என்றே நாம் எப்போதும் பார்க்கிறோம் – நம்மை இணைப்பது எது என்று பார்ப்பதற்கான நேரம் இது.

ட்ரெவர்: சத்குரு, உங்களுடன் பேசிக்கொண்டே இருக்கலாம், அதனால்தான் மக்கள் உங்கள் நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களுக்கு திரளாக வருகின்றனர் என்று நினைக்கிறேன். உங்கள் புத்தகங்களை வாசிக்கின்றனர். நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை அவர்கள் பார்க்க விரும்புகின்றனர்.

மண்ணுக்கான இந்தப் பயணத்தால், அரசாங்கங்கள் செய்யவேண்டியது என்ன, மக்கள் செய்யவேண்டியது என்ன என்ற பட்டியலில் சேர்க்க வேண்டிய மற்றுமொரு விஷயம் போல் உணர்கிறது. நாம் இதைச் செய்யாமல் போனால், எல்லாம் முடிந்துவிட்டது என்பதையும் இந்தப் பயணம் உணர்த்துகிறது.

சத்குரு: இது மற்றுமொரு விஷயம் அல்ல, ட்ரெவர். எனக்கு செய்வதற்கு நிறைய இருக்கிறது. இதைக் கையில் எடுத்தது ஏனென்றால், ஒரு தலைமுறையினராக, இப்போது நாம் இதை செய்யவில்லை என்றால், இதற்காக மிக மோசமாக நாம் வருத்தப்படுவோம். நாம் இப்போது கொள்கையில் உரிய முக்கியத்துவம் அளிக்காமல், மற்றொரு 20-30 வருடங்களுக்கு கவனிக்கவில்லை என்றால், பின்னர் அது மிகவும் தாமதமாகிவிடும். இது இப்போதே நிகழத் தேவைப்படுகிறது. அதனால் அனைவரும் 100 நாட்களுக்கு மண் குறித்து அவர்களுக்கே உரிய விதத்தில் பேசவேண்டும் என்று நாம் விரும்புகிறோம். அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை என்றால், எமது வலைதளத்தில் ஏராளமான தகவல்களை நாங்கள் அளிப்போம்.

யார் வேண்டுமானாலும் அதை எடுத்து, அவர்களுடையதாக பயன்படுத்திக்கொள்ள முடியும் அல்லது அவர்களாகவே ஆய்வு செய்யலாம் – அவரவர் விரும்பும் வகையில் செயல்படலாம். வேறு எதையுமே சொல்லத் தெரியவில்லை என்றால், “மண் காப்போம், அதனை நிகழச் செய்வோம்”, என்று மட்டும் தினமும் கூறுங்கள். நீங்கள் யாருக்கேனும் குறுஞ்செய்தி அனுப்பினால், “மண் காப்போம்” என்பது இறுதி வாக்கியமாக இருக்கட்டும். நீங்கள் யாருக்கேனும் அழைப்பு விடுத்தால், “மண் காப்போம்” என்று கூறுங்கள்.

மண் காப்போம்! உங்களோடு உரையாடியது அருமையானதாக இருந்தது, சத்குரு. மண் காப்போம், எனது நண்பரே. எங்களுடன் இருந்தமைக்கு மிகவும் நன்றி.