சத்குரு அவர்கள் மிகவும் தேர்ச்சிப்பெற்ற திபெத்திய யோகியான மிலரெபாவின் தனித்துவமான கதையைக் கூறுகிறார். அவர் தன் பாதையை அபூர்வமான ஒரு காரணத்தினால் துவங்கினார் - 80க்கும் மேற்பட்ட மக்களை கொன்றதால் பிராயச்சித்தம் தேடி சென்ற பாதை.
மிலரெபா சிறுவயதாக இருந்தபோதே தன் தந்தையை இழந்துவிட்டார். அவரது மாமா அவர் தந்தையின் நிலங்கள் மற்றும் சொத்துக்களை கையகப்படுத்தியதோடு, மிலரெபா, அவர் அன்னை மற்றும் அவரது இளைய சகோதரி ஆகியோரை வீட்டில் அடிமைகளாக வைத்திருந்தார். அவர்களை பல வழிகளில் கொடுமைப்படுத்தி வந்தார். தனக்குள் மிகப் பெரிய வெறுப்புடனும் கோபத்துடனும் மிலரெபா வளர்ந்து வந்தார். பதின்பருவத்தை அடைந்தபோது அவர் தனது குடும்பத்தை விட்டுவிட்டு தாந்திரீக பயிற்சிகளைக் கற்றுக்கொள்ள வெளியேறினார். சொல்லவொண்ணா பல அவமானத்தையும் கொடுமையையும் செய்த தன் மாமாவையும் அத்தையையும் பழிவாங்கும் நோக்கத்தில் அந்த பயிற்சிகளை கற்றுக்கொள்ள தீர்மானித்தார்.
குறிப்பிட்ட தாந்திரீக செயல்முறைகளில் மிலரெபா தேர்ச்சி பெற்றார். பல ஆண்டுகள் கழித்து அவர் திரும்ப வந்தபோது அவரது அன்னை மற்றும் அவரது சகோதரி இறந்து போயிருந்தனர். அதனால் அவருக்கு மேலும் கோபம் அதிகமாகியது. சரியான தருணத்திற்காக காத்துக்கொண்டிருந்தார். விரைவில் அவர் மாமா மகனின் திருமணம் நடந்தது. அவரது மாமா அவரின் எல்லா நண்பர்களையும் அந்த திருமணத்திற்கு அழைத்திருந்தார். அந்த நாளில் தனது தாந்திரீக சக்தியைப் பயன்படுத்தி அந்த வீட்டின் மேல் சக்திவாய்ந்த ஆலங்கட்டி மழையை பொழியச் செய்தார். அதனால் அவரின் மாமா மற்றும் அத்தையையும் சேர்த்து 80க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள் என்று கூறுகிறார்கள். ஆரம்பத்தில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தார், அவர் செய்தது சரியே என அவருக்கு தோன்றியது. ஆனால் சிறிது காலம் கழித்து அது அவரை தொல்லைப்படுத்த தொடங்கியது.
உணர்வுள்ள எந்த மனிதரும் ஒரு விஷயத்தை தவறான முறையில் பயன்படுத்திய அந்த தருணமே அது அவரை உள்ளிலிருந்து தொல்லைப்படுத்த தொடங்கிவிடும். நீங்கள் உணர்வு இல்லாதவராக இருந்தாலேயொழிய உங்களால் தொடர்ந்து அந்த செயல்களை செய்ய முடியாது. ஏனெனில் உயிரின் இயல்பே அவ்வாறுதான் அமைந்துள்ளது. இது சமூகம் சார்ந்த உணர்வோ, ஒழுக்கம் சார்ந்ததோ அல்ல. மிக அடிப்படையான நிலையில் தவறுதலான பயன்பாடு இருக்குமேயானால் மிக ஆழமான ஒன்று அதனால் தொல்லையுறும்.
மிலரெபா தன்னை அவை அனைத்திலும் இருந்து விடுவித்துக்கொள்ள விரும்பினார். அவருக்கு உதவக்கூடிய ஒரேயொருவர் மார்ப்பா என்று யாரோ அவரிடம் கூறினார். எனவே அவரைத் தேடி மிலரெபா சென்றார். மார்ப்பா பெரிய மொழிபெயர்ப்பாளராக அறியப்பட்டார். ஏனெனில் அவர் புகழ்வாய்ந்த இந்திய தாந்திரீக நூல்கள் அனைத்தையும் திபெத்திய மொழியில் மொழிபெயர்த்தார். அவர் இந்தியாவுக்கு மூன்று முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல குருக்களை சந்தித்துள்ளார். அவர்களின் ஏடுகள் மற்றும் செயல்முறைகளை உள்ளூர் மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்தார்.
மார்ப்பா நிலத்தை உழுவதை மிலரெபா கண்டார். மார்ப்பா அவரைப் பார்த்து உழுவதை நிறுத்திவிட்டு உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கள்ளை ஒரு குவளையில் வழங்கினார், "இதை குடித்துவிட்டு நிலத்தை உழத்தொடங்கு". மிலரெபா அதை அருந்திவிட்டு நிலத்தை உழ ஆரம்பித்தார். அவ்வாறு மார்ப்பா எல்லா வகையான வேலைகளையும் அவருக்கு வழங்கினார். மிலரெபா அவரை பணிந்து வணங்கி கேட்டார், "இந்த வாழ்வில் இருந்து எனக்கு முக்தியளிக்கும் தம்மம்[1] உங்களிடம் இருந்து எனக்கு வேண்டும். மேலும் தயைக்கூர்ந்து எனக்கு இருப்பிடமும் உணவும் வழங்க வேண்டும்." மார்ப்பா கூறினார், "நீ வேண்டினால் உனக்கு உணவும் உறைவிடமும் தருகிறேன் - தம்மத்தை வேறெங்காவது தேடிக்கொள். அல்லது, தம்மத்தைத் தருகிறேன், உணவு மற்றும் உறைவிடத்தை வேறெங்காவது தேடிக்கொள். இதுவே உனக்கிருக்கும் தேர்வு." மிலரெபா கூறினார், "சரி, எனக்கு உங்கள் தம்மம் வேண்டும். என் உணவையும் உறைவிடத்தையும் நான் தேடிக்கொள்கிறேன்" என்று பிச்சை கேட்டு சென்றார்.
நெடுந்தொலைவு பயணித்து அவர் மூட்டை மூட்டையாக கோதுமையையும் உணவு சமைப்பதற்காக ஒரு செப்புப் பாத்திரத்தையும் சேகரித்தார். அந்த பளுவான சுமையை சுமந்து நீண்டதூரம் நடந்து பயணம் செய்தார். அவர் மார்ப்பாவின் வீட்டுக்கு வந்தபோது பெரும் சத்தத்தோடு அவற்றை கீழே இறக்கி வைத்தார். மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த மார்ப்பா வெளியே வந்தார். "நீ மிகவும் கோபமாக இருப்பது போல தெரிகிறது. உன்னுடைய கோதுமை மற்றும் பாத்திரத்தினால் முழு வீட்டையும் நடுங்க செய்துவிட்டாய். போதும்! இங்கிருந்து நீ போய்விடு," என்று கூறினார். மிலரெபா கெஞ்சத்துவங்கினார், "அது மிகவும் கனமாக இருந்தது. அதனால் நான் விட்டுவிட்டேன்." அதற்கு மார்ப்பா கூறினார், "ஒன்றும் செய்ய இயலாது. நீ அவற்றை கீழே தூக்கி எறிந்துவிட்டாய். நீ உள்ளே இருக்க தகுதியானவன் இல்லை, வெளியே இரு. என் வயலை உழுது கொண்டு இரு. என் வீட்டை சுத்தம் செய். தினசரி வீட்டு வேலைகளை செய்து கொண்டிரு."
"அது உட்கிரகிக்கப்பட்டது" - ஒரு கற்பிக்கும் முறை, வழிமுறை அல்லது செயல்முறை
மிலரெபா வருடக்கணக்காக அனைத்தையும் செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த மற்ற மாணவர்கள் பல செயல்முறைகளுக்கு தீட்சைப் பெற்றனர். ஆனால் மிலரெபாவுக்கு எதுவும் கிடைக்கவில்லை. எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக எந்த ஒரு போதனையோ தீட்சையோ கிடைக்காமல் அவர் உழைத்துக்கொண்டே இருந்தார்.
பின்னர் ஒருநாள் சத்சங்கம் நிகழும்போது பதுங்கி உள்ளே சென்ற மிலரெபா தீட்சை பெரும் நம்பிக்கையோடு மற்ற சீடர்களோடு சேர்ந்து அமர்ந்து கொண்டார். கண்களை மூடி அமர்ந்திருந்த மார்ப்பா தன்னுடைய தண்டத்தை எடுத்து கண்கள் மூடிய நிலையில் இருந்தே நடந்து சென்று மிலரெபாவை பலமாக அடித்தார். அவரை தூக்கி வெளியே எறிந்தார். இது மறுபடி மறுபடி நிகழ்ந்தது. 13 வருடங்களுக்கு மேல் கடந்தும் எந்த போதனையோ தீட்சையோ கிடைக்கவில்லை.
மிலரெபா, தனக்கு தாய்போல் இருந்த மார்ப்பாவின் மனைவியிடம் கெஞ்சினார், "தயவுசெய்து அவரை எனக்கு ஏதாவது கொடுக்க சொல்லுங்கள் - ஒரே ஒரு போதனை அல்லது ஒரு சின்ன தியானம். நான் இங்கு பல ஆண்டுகளாக அமர்ந்திருக்கிறேன், ஆனால் எனக்கு எதுவும் தெரியாது." அவர் தன் கணவரிடம் இதைப்பற்றி எடுத்துக் கூறினார். அதற்கு மார்ப்பா, "முதலில் அவனை எனது மகனுக்காக மூன்று மூலைகள் கொண்ட வீட்டை கட்டச்சொல். அதை அவனே கட்ட வேண்டும்."
மிலரெபா மூன்று மூலைகள் கொண்ட வீட்டை கட்டினார். அதற்கு அவருக்கு இரண்டு வருடங்கள் ஆனது. பின்னர் மார்ப்பா கூறினார், "இந்த மூன்று மூலைகள் கொண்ட வீடு என் மகனுக்கு ஏதுவாக இல்லை. நான்கு மூலைகள் உள்ள வீட்டை கட்டு!" மிலரெபா நான்கு மூலைகள் கொண்ட வீட்டைக் கட்டினார். அதற்கு மார்ப்பா கூறினார், "இது சரியில்லை, ஐந்து மூலைகள் கொண்ட வீட்டைக்கட்டு." இதுபோல பல வருடங்கள் கழிந்தது. மிலரெபா தானாக உழைத்து எல்லா இடங்களிலும் வீடுகளை கட்டிக்கொண்டிருந்தார். பின்னர் மார்ப்பா கூறினார், "இது போதும். ஆனால் என் மகனின் வீட்டுக்கு 60 அடி உயர கோபுரத்தை கட்டு." மிலரெபா வீட்டின் நான்கு மூலைகளில் நான்கு 60 அடி உயர கோபுரங்களைக் கட்டினார்.
அதற்குள் அவருக்கு வயதாகிவிட்டது. ஒரு நாள் மிலரெபா தவழ்ந்து சென்று மார்ப்பாவின் மனைவியின் கால்களைப் பற்றிக்கொண்டு கேட்டார், "தயவுசெய்து ஏதாவது செய்யுங்கள்! என்னுடைய வாழ்க்கை கடந்து கொண்டிருக்கிறது. எனக்கு ஒரு போதனைக்கூட கொடுக்கப்படவில்லை." மிகுந்த இரக்கம் கொண்ட அவர் மார்ப்பாவின் கடிதத்தாள்களைக் கொண்டு மார்ப்பா எழுதுவது போலவே ஒரு கடிதத்தை தீட்சை அளிக்கக்கூடிய மற்றொரு சந்நியாசிக்கு எழுதினார். மார்ப்பா எழுதியது போலவே இருந்த அந்த கடிதம் தேவையான முத்திரைகளை கொண்டிருந்தது.
அதை அவர் மிலரெபாவுக்கு கொடுக்க, அதை எடுத்துக்கொண்டு அந்த சந்நியாசியிடம் சென்று அங்கு அவர் தீட்சை பெற்றார். ஆனாலும் எதுவும் நடக்கவில்லை. அந்த சந்நியாசிக்கு அது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. "நான் தீட்சை அளித்தால் ஏதாவது ஒன்று நிகழ வேண்டும். ஆனால் உனக்கு எதுவும் நிகழவில்லை - என்ன செய்வது?" அதைப்பற்றி கேள்வியுற்ற மார்ப்பா அந்த சந்நியாசியை அழைத்து அவரின் பட்டத்தை நிராகரித்தார்.
முடிவில் மிகவும் மனமுடைந்த மிலரெபா தற்கொலை செய்துகொள்ளப் போனார். மார்ப்பா அவரை அழைத்து கூறினார், "சரி அமர்ந்து கொள்." அவர் கூறினார், "நீ கடந்த காலத்தில் செய்தவற்றை சரியும் வகையில் உனக்கு நான் பல செயல்முறைகளை கொடுத்தேன். நீ நான் கூறியபடி வேலை செய்திருந்தால் இது பல காலம் முன்பே முடிந்திருக்கும். நான் கூறிய அனைத்தையும் நீ செய்தாய். ஆனால் நீ குறுக்கு வழியில் செய்யத் தொடங்கினாய். அதனால் அனைத்தையும் பல வருட காலங்களுக்கு தள்ளிப்போட்டாய்."
"இப்போது உன் வருத்தம் உன்னுடைய இருப்பின் மூலத்தை உண்மையாகவே தொடுகிறது - அதற்காக நீ சாகவும் துணிந்துவிட்டாய்". மார்ப்பா அவருக்கு தீட்சை அளித்தார். தீட்சை பெற்ற மூன்றாம் நாள் மிலரெபாவுக்கு தாகினியின் தரிசனம் கிடைத்தது. தாந்திரீக கலாச்சாரத்தில் ஒவ்வொரு சக்கரத்திற்கும் ஒரு தேவியை அவர்கள் உருவாக்கியிருந்தனர் - பிரதிஷ்டை செய்யப்பட்டு உயிர் அளிக்கப்பட்ட பெண் வடிவம் தேவி. அவளை அழைத்து செயல்களை செய்ய பணிக்க முடியும். தாந்திரீகத்தில் இந்த சக்திகளின் உதவியில்லாமல் எவரும் குறிப்பிடத்தக்க செயல்கள் எதையும் புரிய முடியாது.
தாகினி மிலரெபாவின் பார்வையில் வந்து இவ்வாறு கூறினார்: "மார்ப்பாவின் போதனையில் அடிப்படையான ஒரு அம்சம் தவறிப்போயிருக்கிறது. அந்த அம்சத்தை அவரே கூட அறிந்திருக்கவில்லை". மிலரெபா இது பற்றி மார்ப்பாவிடம் கூறியபோது மார்ப்பா மிலரெபாவை பணிந்து வணங்கி "என்னிடம் கூட அது பற்றிய ஞானம் இல்லை. எனவே நாம் இந்தியாவுக்கு செல்வோம்" என்றார். இருவரும் மார்ப்பாவின் குருவிடம் சென்றனர். நேபாளிற்கும் பீகாருக்கும் இடையே உள்ள எல்லையில் ஏதோ ஒரு பகுதியில் அவர் இருந்தார்.
நிகழ்ந்தவற்றை மார்ப்பா அவர் குருவிடம் கூறியபோது, அவரை நிமிர்ந்து நோக்கிய குரு இவ்வாறு கூறினார், " இது உனக்கு நடந்திருக்க முடியாது". அதற்கு மார்ப்பா கூறினார், "எனக்கு இது நிகழவில்லை - என்னுடைய சீடர் ஒருவருக்கு நிகழ்ந்தது". பின்னர் குரு திபெத்தை நோக்கி திரும்பி பணிந்து வணங்கினார். அவர் கூறினார், "முடிவில் ஒரு ஒளி வடக்கில் தோன்றிவிட்டது."
இந்த வாழ்விலேயே எவ்வாறு முக்தியடைவது என்பது பற்றிய போதனைகள் முழுவதையும் குரு மார்ப்பா மற்றும் மிலரெபாவுக்கு வழங்கினார். பின்னர் திபெத்துக்கு அவர்கள் திரும்பிய பிறகு குருவாக தொடங்கிய மார்ப்பா மிலரெபாவின் சீடராக மாறினார். திபெத்திய கலாச்சாரத்தின் பிரகாசமான ஒளியாக மிலரெபா மாறினார்.