மண் காப்போம்

ஜெனீவாவில் இருக்கும் ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பில், மண் காப்பது குறித்து சத்குரு அவர்கள் விவாதிக்கிறார்

ஜெனீவாவில் இருக்கும் ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில், 2022 ஏப்ரல் 5 அன்று  உலகளாவிய அமைப்புகளிலிருந்து வந்திருந்த தலைவர்களும், சத்குரு அவர்களும் ஒரு நேரடி நிகழ்வில் மண் காப்போம் இயக்கத்தினை விவாதித்தனர். விவாதக் குழு உறுப்பினர்களாக, ஜெனீவாவில் இருக்கும் ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் பொது இயக்குனரின் செய்தியுடன்   எஸ்டிஜி லேப்(SDG Lab)லிருந்து வந்திருந்த நாடியா ஐலர், உலக சுகாதார அமைப்பிலிருந்து டாக்டர். நகோ யமமொடோ, சர்வதேச இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பிலிருந்து ஸ்டூவர்ட் மகின்னிஸ் ஆகியோர் பங்கேற்றனர். மனிதகுலத்துக்கும், பூமியில் வாழும் அனைத்து உயிர்களின் எதிர்கால நலனுக்கும் மண்ணைக் காப்பது ஏன் அவசியமாக இருக்கிறது என்பதை அவர்களுக்கே உரிய கண்ணோட்டங்களில் கருத்துகளை முன்வைக்கின்றனர். பெருந்தாக்கத்தினை ஏற்படுத்தும் இந்தக் குழுவினர் மேற்கொண்ட விவாதத்தின் முக்கியமான பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தியத்தூதர் இந்த்ரா மணி பாண்டே, சத்குருவை வரவேற்கிறார்

இந்த்ரா மணி பாண்டே, இந்தியத்தூதர், ஐக்கிய நாடுகள் அலுவலகம் மற்றும் ஜெனீவாவில் இருக்கும் இதர சர்வதேச அமைப்புகளின் நிரந்தர இந்திய பிரதிநிதி.

இந்த்ரா மணி பாண்டே: சத்குரு அவர்களுக்கும், பெருமதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய விருந்தினர்களுக்கும் எனது நமஸ்காரங்களையும், பிற்பகல் வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். சத்குரு அவர்களுக்கு கனிவான வரவேற்புகளை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைவதுடன், அவரது மண் காப்போம் இயக்கத்தின் உலகளாவிய பயணத்தின் ஒரு பகுதியாக ஜெனீவாவிற்கு வருகை தந்தமைக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

பருவநிலை மாற்றத்தைத் தவிர்ப்பதற்கும், மக்களுக்கு ஒரு தூய்மையான, ஆரோக்கியமான, நீடித்த சுற்றுச்சூழலை அளிப்பதன் அவசியத்தை முன்னிட்டும் உலகளாவிய செயல்பாடு வலியுறுத்தப்பட்டு வருகிறது. தன்ணீர் பிரச்சனைக்கும், அதற்குரிய உலக அளவிலான கவனம் அளிக்கப்படுகிறது. இருப்பினும், சத்குரு அவர்களே குறிப்பிட்டதுபோல், பூமிக் கிரகத்தின் மீது நமது வாழ்வைத் தாங்கிப் பிடித்திருக்கும் மண்ணின் ஆரோக்கியத்தின் மீது எடுத்துக்காட்டும் அளவில் உலகளாவிய கவனம் இல்லை.

பூமிக்கிரகத்தின் மீது நமது வாழ்வு நீடித்திருப்பதற்காக மண்ணைப் பாதுகாப்பதும், புத்துயிரூட்டுவதும் அவசரத் தேவையாக இருக்கிறது என்ற நோக்கில் சத்குரு அவர்களின் மண் காப்போம் இயக்கத்தின் முக்கியத்துவம் சிறப்பாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. மண்ணைக் காப்பதற்கும், இந்த இலக்கை நிறைவேற்றுவதற்குத் தேவையான படிகளை எடுப்பதற்கும் அரசாங்கங்கள் மற்றும் மக்களின் கவனத்தை ஈர்த்து ஊக்கமளிப்பதில் சத்குரு அவர்களால் தொடங்கப்பட்ட இவ்வியக்கம் வெற்றியடையும் என்பதில் நான் உறுதியான நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

இந்தப் பயணத்தை மேற்கொண்டமைக்கு தங்களுக்கு மீண்டும் எனது நன்றியை தெரிவிக்கிறேன். உலகளாவிய விழிப்புணர்வை உருவாக்கும் இத்தகைய இயக்கத்தைத் தொடங்கியதற்காக நான் நன்றி கூறுகிறேன். மேலும் தங்களிடமிருந்து அதிகம் கற்றுக்கொள்வதற்கும், இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு தனிமனித நிலையிலும், அனைவருடனும் இணைந்து கரங்கள் கோர்ப்பதிலும் நாங்கள் மிகுதியான ஆர்வத்துடனும், முனைப்புடனும் இருக்கிறோம்.

பொது இயக்குனரின் செய்தி: நிலையான வளர்ச்சி இலக்குகளுடன்(SDG) மண் காப்போம் இயக்கம் எவ்வாறு ஒன்றிணைகிறது.

திரு. நாடியா ஐலர்,  ஜெனீவாவில் இருக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது இயக்குனர் அலுவலகத்தில் ((UNOG) உள்ள எஸ்டிஜீ லேப்பின் இயக்குனர்; அவர் செல்வி டடியானா வலோவயா, பொது இயக்குனர், ஐக்கிய நாடுகள் அலுவலகம், ஜெனீவா,  அவர்களின் செய்தியைப் பகிர்கிறார்.

நாடியா ஐலர்: தூதர் பாண்டே, சத்குரு, பெருந்தகையோர், மகளிர் மற்றும் ஆடவர் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கும், இன்றைய நிகழ்வில் கலந்துகொண்டிருக்கும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும், ஐக்கிய நாடுகள் அலுவலகம், ஜெனீவாவின் பொது இயக்குனர், செல்வி. டடியானா வலோவயா அவர்களின் வாழ்த்துகளை பகிர்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். பொது இயக்குனர் ஜெனீவாவில் இன்று இல்லாத காரணத்தால், துரதிருஷ்டவசமாக இந்த நிகழ்வில் பங்கேற்க இயலவில்லை, ஆனால் கீழ்க்காணும் செய்தியை உங்களுக்கு தெரிவிக்குமாறு என்னைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, உலகளாவிய, பூமி மற்றும் மனிதகுல நல்வாழ்வை விவாதிப்பதற்காக இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்கு, இந்தியாவின் நிரந்தர தூதரான பாண்டே அவர்களுக்கு, எமது நட்பு நாடுகளுடன் இணைந்து நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

கடந்த டிசம்பரில், ஐநாவின் பொதுச் செயலாளர் திரு அன்டோனியோ குடெர்ரெஸ், குறிப்பிடத்தக்க உரை ஒன்றை வெளியிட்டார். வரும் காலத்தில் பருவநிலை செயல்பாடு குறித்த உயரிய நோக்கத்துக்கான ஆரம்பமாக அது அமைந்தது. இயற்கையுடன் சமரசம் செய்துகொள்வதுதான் 21 ம் நூற்றாண்டின் நிர்ணயிக்கப்பட்ட சாதனையாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார். பாரிஸ் பருவ நிலை உடன்படிக்கைக்குப் பிறகான ஆறு வருடங்கள், மிக உஷ்ணமான ஆறு வருடங்களாகப் பதிவாகியுள்ளன.

பருவ நிலை மாற்றம் கண்கூடானது என்பதுடன் இன்றைய பல்வேறு நெருக்கடிகளை அது அதிகரிக்கச் செய்கிறது. 2020 ல், வெள்ளம் மற்றும் பஞ்சங்களும், புயல்கள் மற்றும் காட்டுத்தீ பரவல்களும், அதிதீவிர வெப்பங்கள் மற்றும் பருவகால மாறுதல்களும் 3 கோடி மக்களை அவர்களது இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றியுள்ளது. குறிப்பாக சிறிய தீவு நாடுகளும், முன்னேற்றமடையாத நாடுகளும் பாதிக்கப்படுகின்றன.

பல வருடங்களாக, நாம் நிலம், காற்று மற்றும் கடல்களையும், நமக்கான வரமாக எங்கும் பரவியிருக்கும் இயற்கையையும் சேதப்படுத்திக்கொண்டுள்ளோம். நமக்கிருக்கும் ஒரே கிரகத்தையும் நாம் அழித்துக்கொண்டிருக்கிறோம். நம்மை இந்த நிலைக்கு ஆளாக்குவதற்கு மனிதர்கள் நடந்துகொள்ளும் முறை முக்கியமான காரணியாக இருந்துள்ளது. அனைவரும் பகிர்ந்துகொள்ளும் ஒரே கிரகத்தில் வாழ்பவர்கள் என்ற முறையில், உலகளாவிய விழிப்புணர்வினை எழுப்புதல் மற்றும் உள்ளூர் சமூகங்களை இணைப்பது அடங்கலாக, பூமி மற்றும் சுற்றுச்சூழல் குறித்து அதிக விழிப்புணர்வூட்டும் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது நமது பொறுப்பு.

இந்த இலக்கை நோக்கி மக்களைத் திரட்டும் குறிக்கோளுடன் உருவாக்கப்பட்டதுதான் மண் காப்போம் இயக்கம். அந்த இயக்கத்தின் தலைவர் சத்குரு அவர்களை வரவேற்பது எங்களுக்கு கௌரவம் சேர்க்கிறது. எங்களுடன் இணைந்திருப்பதற்கு உங்களுக்கு நன்றிகள் பல. உலகெங்கும் இருக்கும் மக்களைத் திரட்டி, மண் ஆரோக்கியத்தின் தேவையை எடுத்துரைத்து, அதற்குத் தேவையான உறுதியான கொள்கைகளையும் மற்றும் பருவ நிலை சவால்களைத் தீர்க்கும் செயல்பாடுகளையும் நடைமுறைப்படுத்துவதில் தேசிய மற்றும் உள்ளூர் தலைவர்களுக்கு ஆதரவு வழங்குதல் போன்ற செயல்பாடுகளுடன் அவரால் வழி நடத்தப்படும் இந்த உலகளாவிய இயக்கம் மண்ணுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு தேடுகிறது.

முன்பு எப்போதையும் விட இப்போது நாம் ஒருவருக்கொருவர் இணைக்கப்பட்டுள்ள, அதிவேகமான ஒரு சூழலில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். நாம் எதிர்கொள்ளும் சவால்கள் ஆழமாக பின்னிப்பிணைந்து இருப்பதுடன், பல்வேறு நிலைகளில் நாம் செயல்படுவதற்கு ஆயத்தமாகத் தேவைப்படுகிறது. சமீபத்திய கோவிட்-19 பெருந்தொற்று, நாம் அனைவரும் எவ்வளவு ஆழமாக ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம் என்பதற்கு ஒரு துயரகரமான நினைவூட்டலாக இருக்கிறது. சூழலியல் சவால்களை, கொள்கைகள் மற்றும் அனைத்து நிலைகளிலுமான செயல்பாடுகளுக்குள் கொண்டுவருவதற்கு, சமுதாயத்தின் ஈடுபாடு முக்கியமாக இருக்கிறது. நிலையான வளர்ச்சியின்(SDG) 2030க்கான நிரல்களை நடைமுறைப்படுத்தல் என்பது ஒவ்வொரு மனிதருக்குமான பொறுப்பு.

இன்றைக்கு, சத்குரு மற்றும் அவரது ஆதரவாளர்களின் செயல்பாடுகளால் நாம் அனைவரும் மண் காப்பதற்கு தூண்டப்பட்டிருக்கிறோம். நமக்காகவும், நமது பூமிக்காகவும் ஒரு மேலான, ஆரோக்கியமான உலகத்தைக் கட்டமைப்பதற்குரிய பருவநிலை செயல்பாடு மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான நமது முயற்சிகளை நாம் அனைவரும் இரட்டிப்பாக்குவோம். மிக்க நன்றி.

பொது இயக்குனர் அனுப்பிய செய்தி இத்துடன் முடிவடைகிறது, நன்றி.

மண், உணவுப் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்த உலக சுகாதார அமைப்பின் (WHO) கண்ணோட்டத்தை டாக்டர். நோகொ யமமோடோ பகிர்ந்துகொள்கிறார்

டாக்டர். நோகோ யமமோடோ உதவி பொது இயக்குனர், உலகளாவிய சுகாதார பாதுகாப்பு/ஆரோக்கியமான மக்கள், உலக சுகாதார நிறுவனம்(WHO). உலக சுகாதார நிறுவனம் என்பது சர்வதேச பொது சுகாதாரத்திற்கு பொறுப்பு வகிக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பின்
ஒரு சிறப்பு நிறுவனம்.

டாக்டர். நோகோ யமமோடோ: மண் மற்றும் மனிதகுலம் பற்றி விவாதிப்பதற்கு இந்த நிகழ்வில் உங்களுடன் இணைந்திருப்பதற்கு மகிழ்வடைகிறேன். மேலும், விழிப்புணர்வான உலகை உருவாக்குவதற்கான சத்குருவின் தொலைநோக்குப் பார்வையை உங்களுடன் அமர்ந்து கேட்பதற்கு நானும் ஆர்வமுடன் இருக்கிறேன். மனித ஆரோக்கியத்தில் மண் முக்கியப் பங்காற்றுகிறது.

மனித ஆரோக்கியம், உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பில் ஆரோக்கியமான மண் என்பது அடிப்படையான பங்காற்றுகிறது என்பதற்கு இந்த உடல் சாட்சியாக இருக்கிறது. ஆரோக்கியமான மண்ணானது ஊட்டச்சத்து அதிகமான உணவுப் பயிர்களை உற்பத்தி செய்கிறது. ஆரோக்கியமான உணவு பலவிதமான பாதிப்புகளை உடைய நோய்களைத் தவிர்ப்பதற்கு உதவி செய்வதுடன், தொற்றுகளுக்கு எதிராகவும் உடலைப் பாதுகாக்கிறது. ஆரோக்கியமான மண், மனிதர்களுக்கான ஆரோக்கியமான சுற்றுச்சூழலையும் வழங்குகிறது. உதாரணத்துக்கு, ஆரோக்கியமான மண், கரிமப் பிடிப்புக்கும், நீர் இருப்புக்கும் முக்கியமானதாக இருக்கிறது.

பல்லுயிர்ப் பெருக்கத்தையும், சூழலியல் அமைப்பு செயல்படுவதையும் ஆரோக்கியமான மண் ஊக்குவிக்கிறது. மேலும் அது வருவாய் ஈட்டுவதற்கும், நமது சமூக சூழலியல் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்தவும் வாய்ப்பளிக்கிறது. ஆரோக்கியமான வனங்களுக்கும், நதிகள், சமுத்திரங்கள் மற்றும் ஆரோக்கியமான மனிதர்களுக்கும் ஆரோக்கியமான மண் தேவைப்படுகிறது. பரந்த சூழலியல் அமைப்பின் ஒரு பகுதியாக மண் விளங்குகிறது.

ஆரோக்கியமான மண்ணைப் பாதுகாப்பதும், மேம்படுத்துவதும் ஒரு சுகாதார (One Health) அணுகுமுறைக்கு முக்கியமானதொரு பங்களிப்பாக இருக்கிறது. 25% உலகளாவிய பசுமை இல்ல வாயு வெளியீட்டுக்கு விவசாயம் காரணமாக இருக்கிறது. மேலும் புதிய நோய் பரவலுக்கு நிலத்தினை மாற்று உபயோகம் செய்தல் ஒரு பெரும் காரணியாக இருக்கிறது. அதீத பூச்சிக்கொல்லிகள் அல்லது செயற்கை உரங்கள் ஆகியவை பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்துகின்றன. மண்வளக் குறைவானது, பருவநிலை மாற்றம், உஷ்ண அலைகள், காட்டுத்தீ மற்றும் மண் அரிப்புக்கும் காரணியாக இருக்கிறது.

உலகளாவிய ஒரு சமுதாயமாக, ஒரு சுகாதார அணுகுமுறைக்கு நாம் இணைந்து செயல்படத் தேவைப்படுகிறது. ஆதலால், ஐநாவின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் FAO [Food and Agriculture Organization of the United Nations], ஐநாவின் சுற்றுச்சூழல் திட்டம் UNEP [UN Environment Programme], விலங்குகள் சுகாதாரத்திற்கான உலக நிறுவனம் the OIE [World Organization for Animal Health], மற்றும் உலக சுகாதார நிறுவனம் WHO [World Health Organization] ஆகியவை இணைந்து, சுற்றுச்சூழலை உள்ளடக்கிய ஒரு சுகாதாரத்திற்கான இணைந்த செயல்பாட்டுத் திட்டத்தை இறுதி செய்துள்ளன. மண் சமத்துவம், வேளாண் பயிர் உற்பத்தி, உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்தை உள்ளடக்கிய ஒரு முழுமையான அணுகுமுறையில் மனிதகுல ஆரோக்கியத்தை நாம் இன்னமும் மேம்படுத்த வேண்டியது அவசியம்.

சத்குரு அவர்கள் கூறுவதைப் போல், இந்த செயல்முறையில் விழிப்புணர்வான ஒரு உலகை உருவாக்குவது அடிப்படையான ஒன்றாக இருக்கிறது. உங்கள் அனைவருடனும் இணைந்து செயல்படுவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த வாய்ப்பினை அளித்தமைக்கு மீண்டும் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

ஸ்டூவர்ட் மகின்னிஸ்: மண் என்பது ஒரு சூழலியல் அமைப்பு – விவசாயமும், இயற்கைப் பாதுகாப்பும் கைகோர்த்துச் செல்லவேண்டும்

ஸ்டூவர்ட் மகின்னிஸ், உலகளாவிய இயக்குனர், இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச கூட்டமைப்பு (IUCN). இயற்கை பாதுகாப்பு மற்றும் நீடித்த இயற்கை வளப் பயன்பாடு என்ற களங்களில் செயல்படும் ஒரு சர்வதேச அமைப்பாக இருக்கிறது. இது 1400 அரசாங்க மற்றும்
அரசு சாரா அமைப்புகளை அங்கத்தினராகக் கொண்டுள்ளது.

ஸ்டூவர்ட் மகின்னிஸ்: நான் இங்கிருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நான் IUCN கண்ணோட்டத்தில் இருந்தும், எனது தனிப்பட்ட கண்ணோட்டத்தில் இருந்தும் பேசப்போகிறேன். ஏனென்றால் நான் ஒரு சிறிய விவசாயக் குடும்பத்திலிருந்து வருவதுடன், என் பெரும்பாலான வாழ்க்கையை இயற்கை பாதுகாப்பில் கழித்திருந்தேன். உண்மையைக் கூறவேண்டும் என்றால், அதில் எப்போதும் சிறிதளவு இறுக்கம் இருந்து வந்துள்ளது. அந்த வகையில், சத்குரு அவர்களின் செயலினாலும், மண் காப்போம் இயக்கத்தினாலும், பூமியில் உயிர்களை இயற்கை தாங்கிப்பிடிக்கிறது என்ற உணர்தலுக்கு அடையாளமான ஒரு பொது நோக்கத்தை நாம் உண்மையில் இப்போது பகிர்ந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறோம்.

கிரக அமைப்புகளை வரன்முறைப்படுத்துவதாக இருந்தாலும், நிலைமையைச் சீரமைக்கும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்குக்கூட போதிய அவகாசமில்லை என்று அரசுகளுக்கிடையேயான பருவநிலை மாற்றத்திற்கான குழு [IPCC] பருவநிலை மாற்றத்தினை குறைப்பதற்கான எச்சரிக்கை விடுத்தாலும், அல்லது சிறு விவசாயிகள் மற்றும் சிறிய விவசாய சமூகங்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாத்து, மேம்படுத்துவதாக இருந்தாலும், அவை அனைத்தையும் இயற்கை தாங்கிப் பிடித்துள்ளது. முந்தைய எதிர்ப்புணர்வுகளை நாம் கடந்து, பொதுவான ஒரு தளத்தில், பொதுவான ஒரு காரணியாக - மண் மற்றும் மண்ணின் பல்லுயிர்ப் பெருக்கத்தில் கவனம் செலுத்த விரும்புகிறோம். அங்கிருந்துதான் நாம் செயல்படத் தொடங்குகிறோம்.

மண்ணில் 60 கோடி பூஞ்சைக்காளான் இனங்கள் உள்ளன. 1 கோடி பாக்டீரியாக்களும், எண்ணற்ற புரோட்டோசோவா இரகங்களும் உள்ளன. அடுத்த முறை உங்கள் தோட்டத்தில் நீங்கள் உலா வரும்போது, ஒரு கைப்பிடி மண்ணை எடுத்துப் பாருங்கள். அந்த ஒரு கைப்பிடி அளவு மண்ணில், நூறு கோடிக்கும் அதிகமான தனிப்பட்ட உயிரினங்களும், சுமாராக அறுபது கிலோமீட்டர் நீளத்துக்கு பூஞ்சைக்காளான் இழைகளும் இருக்கின்றன. அதுதான் உயிர்களைப் பேணிப் பாதுகாக்கிறது. உண்மையில் அதுதான் வேளாண் உற்பத்தியை வழங்குகிறது. அனைத்தின் பாதுகாப்பு அல்லது விவசாயம் என்று எதுவாக இருந்தாலும் அதுதான் உண்மையில் நம்மை இணைக்கிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக, இடைப்பட்ட ஒரு காலத்தில், மண் என்பது ஒரு சூழலியல் அமைப்பு என்ற நிதர்சனத்தை மறந்து, நீர் பெறுவதற்கும் பயிர்களுக்கு ஊட்டச்சத்து வழங்குவதற்குமான ஒரு மூலக்கூறு மட்டுமே அது என்று நாம் குறைத்து எண்ணிவிட்டோம்.

ஆனால் மீண்டும், சத்குரு, மண் காப்போம் போன்ற இயக்கங்கள் காரணமாக இதற்கான புதிய வடிவம் கிடைத்துள்ளது.  இதுபோன்ற ஒரு முன்னெடுப்பிற்கு சத்குரு அவர்களுக்கு உண்மையிலேயே நான் நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ஆகவே, மண் காப்போம். நாம் அதனை நிகழ்த்துவோம். இது உண்மையிலேயே ஆர்வமூட்டுவதாக இருக்கிறது. மிக்க நன்றிகள். சத்குரு, உங்களது கருத்துகளை கேட்பதற்கு நாங்கள் விருப்பத்துடன் இருக்கிறோம்.

சத்குரு: மண் காப்பதற்கு இப்போதே நாம் ஏன் செயல்பட வேண்டும் மற்றும் நம்மால் என்ன செய்ய முடியும்

சத்குரு: நமஸ்காரம், உங்கள் அனைவருக்கும் என் பிற்பகல் வணக்கங்கள். இங்கு குழுமியிருக்கும் SDG Lab, ஐக்கிய நாடுகளின் நமது தூதர் மற்றும் IUCN ஆகியோரின் உறுதியுடன் கூடிய ஆர்வத்தைக் காண்பதற்கு அற்புதமாக இருக்கிறது.

“சத்குரு, இது அற்புதமானது,” என்று மட்டும் கூறிவிட்டு பிறகு வீட்டுக்குச் சென்று உறங்கிப்போகும் மக்களாக நீங்கள் இருக்கவேண்டாம். ஒரு தலைமுறையாக, இப்போது நாம் சரியான விஷயங்களைச் செய்தால், அழிவின் விளிம்பிலிருந்து நாம் திரும்பமுடியும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாம் செய்யவேண்டிய சரியான விஷயம் என்ன? உயிரையே மண் விஞ்ஞானத்தில் வைத்த நிறைய விஞ்ஞானிகள் இங்கு இருக்கிறார்கள், இருந்தாலும் ஏதோ காரணங்களால் அவர்கள் சொல்வது ஒருபோதும் கேட்கபடவில்லை. ஏறக்குறைய பூமியின் எல்லா தேசங்களும், இன்றைக்கும்கூட, குறிப்பிட்ட இரசாயனங்களைச் சேர்ப்பதால் சரிசெய்துவிடக்கூடிய ஒரு ஜடப்பொருளாகத்தான் மண்ணைக் கருதுகின்றன.

நாம் அறிந்துள்ள பிரபஞ்சத்தில், ஒரு மாபெரும் வாழும் அமைப்பாக மண் திகழ்கிறது. அது என்ன மாயமோ, மண்ணின் 15 லிருந்து 18 அங்குல ஆழத்தில் இருப்பது நம்ப முடியாததாக இருக்கிறது. இறந்துபோன ஒன்றை நீங்கள் அதற்குள் ஊன்றினாலும், அதிலிருந்து உயிர் முளைக்கும். நாம் அறிந்திருக்கும் பிரபஞ்சத்தின் எந்த இடத்திலும் அதைப்போன்ற பொருள் வேறு இல்லை. ஆனால், அதை உபயோகித்த பிறகு ஒதுக்கிவிடக்கூடிய ஏதோ ஒருவித ஜடப்பொருளாகத்தான் நாம் பாவித்து வந்துள்ளோம். அவ்வாறு ஒதுக்கிவிடுவதற்கான இடமே இல்லை. ஏனெனில், உண்மையில் எதை வேண்டுமென்றாலும் நீங்கள் திரும்ப வைக்கக்கூடிய ஒரே இடமாக மண் மட்டுமே இருக்கிறது. நாம் அதிலிருந்து பிறக்கிறோம்; அதனால் உயிர் வாழ்கிறோம். நாம் இறக்கும்போது, திரும்ப அதனிடம்தான் செல்கிறோம்.

பாலினம், மரபினம், மதம், நாடு போன்ற அனைத்திலும் வேறுபாடுகள் காண்பதிலேயே நாம் மும்முரமாக இருந்துகொண்டிருக்கிறோம். ஆனால், மண் மட்டும் மனிதர்களை ஒன்றுபடுத்தும் ஒற்றைக் காரணியாக இருக்கிறது. இது சூழலியல் நோக்கங்களுக்காக மட்டுமல்ல; மனிதர்கள் என்ற முறையில் ஒரு பொதுவான தளத்தைக் காண்பதற்கு, நம்மிடையே ஒரு பொதுவான ஒன்றின் தேவை மிகவும் முக்கியமாக இருக்கிறது. இல்லையென்றால், சிறந்த நோக்கங்களுடன் கூட, நாம் தீர்வுகள் காணமாட்டோம். இப்போது நாம் செய்துகொண்டிருப்பதைப் போல், உங்களுக்கும், எனக்கும் இடையிலான பிரிவினைகளையே எப்போதும் தேடிக்கொண்டிருக்கும் காரணத்தால், நாம் பிரச்சனைகளைத்தான் அதிகரித்துக்கொண்டு இருப்போம். நாம் அனைவரும் மண்ணிலிருந்து வருகிறோம், மீண்டும் மண்ணுக்கே செல்கிறோம். நாம் உயிருடன் வாழும்போதே இதைப் புரிந்துகொள்ளப் போகிறோமா அல்லது நாம் புதையுண்ட பிறகு புரிந்துகொள்வோமா? இது மட்டும்தான் கேள்வி.

ஆகவே, நாம் எதைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம்? இதற்கான சிக்கலான தீர்வுகள், தொழில்நுட்பங்கள், பயன்பாடுகள் பலவாறாக பலராலும் அளிக்கப்படுகிறது. நான் அவை அனைத்தையும் மதிக்கிறேன். ஆனால் இவை அனைத்தும் பலனளிப்பதற்கு, நமக்கு உயிரோட்டமான மண் வேண்டும். மண் உயிரோட்டமாக இல்லையென்றால், உங்களது தொழில்நுட்பம், உங்களது பயன்பாடுகள், மகத்தான யோசனைகள் எதுவும் வேலை செய்யப்போவதில்லை, ஏனெனில் இதுதான் உயிர் உருவாக்கும் பொருள். நான் உங்களுக்கு ஒரு கதை கூறட்டுமா?

நாம் மனிதர்களாக, படைப்பில் நமக்கான இடம் குறித்து விழிப்புணர்வுடன் இருக்கத் தேவைப்படுகிறது

இது 2060 ல் நிகழ்ந்தது. விஞ்ஞானிகள் குழு ஒன்று கடவுளைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டது. அவர்களுக்கு அனுமதி கிடைத்தது. கடவுளிடம் சென்ற அவர்கள் கேட்டனர், “முதியவரே, நீங்கள் எல்லாவற்றையும் அழகாகப் படைத்துள்ளீர்கள். ஆனால், உங்களால் செய்யக்கூடிய அனைத்தையும் இன்றைக்கு எங்களாலும் செய்ய முடியும். நீங்கள் ஓய்வெடுக்கும் நேரம் வந்துவிட்டது.”

கடவுள் கூறினார், “ஓ, அப்படியா? உங்களால் என்ன செய்யமுடியும்?”

அவர்கள், “இதைப் பாருங்கள்”, என்றவாறு சிறிது மண்ணைத் தோண்டி எடுத்து, தோராயமாக ஒரு மனிதக்குழந்தையின் உருவம் செய்து, எல்லாவித செயல்களையும் செய்ததும், ஒரு சில நிமிடங்களில் குழந்தைக்கு உயிர் வந்தது.

கடவுள், “ஓ, மிகவும் பாராட்டத்தக்கது – ஆனால் முதலில் நீங்களே சொந்தமாக மண்ணை உருவாக்குங்கள்”, என்றார் ஒரு சிரிப்புடன்.

உயிரினமாக நீங்கள் பார்க்கும் ஒவ்வொன்றும், அது ஒரு புழுவாக இருந்தாலும், ஒரு பூச்சி, பறவை, விலங்கு, ஒரு மரம், ஒரு பெண், ஆண் என்று எதுவாக இருந்தாலும், அனைத்தும் மண்ணிலிருந்தே வந்துள்ளது. அந்த ஒரு பொருள் இங்கிருக்கும் காரணத்தினால்தான், நம்மால் உயிரை உருவாக்க முடிகிறது. உயிரின் சுழற்சி நிகழ்ந்துகொண்டிருப்பது, அந்த ஒரு விஷயத்தினால்தான். எல்லாவற்றுக்கும் பல சிக்கலான தீர்வுகள் உள்ளன, ஆனால் ஸ்டூவர்ட் விரிவாக எடுத்துரைத்த அந்த நுண்ணுயிர் வாழ்க்கை, நாம் புரிந்துகொள்ள வேண்டிய மிக எளிய விஷயம். அது மிகவும் சிக்கலானது. அது எப்படி வாழ்கிறது? அது எப்படி விருத்தியடைகிறது?

நம்மைப்போலவே, மண்ணில் இருக்கும் நுண்ணுயிர்களுக்கும் உணவு தேவைப்படுகிறது. ஏனென்றால் அப்படித்தான் பூமியின் உயிர்கள் உருவாக்கப்படுகிறது. எதையும் உணவாக உட்கொள்ளாமல், தானாகவே உயிர் வாழக்கூடிய எந்த உயிரும் இந்த கிரகத்தில் இல்லை. மண்ணில் இருக்கும் கரிமச்சத்து தான் அவர்களுக்கான இந்த உணவு. அவைகள் பிழைத்திருப்பதற்கு கரிமச்சத்து தேவைப்படுகிறது. மேலும் அவைகள் மற்ற பல செயல்பாடுகளையும் நிகழ்த்துகின்றன. இந்த பிரபஞ்சத்திலேயே வேறு எங்கும் இல்லாத மிகவும் சிக்கலான ஒரு கூட்டமைப்பு இது. மேலும் இதைப் பற்றி மிகக் குறைவாகவே நாம் அறிந்துள்ளோம் என்பதை விஞ்ஞானிகள் இன்று வெளிப்படையாக ஒத்துக்கொள்கிறார்கள்.

கரிமச்சத்தினை அதிகரிப்பது எவ்வாறு உரங்களுக்கான தேவையைக் குறைக்கிறது

அது குறித்து நாம் மிகக் குறைவாக அறிந்திருக்கும்போது, அதில் நம்மைக் கைதேர்ந்தவர்களாக எண்ணிக்கொள்வது முட்டாள்தனமாகத்தான் இருக்கும். பூமியின் மனித வாழ்வையும், மனிதர்களின் சந்தை அமைப்புகளையும் தொந்தரவு செய்யாமல், இயன்ற அளவுக்கு இயற்கை சுழற்சிகளை மீட்டெடுப்பது ஒரு முக்கியமான விஷயமாக இருக்கிறது. இயற்கை சுழற்சியை மீட்டெடுப்பது என்றால், நுண்ணுயிர்கள் உண்பதற்கான உணவை மட்டும் அளியுங்கள். அவைகள் உண்பதற்கு ஏன் உணவு மறுக்கப்படுகிறது? ஜெர்மானிய விஞ்ஞானிகள் நைட்ரஜன் அடங்கிய ஒரு உரத்துடன் வந்தபோது, 1914 ல் இது நிகழத் தொடங்கியது. மக்கள் இந்த மந்திரப்பொடியை எடுத்து, நிலத்தில் அதைப் போட்டதும், பயிர்கள் அப்படியே உயர எழும்பின.

ஆனால், இதில் மறைந்திருக்கும் பிரச்சனையை நாம் மறந்துவிட்டோம். இது எப்படியென்றால், நீங்கள் வழக்கம்போல் நன்றாக இருக்கும்போது மருத்துவரிடம் சென்றபோது, உங்களது சுண்ணாம்பு, இரும்பு மற்றும் அமிலத்தின் அளவுகள் நல்ல நிலைமையில் இல்லை என்று கூறி, உங்களிடம் மூன்று மாத்திரைகள் கொடுத்தார். அடுத்த நாள் நீங்கள் அவற்றை விழுங்கியதும், நன்றாக இருப்பதாக உணர்ந்தீர்கள். பிறகு நீங்கள் இவ்வாறு முடிவெடுத்தீர்கள், “இதுதான் சரியானது. தினசரி மூன்று மாத்திரைகளுக்கு பதில் நான் 300 எடுத்துக்கொள்வேன், அத்துடன் நான் வேறு எதையும் சாப்பிடத் தேவையில்லை.” இதுதான் மிகச் சரியாக மண்ணுக்கும் நிகழ்ந்துள்ளது. அந்த உப்பு உரங்களைத் தூவிவிடுவதாலேயே, எல்லாம் நிகழ்ந்துவிடும் என்று நாம் சிந்திக்கத் தொடங்கிவிட்டோம். மருத்துவமுறைப்படி, இன்றைக்கும்கூட, அது மிகவும் நன்றாகத்தான் செயல்படுகிறது. விவசாயத்திலிருந்து எல்லா இரசாயனங்களையும் நீங்கள் விலக்கிவிட்டால், பூமியில் நமது உணவு உற்பத்தியானது இப்போது இருப்பதைவிட 25% குறைந்துவிடும். அது ஒரு பெரும் அழிவாக இருக்கும்; அது உண்மையில் மரணமாக இருக்கும்.

ஆகவே, நாம் அதைப்பற்றி சிந்திக்க முடியாது. நீங்கள் மெல்லமெல்ல கரிமச்சத்தை அதிகரித்தால், மெதுவாக உரங்களின் பயன்பாடு குறையத் தொடங்கும். நாம் அப்படித்தான் போக வேண்டும். கரிமச்சத்தை எப்படி அதிகரிப்பது? இரண்டு விஷயங்கள் மட்டும்தான் உள்ளன: தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள். கரிமச்சத்தை மீண்டும் செறிவூட்டுவதற்கு வேறு எந்த வழியும் இல்லை.

கரிமச்சத்தின் ஆதாரங்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஏன் ஊக்கத்தொகை அளிக்கவேண்டும்

கரிமத் தன்மயமாக்கம் பற்றியும், மற்ற பல விஷயங்களையும் முடிவில்லாமல் நாம் பேசமுடியும். ஆனால், முக்கியமான விஷயம் என்னவென்றால், கரிமச்சத்தை நீங்கள் அதிகரித்தால், மண்ணில் இருக்கும் நுண்ணுயிர்களின் வாழ்வு தன்னைத்தானே மேம்படுத்திக்கொள்ளும்.  நாம் இவ்வாறு இருப்பதற்கான அடித்தளமாகவும் நுண்ணுயிரிகள் இருக்கின்றன. பரிணாமத்தின் அடிப்படையிலும், இன்று நாம் சூழலியலின் ஒரு உயிரினமாக இருப்பதிலும், அவைகளின் செயல்பாடுகளின் விளைவாகவே நாம் வாழ்கிறோம். சூழலியல் என்று நாம் கூறும்போது, அது தனிப்பட்ட ஒரு விஷயமல்ல – நாம்தான் சூழலாக இருக்கிறோம். உங்களது உடலின் 60% நுண்ணுயிரிகளாக இருக்கிறது. 40% மட்டும்தான் உங்களது பெற்றோர்களின் மரபணுக்கள் உள்ளது.

நீங்கள்தான் சுற்றுச்சூழலாகவும் இருக்கிறீர்கள். ஆகவே, சுற்றுச்சூழலை நாம் சீராக்குவோம் என்று நாம் நினைப்பது – அந்த இடைவெளியே நமக்கு பல பிரச்சனைகளை உருவாக்குகிறது. ஆகவே, எளிமையானது இதுதான் - நுண்ணுயிர்களுக்கு மீண்டும் உணவளிப்பது. இந்த கரிமச்சத்தை திரும்பவும் மண்ணுக்கு அளிப்பதற்கு, உங்களுக்கு தாவரப் பொருள் அல்லது கால்நடைக்கழிவு தேவைப்படுகிறது. இது கட்டாயம் நிகழத் தேவைப்படுகிறது. இதற்காக, உங்களுக்கு ஒரு கொள்கை ஊக்கத்தொகை அவசியம்: இல்லையென்றால், விவசாயிகள் அதற்கு திரும்பிச் செல்லமாட்டார்கள். ஐம்பது வருடங்களுக்கு முன்பு, ஒவ்வொரு விவசாயிக்கும் இது தெரிந்திருந்தது, அதை அவர்கள் வழக்கமாக செய்துகொண்டும் இருந்தனர். இன்றைக்கு, கடந்த இரண்டு தலைமுறைகளாக, நாம் இந்த வழக்கத்தைத் தொலைத்துவிட்டோம். பண்ணையில் தாவரங்கள் மற்றும் விலங்குகள் நம்மிடத்தில் இருத்தல் வேண்டும், இல்லையென்றால் கரிமச்சத்தை நீங்கள் மண்ணுக்குள் சேர்க்க முடியாது. ஆனால் இப்போது, அதற்கு ஒரு ஊக்கத்தொகை தேவைப்படுகிறது.

மண்ணின் கரிமச்சத்தின் அடிப்படையில் லேபிள் தயாரிப்பு

தற்போது, வட ஐரோப்பாவில், மண்ணின் சராசரி கரிமச்சத்து 1.48%. தெற்கு ஐரோப்பாவில், அது சுமார் 1.2%. அமெரிக்காவில் 1.4% முதல் 1.5%. இந்தியாவில், பெரிய நிலப்பரப்புகளில் 0.68% மட்டுமே உள்ளது. மேலும் ஆப்பிரிக்காவில், அது 0.3% இருப்பதால், பாலைவனமாகும் அபாயகரமான நிலையில் உள்ளது.

இதை ஒரு தேசிய அரசாங்கம் அறிவிப்பு செய்யலாம். உங்கள் பண்ணையில் கரிமச்சத்தை நீங்கள் அதிகரித்தால், அதனைப் பரிசோதிப்பது மிகவும் எளிது. குறிப்பிட்ட பண்ணையின் விவசாயியே மண்ணின் கரிமச்சத்தைப் பரிசோதிக்க இயலும். கரிமச்சத்து  மூன்று சதவிகிதம் அதிகரித்தால், அரசாங்கம் அதற்காக நீங்கள் பெறக்கூடிய ஊக்கத்தொகையை நிர்ணயிக்க வேண்டும். பிறகு, நீங்கள் சந்தைக்கு எடுத்து செல்லும்போது அந்தப் பண்ணையில் விளைந்த பழங்களுக்கு அல்லது காய்கறிகளுக்கு “இது 3% கரிமச்சத்துக் கொண்ட நிலத்திலிருந்து பெறப்பட்டது”, என்று யாராவது குறிப்பிடப்பட முடியும்.

மண்ணில் 3% கரிமச்சத்து இருந்தால் பழங்கள் அல்லது காய்கறிகளில் என்ன நுண்ணூட்டச் சத்துக்கள் இருக்கும், நீங்கள் பெறும் ஆரோக்கியத்திற்கான பலன்கள் என்ன போன்றவற்றை சொல்வதற்குத் தேவையான அறிவியல் போதுமான அளவு உள்ளது. நாம் அவற்றையெல்லாம் ஒன்றுசேர்த்தால் மட்டும் போதும்; அதன்பின் சந்தை அதனுடைய ஊக்கத்தொகையை விவசாயிகளுக்கு வழங்கும்.

நீங்கள் 6% கரிமச்சத்துள்ள மண்ணில் விளைந்த பழங்களையோ அல்லது காய்கறிகளையோ வாங்க விரும்பினால், கண்டிப்பாக அது அதிக விலையில் இருக்கும், ஆனால் 8 ஆரஞ்சுப் பழங்களைச் சாப்பிடுவதற்கு பதில் நீங்கள் ஒன்றை மட்டும் உண்ணலாம். இந்த ஒரு வித்தியாசத்தைத் தான் இது உருவாக்கும். அதனால், இது இப்போது நடைப்பெற வேண்டிய ஒன்று, நாளை அல்ல. ஏனெனில் கொள்கை உருவாக்கத்தை இப்போது துவங்கினால், அதனை ஒரு செயல்பாடாக நிறைவேற்ற 8ல் இருந்து 20 வருட காலங்கள், உலகமெங்கும் நடைபெறுவதற்கு முன்பு ஆகலாம். ஆனால் இப்போது நாம் கொள்கைகளை உருவாக்கவில்லை என்றால்...

மற்றுமொரு ஊக்கத்தொகை: விவசாயிகளுக்கான கரிம மதிப்பீடு

கேள்வியாளர்: மேற்கூறிய சாத்தியங்களும், விவசாயிகளின் பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக கரிம அடிப்படையிலான நிதி வழங்கும் உபாயமும் செயல்படுமா என்பது குறித்த உங்கள் கணிப்பை அறிந்துகொள்ள விரும்புகிறேன். அது எதிர்காலத்தில் நிகழ்வதை நீங்கள் காண்கிறீர்களா?

சத்குரு: கணிப்புகளை நான் விரும்புவதில்லை. ஏனென்றால் இந்தக் கணத்தில் உங்கள் இதயத்தில் என்ன துடித்துக்கொண்டிருக்கிறது என்பதைக் கருதாமல், இன்றைய நடப்புகளின் அடிப்படையில் கணிப்புகள் செய்யப்படுகின்றன. ஆகவே என்னிடத்தில் கணிப்புகள் இல்லை, ஆனால் என்னிடத்தில் ஒரு திட்டம் இருக்கிறது. நமக்கு ஒரு திட்டமும், அதைச் செயல்படுத்தும் விருப்பமும் தேவை. அதற்குத் தேவையான உறுதி நமக்கு இருக்கிறதா? நாமே பேரழிவினை நோக்கிச் சென்றுவிட்டு, பிறகு அதைக் குறித்து அழுது புலம்பாமல் இருப்பதற்கு போதிய கவனம் கொண்டிருக்கிறோமா? அழிவுகள் நிகழ்வதற்கு முன் அவற்றைக் குறைத்துக்கொள்ளும் திறன் நமக்கு உண்டு.

தற்போது, மக்களை நகரச் செய்வது முக்கியமான விஷயமாக இருக்கிறது. கரிமத் தன்மயமாக்கம் மற்றும் கரிமச் சந்தையைக் குறித்த விஷயங்கள் முக்கியமானவை. முதல் ஊக்கத்தொகையை அரசாங்கம் வழங்கவேண்டும். இரண்டாவது ஊக்கத்தொகை, கரிம மதிப்பீடு வழங்கும் பெரு நிறுவனங்களிடம் இருந்தும், மற்றவர்களிடம் இருந்தும் வரவேண்டும். அடுத்ததாக சந்தையிலிருந்து வரும். மொத்தத்தில், விவசாயிகள் பெரிய அளவில் பயனடைவார்கள். இது நமக்கு மிகவும் முக்கியம்.

தற்போது, 63% இந்திய ஜனத்தொகையினர் விவசாயத்தில் உள்ளனர், ஆனால் 2% விவசாயிகள்கூட அவர்களது குழந்தைகள் விவசாயிகளாவதை விரும்பவில்லை. அவர்களுள் பெரும்பாலானவர்கள் தற்கொலை செய்துகொள்வதை நாடுகின்றனர், ஏனென்றால் அவர்களது குறைந்தபட்ச தேவைகளையும் பூர்த்திசெய்துகொள்ள இயலவில்லை. அடுத்த 10–15 வருட காலங்களில், குறைந்தபட்சம் ஒரு பொறியியலாளர் அல்லது ஒரு மருத்துவர் அல்லது ஒரு வழக்கறிஞரைப் போல் ஒரு விவசாயி சம்பாதிக்கும் அளவுக்கு விவசாயத்தினை நாம் உருவாக்குவது மிகவும் முக்கியமானது. இல்லையென்றால், மண்ணை உணவாக்கும் இந்த மாயவித்தையை நிகழ்த்தும் திறன் ஒருவருக்கும் இருக்காது. அது நமது உயிருக்கு மிகவும் அவசியமான, மகத்துவமான விஷயம்.

நாம் தேர்வு செய்யப்போவது அக்கறையின்மையையா அல்லது பொறுப்புணர்ச்சியையா?

தற்போது, ஐநாவின் உணவு மற்றும் விவசாயக் கூட்டமைப்பின்படி (UN FAO) ஆண்டுதோறும் 27,000 உயிரினங்கள் என்ற அளவில் பூமியின் பல்லுயிர்ப் பெருக்கத்தின் இழப்பு இருக்கிறது. இந்த விகிதத்தில், அடுத்த 30 – 35 வருடங்களில், மண்ணை மறுசீரமைக்கவோ அல்லது அதற்கு புத்துயிரூட்டவோ நாம் விரும்பினால், அதற்கு 150 – 200 வருடங்கள் தேவைப்படும் ஒரு மோசமான கட்டத்தை நாம் அடைந்துவிடுவோம். இது முற்றிலும் அழிவுக்கே வழிவகுக்கும், அதனால்தான் இந்த அவசரம்.

இந்த இயக்கம் மக்களை செயல்படுத்துவதற்கானது. நமது அரசாங்கங்கள் பெரிதும் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்படுகின்றன. மக்களுக்கு அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு, அவர்களுக்கு 4 – 5 வருடங்கள் அவகாசம் அளிக்கின்றீர்கள். எந்த தேசத்திலாவது பெரும்பான்மை மக்கள் எழுந்து நின்று, “நாங்கள் நீண்ட கால கொள்கை உருவாக்கத்திற்கு விருப்பம் தெரிவிக்கிறோம். எங்களது குழந்தைகளின் நல்வாழ்வு மற்றும் அவர்களது குழந்தைகளின் நல்வாழ்வுக்கும்கூட ஏதாவது செய்வதற்கு நாங்கள் விரும்புகிறோம். அதை நோக்கி மூலதனம் செய்யவும், செயல்படவும் விரும்புகிறோம்” என்று கூறியுள்ளனரா? மக்கள் இவ்வாறு தொலைநோக்குடன் பேசியது கிடையாது. ஆகவே, அரசாங்கங்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள நான்கு, ஐந்து வருடங்களுக்குள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றத்தான் முயற்சிக்கும்.

நம் வாழ்க்கையின் அடிப்படையான மண்ணுக்காகப் பேசுங்கள்

உலகத்தில் ஓட்டுரிமை உள்ள 526 கோடி மக்கள் இருக்கின்றனர். இந்த 100 நாட்களில், மண்ணைப் பற்றி பேசுவதற்கு நமக்கு 30 – 40 கோடி மக்கள் தேவை. என்னை நீங்கள் ஆதரிக்க வேண்டியதில்லை. உங்கள் மண்ணுக்குச் செய்யுங்கள். சமூக ஊடகங்களில், வீதியில், உங்கள் வாகனத்தில், உங்கள் முகத்தில் என்று நீங்கள் விரும்பும் வகையில் மண்ணைப் பற்றி தினமும் ஏதாவது ஒரு விஷயத்தை வெளிப்படுத்துங்கள். இது ஒன்றும் நகைச்சுவைக்கானது அல்ல. இப்பொழுதே நாம் போதிய செயல்களைச் செய்யவில்லை என்றால், அடுத்த 20 வருடங்களில் நாம் அதற்காக மிகவும் வருத்தப்படுவோம். அந்த நிலைமையை நாம் அடையவேண்டாம்.

இங்கு அமர்ந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். பூமியின் மீது இது நமக்கான நேரம். வாழ்க்கையை நாம் பொறுப்பான முறையில் நடத்திக்கொள்ளப் போகிறோமா அல்லது அற்பமான, பொறுப்பற்ற விதத்தில் நடத்தப் போகிறோமா? இதுதான் நமக்கிருக்கும் தேர்வு. மேலும், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாயக் கூட்டமைப்பின்படி, இன்னமும் பூமியில் பிறக்காத குழந்தைக்கு சொந்தமான உணவைத்தான் தற்போது நாம் உண்டு தீர்த்துக்கொண்டிருக்கிறோம். தற்போது அப்படித்தான் நாம் கூடுதலாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். என் உணர்வில், இன்னமும் பிறக்காத ஒரு குழந்தையின் உணவை நாம் சாப்பிட்டால், அது மனிதகுலத்துக்கு எதிரான ஒரு குற்றம். இதிலிருந்து நாம் விடுபட வேண்டும்.