தெய்வீகத்தின் பாதையில்
சுவாமி
கேவலா
~ முழுமையின் முகம்

இந்தத் தொடரில், ஈஷா பிரம்மச்சாரிகளும் சந்நியாசிகளும் தங்களது தனிப்பட்ட பின்னணி, பார்வைகள் மற்றும் இந்த புனிதமிக்க “தெய்வீகப் பாதை"யில் பயணிப்பதன் நோக்கம் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

தேடலுக்கான ஏக்கம்

எனக்கு பதினாறு வயதாக இருந்தபோது என் தந்தை புற்றுநோயால் இறந்தார். எனக்கு இன்றும் அந்த அதிகாலை நினைவிருக்கிறது. என் தாய் என் அருகில் வந்து மிக மென்மையாக என்னிடம், “நேற்று இரவு உன் தந்தை காலமானார்” என்று சொன்னார். நான் எதுவும் சொல்லவில்லை, உணர்வற்றவனாக இருந்தேன். நாங்கள் அனைவரும் இவ்வாறு நடக்கலாம் என்பதை அறிந்தே இருந்தோம். சில நாட்கள் முன்பே மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு செல்லலாம் என அவர் கூறியிருந்தார். ஆனால் அந்த தருணம் வந்தபோது, என் உலகம் சிதறிப்போனது. சத்குரு எப்போதும் சொல்வார், “எப்போது ஒருவரின் வாழ்வில் துன்பம் வருகிறதோ, அப்போது தான் பெரும்பாலான மக்கள் ஆன்மீகத்தை நாடுகின்றனர். “எனக்குள் இருந்த தேடலை தூண்டியது இந்த தருணம் தான் என்பதை பல ஆண்டுகளுக்கு பின் நான் உணர்ந்தேன்.

அந்த தருணம் முதல் “அமானுஷ்யங்கள்” மீது எனக்கு ஈர்ப்பு வந்தது. வார இறுதி நாட்களில், இலண்டனில் உள்ள சிறு கூட்டத்திற்குரிய புத்தக கடைகளை சுற்றி வருவேன். இதன் மூலம் நான் யோகா குறித்து படித்து தெரிந்து கொண்டேன். அந்த நொடி வரை, யோகா என்பது ஒருவித ஜிம்னாஸ்டிக் முறை என்றே நினைத்திருந்தேன். ஆனால் அது பல்வேறு விதமான ஞானத்தின் வாயில் என்பதை அறிந்து பின் வியப்படைந்தேன். இதனை என் பிரக்ஞையின்றியே நான் கவனித்திருந்தேன். இந்த முழுமையான யோகாவை கற்றுக்கொடுக்க கூடிய ஒருவரை, அந்த ஷணம் முதல் எப்போதும் தேடத் துவங்கினேன். ஆனால் இங்கிலாந்தின் புறநகரில் வசிக்கக்கூடிய ஒரு வளரிளம் இளைஞனுக்கு, அதுவும் எப்போதும் இணையத்தின் முன்பே இருப்பவனுக்கு அந்த அதிர்ஷ்டம் வாய்க்கவில்லை.

1996ல், என் பள்ளிப்படிப்பை முடித்தேன். பின் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்திற்கு சென்று கணிதம் பயின்றேன். இங்கு தான் எண்களின் மீதான அற்புத உணர்வை நான் வளர்த்துக்கொண்டேன். அன்று முதல் இன்று வரை அது அப்படியே இருக்கிறது. பட்டப்படிப்பிற்கு பின் ஐடி நிறுவனத்தில் ஒரு வேலையை தேடிக்கொண்டேன். பலரும் விரும்பும் “கனவு வேலை,” நல்ல சம்பளம், சுவாரஸ்யமான மற்றும் சவால் நிறைந்த வேலை. அனைத்து நல்ல அம்சங்களும் அங்கே இருந்தன. ஆனால் சில வருடங்களுக்கு பின் என்னுள் ஆழ்ந்திருக்கும் ஏதோவொன்று நிறைவில்லாமல் இருப்பதை என்னால் உணர முடிந்தது. இந்த வேலை எனக்கானது அல்ல என்று எனக்குள் தோன்றியது.

அந்த காலகட்டத்தில், என் நிறுவனத்தின் இலண்டன் அலுவலகத்திற்கு எனக்கு பணி மாறுதல் கிடைத்தது. அங்கே குடியேறிய பிறகு, நான் செய்த முதல் வேலை, அங்கு எங்காவது யோகா கற்றுக்கொள்ள முடியுமா என தேடத் துவங்கியது தான். அப்போது தான் சிவானந்தா மையத்தை கண்டறிந்தேன். உண்மை என்பதன் முதல் சுவையை இங்கே உணர்ந்தேன். அங்கு நிகழ்ந்த முதல் “ஆரம்ப யோகா வகுப்பில்” நான் கலந்துகொண்ட போது, நாங்கள் அனைவரும் அந்த வகுப்புக்கு ஏன் வந்தோம் என்ற கேள்வியை வினவினார் ஆசிரியர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் சொல்ல ஆரம்பித்தார்கள், ஒருவர் முதுகு வலி என்றார் அல்லது அவர்களின் கவனத்தை மேம்படுத்த என்றார்கள். என்னுடைய முறை வந்தது எனக்கு சற்று சங்கடமாக இருந்தது, நான் அந்த வகுப்பில் ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்டேன். நான் முக்தியடைய வேண்டும் என்றேன்.

சில மாதம் தொடர்ச்சியான யோக வகுப்பிற்கு பிறகு மற்றும் பரமஹம்ச யோகானந்தா அவர்களின் “ஆட்டோபயோகிராபி ஆப் எ யோகி” உட்பட எனக்கு கிடைத்த புத்தகங்களை எல்லாம் வாசித்து முடித்த பின்பு, எனக்கு இந்தியாவிற்கு பயணிக்க வேண்டும் என்ற உந்துதல் மிக வலிமையாக ஏற்பட்டது. சாதுக்கள் மற்றும் கோவில்களின் உருவங்கள் குறித்த மதரீதியான சித்தாந்தங்களை நான் கொண்டிருந்தாலும், அதை ஏற்றுக்கொள்வது எனக்கு சற்று கடினமாக இருந்தாலும், எனக்கு அந்த ஞானிகள் குறித்து தெரிந்துகொள்ள பேரார்வமாக இருந்தது. எனவே என் வேலையிலிருந்து எவ்வாறு விடுப்பு எடுக்கலாம் என திட்டமிடத் துவங்கினேன்.

ஒரு நாள் நான் என் இந்திய நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். நான், ஒரு மாத காலம் இந்தியா செல்ல திட்டமிட்டிருப்பதை அவரிடம் சொன்னேன். அவர் சொன்னார், “நீங்கள் ஒரு மாதத்திற்கு எப்படி செல்ல முடியும்! இந்தியா என்றால் நீங்கள் குறைந்தது ஆறு மாதம் செல்ல வேண்டும்” என்றார். ஒருவாறாக எந்த வாதமும் இன்றி இந்த உண்மையை ஒப்புக்கொண்டேன். பின்பு இல்லம் திரும்பி வேலையிலிருந்து நீண்ட விடுப்பு எடுக்க என்னென்ன வழிகள் இருக்கிறது என்று சிந்திக்கத் துவங்கினேன். நான் புதிய ஊழியர் என்பதால், நீண்ட விடுப்புக்கான எந்தவொரு விதிக்கும் நான் தகுதியுடையவனாக இருக்கவில்லை. எனவே இதற்கான ஒரே வழி வேலையை விட்டுவிடுவது தான் என முடிவு செய்தேன்.  

அடுத்த நாள் அலுவலகத்தில், என் துறை தலைவரின் அறைக்குள் சென்றேன். எனக்கு விடுப்பு வேண்டும் என அறிவித்தேன். அவர் “எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கையில் எதற்காக விடுப்பு?” என கேட்டார். “இந்தியாவிற்கு ஆறு மாத காலம் செல்ல வேண்டும்” என்றேன். அதற்கு அவர், “அங்கு சென்று என்ன செய்ய போகிறாய்?” என்றார். ஒரு கட்டத்தில், இதற்கு எந்த தர்க்கரீதியான பதிலும் என்னிடம் இல்லை என்பதை உணர்ந்து, “எனக்கு நிஜமாக தெரியவில்லை” என்றேன். சற்று குழப்பத்துடன் என்னை பார்த்தாலும், புரிந்துகொண்டு என்னை இந்தியாவிற்கு புறப்படச் சொன்னார். எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்றும், இந்த வேலை எனக்காக நான் திரும்ப வரும் வரை காத்திருக்கும் என்றும் கூறினார்.

ஞானியின் தூதுவர்

மிக விரைவாக நான் இந்தியா கிளம்பும் நாளும் வந்தது. அது மார்ச் 2003. என்னுடைய விமானம் இலங்கையில் இரவு தரையிறங்கி மீண்டும் புறப்பட்டு கேரளா திருவனந்தபுரத்தில் என்னை தரையிறக்கியது. நான் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்து ஆட்டோவில் ஏறி பேருந்து நிலையம் வந்தடைந்தேன். அப்போது சாலையில் இருந்த காய்கறி வியாபாரிகள் மற்றும் இதர சாலையோர கடைகளை கடந்து செல்கையில் அங்கிருந்த வித்தியாசமான நிறங்கள் மற்றும் சப்தங்களால் நான் மகிழ்வடைந்தது இப்போதும் நினைவில் உள்ளது.

நான் என் பேருந்தை கண்டறிந்து ஏறிக்கொண்டேன். அது என்னை நெய்யார் அணைக்கு அழைத்து சென்றது. அங்கு தான் சிவானந்தா ஆசிரமம் அமைந்துள்ளது. அங்கு ஒரு மாத கால யோகா பயிற்சி வகுப்பு பயிலத் திட்டமிட்டிருந்தேன். அந்த நிறுத்தம் வந்து நான் இறங்கியபோது, என் பின்னால் அமர்ந்திருந்த இளம் ஆணும் பெண்ணும் என்னுடனே இறங்கினார்கள். அவர்கள் ஒரு வார்த்தையும் என்னிடம் பேசவில்லை, ஆனால் அவர்கள் என் பெட்டிகளை எனக்காக தூக்கிக் கொண்டனர். பின் நாங்கள் மூவரும் சாலையில் ஒன்றாக நடக்கத் துவங்கினோம்.

அவர்கள் தமிழர்கள். அவர்களால் அதிகம் ஆங்கிலத்தில் பேச இயலவில்லை. ஆனாலும் அடிப்படை கருத்து பரிமாற்றத்தை நாங்கள் சமாளித்து கொண்டோம். அதிலும் அந்த இளம் பெண் வித்தியாசமான பண்புகளை கொண்டிருந்தார். அவரால் என் தேடலை புரிந்துகொள்ள முடிந்தது. அதே யோக பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக அவர் ஆசிரமத்தில் வந்து தங்கியிருக்கிறார் என்பது வெளிப்படையான காரணமாக இருந்த போதும், அவர் சில குடும்ப சூழலில் இருந்து தப்பிப்பதற்காகவே அங்கு வந்திருக்கிறார் என்பதை பின்னர் தெரிந்துகொண்டேன்.

அடுத்த ஓரிரு வாரங்களில் நாங்கள் நண்பர்கள் ஆனோம். அந்த யோக பயிற்சி வகுப்பு முடிந்த பின், அந்த பெண், நான் அவரின் குருவான “ஜக்கி”யை சந்திக்க வேண்டும் மற்றும் ஈஷா யோகா வகுப்பு செய்ய வேண்டும் என்றார். நான் முழுமையாக குழம்பிவிட்டேன். எனக்கு அங்கு செல்ல வேண்டுமா, வேண்டாமா? என்று கூட தெரியவில்லை. நான் சிவானந்தா ஆசிரமத்திலேயே மகிழ்வாக இருந்தேன், எனக்கு வேறொரு இடத்திற்கு செல்வதற்கான தேவையும் இருக்கவில்லை. ஆனாலும் என்னுள் இருந்து ஒரு குரல் நான் செல்ல வேண்டும் என்று சொன்னது. என் மனதிற்குள்ளாக ஒரு யுத்தம் நடந்து முடிந்தது. அதன்பின் சிறிது நேரம் நான் கண்கள் மூடி அமர்ந்தபோது என் மனம் சொன்னது, நான் அந்த பெண் சொன்னதை செய்ய வேண்டும் என்று.

அந்த பெண் என் கையில், ஈஷா யோக மையத்தின் பத்திரிக்கையான காட்டுப்பூ ஆங்கில இதழைக் கொடுத்தார். மேலும், அடுத்து நடக்கவிருக்கும் 13 நாட்கள் ஆங்கில ஈஷா யோகா வகுப்பில் என்னை பங்கேற்க செய்ய ஏற்பாடு செய்வதாகவும் சொன்னார். அந்த பத்திரிக்கையாலும் அதிலிருந்த சத்குருவின் புகைப்படத்தாலும் நான் முழுமையாக உள்வாங்கப்பட்டேன். அந்த மனிதரை சந்திக்க இருக்கிறோம் என்கிற எண்ணம் எனக்குள் ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தியது. அவர் சொன்ன ஒரு பத்தியை நான் படித்தது எனக்கு நினைவிருக்கிறது.

“உங்கள் தியானம் உங்களைப் பற்றியது மட்டுமல்ல. இந்த அரங்கில் இருக்கும் ஒரு சிலர் உண்மையான தியானநிலைக்கு செல்வார்கள் எனில், இந்த மொத்த நகரமும், ஏனென்று கூட தெரியாமல் அமைதிமிக்கதாய் மாறும். நான் எப்போதும் அதுபோன்ற மனிதர்களையே தேடுகின்றேன். வருகின்ற ஆயிரம் மக்களில் ஒரு சிலர் மட்டுமே அந்த உயர்ந்த சாத்தியங்களுக்கு தகுதியுள்ளவர்களாக இருக்கிறார்கள்.”

அந்த ஒரு சிலரில் நானும் ஒருவனாக இருக்க முடியுமா? என் மனம் ஏங்கியது.

அந்த வகுப்பில் பங்கேற்க நான் சென்னைக்கு கிளம்பினேன். தொடக்க அமர்வு முடிவு பெற்ற பின் எனக்கு எந்தவித சந்தேகமும் இருக்கவில்லை, இதுதான் என்னுடைய பாதை என்று திடமாக தோன்றியது. பின் அந்த பதிமூன்று நாளும் சில நொடி போல பறந்து போனது. அந்த அற்புதமான சூழல், ஒவ்வொரு விஷயத்தையும் மிகுந்த அக்கறையுடன் அமைதியாக கையாண்ட தன்னார்வத் தொண்டவர்கள், என்னை அறிமுகம் செய்த அந்த இளம் பெண்ணிடம் இருந்ததை போன்ற ஒளியை பிரதிபலித்த ஆசிரியர் என இப்போது வரை அந்த வகுப்பின் நினைவுகள் எனக்குள் இருக்கிறது.

அந்த வகுப்பு முடிந்த பின் நான் ஈஷா ஆசிரமம் வந்து இங்கே அடுத்த ஐந்து மாதங்கள் தன்னார்வத் தொண்டராக இருந்தேன். அங்கிருந்த ரம்மியமான சூழலிலும், சேவையிலும் என்னையே நான் இழந்தேன். இந்தியா முழுவதும் உள்ள ஆசிரமங்கள் மற்றும் ஆன்மீக தலங்களுக்கு செல்ல வேண்டும் என்கிற என் அடிப்படை பயணத் திட்டத்தையே நான் மறந்துவிட்டேன். இனி தேட வேண்டிய அவசியமே இல்லை. என் தேடலை நான் கண்டடைந்து விட்டதாகவே உணர்ந்தேன்.

இது அல்ல என் இல்லம்

பூமாலைகள் நாரினில் இறுக்கமாக கட்டப்பட்டன

இது அல்ல என் இல்லம்

மயில்கள் எந்த பிரக்ஞையுமின்றி கர்வமுடன் திரிகின்றன

இது அல்ல என் இல்லம்

இங்கே சீரற்று கற்கள் வெட்டப்பட்டுள்ளன

இது அல்ல என் இல்லம்

மலைகள் அவற்றுக்கு தெரிந்த மனிதரால்
ஆசிர்வதிக்கப்பட்டிருக்கின்றன - அட,

இது அல்ல என் இல்லம்

எனில் என் இல்லம், எங்கு என்றும்

எந்த திசையில் இருக்கின்றது என்றும் எனக்கு தெரியவில்லை

ஆனால் இங்கு பிரார்த்திக்க சற்று இளைப்பாறலாமா?

என் இல்லத்தை கண்டுணரலாமா?

ஞானியை எதிர்கொள்ளுதல்

நான் ஆசிரமத்தில் இருந்தபோது, சத்குரு அமெரிக்காவில் இருந்தார். நான் தங்கியிருந்த நாட்களின் முடிவில் அவர் ஈஷா யோக மையத்தில் ஹோல்னஸ் வகுப்பு எடுப்பதற்காக திரும்பியிருந்தார். நானும் மிக ஆவலுடன், அவருடைய இருப்பில் சிறிது நேரம் செலவழிக்கலாம் என எண்ணி பதிவு செய்து கொண்டேன். என் தாயையும் சமாதானம் செய்து அதில் பதிவு செய்ய வைத்தேன். அந்த வகுப்பின் இறுதி நாளில் என்னுடன் சிலர் அவரை நேரில் சந்திக்க எண்ணினோம். நாங்கள் ஒவ்வொருவராக சென்றோம். மற்ற அனைவருடனும் அவர் மிகுந்த நகைச்சுவையுடன் பேசிக்கொண்டிருந்தார், புன்னகைத்தார். ஆனால் நான் சென்றபோது அவரிடம் புன்னகை இல்லை.

நான் இங்கு இன்னும் சிறிது காலம் இருக்கலாமா? என்று கேட்டேன். வேறு என்ன கேட்பதென்றும் எனக்கு தெரியவில்லை, காரணம் எனக்கு அவர் முன் வேறு வார்த்தைகள் வரவில்லை. “நீங்கள் சோம்பேறியாக இருந்தால் நாங்கள் உங்களை வெளியேற்றிவிடுவோம்” என்று தீர்க்கமாக சொன்னார், அவ்வளவுதான். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, நான் அங்கிருந்து சென்றுவிட்டேன். பரமஹம்ச யோகானந்தா அவருடைய குருவை சந்தித்த தருணத்தை மிக நெகிழ்வுடன் எழுதியிருப்பார். அதனை வாசித்த பின், எனக்கும் சத்குருவை சந்திப்பதில் அதுபோன்ற எதிர்பார்ப்புகள் இருந்தன. அவர் இருகரம் நீட்டி என்னை ஆர தழுவி வரவேற்பார் என்றும், என் வருகையை எண்ணி மகிழ்வார் என்றும் நான் நினைத்திருந்தேன். ஆனால் இந்த எதிர்வினைக்கு என்ன சொல்வதென எனக்கு தெரியவில்லை. கடந்த ஐந்து மாதங்களாக பாத்திரங்கள் கழுவியதில் என் முதுகு வளைந்திருந்தது, நான் தினசரி இருவேளை பயிற்சிகள் செய்கிறேன், ஆனாலும் ஏன் அவர் இப்படி சொன்னார் என என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் மொத்தமாக குழம்பியிருந்தேன். ஏமாற்றமாகவும் அதேநேரத்தில் சீற்றமாகவும் இருந்தது.

அதன்பின் சிறிது நாளில், நான் ஆசிரமத்தில் இருக்க வேண்டாம் என முடிவு செய்தேன். நான் இங்கிலாந்து திரும்புவதற்கு ஒரு வாரம் முன்பு, என் துணிகளை கற்களின் மீது துவைத்து கொண்டிருந்தேன். எப்படி அடுத்த சில நாட்களை கடப்பது என எண்ணிக் கொண்டிருந்தேன். அங்கிருந்த முக்கோண மையத்தின் (தன்னார்வத் தொண்டர்கள் தங்கும் பகுதி) பின்புறம் நடக்கத் துவங்கினேன். அப்போது ஒரு தன்னார்வத் தொண்டர் என்னை மிகவும் மகிழ்வுடன் அழைத்தார். “உங்களுக்கு அப்பாய்ண்ட்மென்ட் இருக்கிறது” என்றார். நான் சொன்னேன், “இல்லை நான் நன்றாகதான் இருக்கிறேன், எனக்கு மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை” என்று. அதற்கு அவர், “இல்லை இல்லை, சத்குருவுடன் அப்பாய்ண்ட்மென்ட்” என்று சொல்லி சிரித்தார்.

எனக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது, எப்படியோ அவர் என்னை இறுதியிலேனும் பார்க்கப் போகிறாரே என்று. (ஆனால் பின்பு தான் தெரிந்தது, நான் சில நாட்களில் கிளம்ப இருக்கிறேன் என்பதால் ஒரு சன்னியாசி எனக்காக இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார் என்று)

கோவிலுக்கு வெளியே இருந்த தோட்டத்தில், புதரின் அருகே என்னுடைய முறைக்காக மிகுந்த பதற்றத்துடன் காத்துக் கொண்டிருந்தேன். இனி வாழ்வில் நான் என்ன செய்ய வேண்டும்? என அவரிடம் கேட்க வேண்டும் என்று முடிவு செய்திருதேன். அவர் என்ன சொன்னாலும், எதுவே சொன்னாலும் நான் செய்வதாக இருந்தேன். சிறிது நேரத்தில் மா ஒருவர் என்னை அறை உள்ளே அனுப்பினார். அவரை நேருக்கு நேர் சந்திக்க மற்றோர் வாய்ப்பா என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அவர் இயல்பாக என்னிடம் பேசினார், அதில் சற்று செளகரியமாக உணரவும், முன்பே ஒத்திகை பார்த்திருந்த கேள்வியை கேட்டேன், “என் வாழ்வில் நான் என்ன செய்ய வேண்டும்?” “அதற்கு சத்குரு, “வாழ்ந்து விடு” என கர்ஜிக்கும் சிரிப்புடன் சொன்னார். மீண்டும் சத்குருவிடம் இருந்து எதிர்பாராத பதில் (என்னுடைய பார்வையில்). மேலும் இனி ஆசிரமத்தில் இருக்க எனக்கு விருப்பமில்லை என்பதையும் சொல்லிவிட்டேன். என்னை பார்த்த சத்குரு, “ஏன் மிரட்டப்பட்டதாக உணர்கிறீர்களா?” என்றார். எனக்கு மீண்டும் குழம்பிவிட்டது. அந்த சந்திப்பு முடிவதற்கு முன்பாக, அவர் என்னை அமெரிக்காவில் நடக்கும் “பாவஸ்பந்தனா” யோக பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளுங்கள், பின்பு பார்க்கலாம் என்றார். அந்த சந்திப்பிற்கு பிறகு எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னுடைய முந்தைய எதிர்மறை எண்ணங்கள் எல்லாம் அவருடைய இருப்பினால் மறைந்திருந்தது.

அவருடைய வார்த்தைகளை பின் தொடர்ந்து அமெரிக்காவில் நடந்த பாவஸ்பந்தனா நிகழ்வில் கலந்துகொண்டேன். பின்பு இங்கிலாந்து திரும்பினேன். அங்கே என் வேலையை அதிகாரபூர்வமாக ராஜினாமா செய்தேன். பின்பு என்னுடைய ஒரு சில குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களையும் பார்க்க வேண்டும் என தோன்றியது. இது நான் அவர்களை கடைசியாக சந்திக்கும் சந்திப்பாக கூட இருக்கலாம். அதன்பின் நேராக ஆசிரமம் திரும்பினேன். ஈஷா திருவிழா எனும் நிகழ்விற்கு நடுவில் 21 செப்டம்பர் அன்று திரும்பினேன், அப்போது முதல் நிகழ்வுகள் மிக விரைவாக நகரத் தொடங்கின. அதன்பின் ஒன்பது மாதங்கள் கழித்து 2004 ஆம் ஆண்டு குரு பெளர்ணமி அன்று பிரம்மச்சரியப் பாதையில் பயணிக்க எனக்கும் மற்ற 25 முழுநேர தன்னார்வத் தொண்டர்களுக்கும் தீட்சை வழங்கப்பட்டது.

சவுண்ட்ஸ் ஆப் ஈஷா

இசை, என் வாழ்வில் எப்போதும் ஒரு முக்கிய அங்கமாகவே இருந்து வந்தது. எனக்கு பதினோரு வயதாக இருந்தபோது நான் கிட்டார் வாசிக்க கற்றுக்கொண்டேன். எனக்கு உத்வேகம் தரும் ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு இளைஞர், பெரும்பாலும் அவருடைய பெற்றோர்களின் தோட்டத்தின் வெளியே இருந்த கொட்டகையில் இருப்பார், காரணம் அவருடைய எலக்ட்ரிக் கிட்டாரின் சப்தத்தை வீடு தாங்காது. அந்த கிட்டாருக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் அவர். அவருடைய பேரார்வம் என்னுள் ஒரு ஒளியைத் தூண்டியது. தினசரி நான் பள்ளி முடிந்து வீடு திரும்பியதும், நேராக என் படுக்கை அறைக்கு சென்று அங்கே பல மணி நேரம் வாசிக்க பயிற்சி செய்வேன். நான் எந்த நிலையில் இருக்கிறேனோ அங்கே செளகரியமாக உணர்ந்து விடக்கூடாது என தொடர்ந்து என்னை உந்தி தள்ளிக் கொண்டிருந்தார் என் ஆசிரியர். இதை உணரக்கூட முடியாத என்னிடம் இசை விரைவாக மேம்பட்டது. இப்போது திரும்பி பார்க்கையில், அதே அம்சத்தை என்னுடைய பிரம்மச்சரியப் பாதையிலும் என்னால் காண முடிகிறது. நாம் யாராக இருக்கிறோமோ அல்லது என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அந்த இடத்திலேயே தங்கிவிடுவதற்கு சத்குரு அனுமதிப்பதில்லை

என்னுடைய பள்ளிப்படிப்பின் முடிவில், ஒரு பாடகருடன் நான் இணைந்து கொண்டேன். அவர் என்னுடைய நெருங்கிய நண்பர். நாங்கள் இணைந்து ஒரு இசைக்குழுவை உருவாக்கினோம். எங்கள் குழுவை “இக்குவானா” என்ற பெயரிட்டு அழைத்தோம். அடுத்த சில ஆண்டுகளில் நாங்கள் இணைந்து பல பாடல்களை எழுதினோம். எங்களுக்கென சிறிய பின் தொடரும் நண்பர் குழுவும் இருந்தது. நாங்கள் பார், பப், தெருவோரம், சுரங்க பாதை என எங்கெல்லாம் ரசிகர்களை பெறுகிறோமோ அங்கெல்லாம் வாசித்தோம். மற்ற இளைஞர்களைப் போல எங்களுக்கும், ஒருநாள் எங்கள் நிகழ்ச்சியை கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் வரவேண்டும் என்றும், நாங்கள் பிரபலமாக வேண்டும் என்ற கனவும் இருந்தது. பின்பு ஒருநாள் எனக்கு தோன்றியது, பிரபலமாவது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. அதுவும் ஒருவகையில் பிரச்சனைக்குரியது தான். கோடிக்கணக்கான மக்கள் விரும்பும் இசையை உருவாக்க வேண்டும் என்பதே என் ஆசையாக இருந்தது. அதை வேறு வகையான சூழலில் செய்ய முடியுமா எனவும் யோசித்தேன். ஆனால் சில ஆண்டுகளுக்கு பிறகு இது இவ்வாறு வெளிப்படும் என்பதை நான் ஒருபோதும் கற்பனை செய்து பார்த்ததில்லை.

நான் எங்கு சென்றாலும் எப்போதும் என் கிட்டாரை என்னுடன் எடுத்து செல்வேன். ஒரு நாள் கூட கிட்டார் இல்லாமல் இருக்க நான் விரும்பியதில்லை. ஆனால் இந்தியாவுக்கு வருகையில் ஏராளமான ஆன்மீக புத்தகங்களின் தாக்கம் இருந்ததால் நான் பற்றுகொண்டிருந்த பொருட்களை ஒருமுறை பார்த்தேன், அவைகளை அங்கேயே விட்டுவிட்டு வரலாம் என முடிவு செய்தேன். மேலும் ஈஷா வகுப்புகள் செய்த பின் ஆசிரமத்தில் தங்கிய பின் என்னுடைய புதிய பயணத்திற்கு பிறகு நான் அதை இழந்ததாக உணரவும் இல்லை. ஒரு நாள் முக்கோண மையத்தில் ஒரு கல்லின் மீது ஒரு கிட்டார் கிடப்பதை பார்த்தேன். அநேகமாக ஏதேனும் வெளிநாட்டு தியான அன்பர் அதை எடுத்து வந்திருப்பார் என நினைக்கிறேன். அதை எடுத்த நான், வாசிக்க தொடங்கிவிட்டேன். அதை பார்த்த ஒரு ஸ்வாமி, என்னை தியானலிங்கத்தில் நாத ஆராதனா வழங்க சொன்னார், மேலும் என்னை ஆசிரமத்தின் இசைக்குழுவை சென்று சந்திக்க சொன்னார். அப்போது முதல், நான் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் அங்கம் ஆனேன்.

சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவில் ஒரு பகுதியாக இருந்த எனது அனுபவம் பெரும்பாலும் குழப்பமானதாகவே இருந்தது. காரணம், பெரும்பாலான நேரத்தில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதே எங்களுக்கு தெரியாது. ஒரு சில சூழலைத் தவிர மற்ற நேரத்தில் இசை எவ்வாறு இருக்க வேண்டும் என்கிற தெளிவான வழிமுறைகளை சத்குரு வழங்கமாட்டார். மாறாக, என்ன மாதிரியான சூழல் அல்லது உணர்வு அந்த சூழ்நிலைக்கு தேவை என்கிற வழிமுறையை வழங்குவார். இதன் அர்த்தம், இசை எவ்வாறு உருவாக வேண்டும் என்கிற புரிதல் எங்களை சார்ந்தது என்பது தான். எங்கள் வழியில் பயணிக்க சத்குரு எங்களை அனுமதிப்பார். எந்தவொரு நிகழ்விலும் அவர் பேசும் முன்பு நாங்கள் ஒரு சிறிய இசை நிகழ்ச்சியை நிகழ்த்துவோம். இது பார்வையாளர்கள் அனைவரும் முறையே அமர்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும். நாங்கள் வாசித்து முடித்த பின், அவர் ஒரு சில நேரத்தில் புதிரான பார்வையையோ அல்லது ஒரு தொண்டை கணைப்பையோ கொடுப்பார். அது நாங்கள் வாசித்தது சரிதானா இல்லையா என்று எங்களுக்கு ஒரு நிச்சயமற்ற உணர்வைக் கொடுக்கும்.

நாங்கள் பெரும்பாலும் சத்குருவின் அனைத்து நிகழ்வுகளிலும் வாசிப்போம். நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பாக, காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு வேளைகளில், மனிதர்களை தூக்கத்தில் இருந்து எழுப்ப, அவர்களை நடனமாட செய்ய அல்லது அவர்களை அமைதியாக அமர செய்ய - சுருக்கமாக சத்குரு பேசாத பெரும்பாலான நேரங்களில் வாசிப்போம். எப்போதெல்லாம் சத்குரு இருக்கிறாரோ அப்போதெல்லாம் எங்கள் இசையை கவனிப்பார். அவர் மேஜையில் அமர்ந்திருக்கும் போது, இரவு உணவை உண்ணும் போது, மற்ற மனிதர்களுடன் பேசும்போது அவர் கால் விரல்களும், கை விரல்களும் தாளமிடுவதை கண்டால் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கும். சில சமயங்களில் இரவு உணவு இசை நிகழ்ச்சி பல மணி நேரம் தொடர்ந்து நடைபெறும், எங்களால் நிறுத்த முடியாது. காரணம், மக்கள் அதனை ரசித்து அனுபவித்து நடனமாடிக் கொண்டிருப்பார்கள். அப்போதெல்லாம் சத்குரு நேராகவே வந்துவிடுவார் அல்லது யாரிடமாவது செய்தி சொல்லி அனுப்புவார், “அவர்களை சென்று சாப்பிடச் சொல்லுங்கள்” என்று. அவரை சுற்றியுள்ள அனைவரின் மீதும் அனைத்து நேரங்களிலும் அவருக்குள்ள இந்த அக்கறையும் அன்பும் தான் அவரை தனித்து காட்டுகிறது.

பல்வேறு கலாச்சாரங்களில் இருந்து, பல்வேறு விதமான கருத்துகளுடன், வித்தியாசமான பயிற்சி நிலையிலிருந்து வந்தவர்களால் அமைந்தது இந்த குழு. ஆனால் நாங்கள் அனைவரும் ஒரு விஷயத்தை இணைந்து வழங்குவதற்காக சரியான இடத்தில் பொருத்தப்பட்டிருக்கிறோம். ஆரம்பத்தில் எனக்கு நுட்பமான சவால்களை காண்கையில் நம்பிக்கையே இல்லை. உதாரணமாக இந்திய ராகங்கள், அறிமுகமில்லாத ஐந்து மற்றும் ஏழு ட்ரம் தாளங்கள் போன்றவை. ஆனாலும் சில விஷயங்கள் இயல்பாக நடக்கும். பல ஆண்டுகள் கழித்து நான் உணர்ந்தது யாதெனில், நாங்கள் ஒரு குழப்பத்துடன் இசையை உருவாக்கத் துவங்கி, பின்பு மெதுவாக திடீரென ஏதோவொன்று எங்கிருந்தோ உருவாகும், ஆனால் யாருக்கும் அது எவ்வாறு உருவானது என்று தெரியாது. இந்த அனுபவம் எனக்கு பலமுறை ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் குருவின் அருளில் மூழ்கியிருப்பதன் அர்த்தம் இதுதான் என்பதை நான் அறிவேன்.

ஒருமுறை சத்குரு என்னை சித்தார் கற்றுகொள்ள பரிந்துரைத்தார். டில்லியை சேர்ந்த தியான அன்பர் ஒருவர் உபயோகிக்காத சித்தார் ஒன்றை அன்பளிப்பாக அளித்தார் மற்றும் அதை கொண்டு நான் சில அடிப்படை வகுப்புகளையும் எடுத்துக்கொண்டேன். அந்த கருவியின் இசை என்னை மெய்மறக்க செய்தது. இந்திய இசையின் வடிவம், ஆழம் மற்றும் அதன் அழகியலில் நான் மிக ஆழமாக மூழ்கிப்போனேன். இந்திய இசை என்பது கலை மற்றும் கணிதத்தின் துல்லியமான ஒருங்கிணைப்பு என்பதை உணர்த்தியது. அதை சரியாக வாசிப்பது எப்படி என்று எனக்கு தெரியாவிட்டாலும், முன்னரே எனக்கு கிட்டார் வாசித்த பழக்கம் இருப்பதால் என்னால் அதிலிருந்து ஒரு நல்ல ஒலியை உருவாக்க முடிந்தது. தற்சமயம் தியானலிங்கத்தில் வாரம் ஒருமுறை சித்தார் மூலம் நாத ஆராதனாவிற்கு அர்ப்பணிக்கிறேன்.

சத்குரு எப்போதும் இசைக்கு மாறாக ஒலியின் முக்கியத்துவத்தை அதிகம் வலியுறுத்தியிருக்கிறார். அதனால்தான் அவர் எங்களுக்கு, “ஈஷா மியூசிக்” என பெயர் சூட்டாமல் “சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா” என்று பெயர் சூட்டினார். எனக்கு தர்க்கரீதியாக அதன் வித்தியாசம் புரிகிறது. ஆனால் அதன் முழுமையான முக்கியத்துவத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனாலும் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா தனித்துவமானது என மக்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா என்பது ஒரு தனிநபரின் வெளிப்பாடு அல்ல. எங்கள் அனைவரின் விருப்பம் மற்றும் புரிதலைக் கடந்து நாங்கள் முன்னேறுகின்றபோது அது எங்கள் அனைவரிடத்தில் இருந்தும் எழும் வெளிப்பாடு.

மஹாபாரதம்

2012 ஆம் ஆண்டில் சத்குரு ‘மஹாபாரத்: சாகா நான்பரெய்ல்’ (Mahabharat: Saga Nonpareil) என்கிற நிகழ்ச்சியை நடத்தினார். இதுவரையில் சொல்லப்படாத பிரம்மாண்ட கதையின் பெரும் ஆய்வு. இந்நிகழ்ச்சியில் நான் இசைக்குழுவிற்கு தலைமை ஏற்றிருந்தேன் நாங்கள் சத்குருவின் விளக்கங்களுக்கு இசையமைக்க வேண்டியிருந்தது.

இந்த நிகழ்ச்சி குறித்த கலந்துரையாடலை வேறு யாரேனும் சத்குருவுடன் நிகழ்த்துவார்கள் என நான் நினைத்திருந்தேன். ஆனால் அது எவ்வாறோ என்னிடம் வந்து முடிந்தது. தினமும் காலை அமர்வுக்கு முன்பாக நானும் மற்றொருவரும் சத்குருவை அவரின் அறையில் பதினைந்து நிமிடங்கள் சந்திப்போம். அந்த நாளில் அவர் பேசவிருக்கும் தலைப்புகள் குறித்தும், அதற்கான எங்கள் இசை குறித்தும் கலந்துரையாடுவோம். (ஆனால் அமர்வுக்கு முந்தைய கலந்துரையாடல் மூலம் பலமுறை தகவல்களை பெற நாங்கள் முயன்றிருக்கிறோம். ஆனால் அவரோ அதை குறித்து சிந்திக்க தனக்கு நேரம் இல்லை என்பார்). அதன்பின் நாங்கள் எப்போது அந்த அறையில் நுழைந்தாலும் மிகவும் உற்சாகமாக (எனக்கென்னவோ அது குறும்பாக இருக்குமோ என்ற சந்தேகம் உண்டு) “இன்று எதை குறித்து நாம் பேசலாம்” என எங்களிடம் கேட்பார்.

“அவர், எதை பற்றி பேசவேண்டும்” என்பதை ஏன் எங்களிடம் கேட்கிறார் என்பதை புரிந்துகொள்ள முயற்சிக்கும்போது என் மனம் எங்கோ சென்றுவிடுகிறது. ஆனால் இப்போது புரிகிறது, அவரை சுற்றியிருக்கும் அனைவரையும் ஒரு விஷயத்தில் அவர் ஈடுபடுத்துகிறார். இயல்பாகவே அவர் இதை, அவரை சுற்றியிருக்கும் அனைவரிடத்திலும் ஈஷாவின் அனைத்து அம்சங்களிலும் செய்வார்.

நிகழ்வு துவங்கி ஐந்து அல்லது ஆறு நாட்கள் இருக்கலாம். எங்களிடம் இருந்த அனைத்து பாடல்களும் தீர்ந்துவிட்டன என்பதை உணர்ந்தோம். ஆனால் மேலும் இரண்டு நாட்களுக்கு நிகழ்வு நடக்க இருக்கிறது. அன்றைய நாளின் இறுதியில் நான் சத்குருவை சென்று சந்தித்தேன். மிகுந்த ஆற்றாமையுடன் அவரிடம், “சத்குரு, நம்மிடம் இனி பாடல்கள் மீதமில்லை” என்றேன். அதற்கு அவர் என்ன சொல்வார் என நான் எதிர்பார்த்தது எனக்கு நினைவில்லை, ஆனால் அவர் என்னைப் பார்த்து சிரித்துவிட்டு சொன்னார், “எனில், இன்னும் சிலவற்றை உருவாக்குங்கள்” என்றார்.

நான் எங்கள் அணியிடம் சென்று நாம் சில பாடல்களை உருவாக்க வேண்டும் என்றேன். அப்போது இரவு 10 மணி. அடுத்த நாள் காலை நிகழ்விற்கு நாங்கள் தயாராக வேண்டும். நாங்கள் அயர்ந்து போயிருந்தாலும், அன்று இரவு ஒரு புதிய பாடலை இசையமைக்க நாங்கள் விழித்திருந்தோம். மும்பையில் இருந்த தன்னார்வத் தொண்டரை அழைத்து பாடல் எழுதி கொடுக்கச் செய்தோம். எப்போதும் விருப்பமுடன் எங்களுக்கு உதவ விரும்புவார். அவரும் இரவு முழுவதும் விழித்திருந்து எங்களுக்கு உதவினார். ஒரு குழுவாக நாங்கள், பாரதத்தில் அர்ஜூனனுக்கு சிவன் அஸ்திரம் கொடுத்த பகுதி குறித்த பாடல் ஒன்றை உருவாக்கினோம். அடுத்த நாள் காலை, சத்குருவிடம் இந்த பாடல் குறித்து சொன்னோம். அவர் அந்த கதையை இரண்டாம் அமர்வில் விளக்கி சொல்ல இருப்பதாகவும், அதை நாங்கள் உணர்ந்து இசைப்பதற்கு உதவியாக ஒரு சில வரியை சொல்லி குறிப்பால் (clue) உணர்த்துவதாகவும் சொன்னார். நாங்கள் அந்த வரியை கேட்டவுடன் இசைக்கத் துவங்கினால் அந்த கதையும் இசையும் ஒன்றாக இணைந்து ஒலித்தால், அது நல்ல அனுபவமாக இருக்கும் என்றார். அந்த “குறிப்பு வரியை” அவர் மீண்டும் எனக்காக திரும்ப சொன்னார். இந்த கலந்துரையாடல் முடிந்தவுடன் நாங்கள் நேரடியாக அமர்வு நடக்கும் அரங்கத்திற்கு சென்றோம். எங்களுக்குள் நடந்த பேச்சுவார்த்தையை எங்கள் அணியினர் அனைவரிடமும் சொல்ல சற்று கடினமாக இருந்தது, காரணம் அனைவரும் மேடையில் அமர்ந்திருந்தார்கள். ஆனாலும் கதை இரண்டாம் அமர்வில் தானே வர இருக்கிறது, எனவே இடைவேளையில் சொல்லிக்கொள்ளலாம் என நானும் விட்டுவிட்டேன்.

ஆனால் அந்த அஸ்திரம் வழங்கிய கதையை முதல் அமர்விலேயே சொல்லத் துவங்கிவிட்டார் சத்குரு. அந்த கதைக்கு இடையே நான் வாசிக்க வேண்டிய இசையின் “குறிப்பு வரியை” சத்குரு சொன்னார். இருப்பினும் கதை இரண்டாம் அமர்வில் தானே வர இருக்கிறது எனவே நான் தான் தவறாக புரிந்து கொண்டிருப்பேன் என எண்ணி அந்த இசையை இசைக்காமல் விட்டுவிட்டேன். சத்குரு மீண்டும் அந்த “குறிப்பு வரியை” சொல்லி விட்டு நான் இசைப்பேன் என என்னைப் பார்த்தார், அப்போதும் என்னிடம் எந்த அசைவும் இல்லை, நான் ஒரு வாய்ப்பை இழந்துவிட்டேன். அறிவார்ந்த பார்வையாளர்களைக் கொண்டிருந்ததால் சத்குரு கதையை தொடர்ந்து விளக்கத் துவங்கிவிட்டார். சத்குரு கொடுத்த குறிப்பை நான் தவறவிட்டு விட்டேன் என்பதை நான் பின்பு உணர்ந்தேன். மற்றும் அந்த பாடலுக்காக மொத்த குழுவும் இரவு முழுக்க விழித்திருந்த காட்சிகளை நினைத்தபோது எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. அதே வேளையில் நான் எவ்வளவு முட்டாளாக இருந்து அனைவரின் முயற்சியையும் வீணடித்து விட்டேன் என்பதையும் சிந்தித்தேன்.

அந்த கதையின் முடிவில் சத்குரு என்னைப் பார்த்தார் புன்னகைத்துவிட்டு சொன்னார், “அஸ்திரம் குறித்து இசைக்குழுவிடம் ஒரு பாடல் இருக்கிறது என்று நினைக்கிறேன். நாம் அதை கேட்போம்” என்றார். அதை கேட்டபோது நான் மிகவும் குறுகிப் போனேன், என் தவறையும் பொருட்படுத்தாமல் எங்களை அணைத்து கொண்ட அவரின் பண்புக்கு நான் நன்றி உடையவனாக உணர்ந்தேன்.

விதி

மஹாபாரத நிகழ்ச்சியில் சத்குருவுடனான எங்கள் அதிகாலை கலந்துரையாடலின் போது, தான் “விதி” என்ற பெயரில் ஒரு கவிதை எழுதியிருப்பதாகவும், அதை எங்களிடம் படித்துக்காட்ட வேண்டும் என்றும் சொன்னார் சத்குரு. அமர்வுக்கு வெகு சில நிமிடங்களே இருந்தன, அமர்வு தொடங்க இருந்தது, மேலும் அமர்வு குறித்து நாங்கள் இன்னும் எதையும் பேசவில்லை. சத்குரு கவிதையை படித்தபோது, “நாம் ஏன் அமர்வு குறித்து பேசவில்லை” என எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். அந்த நாள் குறித்த பிரக்ஞை இன்றி இருந்ததை காண்கையில் அந்த நாளுக்கான திட்டமே இல்லை என தோன்றியது.

அந்த நாளின் பாதி நிகழ்வு நடந்து முடிந்திருந்தது. சிறிய இடைவெளியில் சத்குரு என்னை மேடைக்கு அழைத்து அந்த கவிதையை எடுத்துவர சொன்னார். அதன்பின் கேள்வி-பதில் அமர்வை தொடங்கினார். நான் தேடினேன், ஆனால் அவருடைய கவிதை புத்தகத்தை என்னால் அவர் அறையில் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் மீண்டும் மேடைக்கு சென்றேன், அவர் ஒரு கேள்விக்காக சிறிது இடைவெளி கொடுத்து நிறுத்தியிருந்த போது இந்த தகவலை அவரிடம் சொன்னேன். அவர் உடனே “வீட்டினில் தேட சொல்லுங்கள்” என சொல்லிவிட்டு விரைவாக மீண்டும் கேள்வி-பதில் அமர்வுக்கு திரும்பினார். அடுத்த சில நிமிடங்களில் ஏராளமான மனிதர்கள் தேடத் தொடங்கியிருந்தனர். அந்த புத்தகத்தை இறுதியில் சத்குருவின் காரில் கண்டுபிடித்தோம். நான் அந்த கவிதையை கண்டுபிடித்து தட்டச்சு செய்து காகிதத்தில் அச்சிட்டு சத்குருவிடம் கொடுத்தேன். அவர் “இது அல்ல” என்று சொல்லிவிட்டு மீண்டும் கேள்வி-பதில் அமர்வை தொடர்ந்தார். பின் நான் என் சொந்த பதற்றத்தில் காலையில் சத்குரு வாசித்த கவிதைக்கு கவனம் செலுத்தாமல், அவருடைய பழைய “விதி” எனும் கவிதையை எடுத்து வந்து கொடுத்துவிட்டேன் என்பதை உணர்ந்தேன். அதன்பின் நான் புதிய கவிதையை கண்டறிந்து அச்சிட்டு கொண்டு வந்தேன்.

அப்போது தான் அவர் ஒரு கேள்விக்கு பதிலளித்து முடித்திருந்தார். நான் மீண்டும் ஒரு வாய்ப்பில் மேடையேறி சென்று இந்த கவிதையை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை பார்த்து தலையசைத்தார், எனக்கு சற்று நிம்மதியாக இருந்தது. அதே வேளையில் ஒரு பெண் கேள்வி கேட்பதற்கான மைக்கை கையில் எடுத்து கேள்வி கேட்கத் தொடங்கினார். அந்த பெண் கேட்டார், “விதி என்றால் என்ன?”

“முதலையும் முடிவையும் தெரிந்து கொண்டாலும் நீங்கள் விளையாட்டை ஆடித்தான் தீரவேண்டும், இல்லையெனில் விளையாட்டே இல்லை. காரணம், விளையாட்டு என்பது அந்த நொடிக்கானது” - சத்குரு, மஹாபாரத்

ஆவண காப்பகம்

நான் ஆசிரமத்திற்கு வந்த காலத்தில் இருந்து, ஆவண காப்பகத்துறையின் ஒரு அங்கத்தினராகவும் இருந்தேன். இங்கு மற்றவைகளை விட சத்குருவின் அனைத்து காணொளி தொகுப்புகளையும் நாங்கள் பார்வையிட வேண்டியிருக்கும். கடந்த பதினைந்து ஆண்டுகளில் தொழில்நுட்பம் பெருமளவு மாறியிருந்தது. அனலாக் வீடியோ டேப் வடிவிலிருந்து இப்போது டிஜிட்டல் வீடியோவாக தொழில்நுட்பம் முன்னேறியிருந்தது. தரவுகளின் கொள்ளளவும் அதிகரித்திருந்தது. இந்த தரவுகளை கையாளவும், இவற்றை ஒன்றாக ஒருங்கிணைக்கவும் நான் உதவியாக இருந்திருக்கிறேன். இதன் மூலம் வீடியோ வெளியிடும் துறை எளிதாக வீடியோக்களை கையாள முடிந்துள்ளது.

சில ஆண்டுகள் முன்பு வரை சாத்தியமற்று இருந்த நிலை மாறி இன்று டிஜிட்டல் உலகம் நமக்கு பெரும் பலத்தை அளித்துள்ளது. இதன் மூலம் சத்குருவின் ஞானத்தை மொத்த உலகிற்கு பெரும் வீச்சில் கொண்டு சேர்க்க முடிந்துள்ளது. இந்த முறை வேறுவிதமான பல புதிய சவால்களை எங்களுக்கு வழங்கியது. என் நேரத்தின் ஒரு பகுதியை இந்த அம்சங்களை கவனித்துக்கொள்வதில் செலவிடுகிறேன். குறிப்பாக, ஊடகம் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்படும் அதிவிரைவான மாற்றங்களை மனதில் கொண்டு அது குறித்த தேவையான புரிதலை எப்படி உறுதி செய்வது என்பது குறித்து சிந்திப்பேன். இதன் மூலம் சத்குருவின் “பதிவில் உள்ள வார்த்தைகள்” அழிந்துவிடாமல், இனி வரும் பல தலைமுறை மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில், பல காலம் காக்க முடியும்.

சங்கமும் சத்குருவும்

சத்குருவின் சீடராக பிரம்மச்சரிய பாதையில் நடக்கும் வாய்ப்பு வழங்கப்படுவது மிக உயர்ந்த சாத்தியம். பொறுப்புணர்வின் அடையாளமாக திகழும் மக்கள் மற்றும் தங்களின் நல்வாழ்வை விடவும் மற்றவர்களின் நல்வாழ்வை உயர்வாக கருதும் மக்களிடையே வாழ்வதும் பணியாற்றுவதும் எனக்கு அடக்கத்தையும் ஊக்கத்தையும் ஒருங்கே வழங்குகிறது. “ஆன்மீகத்தை அகிலம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும்” என்கிற சத்குருவின் நோக்கத்திற்கு துணை நின்று தங்களையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் சங்கத்திற்கும், ஆசிரமத்திற்கும், உள்ளேயும் வெளியேயும் இருக்கும் தன்னார்வத் தொண்டர்களுக்கும் நான் தலை வணங்குகிறேன்.

நான் முதன்முறையாக சத்குருவை சந்தித்தபோது, அவரை முழுமையாக நம்பினேன். மற்றும் அவரே மனித சிக்கலுக்கான தீர்வு என்றும், அவர்தான் என் பாதை என்றும் எனக்கு தெரிந்திருந்தது. இப்போது, இங்கு பல ஆண்டுகள் இருந்த பின், அவரின் இருப்பு என்னைத் தொடர்ந்து வழிநடத்துவதை என்னால் உணரமுடிகிறது. சில சமயங்களில் என்னிடம் உண்மையில் ஏதேனும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதா என்கிற எண்ணம் எழும். ஏனெனில் நான் இன்னும் என்னுடைய முட்டாள்தனமான சிந்தனைகளுடனும் போராட்டங்களுடனும் வாழ்கிறேன். ஆனாலும் நான் உறுதியாக இருக்கும் வரை அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் என்று எனக்கு தெரியும்.

சத்குரு என்றால் என்ன? சத்குரு என்றால் யார்? என எனக்கு உண்மையில் புரியவில்லை. இது நம் புரிதலுக்கு அப்பாற்பட்டது. ஆனால் அவர் நம் வாழும் காலத்தின் மிக முக்கியமான நிகழ்வு. இந்த பிரபஞ்சத்தில் அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்வது நம் பாக்கியம். இது மிகையல்ல. அவரை யாரும் தவறவிடக்கூடாது என்பதை உறுதிப்படுத்த என்னால் முடிந்த வழியில் உதவ என் வாழ்வு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

நான் பிரம்மச்சரியம் எடுத்துக்கொள்வதற்கு முன்பாக, இந்த பாதையில் அடியெடுத்து வைப்பதில் நான் உறுதியாக இருக்கிறேனா என சத்குரு என்னிடம் கேட்டார். நான் சொன்னேன், “சில சமயங்களில் எனக்கு வேறு வாய்ப்பு இல்லை என்று தோன்றுகிறது.” அதற்கு அவர் புன்னகைத்தவாறே, “உங்களிடம் வேறு வாய்ப்பு இல்லை, ஆனால் உங்களிடம் இருப்பதாக நீங்கள் நினைக்க வேண்டும்” என்றார். இந்த வார்த்தைகளே என் பயணச் சுருக்கத்தை மிக சிறப்பாக வெளிப்படுத்துவதாய் உணர்கிறேன்.

நானும் சத்குருவும்

நான் யார்

எனக்கு தெரியவில்லை

நீங்கள் யார்

அதுகுறித்து என்னிடம் எந்த கருத்துமில்லை

நாம் எங்கிருக்கிறோம்

அது மட்டுமே உண்மை

என்னில் நீங்கள்

உங்களில் நான்