கேள்வியாளர்: நமஸ்காரம் சத்குரு, சமீபகாலமாக இதை சற்று அதிகமாக யோசித்து பார்க்கும்போது, என்ன செய்வது அல்லது எப்படிச் செய்வது என்று உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை என்பதை நான் உணர்கிறேன். நான் குறிப்பிட்ட விஷயங்களை ஏன் செய்கிறேன், மற்ற சில விஷயங்களை ஏன் செய்வதில்லை என்பதுகூட எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை முன்பு கேட்டிருந்தால், இந்த சந்தை உலகில் எனக்கு ஒரு யோகியாக விருப்பம் என்று நான் கூறியிருக்கலாம். ஆனால் இப்போது என்னைக் கேட்டால், அதுதான் பதிலா என்பதுகூட எனக்குத் தெரியவில்லை. நான் என்ன செய்யவேண்டும்?
சத்குரு: ஒவ்வொருவரும் குறிப்பிட்ட சில கணங்களில், சற்று நேர்மையுடன் இருக்கின்றனர். ஆனால் நீங்கள் செய்வதற்கு ஒரு சில விஷயங்களை நான் கூறினால், நாளை காலைக்குள், நீங்கள் ஏன் அவற்றைச் செய்ய முடியாது என்ற காரணங்களுடன் என்னிடம் வருவீர்கள்.
“எனக்கு உண்மையாகவே தெரியவில்லை,” என்பது சற்று அதிகமாக முதிர்வடைந்து, உங்களுக்குள் கணத்துக்குக் கணம் இடம்பிடிக்கும் ஒரு பண்பாடாகவே மாறவேண்டும். உங்கள் உடலின் ஒவ்வொரு அணுவிற்குள்ளும் அது செல்லவேண்டும். அப்போது என்னிடம் நீங்கள் வந்தால், உங்களுக்கான ஒரு தீர்வு என்னிடம் உண்டு. ஏனெனில் ஐந்து வயதில் அவர்களிடம் யாரோ அவ்வாறு கூறினார்கள் என்பதற்காக, ஒரு மருத்துவராக வேண்டும் என்று எண்ணுபவர்கள் அனைவரும் அடிமுட்டாள்கள். என்ன செய்வது என்று உங்களுக்கு தெரியாமல் இருப்பது மிக நல்ல விஷயம். உங்கள் குடும்பம் அவ்வாறு நினைக்காமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு நேர்மையான மனிதராக இருந்தால், என்ன செய்வது என்பது உங்களுக்கு மட்டுமல்ல, யாருக்கும் தெரிவதில்லை.
இந்த வாழ்க்கையுடன் என்ன செய்வது என்று உங்களுக்கு தெரியவில்லை என்பதை நீங்கள் உணரும்போதுதான், நீங்கள் ஒரு உண்மையான தேடுபவராகிறீர்கள். ஆனால் இந்த வாழ்க்கை எதைப்பற்றியது என்ற தேடுதலை நீங்கள் நிறுத்திவிட்டீர்கள். உங்களுக்கு 12 அல்லது 13 வயதாவதற்குள், நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். “நான் ஒரு விண்வெளி வீரராக விரும்புகிறேன். நான் இவராக வேண்டும், அவராக வேண்டும்.” இது வெறும் சமூக அபத்தம். நீங்கள் ஒரு கற்கால மனிதனாக இருந்தால், என்ன நினைத்துக்கொண்டு இருந்திருப்பீர்கள்? “நான் இதைக் கொல்லவேண்டும். நான் அதைக் கொல்லவேண்டும்,” அப்படித்தானே? இப்போது என்ன செய்வது என்று உங்களுக்கு தெரியவில்லை, ஏனென்றால் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியவில்லை. உங்களது இருப்பின் இயல்பு உங்களுக்கு தெரியவில்லை என்றால், உங்களது செயலின் இயல்பு என்னவாக இருக்கவேண்டும் என்பது உங்களுக்கு எப்படி தெரியும்? நீங்கள் தேடுபவராக இருப்பதற்கான காரணம், உங்களுக்கு தெரியவில்லை என்னும் நேர்மை.
