ஈஷா சமையல்

மொறுமொறுப்பான பாதாம் புளோரண்டைன்

தேவையானப் பொருட்கள்

1¾ தோல் நீக்கிய பாதாம்

3 மேசைக்கரண்டி மைதா மாவு

1 ஆரஞ்சுபழத்தோல் (நன்கு துருவியது, தோராயமாக 2 மேசைக்கரண்டி)

¼ டீஸ்பூன் உப்புத்தூள்

¾ கப் தென்னங்கருப்பட்டி (பனங்கருப்பட்டி, பன வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை)

4 மேசைக்கரண்டி ஃப்ரஷ் கிரீம்

5 மேசைக்கரண்டி வெண்ணெய்

½ டீஸ்பூன் வெண்ணிலா எசென்ஸ்

சாக்லேட் பூச்சுக்கு (விரும்பினால் மட்டும்)

50 - 100 கிராம் இனிப்பான சாக்லேட்


செய்முறை

  1. புளோரண்டைனுக்கு:
  2. 1. பாதாமை நறுக்கிக்கொள்ளவும். நறுக்கிய பாதாமை காய்ந்த வாணலியில் இட்டு, மிதமான சூட்டில் வறுக்கவும். பாதாம் வாசத்துடன் பொன்னிறமாக வரும் வரை மரக்கரண்டியினால் கிளறவும். அதை இறக்கி வைத்துக்கொள்ளவும்.
  3. 2. மைதா மாவினை மிதமான சூட்டில் வாசம் வரும் வரை லேசாக வறுத்துக்கொள்ளவும்.
  4. 3. ஒரு காய்ந்த பாத்திரத்தை வைத்து குறைந்த தீயில் வெண்ணெய்யை உருக்கவும். வெண்ணெய் உருகியவுடன் பாத்திரத்தை இறக்கிவிடவும்.
  5. 4. பின்னர் சிறிது சிறிதாக மாவினை சேர்த்து கட்டிகள் உருவாகிவிடாதவாறு கிளறவும்.
  6. 5. அதில் தென்னங்கருப்பட்டி (அல்லது உங்களுக்கு பிடித்த இனிப்பு), ஃபிரஷ் கிரீம் மற்றும் ஆரஞ்சுத் தோல் துறுவலை சேர்க்கவும். இதை மிதமான சூட்டில் வைத்து கிளறி, தென்னங்கருப்பட்டி முழுவதும் கரைந்து, இந்த கலவை கொதிநிலைக்கு வரும் வரை அவ்வப்போது கிளறவும்.
  7. 6. பிறகு இறக்கிவைத்து அதில் வெண்ணிலா எசென்ஸ்சை சேர்த்து கிளறவும். பிறகு வறுத்த பாதாமினை அதில் சேர்த்து நன்றாக சேரும் வரை மென்மையாக கிளறவும். சூடு ஆறும் வரை அப்படியே வைத்திருக்கவும்.
  8. 7. அதனை மேசைக்கரண்டி அளவில் எடுத்து உருண்டையாக உருட்டவும். பின்னர் அதை வட்ட வடிவில் தட்டிக்கொள்ளவும்.
  9. 8. நான்-ஸ்டிக் கடாயை குறைந்த தீயில் வைத்து சூடுபடுத்தவும். கடாயில் லேசாக வெண்ணெயை தடவும். 1 அங்குல இடைவெளியில் 3-4 புளோரண்டைன்களை வைத்த பிறகு, அதை மூடிவிடவும்.
  10. 9. அடிப்பகுதி மொறுமொறுப்பாகவும் மேலே நன்கு வேகும் வரையும் மிகக்குறைந்த வெப்பத்தில் அவற்றை வேகவிடவும். அவை வெந்த பிறகு கடாயை இறக்கி வைத்து ஆறவிடவும்.
  11. 10. இதுபோன்று மீதமுள்ள புளோரண்டைன்களையும் செய்து முடிக்கவும்.
  12. சாக்லேட் கோட்டிங்கிற்கு:
  13. 1. ஒரு பாத்திரத்தில் நீரினை கொதிக்க வைத்து, அதனுள் ஒரு கிண்ணத்தை வைத்து அதில் சாக்லேட்டை வைத்து உருக்கவும். பின்பு சூடு ஆறும்வரை விடவும், ஆறியவுடன் அதை புளோரண்டைன்களின் அடிப்பகுதியில் தடவவும். முள்கரண்டியினைப் பயன்படுத்தி அலைவடிவிலான வரிகளை சாக்லேட்டில் உருவாக்கலாம்.
  14. 2. கம்பி ரேக்கில், சாக்லேட் தடவிய பகுதி மேலே இருக்குமாறு புளோரண்டைன்களை வைத்து, சாக்லேட்டை உலரவிடவும்.