வாழ்வின் மர்மங்கள்

சர்ப்பங்கள், காலம் மற்றும் படைப்பு: நாகாவின் மறைந்திருக்கும் அம்சங்களை சத்குரு வெளிப்படுத்துகிறார்

இங்கே தற்செயலானது எதுவுமில்லை, குறிப்பாக சத்குரு அவர்களால் வடிவமைக்கப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்கள் மற்றும் சக்தி ரூபங்களைப் பொருத்தமட்டில். பெங்களூரு ஈஷா யோக மையத்தில் இருக்கும் நாகா சந்நிதியின் செம்மையான குறியீடு பற்றியும், நாகா குறிக்கும் வெவ்வேறு அம்சங்கள் என்ன என்பதையும் சத்குரு விளக்குகிறார்.

சத்குரு: நாகாவின் பக்கவாட்டுகளில், 112 காலசர்ப்பங்கள் உள்ளன. யோகத்தில், “நாகம்” மற்றும் “காலம்” என்ற வார்த்தைகள் ஒரே அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகின்றன. எதனால் சர்ப்பமும், காலமும் ஒரே விஷயத்தை குறிக்கின்றது? நமது உணர்வில் நாம் அறிந்தவரை காலம் என்பது நொடிகள், நிமிடங்கள், மணிகள், நாட்கள், மாதங்கள், வருடங்கள், பத்தாண்டுகள், நூறாண்டுகள் மற்றும் யுகங்கள். ஆனால் அது அடிப்படையில் காலமற்ற தன்மையை இயல்பாகக் கொண்ட ஒரு முடிவில்லா வெளியின் வெளிப்பாடு.

ஆகவே, யோகத்தில் காலம் மற்றும் நாகம் என்பதற்கு ஒரே அர்த்தம்தான், மேலும் நாகம் அல்லது சர்ப்பம் காலத்தைக் குறிக்கிறது. காலம் குறித்த நமது அறிதல், சூரிய மண்டல உருவாக்கத்தை அடிப்படையாக கொண்டது. பூமி ஒருமுறை சுழன்றால், நாம் அதை ஒருநாள் என்று அழைக்கிறோம். சந்திரன் பூமியை ஒருமுறை சுற்றிவந்தால், நாம் அதை ஒரு மாதம் என்று அழைக்கிறோம். பூமி ஒருமுறை சூரியனை சுற்றிவந்தால், நாம் அதை ஒரு வருடம் என்று அழைக்கிறோம். காலம் குறித்த நமது புரிதலும், அறிதலும், சூரியனோடு தொடர்புடைய கிரகங்களின் நகர்வை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அல்லது நமது உண்மையான கடிகாரம் சூரிய மண்டலம் எனலாம். மற்ற அனைத்து கடிகாரங்களும் அதன் நகலாகத்தான் இருக்கிறது.

சூரிய மண்டலம் எப்படி நமது கடிகாரமானது? இன்றைக்கு விஞ்ஞானிகள் அதனை விளக்க முற்படும் விதமும், காலம் குறித்த யோகமரபின் புரிதலும் அதிர்ஷ்டவசமாக ஏறக்குறைய ஒரே விதமாக உள்ளது. காலம் குறித்த யோகமரபின் புரிதலில், கிரகங்களின் அமைப்பு சூரியனிலிருந்து சுருளாக வெளிப்பட்டது. ஸ்பந்தா ஹால் சென்றிருப்பவர்கள், அதன் நுழைவாயிலில், தலை நடுவில் இருக்க ஒரு சுருண்டிருக்கும் சர்ப்பம் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். சூரிய மண்டலம் தன்னையே எப்படி உருவாக்கிக்கொண்டது என்பதன் குறியீடு இது. சூரியன், தலையாக இருக்கிறது; மற்ற கிரகங்கள், சூரியனைச் சுற்றிலும் உருவாயின.

Image credit: NASA

அதைப்போன்றே, சூரிய மண்டலத்தின் உருவாக்கத்தை, நெபுலா அல்லது புவியீர்ப்பு விசை காரணமாக வாயுப்பொருட்கள் மற்றும் தூசியின் திரண்டதொகுதி என்று நவீன அறிவியல் விவரிக்கிறது. இறுதியில் அந்த திரள்தொகுதியின் பகுதிகள் திடப்பொருளாகிவிட்டன. தங்களுக்கான சுற்றுவட்டப்பாதையை வெற்றிகரமாக கண்டுபிடித்து, அவற்றின் பாதையை சீராக்கிக்கொண்ட கிரகங்கள் மட்டும்தான் இன்னமும் அங்கே இருக்கின்றன். மற்ற திடக்கூறுகள் சிதறிவிட்டன அல்லது எரிந்துபோயின. பொதுவாக, சூரிய மண்டலம் எப்படி நிகழ்ந்தது என்ற கோட்பாடு இதுதான். ஆகவே, தலை நடுவில் இருக்க, சுருண்டிருந்த ஒரு சர்ப்பம் மெல்ல விரிவடைந்ததைப் போன்றது இது.

அனந்தா என்ற பெயருடைய ஒரு குறிப்பிட்ட சர்ப்பத்தைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அனந்தா என்றால் நித்தியம் என்பது பொருள். ஆகவே, நித்தியத்தன்மையைக் குறிக்கும் ஒரு சர்ப்பம் இருக்கிறது. இதன் காரணமாகத்தான், நித்தியத்தைக் குறிக்கும் காலசர்ப்பம் ஒரு முடிவிலியின் குறியீட்டு வடிவில் உள்ளது. மேலும், சேஷ நாகா என்ற பெயருடைய மற்றொரு சர்ப்பம் உண்டு.

படைப்பு சீர்குலையும்போது, பால்வெளிகள் சீர்குலையும்போது, எஞ்சியிருக்கும் மீதம் சிறிது இருக்கும் - அதுதான் சேஷா. நீங்கள் உள்ளூர் இந்திய மொழியில் கணிதம் கற்றிருந்தால், சேஷா என்றால் மீதம், அதாவது இறுதியில் எஞ்சியது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆகவே, முந்தைய படைப்புகளிலிருந்து எஞ்சியிருக்கும் ஒருவர், சேஷ நாகா.

அடுத்த படைப்பு நிகழ்வதற்கும், அடுத்த படைப்பின் உருவாக்கத்துக்காக சிலவிதமான தகவல் பெறுவதற்கும், எஞ்சியிருக்கும் ஒருவர் மிகவும் இன்றியமையாதவர். படைப்பு என்று நாம் கூறும்போது, பிரபஞ்சம், பால்வெளி அல்லது கிரகங்களின் அமைப்பை மட்டும் நாம் குறிக்கவில்லை - நாம் அனைத்தையும் குறிக்கிறோம். படைக்கப்பட்ட அனைத்தும் ஏதோ ஒரு கட்டத்தில் அழிகிறது. அதில், அடுத்த படைப்புக்கு அடித்தளமாக இருக்கும், ஒரு சேஷா அல்லது எஞ்சியிருக்கும் ஏதோ ஒன்று அங்கே இருக்கிறது. தற்போது யோக அறிவியல்களின்படி, இது 84வது படைப்பு.

பால்வெளிகளிலும், அண்டவெளிகளிலும் என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று வெளியில் பார்ப்பதன் மூலம், நாம் இந்த எண்ணிக்கையை அடையவில்லை. தன்னைத்தானே உள்நோக்குவதன் மூலம், 84 படைப்புகளின் பதிவு இருப்பதை நாம் பார்க்கிறோம். இங்கே 84 படைப்புகள் இருந்துள்ளதை நமக்குள் நினைவூட்டும் அதுதான் நமக்குள் இருக்கும் சேஷா.

இன்னமும் எத்தனை படைப்புகள் நிகழமுடியும்? 112 வரைக்கும் நிகழும். அதைக்கடந்து, படைப்பானது உடல்தன்மையான இயல்பாக இல்லாமல், ஆனால் முழுமையான சக்தி வடிவாக இருக்கும். 112 சக்கரங்கள் மட்டும்தான் உடல்தன்மையில் உருவாகியுள்ளது, மற்றவை உடல்தன்மையைக் கடந்திருக்கிறது, அதாவது அவை உடல்தன்மையான இயல்பைக் கடந்திருக்கின்றன என்று கூறுவதன் பொருள் இதுதான். வரவிருக்கும் படைப்புகள் என்றால், நாம் வருடங்கள், நூற்றாண்டுகள், யுகங்கள் அல்லது லட்சக்கணக்கான வருடங்கள் என்ற அடிப்படையில் பேசவில்லை. அது அநேகமாக, பல கோடிக்கணக்கான வருடங்களாக இருக்கிறது. 112 உடல்தன்மையான படைப்புகளை நாம் முழுமை செய்தபிறகு, படைப்பு முற்றிலும் சக்திநிலையில் இருக்கும். அனைத்தும் சக்திநிலையின் செயல்முறையால் இயங்கும், உடல்தன்மையின் இருப்பில் அல்ல.

ஆகவே, நாகாவின் இரண்டு முக்கியமான அம்சங்கள் உள்ளன: ஒன்று காலம், அதில் அனந்தா இருக்கிறது. மற்றொன்று சேஷா. நாகாவின் மூன்றாவது அம்சம் ஒன்று இருக்கிறது, அது கார்கோடகா என்று அழைக்கப்படுகிறது - அதனை நாம் பின்னர் காணலாம்.