சிறப்புக் கட்டுரை

ஒரு நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நாகா எப்படி திறவுகோலாக இருக்கமுடியும்

புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட நாகாவின் முக்கியமான தன்மைகள் பற்றியும், ஒருவரது வாழ்வை மட்டுமல்லாது ஒருவரது ஆயுளையும் எப்படி அது மேம்படுத்த முடியும் என்பதை பற்றியும் முதல்முறையாக சத்குரு பேசுகிறார். ஒவ்வொரு மனிதரும் விழிப்புணர்வுடன் அல்லது விழிப்புணர்வில்லாமல் அடைய முயற்சிக்கும் மூன்று அத்தியாவசிய அம்சங்களுடன் இது தொடர்புபடுத்துகிறது. இது குறித்து மேலும் அறிந்துகொள்ள, பெங்களூரு ஈஷா யோக மைய நாகப் பிரதிஷ்டையின்போது சத்குரு வழங்கிய உரையிலிருந்து வாசியுங்கள்.


நாகா ஒரு வாழும் தெய்வம். ஒருவர் தனக்குள்ளும் வெளியுமானவற்றை புரிந்தறியவும், உணரவும் மேலும் வாழ்க்கையின் மற்ற அம்சங்களை அறிந்துகொள்வதற்கும் இதனை ஒரு நுழைவாயிலாக பயன்படுத்திக்கொள்ள முடியும். ஏனென்றால், மனித புலன் உறுப்புகள் தன்னளவில் ஒரு எல்லைக்குட்பட்ட இயல்பை உடையவை. நாம் பார்க்கக்கூடிய, கேட்கக்கூடிய, உணரக்கூடிய, புரிந்துகொள்ளக்கூடிய அனைத்திற்கும் எல்லைகள் உண்டு. மேலும், அந்த எல்லைகளைக் கடந்து செல்வதற்கான ஒரு பேராவல் ஒரு மனிதருக்குள் எப்போதும் இருந்துகொண்டுதான் உள்ளது. ஒட்டுமொத்த நாகா கலாச்சாரமும் அந்தப் பேராவலிலிருந்து வந்ததுதான். இது ஒரு மதத்தில் மட்டுமோ அல்லது ஒரு இடத்தில் மட்டுமோ வளரவில்லை. உலகெங்கும், வாழ்வின் ஆழமான பரிமாணங்களை அடைவதற்கு சர்ப்பங்களைப் பயன்படுத்தாத மனிதநாகரிகம் ஒன்றுகூட இருந்ததில்லை.

உங்களுக்கான ஒரு அற்புதமான வாழ்க்கை என்பது என்ன?

உங்களது ஆயுளை மேம்படுத்துவதற்கு, செம்பு அல்லது பித்தளையாலான இந்த சர்ப்பத்தை நீங்கள் அர்ப்பணம் செய்கிறீர்கள். ஏனென்றால் வாழ்க்கை ஒரு குத்தகை. நீங்கள் குத்தகையில் இருக்கிறீர்கள். இந்த உடல் குத்தகைக்குப் பெற்றது; அது போய்விடும். உங்கள் கணவர், குழந்தைகள், வீடு, சொத்து, வங்கிக் கணக்கு - எல்லாமே குத்தகையில் உள்ளது. பொதுவாக, ஒரு அற்புதமான வாழ்க்கை குறித்த மக்களின் கருத்து என்னவென்றால், அவர்களுக்கு கணவன், மனைவி, குழந்தைகள், வீடு, பணம் இருக்கிறது; ஒரு நாளைக்கு பலமுறை அவர்கள் சாப்பிடுகின்றனர், மற்றும் அவர்களுக்கு ஒருசில நோய்கள் இருக்கிறது, சிறிது இரத்தக்கொதிப்பு மற்றும் நீரழிவு இருக்கிறது - இதுவே அவர்களுக்கான ஒரு அற்புதமான வாழ்க்கை. ஆனால் ஒரு அற்புதமான வாழ்க்கை என்றால் என்னவென்பதை, நீங்கள் மறுவரையறை செய்யவேண்டியுள்ளது.

உங்கள் வாழ்வு நீட்டிக்கப்பட்டால், அதை வைத்துக்கொண்டு நீங்கள் என்ன செய்வீர்கள்? இன்னும் அதிகமான ஆடைகள், அதிக காலணிகள், அதிக கார்கள், அதிகமான வீடுகள், அதிகமான சொத்துக்களை வாங்குவீர்களா? அதிகமாக உணவு சாப்பிடுவீர்களா? அல்லது ஒருவேளை, இன்றைய நிலையில் நீங்கள் ஒரு புது மனைவி அல்லது புது கணவனை பெறுவீர்களா? நாகாவை அணுகுவதன் ஒரு முக்கியமான அம்சம், பிழைப்பு செயல்முறையை அது மிகவும் எளிமையாக்குகிறது. வாழ்வின் தரத்தை நீங்கள் உயர்த்திவிட்டால், ஒரு அற்புதமான வாழ்க்கையை வாழ்வதாக நினைக்க வேண்டாம். நீங்கள் ஒரு அரண்மனையில் வாழ்ந்துகொண்டிருக்கலாம், ஆனால் நீங்கள் அதே முட்டாள்தனமான விஷயங்களைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள்.

நாகா ஒரு வாழும் தெய்வம். ஒருவர் தனக்குள்ளும் வெளியுமானவற்றை புரிந்தறியவும், உணரவும், வாழ்க்கையின் மற்ற அம்சங்களை அறிந்துக்கொள்வதற்கும் இதனை ஒரு நுழைவாயிலாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.

நீங்கள் இதை வாழ்க்கை என்று அழைக்கலாம் ஆனால் உண்மையில் இது காலம். காலமற்ற, எல்லையில்லா வெளியின் ஒரு சிறிய வெளிப்பாடுதான் காலம் அல்லது நேரம் என்பது. காலம் - நீங்கள் அமர்ந்தாலும், நின்றாலும் அல்லது உறங்கினாலும் - நேரம் கடந்துகொண்டே செல்கிறது. அது நிச்சயமாக உங்களது வாழ்வில் மிக மதிப்புவாய்ந்த விஷயம். உங்களுக்குக் கூடுதல் காலம் கிடைத்தால், அதை வைத்துக்கொண்டு என்ன செய்வீர்கள்? ஏனென்றால் அதே அற்பமான விஷயங்களைத்தான் என்றென்றைக்கும் நீங்கள் செய்யப்போகிறீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கையில் ஆழ்ந்தபொருளுடைய அம்சம்களைக் கொண்டுவருவதில் என்ன பயன் இருக்கிறது? நமது வாழ்க்கைக்கு மூன்று முக்கியமான அம்சங்கள் உண்டு.

வாழ்க்கையில் உள்ளுறையும் மூன்று இலக்குகள்

1: இனிமை

ஒன்று, வாழ்வின் இனிமை. அதாவது, இங்கு நீங்கள் அமர்ந்திருக்கையில், உங்கள் வாழ்க்கை அனுபவம் இனிமையாக இருப்பது. ஒருவேளை நீங்கள் ஈரமாக நனைந்திருக்கலாம், நீங்கள் குளிரில் நடுங்கலாம், உங்களது கால்கள் வலியில் இருக்கலாம், உங்கள் முதுகு வலிக்கலாம், நீங்கள் அமர்ந்திருக்கும் மைதானத்தின் சிறு கற்கள் உங்களைக் குத்திக்கொண்டிருக்கலாம், ஆனால் ஒரு உயிராக, உங்களுக்குள் நீங்கள் இனிமையாக இருக்கிறீர்கள். இது உங்கள் பொறுப்பு. அதை நீங்கள் கற்களிடம் விட்டால், அதை மக்களிடம் விட்டால், நீங்கள் இனிமையாக இருக்கிறீர்களா இல்லையா என்பதை மற்ற பல விஷயங்களிடத்தில் விட்டால், உங்கள் வாழ்க்கை முடியும் முன்பே, நீங்கள் ஏற்கனவே முடிந்துவிடுகிறீர்கள். நீங்கள் உங்களுக்குள் இந்த கணத்தில் இனிமையாக இருக்கிறீர்களா அல்லது இனிமையில்லாமல் இருக்கிறீர்களா என்பதை முடிவு செய்வதற்கு வேறொன்றை நீங்கள் அனுமதித்தால், உங்கள் வாழ்க்கை ஏற்கனவே முடிந்துவிட்டது.

வாழ்வின் இனிமை, 100% உங்கள் உருவாக்கமாக இருக்கவேண்டும். இனிமையின்மையை உருவாக்கும் மக்கள் உங்களைச் சுற்றிலும் இருக்கலாம் - அவர்கள் தரக்கட்டுப்பாடு செய்பவர்கள். அது உண்மையாக செயல்படுகிறதா, இல்லையா என்பதை அவர்கள் பரிசோதிக்கின்றனர். ஆகவே, வாழ்வின் இனிமை முழுக்கமுழுக்க உங்கள் பொறுப்பு. நீங்கள் எல்லா நேரமும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்றால், குறிப்பாக ஒவ்வொரு கணமும் நீங்கள் ஆனந்தமாக இருந்தால், உயிரோடு இருப்பதை அர்த்தமற்றதாக நீங்கள் உணர்வீர்கள். “நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், ஆனால் அதைப்பற்றி என்ன?” என்றால் அப்போதுதான் நீங்கள் தொந்தரவைத் தேடுகிறீர்கள். செய்வதற்கு கடினமான ஏதோவொன்றை நீங்கள் தேடுகிறீர்கள்.

2: ஆழ்ந்ததன்மை

உண்மையாக, நீங்கள் தொந்தரவைத் தேடவில்லை - ஏதாவது ஆழமாக நிகழ்வதற்கு நீங்கள் விரும்புகிறீர்கள். ஆழமான எதுவும் நிகழாதபோது, எப்படியாவது உங்களையே குத்திக்கொள்வதுதான் ஒரே வழி. அதாவது, திருமணம் செய்துகொள்ளலாம், ஒரு புதிய வியாபாரம் தொடங்கலாம் - உங்களையே சிறிது குத்துவதற்கு எதையாவது செய்வது. துரதிருஷ்டவசமாக, வலிதான் மனிதர்களை எப்போதும் ஆழமாக உணரச் செய்கிறது. மிகச் சிலரே, அமைதி, அன்பு, ஆனந்தம் அல்லது பரவச உணர்வை அவர்களுக்குள் ஆழமாக அறிகின்றனர். அவர்களது அமைதி, ஆனந்தம் மற்றும் அன்பு வந்து வந்து செல்கிறது. ஆனால் அவர்களது வலி ஆழமாக நிலைத்து நிற்கிறது.

மிக ஆழமான அமைதி உணர்வு உங்கள் மீது இறங்கினால், வேறு எதுவும் உங்களுக்குத் தேவையில்லை

நான் ஒரு குண்டூசியினால் உங்களைக் குத்துவதாக வைத்துக்கொள்வோம் - அது நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அதன் மையத்துக்கே செல்கிறது, ஏனென்றால் அதுதான் வலியின் இயல்பு. துரதிருஷ்டவசமாக, பெரும்பாலான மனிதர்கள் வலியையே ஆழமான தன்மையாக புரிந்துகொள்கின்றனர். அது அப்படி இல்லை - ஆழமான தன்மை ஆனந்தத்தில் நிகழமுடியும், ஆழமான தன்மை பரவசத்தில் நிகழமுடியும், ஆழமான தன்மை அன்பில் நிகழமுடியும், எல்லாவற்றுக்கும் மேல், ஆழமான தன்மை அமைதியில் நிகழமுடியும். மிக ஆழமான அமைதி உணர்வு உங்கள் மீது இறங்கினால், வேறு எதுவும் உங்களுக்குத் தேவையில்லை. பெரும்பாலான மக்களுக்கு, அவர்கள் அனுபவிக்கும் ஆழமான அமைதி என்பது, எப்போதும் அவர்களது நிரந்தர அமைதியின் ஓய்வில்தான் நிகழ்கிறது.

3: பெருத்த தாக்கம்

ஆழமான தன்மைக்கு ஓரளவு வழிகாட்டல், உதவி மற்றும் வழிமுறை தேவைப்படுகிறது. வழிமுறையைக் கண்டுபிடிப்பதற்கு உங்களுக்கு யாரோ ஒருவர் தேவைப்படுகிறார்; இல்லையென்றால், ஆழமான தன்மை நிகழாமல் போகலாம். ஆனால் இனிமையான தன்மை முற்றிலும் உங்கள் பொறுப்பு. வாழ்க்கை என்று வரும்பொழுது, நாம் அனைவரும் ஏதோவொன்றைச் செய்யவேண்டியுள்ளது. இப்போது, ஏதோ ஒரு விஷயத்தை நாம் செய்யும்பொழுது, அது தாக்கம் நிறைந்ததாக இருக்கவேண்டும் என்றே நாம் விரும்புகிறோம். ஒரு மனிதராக அதை நீங்கள் தவிர்க்கமுடியாது.

உங்களுக்குள் ஆழமான தன்மையின் ஒரு அனுபவம் இல்லாமல், நீங்கள் தாக்கம் ஏற்படுத்த முனைந்தால், நீங்கள் அற்பமான விஷயங்களைச் செய்யத் தொடங்குவீர்கள்; ஒரு போரைத் தொடங்கலாம், யாரையாவது கொல்லலாம். இயற்கையாகவே தாக்கம் நிறைந்தவராக இருப்பதற்கு உங்களுக்குள் ஆழமான அனுபவம் எதுவும் உங்களுக்கு இல்லாதபொழுது, தாக்கம் நிறைந்தவராக இருப்பதற்கு, நீங்கள் எல்லாவிதமான விசித்திரமான விஷயங்களையும் செய்வீர்கள். சில நேரங்களில், அது உங்களைக் கொன்றுவிடக்கூடிய சாகசமாககூட இருக்கலாம். சில நேரங்களில், சாகசம் மற்றவர்களைக் கொல்கிறது அல்லது உலகத்தில் மோசமான விஷயங்களை ஏற்படுத்திவிடுகிறது. வாழ்வின் ஆழமான அனுபவம் இல்லாமல், தாக்கம் நிறைந்தவராக இருக்க முயற்சிப்பது, பூமிக்கும், மக்களின் உயிர்களுக்கும், நம்மைச் சுற்றிலும் உள்ள மற்ற உயிர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

உலகமெங்கும் சர்ப்ப வழிபாடு

ஆழமான தாக்கம் ஏற்படுத்திய பல உதாரண மனிதர்களுள் ஒருவர், அசோகப் பேரரசர். அவர் புத்த மதத்துக்கு மாறியதற்குப் பிறகு, அதற்கு வெகுகாலம் முன்னரே மறைந்துவிட்ட சாக்கியமுனி புத்தரை கண்ணெதிரில் பிரத்தியட்சமாகக் காண விரும்பினார். ஆகவே அவர் மஹாகாலோ என்ற சர்ப்ப தெய்வத்தை நாடினார். ஒரு நாக சர்ப்பத்தை அவரது அரியணை மீது ஒரு பேரரசராக இருத்தினார். அப்போது, புத்தரைக் காணும் நேரடி அனுபவம் அவருக்குக் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. அவர் விரும்பியதை அனுபவித்து உணர்வதற்கு, சர்ப்பத்தை ஒரு வழிமுறையாக அவர் பயன்படுத்தினார். வேத பாரம்பரியத்தில் நாகா மற்றும் சூரிய வழிபாடும்கூட தொடர்புடையதாக இருக்கிறது.

அதிர்ஷ்டவசமாக, உலகின் இந்தப் பகுதியில், குறிப்பாக பாரதத்தில், நாம் இன்னமும் நாகா கலாச்சாரத்தை உயிர்ப்புடன் வைத்துள்ளோம்.

எகிப்தில், “சுருண்டிருக்கும் ஒன்று” என்ற அர்த்தத்தில், மேஹென் என்றழைக்கப்படும் ஒரு சர்ப்பக்கடவுள் இருந்தது. தலை நடுவில் இருக்க, அதைச் சுற்றிலும் சுருண்டிருக்கும் அது, சூரிய மண்டல உருவாக்கத்தின் குறியீடாக இருக்கிறது. இன்னமும் அது ஒரு சுருளாக இருப்பதால், சூரிய மண்டலம் அதன் ஆரம்பகால உருவாக்க நிலையில் இருப்பதாகப் பொருள்படுகிறது. சூரிய மண்டலம் உருவானதற்குப் பிறகு, கிரகங்கள் படைப்பின் பயனற்ற துகள்களை அகற்றிவிட்டு, அவைகளுக்கே உரிய சுற்றுப்பாதையைக் கண்டறிந்துள்ளன. ஆனால் இந்த விதமாக அவை தங்களை ஒழுங்குபடுத்துவதற்கு முன்பு, கிரகங்கள் அனைத்தும் ஒரு சுருளாக இருந்துகொண்டு, மெல்ல மையத்திலிருந்து வெளிப்புறமாக பரவிக்கொண்டு இருந்தன. அதைத்தான் மேஹென் குறிக்கிறது. சுருண்டிருந்த சர்ப்பக்கடவுள் மேஹென் மற்றும் சூரியக்கடவுள் ரா, இவைகள் நேரடியான தொடர்புள்ளவை.

நிச்சயமாக, ஐரோப்பாவில் பல மெடூசா (கிரேக்க புராணப் பெண்) கோவில்கள் இருந்தன. சிலுவைப் போர்களின்போது, அவைகள் திட்டமிட்டுத் தரைமட்டமாக்கப்பட்டன. இஸ்தான்புல், துருக்கியில் ஒரு மாபெரும் மசூதி (ஹாகியா சோபியா) இருந்தது. அதற்கு முன்னரும், பின்னரும் அது ஒரு தேவாலயமாக இருந்தது, பிறகு இஸ்லாமிய படையெடுப்புகளின்போது, ஒரு மசூதியாக மாற்றம் செய்யப்பட்டது. இஸ்தான்புல் நகருக்குக் கீழே, பாசிலிகா சிஸ்டெர்ன் (6 ஆம் நூற்றாண்டில் ரோமானிய பேரரசர் ஜஸ்டினியன் அவர்களால், ஹாகியா சோபியாவுடன் சேர்ந்து கட்டப்பட்டது) இருக்கிறது. அந்தக் காலகட்டத்தில் அது ஒட்டுமொத்த நகருக்குமான நன்னீர் விநியோகத்துக்குப் பயன்படுத்தப்பட்டது. அது ஒரு பிரம்மாண்டமான கட்டுமானம். அதற்குள் நடந்து சென்று, சுற்றிவருவதற்கு பாலங்களும் இருக்கின்றன. அங்கே காணமுடிகிற ஒரு துரதிருஷ்டவசமான விஷயம் என்னவென்றால், மெடூசாவின் ஒரு பிரம்மாண்டமான தலை, ஒரு தூணின் அடிப்பகுதியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மெடூசாவின் தலை ஒரு உள்நோக்கத்துடனேயே தலைகீழாக நிறுத்தப்பட்டுள்ளது, ஏனெனில் அது சரியான விதத்தில் வைக்கப்பட்டால், மக்கள் அதை வழிபடுவார்கள். மெடூசா, சர்ப்பங்களை முடிக்கற்றைகளாகக் கொண்டவள். தீர்க்க தரிசனம் வழங்கும் ஐரோப்பிய கலாச்சாரத்தின் மிக முக்கியமான ஒரு பாகமாக மெடூசா இருந்தாள்.

அதற்கு பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, சூனியக்காரி வேட்டைகள் நிகழ்ந்தன. சுமாராக 150ல் இருந்து 200 வருடகாலத்தில், ஏறக்குறைய 60 இலட்சம் பெண்கள் படுகொலை செய்யப்பட்டதாக கணக்கிடப்படுகிறது. அந்தக் காலகட்டத்தின் ஜனத்தொகையில் அது ஒரு பெரும் எண்ணிக்கையாக இருந்தது. சில குறிப்பிட்ட சாத்தியங்களுக்கு அவர்களிடம் வழிமுறை இருந்த காரணத்தால், அத்தனை எண்ணிக்கையிலான பெண்களும் வெட்டி சாய்க்கப்பட்டனர். சில விஷயங்களைக் காண்பதற்கும், அறிவதற்கும், கணிப்பதற்குமான திறனை அவர்கள் பெற்றிருந்தனர். தனிமனிதர்கள் வித்தியாசமான திறன்களுடன் பரிணமித்து, நுட்பமான விஷயங்களைப் பார்க்கமுடிந்தால், அதன் பின்னர் சர்வ வல்லமை படைத்தவராக இருக்கும் அந்த ஒரு பெரிய கடவுளை அவர்களால் விற்பனை செய்யமுடியாது.

அதிர்ஷ்டவசமாக, உலகின் இந்தப் பகுதியில், குறிப்பாக பாரதத்தில், நாம் இன்னமும் நாகா கலாச்சாரத்தை உயிர்ப்புடன் வைத்துள்ளோம். ஆனால் இந்த விதமாக ஒரு நாகாவை பிரதிஷ்டை செய்து 800 வருடங்களுக்கும் மேலாகிறது. ஆகவே, நீங்கள் அனைவரும் இங்கே இருந்து, அதன் பாகமாக இருந்தது அற்புதமானது.